கோதாவரி பாருலேக்கர் மராத்திய மொழியில்எழுதிய நூலை ஏற்கனவே தமிழில் 1987 இல் ஜானகி ராமச்சந்திரன் மொழி பெயர்த்துள்ளார். மறுபடியும் செறிவூட்டப்பட்டு 2008 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கமலாலயன் மொழிபெயர்த்துள்ளார்.
இது புத்தகம் அல்ல இது ஒரு வரலாறு, கோதாவரி பாருலேகரும் அவரது கணவர் ஷாம்ராவ் பாருலேகரும் இணைந்து மகாராஷ்டிரத்தில் உள்ள தாணா மாவட்டப் பகுதியில் வார்லி இன ஆதிவாசிகளின் எழுச்சிக்கு எவ்வாறு காரணமாக அமைந்தனர் என்பதற்கான ஆவணப் புத்தகம் இது. மனம் உருக்கும் கதையை வாசித்தாலே உறக்கம் வராது. ஆனால் புழுவாக அதை விட அற்பமாக வாழ்ந்த ஆதிவாசிகளை , தங்கள் தொடர்ச்சியான செயல்பாடுகளால் மனிதர்களாக உருவாக்கி எழுச்சி பெற்ற சமுதாயமாக மாற்றிய நிஜக் கதை தான் இந்த நூலின் பக்கங்கள். இதைத் தொடர்ந்து படிக்க முடியாமலும் , படித்து முடித்த பிறகும் பல நாட்களாக அந்த ஆதிவாசிகளின் வாழ்க்கைத் துயரங்கள் பற்றிய ஆழமான பாதிப்புடனும் எனது மனநிலை மாறி விட்டது .
இன்றும் பழங்குடியின ஆதிவாசிகளுக்காகக் களத்தில் செயல்பட்டு வரும் பலரையும் குறித்து பார்த்து அறிந்து கொண்டு வந்தாலும் , இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்த கோதாவரி பாருலேகர் தம்பதியினரின் அர்ப்பணிப்பும் அதற்கு ஈடாக, தங்களை அறியாமை வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து
புரட்சிப் பாதையில் வளர்த்துக் கொள்ள வார்லி இன மக்கள் தங்களை எவ்வாறெல்லாம் ஒப்புக் கொடுத்தார்கள் என்ற விவரங்களும் பக்கத்திற்குப் பக்கம் நம்மை உறைய வைக்கிறது.
இந்த நூலின் உள்ளடக்கம் 14 தலைப்புகளில் தரப்பட்டுள்ளது . காடுகளிலும் மலைகளின் பள்ளத்தாக்குகளில் வார்லி மக்களின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க இத்தனை துன்பம் நிறைந்தவர்களை , துன்பப்படுத்தும் நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை கற்பனை செய்ய முடியவில்லை. வார்லி மக்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு , அவர்களை அந்த நிலத்தில் கட்டாய கூலியில்லாத உழைப்பு செய்ய அடித்து , சித்ரவதை செய்வதும் , வார்லிக்கள் தங்கள் திருமணத்திற்காக 50 ரூபாய் கூட சம்பாதனை இல்லாமல் தாங்கள் வேலை செய்யும் நிலப்பிரபுக்களிடம் கடனாகப் பெற அதற்கு பல வருடக் கடனாளிகளாக மாற்றி வார்லிக்களை சுரண்டும் நிலப்பிரபுக்களின் கீழ்த்தரமான மனநிலையும் அப்பப்பா … கொடுமையிலும் கொடுமை .
கட்டாய உழைப்பு , குத்தகைக்கடன் , வார்லி மக்களில் பெண்களை எப்போது வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தி வதைப்பது , ஆபாசப் பேச்சு என எதைச் சொல்ல , எதை விட ..?
அது மட்டுமா ? வார்லி மக்களுக்கு ஒரு வேலை உணவு கூட கிடையாது. அதிகாலை எழுந்து வெறும் வயிற்றில் வேலைக்குச் சென்று மத்யானம் வரை நிலத்திலும் வீடுகளிலும் வேலை செய்து விட்டு , முதலாளிகள் தரும் குருணைகளைக் கொண்டு வந்து , சுத்தப்படுத்தி கஞ்சியாக்கி கால் வயிறு மட்டுமே உட்கொள்ளும் வார்லிக்களும் அவர்களது குழந்தைகளும் படும் துன்பம் அடுத்தடுத்து பரிதாபமாக .உடையின்றி அரை நிர்வாணமான வாழ்க்கை , இலைகளையும் வேர்களையும் வருடத்தின் பல மாதங்கள் உணவாக உட்கொண்டு, படிப்பறிவில்லாமல் அதற்கு வாய்ப்பே இல்லாமல் , காலம் காலமாக அடிமைகளாக வாழும் வார்லி மக்களின் வாழ்க்கை முறை , தமிழ்த் திரைப்படமான பரதேசியை அடிக்கடி நினைவூட்டுகிறது.
எரியும் சூளையில் கரியின் பதம் தப்பியதால் வேலை செய்த மனிதனை சூளைக்குள் போட்டு எரிக்கும் கொடூரக்காரர்களாக வாழும் நிலப்பிரபுக்கள் , இவர்களுக்குத் துணை நிற்கும் காவல் துறை , வட்டிக்காரன் கும்பல் என வார்லி மக்களை அணு அணுவாகக் கொல்லும் ஆதிக்க வர்க்கங்கள் ஒருபுறம் .
இப்படி பயந்து புழுக்களாக வாழ்ந்த வார்லி மக்கள் 20 வருடங்களில் தங்களை சுய மரியாதை உடையவர்களாக உருவாக்கிக் கொள்ள புடம் போடப்படும் போராட்ட வரலாறு சுவாரஸ்யம். ஒரு கப் தேநீர் கூட கிடைக்காத சூழலில் ஆதிவாசிகளின் குடில்களிலேயே கஞ்சியைக் குடித்து , அங்கேயே படுத்துறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து
உணவுக்கும் தங்குமிடத்துக்கும் உயிருக்கும் உத்தரவாதம் ஏதுமில்லாமல் மாறு வேடங்களில் அடர்ந்த காட்டுத் தடங்களில் தங்கி இரவோடு இரவாக மக்களை அரசியல் படுத்தி , நிமிர்ந்த நன்னடை ,நேர் கொண்ட பார்வையாளராக , கேள்வி கேட்டு தங்கள் உரிமையைப் பெறும் நிலைக்கு வார்லி மக்களை உருவாக்கிய கோதாவரி பாரு லேகர் சொல்லும் சரித்திரம் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
செங்கொடியின் வலிமை தான் இவர்களை மாற்றியது என பல இடங்களில் குறிப்பிட்டாலும் அதை மனிதர்களுக்குள் நிகழ்த்திய வழிகள் இதில் ஈடுபட்ட மனிதர்களையேச் சாரும் .
கோபால கிருஷ்ணகோகலே குடும்பத்தில் தோன்றிய கோதாவரி பாருலேகர் , வரலாற்றுச் சிறப்பு மிக்க வார்லி ஆதிவாசிகளின் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய போராளியாக , மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் சங்கத்தை உருவாக்கியவராக , அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் வரலாற்றில் , அதன் ஒரே பெண் தலைவராகவும் , மகாராஷ்டிராவில் சட்டப்படிப்பு படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக சிறந்த சமூக சேவகியாக சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் வார்லி மக்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவர்களின் விடுதலைக்காக கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்துள்ளதை இந்நூலில் அறிய முடிகிறது .
இந்த பழங்குடியின வார்லி மக்கள் எப்படி மாறினார்கள் ? கல்வியறிவில்லாத எளியவர்கள், சாமர்த்தியமில்லாத இவர்கள் எப்படிக் குறுகிய காலத்திற்குள் மாற்றமடைந்தனர் ?விழிப்புற்றனர் ?தங்களைச் சுரண்டக் கூடியவர்களுக்கு எதிராக வீரமிக்க போராட்டத்தை எப்படி நடத்தினார்கள் ? எங்கிருந்து அந்த சக்தி வந்தது ?
இந்த வரலாற்றையும் தன் அனுபவங்களையும் எளிமையான நடையில் மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார் கோதாவரி பாரு லேக்கர் .
அனைவரும் வாசித்து உள்வாங்கி நம்மை நாமே எழுச்சி பெற துணை செய்யும் மொழிபெயர்ப்பு நூலான மனிதர்கள் விழிப்படையும் போது சிறந்த நூல்.
மனிதர்கள் விழிப்படையும் போது
ஆதிவாசிகளின் எழுச்சி:
வார்லி பழங்குடியினரின் போராட்டக்கதை .
சாகித்ய அகாதமி பரிசு பெற்றது . சவுத் விஷன்
வெளியிட்டுள்ளது. விலை ரூ 125 , பக்கம் 374
நூல் அறிமுகம்:ஆசிரியை உமா மகேஸ்வரி