நிறைய வருத்தமும் கொஞ்சம் கவிதைகளும் – மதுசூதன்1

நிலைக்கண்ணாடியில் என் பிம்பங்கள்
கொஞ்சம் வித்யாசமானவை.
முன்னைப் போலென்னை பிரதிபலிப்பதுமில்லை.
என் பிம்பங்களை விசாரித்தும் விட்டேன்.
நேற்றைக்கு மாலை பார்த்த
போது பிம்பங்களில் ஒன்று
என் வயதான அப்பாவைப் போல் புருவம் நரைத்திருந்தது.
தோளில் துண்டிருந்தது.
முன் நெற்றி விசாலமாகிவிட்டிருந்து.
காது முடி நீண்டிருந்தது.
கவலைப்பட்ட முகத்தில் தழும்பிருந்தது.
இன்று முதல் தொகுத்து வைக்க வேண்டும்
அப்பாவின் சாயல் மிகுந்த பிரதிகளை….

********************************************

2

பாதி மறைத்து மீதி மறைக்காமல் தெரியும்
பால் சுரந்த மார்பை இச்சையோடு
பார்க்குமொருவனை கேட்க முடியாமல்
பேருந்து வருவதைப் பார்ப்பதில் இருக்கிறது
என் கையாலாகதத்தனம்.

************************************3

வாசலில் யாரோடோ
பேசிக் கொண்டிருப்பீர்கள்
கொறித்த வாதாமொன்று விழுகிறது.
நீங்கள் தொடர்ந்து
பேசிக் கொண்டே இருப்பீர்கள்.
அந்த கவனப் பிசகில்
நழுவிப் போயிருக்கும்
நீங்கள் பால்யத்தில்
கல் வைத்து இடிக்க முயன்ற
இன்னொரு வாதாம் பழம்.

*******************************************

4

இதில் எதையாவது
வரைந்து பழகச் சொன்னார்கள்
ஒரு பூனையை
ஒரு அணிலை
ஒரு செம்பருத்தியை
பவள மல்லிச் செடியை
அருள் பரிபாலிக்கும்
அம்பிகையின் படத்தை…
கை தானாய் வரைந்தது
பணக் கவலையில்
நெற்றி சுருங்கிய முகத்தை.
அது அப்படியே
என்னைப் போலிருந்தது.

********************************************5

போன சந்திப்பில்
என்னுள் பதியனிட்டுப் போயிருந்தாய்
உன் சுவாசத்தை.
பயிராயிருக்கிறது நூற்றுக்கணக்காய்
உன் பிரதிமைகள்.
இந்த முறை
ஒரு ஓவியத்தை முடித்து விட
எத்தனித்த போது
லகுவாக நினைவில் வருகிறது
என் முகமுரசிய உன் முடிக் கற்றை.
தூரிகையை விட்டெறிந்து
நீயிருக்கும் திசை பார்க்கிறேன்.
அடி வானத்தைக் கடந்து போகிறது
உன்னைப் போல ஒரு பறவை.

**************************************

— மதுசூதன்