(வழக்கறிஞர்கள், ஊடகங்கள், குடிமை சமூகம், மாணவர் அமைப்புகள் உட்பட அறிவார்ந்த மக்கள் மட்டுமே சித்திரவதைக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடியும்.)

இப்போது, தூத்துக்குடியில் ஒரு சிறிய நகரத்தில் பி.ஜெயராஜ் மற்றும் ஜே.பென்னிக்ஸ் என்கிற தந்தையும் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்ட துயரார்ந்த சம்பவம் குறித்து ஒவ்வொருவரும் கேள்விப்படுகிறோம்.  சமூக முடக்கக் காலத்தின் விதிகளுக்குப் புறம்பாக அவர்களது மொபைல் ஷாப் திறந்து வைக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்குச் சென்றிருந்த அவர்கள் இருவரும் இரக்கமற்ற முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில், சமூக முடக்கக் கால விதியை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீதுவழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் அதிகபட்சம் அவர்கள் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பார்கள், அவ்வளவுதான். ஆனால், இந்தக் கதை, காவல்துறையினருடன் மைட்டும் முடிந்துவிடவில்லை. மேற்படி இருவரும் இறப்பதற்கு முன், போலீசார், அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்திவைத்து, காவல் அடைப்பு (ரிமாண்ட்) கோரியிருக்கிறார்கள், நீதித்துறை நடுவரும் தனக்கு முன் காவல் அடைப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிற இருவரையும் பார்க்காமலேயே, அல்லது அவர் காவல் அடைப்பு செய்யப்படுவது தொடர்பாக எதுவும் அவர்களிடம் கேட்காமலேயே, எந்திரரீதியாக காவல் அடைப்பு செய்திருப்பதுபோலவே தோன்றுகிறது. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளுமே – அதாவது கொடூரமான சமூக முடக்கத்தை அமல்படுத்தும் நடைமுறைகளில் தொடங்கி, முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய மரணங்கள் வரையிலும் – நாட்டில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புமுறை சுக்குநூறாக உடைந்திருக்கும் நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஓர் அடையாளமாகவே இருக்கின்றன.

போலீஸ் கலாச்சாரத்திற்குள் பீடித்துள்ள நோய்

Stop cheering police brutality. Citizens like Jayaraj and Bennix ...

தமிழ்நாடு காவல்துறை, சட்டத்தை அமல்படுத்துவதற்காக, சித்திரவதை முறைகளைப் பயன்படுத்துவதைக் கடந்த பல ஆண்டுகளாகவே மேற்கொண்டு வந்திருக்கிறது என்று அவப்பெயரைப் பெற்றிருக்கிறது.  நான், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தபோது, இது தொடர்பாகப் பல வழக்குகள் என்முன் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சனை என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒன்றல்ல. உண்மையில், சித்திரவதைக் கொடுமைகள் புரிவது என்பது, நாடு முழுவதுமே, போலீஸ் கலாச்சாரத்தின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கமாகும். அதுமட்டுமல்ல, போலீஸ் கலாச்சாரம் இப்போதுதான் இவ்வாறிருப்பதாகவோ கருதினால் அது தவறாகும். இப்போது நடந்துள்ள கொடுமைகள், நமக்குக் காலனியாதிக்கக் காலத்தில் போலீசார் மேற்கொண்ட கொடூரங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றன. போலீசாரின் சித்திரவதைகள் என்பவை எதார்த்தமாக இருக்கிறது என்பதை அதிகாரபூர்வ தரவுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அத்தகைய தரவுகளின் தரம் மட்டும் எப்போதும் சந்தேகத்திற்கு உட்படுத்தப் படுபவையாகும்.

போலீசாரின் சித்திரவதைக் கொடுமைகளின் அடாவடித்தனங்களை, ஆசியன் மனித உரிமைகள் மையம், ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் யூனியன் ஆகியவையும் மற்றும் பல அரசுசாரா நிறுவனங்களும் அளித்துள்ள அறிக்கைகளிலிருந்து நன்கு புரிந்துகொள்ள முடியும். சித்திரவதை தொடர்பான தரவுகள், இந்தியாவில் உள்ள போலீசாரின் கலாச்சாரத்தின் பிரிக்கப்படமுடியாத ஓர் அங்கம் என்பது மட்டுமல்ல, (பயங்கரவாத வழக்குகள் போன்ற) சில புலன் விசாரணைகளில், இத்தகைய சித்திரவதைக் கொடுமைகளே ஒரு முக்கியமான மையப்பகுதியாக அமைந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால், நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் போலீசாரின் இத்தகைய சித்திரவதைகளுக்கு, வசதி செய்து கொடுத்திருக்கின்றன. ஆம், பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடைச்) சட்டம்  மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இச்சட்டம் புதுப்பிக்கப்பட்டு மகாராஷ்ட்ரா கட்டுப்பாடு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் (The Terrorist and Disruptive Activities (Prevention) Act, The Prevenion of Terrorism Act, The Mararashtra  Control of Organised Crime Act) ஆகியவற்றின் கீழ், சாட்சியமாகப் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களின் ஏற்கும் தன்மை, போலீசாரின் சித்திரவதைகளுக்கு வசதி செய்து கொடுத்திருக்கின்றன. காவல்துறையும், சட்டத்தை அமல்படுத்தும் நடைமுறைகளுக்குப் பெரிய அளவில் உதவும் விதத்திலுள்ள டிஎன்ஏ பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்திக்கொள்ளாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டவசமகும்.

இந்த லட்சணத்தில் சர்வதேச அரங்கில் நம் நாட்டைப்பற்றிப் பீற்றிக்கொள்வது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன. 2017இல் ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியாவின் அட்டார்னி ஜெனரல், நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படுவது தொடர்பாக, துவக்கவுரை ஆற்றியபோது, புத்தரையும், மகாத்மா காந்தியையும் மேற்கோள்காட்டிவிட்டு, “இந்தியா, … அமைதி, அஹிம்சை மற்றும் மனிதகுலத்தின் கண்ணியத்தை உயர்த்திப்பிடிப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதன்காரணமாக, சித்திரவதை என்னும் கருத்தாக்கம் எங்கள் நாட்டின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். நாட்டின் அரசமைப்பில் இதற்கு இடம் கிடையாது,” என்று கூறினார். நம் நாட்டின் பாசாங்குத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் இதைவிடச் சிறந்த ஒன்றை நாம் காட்ட முடியாது.

தூத்துக்குடி வழக்கில் குற்றப்புரிந்துள்ள போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதிலும், பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு ஏதோ கொஞ்சம் இழப்பீடு கிடைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், இதுபோன்று இங்கொன்றும் அங்கொன்றுமான நடவடிக்கை தேவை இல்லை. உண்மையில் நமக்குத் தேவை என்னவெனில், சித்திரவதை என்பது ஒரு தொற்று நோய் என்பதையும், ஒரு ஓர் அமைப்புரீதியான பிரச்சனை என்பதையும் அங்கீகரித்து, அதற்கு எதிராக சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷனின் கீழ், (UNCAT – U.N. Convention Against Torture) சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டு,  ஒரு கடுமையான சட்ட அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகும். உண்மையில் இந்தக் கன்வென்ஷனில் இந்தியா 1997இல் கையெழுத்திட்டிருக்கிறது. ஆயினும் அதன் அடிப்படையில் நாட்டில் எவ்விதமான சட்டத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.

சித்திரவதை குறித்து உச்சநீதிமன்றம்

Man tortured to death by Lahore police, family allege - Pakistan ...

இந்தியா,  சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷனில் கையெழுத்திடுவதற்கு முன்பே, நம்முடைய உச்சநீதிமன்றம், நாட்டின் சித்திரவரைக் கலாச்சாரத்துடனான பல பிரச்சனைகளை உயர்த்திப்பிடித்து, உச்சநீதிமன்றம் போற்றத்தக்க விதத்தில் ஒரு சட்ட இயலைக் (jurisprudence) கொண்டு வந்திருக்கிறது.  ரக்பீர் சிங் (எதிர்) ஹர்யானா அரசு (1980) வழக்கில், நீதிமன்றம், “சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே, மனித உரிமைகளுக்கு மரணத்தை விளைவித்தபோது, சாமானியமக்களின் மனங்களில் அவர்களுடைய வாழ்வும் சுதந்திரமும் ஒரு புதிய ஆபத்தில் இருப்பதாகக் கருதி, ஒரு பயங்கரமான பயத்திற்கு ஆட்படுகிறார்கள். போலீசாரின் சித்திரவதையின்  கொடூரமான நிகழ்வுகள்  மீண்டும் மிகவும் மோசமான முறையில் நடந்திருப்பது கண்டு, ஆழமான முறையில் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.”

இதேபோன்ற உணர்வுகள் பிரான்சிஸ் கொராலி முல்லின் (எதிர்) தில்லி யூனியன் பிரதேசம் (1981), வழக்கிலும், ஷீலா பார்சே (எதிர்) மகாராஷ்ட்ரா மாநில அரசு (1987) வழக்கிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் நீதிமன்றம், கொடுமைகள் புரிவதையும், சித்திரவதைகள் மேற்கொள்வதையும் அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவை மீறும் செயல்கள் என்று குறிப்பிட்டிருக் கின்றன. இவ்வாறு 21ஆவது பிரிவிற்கு விளக்கம் அளித்திப்பது என்பது, சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷனின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறது. சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷன்கள் உலகத்தில் எங்கும் சித்திரவதை மற்றும் குரூராக நடத்துதல், மனிதாபிமானமின்றி நடத்துதல், தரம் தாழ்த்தி நடத்துதல் அல்லது தண்டனைகள் போன்ற இதர கொடுமைகளையும் தடுத்திட வேண்டும் என்பதைக் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கின்றன.

சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷனில் இந்தியா 1997இலேயே கையெத்திட்டிருந்த போதிலும், அதனைச் சரி என்று கூறி இதுவரை  உறுதி (ratify) செய்திடவில்லை.

2010இல், ஒரு பலவீனமான சித்திரவதைத் தடைச் சட்டமுன்வடிவு (Prevention of Torture Bill) மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அது சித்திரவதைக்கு எதிரான  ஐ.நா. கன்வென்ஷனுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. (அப்போது நானும், நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றபின், 2010இல் அந்தக் குழுவின் முன் ஆஜரானேன்.) ஆனால், அந்தக் குழு ஒரு சட்டத்தைப் பரிந்துரைத்து, 2012இல் சமர்ப்பித்தது. எனினும் அது பயன்பாட்டிற்கு வரவேயில்லை. அப்போதிருந்த ஐமுகூ அரசாங்கம் அந்தச் சட்டமுன்வடிவினைத் தாமாகவே மரணித்திட (lapse-ஆக) அனுமதித்தது.

2016இல் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமாகிய அஸ்வனி குமார், சித்திரவதைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்ததன் வழியாக கோரிக்கை வைத்தார். 2017இல், சட்ட ஆணையம் தன்னுடைய 273ஆவத அறிக்கையை சமர்ப்பித்தது. அதனுடன் ஒரு வரைவு சித்திரவதை சட்டத்தையும் அளித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த மனுவினைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம், அரசாங்கத்தை ஒரு சட்டத்தை நிறைவேற்றக் கோரி, நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதன் மூலம் (by mandamus) கட்டாயப்படுத்த முடியாது, ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வது அரசியல் முடிவு, அது அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று  நீதிமன்றம் காரணிகளைக் கூறியிருந்தது.

இதன்பின்னர் அஸ்வனி குமார் இரண்டாவது தடவையும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதற்கும் முதல் மனுவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்பட்டது. இவ்வாறு உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது, உச்சநீதிமன்றம் தன்னுடைய சொந்த போற்றுதலுக்குரிய சட்ட இயலை நேராக எதிர்கொள்ள மறுத்து, தன் முதுகை அதற்குக் காட்டுவது போன்றதாகும். கடந்த காலங்களில் சட்டங்களை இயற்றுவதற்கு அது மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம், இப்போதுள்ள உச்சநீதிமன்றம்  கண்டுகொள்ளவே இல்லை.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளின் அனைத்து வடிவங்களையும் ஒழித்துக்கட்ட, ஐ.நா. கன்வென்ஷன்களைப் பயன்படுத்தி, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சட்டத்தை சீர்திருத்தியது குறித்தோ, அல்லது சுற்றுச்சூழல் வழக்குகளில் சர்வதேச அளவில் உள்ள சட்டங்கள் குறித்து அது அளித்துள்ள கருத்துக்களையோ, அல்லது தனிநபர் அந்தரங்கங்கள் மீதான உரிமை குறித்தோ அது தெரிவித்துள்ள கருத்துக்களையெல்லாம் இப்போதுள்ள உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லை. இவை அனைத்தும், நாடாளுமன்றத்தை சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உட்படுத்திடக்கூடிய விதத்தில் நீதிமன்றம் செயல்திறனுடன் நடந்துகொண்டவைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். சித்திரவதை தொடர்பாக சட்ட ஆணையம் உருவாக்கி இருந்த வரைவு சட்டமுன்வடிவு கூட, சித்திரவதை தொடர்பாக ஒன்றுமே இல்லாத நிலையில் சிறந்த ஒன்றாகவே கருதப்பட்டது. அந்த வரைவு சட்டமுன்வடிவு அனைத்து மாநிலங்களுக்கும் அவற்றின் மீதான கருத்துக்களைக் கோரி, சுற்றுக்கு விடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றின் மீது எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு மத்திய அரசும், மாநில அரசாங்கங்களும் இதனை நிறைவேற்றத் தயங்குவதற்குக் காரணம், இவை போலீசார் மேற்கொண்டும் கொடூரமான நடவடிக்கைகள், சித்திரவதைகள் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அவசியமான தீங்கு (necessary evil) என்று கூட்டாகவேவே ஒப்புக்கொண்டிருப்பது போன்றே தோன்றுகிறது.

இப்போதாவது சித்திரவதைக்கு முடிவு கட்டுவோம்

Wounds, beating leading to dialysis: Cases pour in about Tamil ...

இப்போதுள்ள மத்திய உள்துறை அமைச்சகமோ அல்லது இந்த அரசாங்கமோ சித்திரவதைச் சட்டத்தை எடுத்துக்கொள்வது என்பது அநேகமாக இருக்காது. உண்மையில், சித்திரவதைச் சட்டமுன்வடிவுக்கு ஏற்பட்ட கதி என்பது நாட்டு மக்களுக்கு தொடர்ந்து இருந்து வந்த அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ள துரோகமாகவே வெளிப்பட்டிருக்கிறது. சித்திரவதை மீது சட்டம் இயற்ற 23 ஆண்டுகளாக வாய்ப்புகள் இருந்து வந்தன. ஆனாலும், அனைத்து அரசாங்கங்களும் அதனை நிறைவேற்றாமல் புத்திசாலித்தனமாகத் தவிர்த்துவிட்டன.

ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கேட்பது என்பதில் அர்த்தமே இல்லை. ஏனெனில் இதுவரை இருந்துவந்துள்ள அனைத்து அரசாங்கங்களுமே இப்போதுள்ள நிலை (status quo)யை தொடர வேண்டும் என்றே விரும்புகின்றன என்பதையும், காவல்துறையினரை தங்கள் சுய பாதுகாப்புக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரும்புகின்றன. அவ்வாறு காவல்துறையினர் இருந்துவருவதால் அவர்கள் இப்போதுள்ள நிலை குறித்து குஷியுடன் காணப்படுகிறார்கள். இதில் எவ்விதமான மாற்றத்தையும் ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல்ரீதியாக விரும்பவில்லை.

இவ்வாறு ஆட்சியாளர்கள் இருந்தபோதிலும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டிய தேவை இல்லை. இத்தகைய நிலைமைகளுக்கு எதிராக நமக்கு உத்வேகமூட்டக்கூடிய விதத்திலும் ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவில், மின்னாபொலிசில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை, ஒரு போலீஸ்காரன் தன் காலை அவருடைய கழுத்தில் வைத்து நெறித்து அவரைக் கொன்ற பின்னர்,  உலகம் முழுதும் நடைபெற்றுள்ள  போராட்டங்கள் சித்திரவதைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. இப்போராட்டங்களில் இந்தியர்களும் அதிகமான அளவில் கலந்துகொண்டிருக்கிறார்கள். மக்களின் தலைமையின்கீழ் நடந்து வரும்  இவ்வியக்கம், அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்தும்,   போலீசாரை நிராயுதபாணியாக்குவது குறித்தும் தேசிய அளவில் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அதேபோன்று இங்கேயும், சட்ட ஆணையம் பரிந்துரைத்ததுபோன்று சித்திரவதைக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியத்தைக் கொண்டு வரக்கூடிய விதத்தில் ஒரு மக்கள் இயக்கம் நமக்குத் தேவை. அது, சித்திரவதைக்கு முடிவு கட்டுவதற்கான நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளித்திடும்.

போலீசாரின் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக, எவ்வாறு உலகில் இதர பகுதிகளில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்களோ அதேபோன்று இங்கும்  மக்கள் கிளர்ந்தெழுந்திட வேண்டும். வழக்கறிஞர்கள், ஊடகங்கள், குடிமை சமூகம், மாணவர் அமைப்புகள் உட்பட மக்களால் மட்டுமே சித்திரவதைக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடியும். இவ்வாறு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் பார்க்க விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு தாங்கள் சார்ந்திருக்கின்ற நிலையிலிருந்து பங்களிப்பினைச் செய்திட முடியும். முதலில் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதே இப்போது நாம் தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும்.

Justice Mukul Mudgal replaces Justice Ajit Prakash Shah as ...

(கட்டுரையாளர், தில்லி மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி)

நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *