நூல் அறிமுகம்: எம்.டி.வாசுதேவன் நாயரின் *மஞ்சு (குறுநாவல்)* – இருவாட்சிநூல் -மஞ்சு (குறுநாவல்)
ஆசிரியர் – எம். டி. வாசுதேவநாயர்
மொழிபெயர்ப்பு ரீனாஷாலினி
காலச்சுவடு பதிப்பகம்.
தஸ்தாவோஸ்கியின் வெண்ணிற இரவுகள், செக்காவின் நாயிக்கார சீமாட்டி, டால்ஸ்டாயின் அன்னா கரினீனா, மாக்சிம் கார்கியின் முதல் காதலை விட எனக்கு இவான் துர்க்நேவ்வின் காதல் கதைகள்தான் பிடிக்கும் அதிலும் ஆஷ்யா மிகவும் பிடித்தது. இக்கத்தையில் N. N என்பவர் வயதாகியும் பிரிந்த ஆஷ்யாவை நினைத்து நினைவின் வழியே அவளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார், மனிதன் தனியாக இருக்கிறான் அவனது நினைவுகளில் வாழ்கிறான். இக்கதை மஞ்சு கதையில் வரும் விமலாவிற்கு பொருந்தும். நினைவோ ஒரு பறவை…..
விமலா டீச்சர் தன்னை விட்டு சென்ற சுதிர்மிஸ்ராவிற்காக ஒரு நாளோ, ஒரு மாதமோ அல்ல 9 வருடங்கள் காத்துகொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் கணவனும் அல்ல. விமலா அதற்காக எந்த குறையும் கூறவில்லை, சுதிரை தேடியும் செல்லவில்லை காத்துக்கொண்டிருக்கிறாள் ரத்தம், சதையுமாக அவனை நினைத்துகொண்டு ஒருநாள் வருவானென்று விமலா தன் சொந்த குடும்பத்தால் அந்நியபடுத்தப்பட்டு தனியாக மலைப்பிரதேசத்தில் வாழ்கிறாள்.அவளது தம்பி பாபு பஹாடிகளுடன் கஞ்சா புகைத்தும் காசுவைத்து சீட்டாடியும் திரிகிறான். தங்கை வேலைக்காரர் பீர்பகதூர் வழியாக காதல் கடிதங்கள் பரிமாறுகிறாள். அம்மா மற்றொரு ஆடவன் கோமஸூடன் உல்லாசப்பயணம் இவையெல்லாம் பிடிக்காமல் தானே மலை பிரதேசத்தில் கழிக்கிறாள்.விமலா நினைவின் வழியே வாழ்வை வாழ்ந்துகொண்டிருகிறாள். இக்கதை 1955களில் நடப்பதுபோல் கதை நகருகிறது.1964 எழுதப்பட்ட நாவல் “மஞ்சு “என்ற பெயரிலே 1983ல் மலையாளத்தில் படமாக எடுக்கபட்டுள்ளது.
இந்நாவல் காத்திருப்புகளின் கதை.நைனி தேவி ஈசனுக்காக காத்திருத்தல். புத்து தன் வெள்ளைக்கார தந்தைக்காக காத்திருத்தல்.மலை, காலம், இடம் இக்கதையில் எல்லாம் காத்திருப்புகள் படிமங்களாக காட்டப்பட்டுள்ளது.


//இறந்து போனவர்களை நினைத்து தூங்காமல் இருக்கக்கூடாது.பூமியில் ஏராளமானவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இல்லையா எவ்வளவு அழகான மொழிகள்// விமலாவை விட வயதில் மூத்த சர்தார்ஜியும் விமலாவும் எதிர்பாரா சந்திப்பு, இருவருக்கும் நடைபயணத்தில் நடக்கும் உரையாடல் செம!இதை காதல் என்று சொல்லலாமா இல்லை இருங்க சர்தாஜியே சொல்லுவார் விமலாவிடம்.
எனக்கு உங்களைப் பிடிக்கும் காரணம் எதுவும் இல்லை. வழிமறித்து நிறுத்த மாட்டேன், காதல் கடிதம் எழுத மாட்டேன், எதுவும் செய்யமாட்டேன். ஒரு உறவையும் கற்பனை செய்யாமல் சும்மா எனக்கு உங்களை பிடிக்கிறது.கோரிக்கையோ வேண்டுகோளோ அல்ல. பதில் எதிர்பார்க்கவும் இல்லை என்று கூறுவார்.விமலா என்ன சொல்வது என்றே தெரியாமல் பிரமித்து நின்று கொண்டிருப்பாள், அத்துடன் கதையும் நிறைவடைவதுபோல் முடித்திருப்பார்.
கேன்சாரால் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்குப் போவதை தெரிந்து கொண்ட சர்தார்ஜியின் செயல்கள் பேச்சுக்கள் வாழ்வின் நிலையாமையை உணர்த்தும்.
மஞ்சு என்றால் (பனி, மேகம் ) கதைக்கு ஏற்றார் போல் தலைப்பு,குறைந்த கதாபாத்திரங்கள் வைத்து நாவலை கவித்துவ நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார். வாசிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் மஞ்சு படலமாக படருவது உணர முடியும் . நம் எல்லோருடைய வாழ்விலும் காத்திருப்பும், தனிமையும் கடந்துதான செல்கிறோம். “காத்திருப்பு”எவ்வளவு ஆழமான பதம் , “காத்திருப்பு “என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை பொருத்தது.