ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால் இந்துத்துவம் குறித்து அறிந்துகொள்ளும் முயற்சி என்னைப் போன்றவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டே வருகிறது.

இது குறித்து ஏராளமான படைப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. அப்படி வந்தவைகளில் 2020 இறுதியில் வெளிவந்த “இந்துத்துவம்: கோட்பாடும் அரசியலும்” என்ற சுந்தர சோழன் அவர்களின் மிகவும் முக்கியமானது.

மொத்தம் 11 தலைப்புகளில் 280 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், இந்துத்துவம் என்பது ஒரு வாழ்வியல் முறை; மத கோட்பாடு; பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்று சொல்லப்படுகிற எல்லாவற்றையும் இந்நூல் தக்க தரவுகளோடு தகர்த்தெறிந்து விடுகிறது. கூடுதலாக இந்துத்துவம் எப்படி இயல்பிலேயே பாசிச கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரப்பூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் அதற்கான ஆதார பட்டியல்களோடு இருப்பது சிறப்பு.

இந்நூலுக்காக சுந்தரசோழன் தந்திருக்கிற மேற்கோள்களைப் பார்க்கும்போதுதான் அவர் எத்தனை நூல்களை படித்து, அவ்வளவு விசயங்களை சேகரித்து, அதன் மூலமான படிப்பினைகளை தொகுத்துக் கொண்டு நமக்கு இந்நூலை அளித்திருக்கிறார் என்கிற அவரது உழைப்பு பிடிபடுகிறது.

நூலின் சாரம் இதுதான், இந்துத்துவம் என்பது ஒரு அதிகாரத்திற்கான அரசியல். அந்த அரசியலின் அடிநாதம் எதுவென்றால், “தான் (Self) மற்றும் தான் அல்லாதவர்கள் (non-self)” என்பதுதான் என்று நமக்கு விளங்க வைப்பதுதான் இந்நூலின் சிறப்பு.

இந்த, தான் மற்றும் தான் அல்லாதவர்கள் என்ற அடிப்படைதான் இந்திய சமூகத்தின் அடிப்படை. தன் சாதி, தன் சாதி அல்லாதவர்கள்; தன் மதம் தன் மதம் அல்லாதவர்கள் என்கிற அடிப்படை வாதமானது, வெறுமனே மக்களை பிரித்து மட்டும் வைக்கவில்லை. அது தான் அல்லாதவர்களை அன்னியர்களாகவும் அதன் காரணமாக எதிரிகளாகவும் வரையறை செய்கிறது. அந்த எதிரிகளில் ஆபத்தானவர்கள் என்ற பட்டியலையும் கொண்டிருக்கிறது.

அந்த வகையில்தான் இந்துத்துவமானது தம் மதத்திற்குள்ளேயே தலித்துகளையும், பெண்களையும் எதிரிகளாக சித்தரிக்கிற அதே நேரத்தில் மதத்திற்கு வெளியே இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் சமூக நலன் பேசுகிற அரசியலாளர்களையும் ஆபத்தானவர்கள் என்று சித்தரிக்கிறது.

தான் மற்றும் தான் அல்லாதவர்கள் என இந்துத்துவக் கருத்தியல் தன்னை வெளிப்படுத்தி பாசிசத்தைக் கட்டியமைக்கிறது. ஆனால் இது எவ்வளவு திட்டமிட்ட சதி என்பதற்கு மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பல உதாரணங்கள் உள்ளன. மாமன்னன் சிவாஜியின் அரண்மனையிலேயே பல இஸ்லாமியர்கள் உயர் பொறுப்புகளில் இருந்ததும் இஸ்லாமிய மன்னர்களின் அரசவையில் பல இந்துக்கள் உயர் பொறுப்புகளில் இருந்ததையும் இந்நூலில் தக்க சான்றுகளுடன் விவரிக்கப்படுவதன் மூலமாக இன்றைய இந்துத்துவம் என்பது இதுவரை இருந்துவந்த கருத்தியல்களிலே மிக மோசமான பச்சோந்தித்தனமானது என்று அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.

இதுதான் பாசிசம் என்று தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். இந்துத்துவத்தின் இந்த பாசிசப் போக்கு அதன் பிறவிக்குணம், அதுதான் காந்தியை காவு வாங்கியது, அதன் தொடர்ச்சியாக இன்று வரைக்கும் பலரையும் குறிவைத்து பலியெடுகிறது என்ற புரிதலை அளிக்கிறார்.

இந்த புரிதல் நம்மை எதை நோக்கி தள்ளுகிறது? தான் மற்றும் தான் அல்லாதவர் என்கிற பாசிச அரசியலுக்கு மாற்றாக, பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைக்கிற “நாம் மற்றும் நாம் அல்லாதவர்” என்கிற அரசியலை நோக்கித் தள்ளுகிறது. வாழ்நிலையால், அதற்கான உரிமைகளை அடைவதற்கான அனைவரையும் ஒருங்கிணைக்கிற நாமாகவும்; நம் உரிமைகளை மறுக்கிற, ஒடுக்குகிற அனைவரையும் நாம் அல்லாதவர்களாகவும் முன்வைக்கிற அரசியலை நோக்கி இந்நூல் தள்ளுகிறது.

ஒரு நல்ல நூலின் அடையாளம் அது நம்மை உந்தித் தள்ளுவதற்கான செறிவுடைய கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்நூல் அந்த தகுதியை முழுமையாகக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூலை தனது கடின உழைப்பால் உருவாக்கித் தந்துள்ள நூலாசிரியர் சுந்தர சோழன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூல்: இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும்
ஆசிரியர்:  சுந்தரசோழன்
வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம்
விலை: ரூ. 250

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *