கருஞ்சட்டைப் ப்பதிப்பகம் 2018 ஆம் ஆண்டில் அறிவுலகின் கதவுகளை அகலத் திறக்கும் முயற்சியில் நான்கு நூல்களைக் கொணர்ந்தது.அதில் ஒன்று தான் இந்நூல்.

நெல்லை மனநல மருத்துவர் டாக்டர் ஜி ராமானுஜம் தனது அணிந்துரையில்“அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் போன்ற சிந்தனையாளர்களை ஆழப்படித்தவர் டாக்டர் ஷாலினி. மனநல மருத்துவரும் கூட என்பதால் மிகவும் நேர்மையுடனும், உறுதியுடனும், தெளிவுடனும் தனது சிந்தனைகளை வைக்கிறார்” என்கிறார்.

உலகிலேயே உன்னதமான கருவி எது எனக் கேட்டால் அது மனித மனம் தான் என்கிறார் ஷாலினி. பேசுவது, எழுதுவது, கற்பனை செய்வது என்பதோடு பல உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது மனம். இந்த அற்புதமான கருவியை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று அலசி ஆராய்வது இந்நூலின் நோக்கமாக இருக்கிறது. பிறந்தமனமாய் செயல்பட வேண்டும் என்கிறார் ஷாலினி. அப்படியென்றால்?முன்முடிவு எதுவுமில்லாமல், அரிய பெரிய உண்மைகளை உள்ளது உள்ளபடி எந்தவித பாசாங்கும் இல்லாமல் அப்படியே கிரகித்துக் கொள்வது தான் அது.

அந்த ஆற்றல் சார்லஸ் டார்வினிடம் இருந்தது என்கிறார் ஷாலினி. யார் மனதிற்கும் புலப்படாத ஓர் அரிய உண்மை டார்வினுக்கு புலப்பட்டது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பது இன்று போலவே அவரது காலத்திலும் பலரிடமும் இருந்த ஒரு நம்பிக்கை. மதக்கல்வி பயின்ற டார்வினும் முதலில் அப்படித்தான் நம்பினார். எச்எம்எஸ்பீகிள் என்ற ஒரு கப்பலில் பயணம் போய் உலகைச் சுற்றி பல வித உயிரினங்களைக் கவனித்த டார்வின், கடவுள் என்ற ஒருவர் விவிலியத்தில் சொல்வது போல ஒரே வாரத்தில் அனைத்து உயிரினங்களையும் படைத்திருக்க முடியாது என்ற முடிவிற்கு வந்தார்.

ஒரு பகுதியில் தாவர உணவைச் சாப்பிடும் ஃபிஞ்ச் பறவையினம், அதற்குப்பக்கத்திலேயே இருக்கும். இன்னொரு தீவில் மாமிசம் சாப்பிடும் பழக்கத்திற்கு மாறி இருப்பதையும் அதற்கேற்றாற்போல அதனுடைய அலகும், வயிறும், குடலும் மாறி இருப்பதையும் டார்வின் கவனித்தார். இரண்டும் ஆதியில் ஒரேவகை மூதாதையரிடமிருந்து தோன்றியிருந்தாலும், அவை வாழும் சூழலுக்கு ஏற்பமருவி, மருவி, கடைசியில் இருவேறு தனித்தனி இனங்களாக மாறிவிட்டிருக்கின்றன. இப்படியாகத்தான் பரிணாம வளர்ச்சி நிகழ்கிறது என்னும் மிக முக்கியமான அறிவியல் புரிதலை டார்வினால் கண்டுகொள்ள முடிந்தது. டார்வின் என்ற பெயர் வரலாற்றில் முக்கியமான இடத்தைப்பெற்றது.

டாக்டர் ஷாலினி – Kungumam Tamil …

டார்வின் விளக்கம் அளிக்காமல் விட்டுச்சென்ற விவகாரத்தை எல்லாம் அலசி ஆராய்ந்து நவயுக கருத்தாக்கங்களை விஞ்ஞானி ரிச்சர்ட்டாக்கின்ஸ் என்ற மற்றொரு விஞ்ஞானியினால் முன்வைக்க முடிந்தது. யாருக்குமே தோன்றாத, தென்படாத, புரிபடாத விஷயங்கள் இந்த இருவருக்கு மட்டும் எப்படி புலப்பட்டன?யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு கொண்டிராமல், ஏன்..எதற்கு..எங்கே..எப்படி..எதனால்..யாரால்..எப்போது என்ற கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு எவ்வித மனத்தடைகளுமின்றி விடைகளைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்ததுதான் அடிப்படைக் காரணம்.

மனிதமூளை உருவாக ஆரம்பித்த போதே கேள்விகளும் கூடவே ஆரம்பித்தன உதாரணமாக. இந்த உயிர் எப்படி தோன்றியிருக்கும் என்ற கேள்வி ஆதிகாலத்திலிருந்து மனிதர்கள் கேட்டுவரும் கேள்வி. அதற்கு பல்வேறு விதமான பதில்கள் சொல்லப்பட்டன. ஆசியர்கள் பலர், பூமிக்கு அடியில் தோன்றிய முட்டையிலிருந்து மனிதர்கள் வந்தார்கள் என்று நம்பினார்கள். கடவுள் பூமியைப் படைத்து, எல்லா ஜீவராசிகளையும் படைத்து, இறுதியாக மனித ஆணையும் பெண்ணையும் படைத்ததாக மத்திய ஆசியாவில் கதைகள் சொல்லப்பட்டன. வட இந்தியாவில் கடவுள் என்ற ஒருவர் மனிதர்களை நான்கு வர்ணங்களில் படைத்தார் என்று நம்பினர்.

ஆனால் இவற்றில் எதுவுமே உண்மை இல்லை! உண்மை என்னவென்றால், உயிர்தானாகவே தோன்றியது. ஒரு குறிப்பிட்ட சூழலில் சில ரசாயனங்களின் அதிசய சங்கமமாய் உயிர் உருவானது. அப்படி உருவான, நிலையான,முதல் உயிர்தான் ஆர்என்ஏ!  ஆர்என்ஏ என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு மிகச் சிறிய ரசாயனச் சங்கிலி. அதற்கு தன்னைத்தானே மறுபடியும் பிரதி எடுத்து குட்டி போடும் வல்லமை உள்ளது. உலகில் முதன் முதலில் தோன்றிய இந்த ஆர்என்ஏ தொடர்ந்து குட்டிபோட்டு, குட்டிபோட்டு, பல தலைமுறைகளை உருவாக்கி சங்கிலித் தொடராய் இன்றும் உயிர் வாழ்கிறது. அதையே மரபணு என்று அழைக்கிறோம்.

உலகம் தோன்றியபுதிதில் உருவான ஆர்என்ஏ அந்த முதல் என்ற மரபணுச் சங்கிலி, பிறகு கூடுதல் வலிமை பெற்று டிஎன்ஏ என்று மாறியது. அந்த டிஎன்ஏ எனும் மரபணு, சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னைத்தானே பரிணமித்துக் கொண்டே போக,பல வகை உயிரினங்கள் தோன்றின. அதன் உச்சம்தான் மனித இனம்!

உயிர் தோன்றிய அந்த ஆரம்பகாலம் முதல், இந்த மரபணுக்கள் தாங்கள் சேகரித்த அத்தனை விதமான பிழைப்பு ரகசியங்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கட்டுக்கட்டாய் அஞ்சல் செய்கின்றன. இப்படி அஞ்சல் செய்யும் ஒவ்வொரு தகவல் தொகுப்பைத்தான் ஜீன் என்கிறோம். மனிதர்களின் மரபணுக்களுக்குள் மொத்தம் முப்பதாயிரத்து சொச்சம் ஜீன்கள் இருக்கின்றன.

ரிச்சர்ட் டாக்கின்ஸின் நிறம்

இப்படி பரிணாம வளர்ச்சியை சுவையாக வர்ணித்துக் கொண்டே போகிறார் ஷாலினி.

இந்த முப்பதாயிரத்தில் நாம் மனித உருவத்திற்கு வருவதற்கும் முன்.பரிணாமப் பயணத்தில் நாம் கடந்து வந்த அத்தனை நிலைகளும் நம் மரபணுக்குள் இன்னமும் உள்ளன.மனிதர்களில் ஆண் பெண் என்று இரண்டு பாலினம் உண்டு.ஆணின் இனப்பெருக்க செல்லில் பாதி மரபணுக்களைக் கொண்ட 23 குரோமோசோம்களும், பெண்ணின் இனப்பெருக்க செல்லில் இன்னொரு பாதி மரபணுக்களைக் கொண்ட 23 குரோமோசோம்களும் இருக்கும். ஆணின் விந்தணு 23 குரோமோசோம்கள், பெண்ணின் கருமுட்டை 23 குரோமோசோம்கள் என்று கூடி,மொத்தம் 46 குரோமோசோம்கள் அவற்றுள் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 30,000 ஜீன் ஜோடிகள் ஒன்றாய்க் குவியும்.

இப்படி முப்பதாயிரம் ஜோடி ஜீவன்கள் கொண்ட இந்த முதல் செல்தான் மனித வித்து. இந்த ஆரம்பகால சதைப்பிண்டம் மெல்ல மெல்ல, மூளை, இதயம், பாலின உறுப்புகள் என்று வடிவம் பெறுகின்றன. கண், காது, மூக்கு,விரல்கள், எலும்பு,சதை, நாளம் என்று நுணுக்கமான மாற்றங்கள் தோன்றுகின்றன. கருவில் இவ்வளவு மாயாஜாலமும் நடந்து முடிந்து 40 வாரகாலத்திற்குள் முழு மனிதக் குழந்தை வந்து  பிறந்து விடுகிறது. என்னே அற்புதம்!

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இந்த அடிப்படையில் தான் உருவாகின்றன.அவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மட்டுமே அவற்றின் வாழ்க்கைத் தரம் அமைகிறது.

சரி, உயிர் இப்படித் தோன்றியது.உயிரின்  பயன் என்ன?உயிருள்ளவற்றும் உயிரற்றதற்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?வல்லமை கொண்ட ஜீவராசிகளால்  மட்டும்தான் தாமும் பிழைத்து, அதிக எண்ணிக்கையில் தன் இனத்தையும் பரப்பிக் கொள்ளமுடியும். இதைத்தான் இயற்கைத் தேர்வு என்றார் சார்லஸ் டார்வின்.

இன்னொன்று, தூய்மையும் நோயற்ற வீரியமும் நேரெதிரான கோட்பாடுகள். இனத்தூய்மை வேண்டும் என்று ஒரேகுடியில் உறவைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்தால் நோய்கள் பெருகும். இனத்தூய்மை பேசிய மனிதர்கள் மரபணு ரீதியாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். மேலோர் கீழோர் எனும் பிரிவினைவாதத்தை டார்வின் தகர்த்தார். எல்லா மனிதரும் சமம். கடவுள் என்று ஒருவர் வந்து யாரையும் படைக்கவில்லை. எல்லா மனிதர்களும் வானரக் குரங்குகளிலிருந்து தான் தோன்றினார்கள் என்று டார்வின் அறிவித்தார்.

வேற்றுக் கலாச்சாரத்தை சேர்ந்த வரை மட்டம் என்று நினைப்பது, தன் கலாச்சாரம் தான் சிறந்தது என்று கருதுவது ஒரு மானிடப் பொதுமைதான். அதனால் தான் நம்முடைய இனம் தான் உயர்ந்தது என்று தோன்றவைக்க “கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திலேயே..” என்று நம்மைப் பேச வைக்கிறது. கருப்பர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என வெள்ளையர்களை; பிராமணர் அல்லாதோரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என பிராமணர்களை; தலித்துகளை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என இடைநிலை சாதியினரை..எண்ண வைக்கிறது.

எல்லா மனிதரும் ஒரு வானரக்குரங்கிலிருந்து பரிணமித்து, பிறகு இரைதேடி அலைந்ததில் வெவ்வேறு பாதையில் போய்,ஆங்காங்கே தங்கி, தனித்தனி இனக்குழுக்களாகப் பிரிந்திருக்கிறோம். மற்றபடி அடிப்படையில் நம் மரபணுக்கள் ஒன்று.. கடந்து கடந்து வந்த பாதைகள் ஒன்று.. மொழியின் கூறுகள்ஒன்று.. இவை எல்லாமே ஒன்று தான்!

உண்மையில் டார்வின் “ அறிவுள்ளவரேபிழைப்பர்.. அதிக பலம் உள்ளவரே பிழைப்பர்” என்றெல்லாம் சொல்லவில்லை. “பொருந்திப் போவது பிழைக்கும்” என்று மட்டும் தான் சொல்லியிருந்தார். அதாவது மாறிக்கொண்டே இருக்கும் சூழலுக்கு ஏற்பதானும் பொருந்திக் கொண்டே போகும் உயிரினம் மட்டும் தான் பிழைக்கும். சூழலுக்கேற்பதானும் மாறிக்கொள்ளாத உயிர்பிழைக்காது என்பது தான்.

இந்த பூமியில் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆதிக்கம் செலுத்திய டைனோசர் இனமிருகங்கள் மறைந்த பிறகு பூமியின் வளங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு மற்ற மிருகங்களுக்குக் கிடைத்தது. மனித மூதாதையர்கள் தொடர்ந்து பரிணமித்து மனிதக் குரங்காய் மாறினர். ஆதி மனிதக் குரங்கிலிருந்து சிம்பான்சி மற்றும் ஆதி வானர மனிதர்கள் தோன்றினார்கள். இந்த ஆதி வானரத்திலிருந்து மருவி, தற்போதுள்ள மனித உருவம் கடந்த ஐந்து மில்லியன் ஆண்டுகளின் பரிணாமத்தில் ஏற்பட்டது.

அறிவியல் புரட்சியாளர் டார்வின்

அடுத்து, மற்ற  வானரங்களை விட மனிதர்கள் மட்டும் இவ்வளவு அமோகமாய் அபிவிருத்தி அதற்கு என்ன காரணம் என்று அலசுகிறார் ஷாலினி. மனிதர்களுக்கு மட்டும் தான் மீம்களைப் பரப்பத் தெரிகிறது. மீம் என்னால்..? ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நகரும் கருத்தாக்கங்களுக்கு மீம் என்று பெயரிட்டார் ரிச்சர்ட்டாகின்ஸ். மற்ற உயிரினங்கள் ஜீன் என்னும் மரபுணுக்களை மட்டும் தான் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குபரப்பும். அந்த மரபணுக் குறிப்பை வைத்துத்தான் அடுத்த தலைமுறை உயிர் வாழும். மனிதர்களோ ஒரு தலைமுறையில் கற்றதை பல ஆயிரம் தலைமுறைகளுக்கும் உபயோகமாய் இருக்கும் படி மீம் பதிவு செய்து பரப்பும் உத்தி தெரிந்தவர்கள் என்பதால், மற்ற மிருகங்களைப் போல வெறும் எண்ணிக்கையில் மட்டும் நாம் பெருகுவதில்லை. தரத்திலும் வலுப்பெற்றுக் கொண்டே போகிறோம்.

மரபணு ஆட்டம் என்பது தான் உலகம் தொடங்கிய காலம்தொட்டு, தொடர்ந்து பல உயிர்களுக்குள் நடந்து வரும் ஒரு பிரம்மாண்டத் தொடர் போட்டி. ஜீவராசிகள் உயிரோடு இருக்க சக்தி தேவை. நேரடியாக சூரிய ஒளியை உண்டு உயிர் வாழும் உத்தியை மேற்கொள்பவை தாம் செடிகள்.. மனிதர்களைப் போன்ற சில ஜீவராசிகள் பாரபட்சமின்றி எல்லாவற்றையும் உண்டு எரிபொருள் சேர்க்கும் ஆற்றல் பெற்றவை. உண்ணப்படும் பொருளைப் பொறுத்து அந்தந்த ஜீவன்களின் மரபணுக்கள் வெவ்வேறு உடல் அமைப்புகளை வடிவமைக்கின்றன. இடையில் ஒரு தனித்துவமிக்க பிறவியாக வாழ்ந்த ஸ்டீஃபென் ஹாக்கிங்ஸ் என்ற மாபெரும் விஞ்ஞானி, எப்படி பழுதடைந்த ஜீன்களை வெல்ல மிக நேர்த்தியான அறிவியல் கருவிகளைக் கொண்டு பேச, எழுதப் பயன்படுத்திக் கொண்டு  76 வயது  வரை வாழ்ந்தார் என்ற அதிசயத்தைக் குறிப்பிடுகிறார் ஷாலினி.

லத்தீன் பேசுவதே உயர்ந்த பண்பு, படித்தவருக்கு அடையாளம், உயர்குடிப் பிறப்பின் வெளிப்பாடு என்றெல்லாம் ஐரோப்பியர்கள் கருதினாலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு லத்தீன் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. அதன்தொன்மையும், புனிதமும், பரிசுத்தமுமே அதனைக் கையாளுவதற்கு மிகக்கடினமான மொழியாக ஆக்கியதால் அவரவர் தாய்மொழியில் எழுதவும் பேசவும் பாடவும் ஆரம்பித்தார்கள். குறிப்பாக ஆங்கிலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடம் கொடுத்தது. வெவ்வேறு புதிய மொழிகளிடமிருந்து சுலபமாய் சொற்களைக் கடன் வாங்கிதன் செழுமையை அதிகரித்துக் கொண்டே போனது.காலப் போக்கில் லத்தீன் மொழி தன் வலிமையை இழந்தது. ஆங்கிலமே அதிகமாகப் பேசப்படும் உலக மொழியாக வளர்ந்து நின்றது.

லத்தீனைப் போலவே சமஸ்கிருதம், அதன் தொன்மை, தூய்மை, மேன்மைகளை கட்டிக்கொண்டே இருந்து இறுகி, பயன்பாட்டிற்குத் தகுதியற்ற மொழியாக மாறிவிட, மிலேச்ச பாஷைகளாக மட்டம் தட்டப்பட்ட மற்ற மொழிகள் மிக அதிகமாகப் புழங்கியதால் அவை நாளடைவில் நிலைத்து நின்றன. சமஸ்கிருதம் சில நூற்றுக்கணக்கான மனிதர்கள் மட்டுமே பேசும் ஓர் இறந்த மொழி ஆனது. மற்ற எல்லா மொழிகளுமே கோடிக் கணக்கானவர் பேசும் பழகு மொழிகள் ஆகின.

Indo-European Language Families

இறுதியாக, மனித வாழ்வின் நோக்கங்களை அலசி முடிக்கிறார் ஷாலினி. மனித வாழ்வில் சிறந்த கருத்தாக்கங்களை உருவாக்குவது ஒரு பணி என்றாலும் அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுதல் அதை விட முக்கியமானது. இப்படி கருத்துகள் கலந்து உறவாடும் போது மானுட விளைச்சல் அமோகமாக இருக்கும். அதைவிடுத்து, நான், எனது என்கிற சிறிய வட்டத்தில் நாம் நின்று விட்டால் அடுத்ததலை முறைக்கு வீரியம் குறைய  ஆரம்பிக்கும். சுயநலவாழ்க்கை. பொதுநல வாழ்க்கை இரண்டில் பிழைக்கப் பொருத்தமான மீம் பொதுநல வாழ்க்கைதான். இதுபோல எத்தனையோ முரண்பாடான மீம்கள் நம்மைச் சுற்றித்தான் உலவுகின்றன. இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தற்போதைய சூழலுக்கு எது அனுகூலமானது என்று சரிபார்த்து தேர்வு செய்வது மிகப்பெரிய சித்து வேலை. அந்த சித்து வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால் உங்கள் மனதுக்குத் தேவை“ கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்”. இந்த இரண்டு நபர்களைப் போலவே இன்னும் எத்தனையோ வாழ்வியல் வித்தைகள்தெரிந்த பல அறிவாளிகள் இருக்கிறார்கள். அதனால்தான் மனிதகுலம் அறிவியலில் முன்னேறிக் கொண்டே செல்கிறது,

பழக்கம்,பற்று,கற்பிக்கப்பட்டவைஎன்றுஉங்கள்சிந்தனையைச்சுருக்கிக்கொள்ளாமல்விசாலப்பார்வையால் இந்த உலகை அளவிட்டு, சிறந்த மீம்களை இனம் காணுங்கள். எங்கிருந்து வந்தாலும், எதிராளியினுடைய தாய் இருந்தாலும், அது பிழைப்பிற்கு உதவுமானால் சலனமே இல்லாமல் அதை அப்படியே செரித்து முன்னேறுவோம். எல்லாம் கடந்து போகும், வாழ்க்கை என்னும் சங்கிலித் தொடர் செம்மையாய் நிலைத்திருக்கும் என்று முடிக்கிறார் ஷாலினி.

என்னவொரு அற்புதத் திறவுகோலாக இந்தப் புத்தகம் இருக்கிறது என்று நான் வியந்து நிற்கிறேன். எந்த முன்முடிவும் இல்லாமல் திறந்த மனதோடு படித்துப் பார்த்தீர்களானால், நீங்களும் அந்தப் பரவச நிலைக்கு ஆளாவீர்கள். கடவுள் நம்பிக்கை, அதனோடு பிணைக்கப்பட்டுள்ள வேறு பல நம்பிக்கைகள். சாதி மத கற்பிதங்கள் எல்லாம் அகன்று நாம் அனைவரும் ஒரே மானிடத்தின் கிளைகளே.. நம்மிடையே உள்ள உயர்வு, தாழ்வு பிரமைகள் எல்லாம் நாமாக உருவாக்கிக் கொண்டவையே என்ற புரிதல் ஏற்படும். இயற்கை, பிற உயிரிகள், மனித வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் செழுமையடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கே.ராஜு

ஆசிரியர். புதியஆசிரியன்

செல்பேசி  94437 22311

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் ...

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்

ஆசிரியர் :மனநல மருத்துவர் ஷாலினி

வெளியீடு :கருஞ்சட்டைப் பதிப்பகம்(044-42047162)

 

2 thoughts on “நூல் விமர்சனம்: கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் – கே.ராஜு”
  1. புத்தக அறிமுகமே இவ்வளவு செரிவான தகவல்களைக் கூற முடிகிறது என்றால், புத்தகம் எவ்வளவு விரிவான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும்! டாக்டர் ஷாலினிக்கு பாராட்டுகள். பேராசிரியர் ராஜுவுக்கு நன்றி.

  2. அறிவார்ந்த உலகை உருவாக்கும் முயற்ச்சியில் தனது பங்களிப்பையும் வழங்கிய டாக்டர் ஷாலினிக்கு அவர்களுக்கு மிக்க நன்றி. நிறைய நல்ல விசயங்களைச் சுருக்கித்தந்து படிக்க உதவிய ராஜூ சார் அவர்களுக்கு நன்றி.
    நல்ல “மீம்” கிடைக்கனுமே சார்.
    பிழைப்பிற்கு உதவுமானால் சலனமே இல்லாமல் அதை அப்படியே செரித்து முன்னேறுவோம் – ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *