கொடியன்குளம் கங்குகளிலிருந்து..

கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து ஊதி வெளிச்சம் தந்து வேர்களையும் விழுதுகளையும் தேடிப் பயணம் போன கதை இது.

“நுழைவுவாயில்” நாவலில் போட்ட ஓர் விதை “ கொத்தாளி”யாக முளைத்துள்ளது. சமூக அக்கறையோடு தொடர் தேடலில் ஈடுபடும் முஹமது யூசுப்புக்கு பாராட்டுகள்.
பொதுவாய் சாதி குறித்து எழுதுகிறபோது பொருளாதார வேர் குறித்து எழுதுவதில்லை; பொருளாதார வேர் குறித்து எழுதுகிறவர் சாதி வேர் தேடுவதில்லை; இந்நாவல் இரண்டு பக்கமும் பயணிப்பதோடு வரலாற்று தடத்திலும் பயணிப்பது கூடுதலாகும்.

முதல் அத்தியாயத்தில் வேம்பன் எனும் குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் உளவாளியை அனுப்பும் காட்சி பதிவாகிறது . இறுதி அத்தியாயத்தில் அதே வேம்பனுக்கு ஓர் போலீஸ் அதிகாரியே உதவுவதில் முடிகிறது. இடையில் வேம்பன் மீது புனையப்பட்ட குற்றவாளி முகத்திரை கிழிவதும்; போராளி என்கிற உண்மை வெளிப்படுவதும், வேம்பன் என்பவன் தனி ஒருவனல்ல ஓர் அமைப்பு என புலனாவதும் ஓர் நல்ல நகர்வு. அது எப்படி என்பதில்தான் நாவலின் நுட்பம் அடங்கி இருக்கிறது . வாசித்தறிக!

“ஆறிலொரு பங்கு“ எனும் பாரதியார் கதையில் தமிழகத்தில் இருந்து கொல்கத்தா போனால், இதில் கொல்கத்தாவிலிருந்து தமிழகம் வந்து காதல் மணமுடிக்கும் கதை. கனகலிங்கம் பூணுல் வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்துத்துவ தொடர்பு, அவுரி வியாபாரம், அபின் வியாபாரம், சோலார் நிலக்கொள்ளை, தாய்வழி சமூகக்கதை இப்படி நிறைய வெளிகளில் பயணித்து செல்கிறது நாவல்.

சாதியக் கொடுமை, சாதிய உள்ளடுக்கு, கார்ப்பரேட் ஊழல், கார்ப்பரேட் மற்றும் கொள்ளையர் கைக்கருவியாய் போய்விட்ட அரசு இயந்திரம், நிலக் கொள்ளை, அரசு இயந்திரத்துக்குள்ளும் ஆழமாய் ஊடுருவி நிற்கும் சாதியம், இவற்றோடு கொடியங்குளத்தின் முன்னும் பின்னும் நகரும் கதையும் தகவல்களும் முஹமது யூசுப்பின் டாக்குபிகேசன் வகைமை நாவலின் வலிமையாகும்.

தாத்தாவின் துண்டு நிலத்தையும் அரசு இயந்திர உதவியோடு அமுக்க பார்க்க பொறுக்காத மருதன் புகாரளிக்க, நேர்மையான அதிகாரி செந்தட்டி அதனை தொடர்ந்து பெரும் நிலக்கொள்ளையை கண்டுபிடிக்க வினையானது. மருதன் கால் வெட்டப்பட்டார் .அவர் தம்பி வேம்பனை போலீஸ் தேடுகிறது. அமைச்சர் மாயப்பெருமாளும் அவர் தம்பி ரவியும் பேயாட்டம் போட. அரசு இயந்திரம் அவர் சொல்படி ஆட- கொலைகள் அரங்கேற கதைக்களம் க்ரைம் தில்லர் நாவலாகிறது.

ரஹ்மான் பாய், இஸ்மாயில், மாடத்தி, கழுவடியான், போலீஸ் அதிகாரி கோகுல், வள்ளுவன் இப்படி நீளும் ஒவ்வொரு பாத்திரமும் நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் வகை மாதிரியாக இருக்கக் காண்கிறோம். கழுதையும் ஒரு பாத்திரம்தான்.

காவல்துறைக்குள் கருப்பு ஆடுகள் மட்டுமல்ல நேர்மையான ஆட்களும் அமுக்கமாய் இயங்குகின்றனர் என்கிறது இந்நாவல். அரசு இயந்திரம் ஆயினும் பொதுவெளி ஆயினும் சாதியம் வலுவாய் இயங்கினும், இன்னும் நம்பிக்கை வற்றிவிடவில்லை. இன்னும் மனிதமும் ஈரமும் இருக்கிறது. இதுதான் இந்நாவலின் செய்தி.

ஒரு முறை சிஐடியு மாநாட்டில் ஓர் தொழிலாளியின் கேள்விக்கு பதில் சொல்லும் போது தோழர் பி.டி ரணதிவே சொன்னார்,” சாதிய திரட்டல் எல்லாவற்றையும் ஒரே தராசில் நிறுக்க கூடாது . ஒடுக்குவதற்கான சாதிய திரட்டலை எதிர்க்க ஒடுக்கப்பட்டவன் சாதியாய் திரளுவது தவிர்க்க முடியாதது. ஆகவே ஒடுக்கப்பட்டோர் சாதிய திரட்டலை அனுசரணையோடுதான் அணுக முடியும்” “அதே வேளை சாதியாக அல்ல ஜனநாயக ரீதியாக அனைவரும் ஒன்று திரள்வதே தீர்வை விரைவு படுத்தும்.” என்றார். இந்நாவலைப் படிக்கும் போது அது நினைவுக்கு வந்தது.

ஆர். பாலகிருஷ்ணனின் “பண்பாட்டுப் பயணம்” அண்மையில் படித்தேன். அதில் அவர் சிந்துவெளிக்கும் வைகைக்கும் வடகிழக்கு பழங்குடியினருக்குமான தொடர்பை பெயர்களைத் ஆய்ந்து தந்திருப்பார். இந்நாவலிலும் யூசுப் அதுபோன்று பயணிக்கிறார். “கொத்தாளி” என்ற சொல் சார்ந்து ஏராளமான செய்திகளை, தரவுகளை தேடி இந்நாவலில் நன்கு கோர்த்திருக்கிறார். கொத்தாளி கட்டுரைகளுக்கு இன்னும் கொஞ்சம் சுவை கூட்டியிருக்கலாமோ?

இந்நாவல் கிரைம் நாவல் என்பதால் கதையை முழுமையாகச் சொல்வது கூடாது . நீங்களே வாசித்தறிக!

வேம்பன் தனிமனிதல்ல ஓர் அமைப்பு என நூல் நெடுகப் பேசும் இந்நாவல் இது எந்த அமைப்பென சொல்லவில்லை. பேராசிரியர் சிவசுப்பிரமணியமும் ஒரு கதா பாத்திரமாக உலவுவதால் ஓரளவு யூகிக்க முடிந்தாலும், தீவிரவாத சாயலும் அதன் மேல் படியத்தான் செய்கிறது.

1995 ல் நடந்த கொடியன்குளம் கொடுமை கிட்டத்தட்ட பொதுபுத்தியிலிருந்து மறைந்து விட்டது. ஆனால் அதன் கோர வடுக்களாய் திகழும் அந்த பாழடைந்த கிராமங்களில் இந்நாவல் உலவி அதன் ரணங்களை தடவிக் காட்டுகிறது. வாசிக்கும் போதே நெஞ்சு விம்முகிறது. மறப்பது பொதுபுத்தியின் இயல்பு நினைவூட்டிக் கொண்டிருப்பது சமூக அக்கறை கொண்டோர் கடமை. அதன் இலக்கிய பதிவு காலத்தின் தேவை.
யூசுப்பின் எல்லா எழுத்துகளிலும் உடன்படவும் முரண்படவும் இடம் இருப்பதைப் போல் இந்நாவலிலும் உண்டு.

முஹமது யூசுப்பின் முந்தைய ஏழு நூல்களையும் வாசித்தவன் நான். இந்நாவலையும் வாசிக்க வாய்ப்பு அமைந்தமைக்கு மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். தொடர்க உங்கள் பணி !

கொத்தாளி, [டாக்குபிக்சன்]
ஆசிரியர் : முஹமது யூசுப்,
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,
தொடர்புக்கு : 9042461472 / 98416 43380
[email protected] / www.yaavarum.com / www.be4books.com
பக்கங்கள் : 254 ,
விலை : ரூ.290/

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *