மிக நேர்த்தியான, கவித்துவமான ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடித் தேடி அடுக்கி செதுக்கிய வரிகளைக்  கொண்டு உருவாக்கிய ஒரு சிறந்த நாவல். பொதுவாக நாவல் என்றால் வார்த்தை ஜாலங்களும், அழகியலும் நிரம்பி இருக்கும். ஆனால் இந்த நாவலில் கவித்துவமான வார்த்தைகள் மட்டுமல்ல.  மிக ஆழமான, மிக வலி பொதிந்த பாசிச வெறி பிடித்து அமெரிக்கா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களோ இணைந்து இந்தோனீசியா அதிபர் சுகார்த்தோ  1965 முதல் 1968 வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களை மிகக் கொடுமையாக அழித்த வரலாறு அதன் வலி குன்றாமல் அற்புதமாக செதுக்கவும் பட்டிருக்கிறது.

இந்நாவலின் எழுத்தாளருக்கு இதுதான் முதல் நாவல் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நல்ல எழுத்து நடையில் எவ்விதத் தங்கு தடையுமின்றி சரளமான நடையில் அமைந்துள்ளது. இந்நாவலுக்கு எழுத்தாளர் தேர்ந்தெடுத்த கதை வடிவமும் களமும்தான் சிறப்பு. இந்தோனீசியா இந்தியாவின் அருகமை நாடுகளில் ஒன்று. அதோடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் மரபு சார்ந்த பண்பாடு, பழக்கவழக்கங்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்த நாடு.

ராமாயணம், மகாபாரதம் என பல இதிகாசங்களும் மிகப்பரவலாக பேசப்படும் நாடு. இஸ்லாமிய மக்கள் கூடுதலாக இருந்தாலும் இந்துக்களின் அடிப்படையான பண்புகளை ஏற்றுக் கொண்ட நாடு. அந்த அடிப்படையில் தான் மகாபாரதத்தில் வரும் ஒரு சால்வான் மன்னனின் கதையான அம்பா, பீஷ்மா, அம்பிகை, அம்பாலிகா ஆகியவர்களைக் கொண்ட கதையோடு  அந்நாட்டின் பாசிச அரசு லட்சகணக்கான கம்யூனிஸ்ட்டுகளை வதம்செய்த வரலாற்றை மிக நேர்த்தியாக  இணைத்துள்ளார்.

மகாபாரதத்தில் வரும் இந்தப் கதாபாத்திரத்தை பாடம் நடத்தும் ஆசிரியரான அம்பாவின் தந்தை மிகவும் ஆசையோடும் புராணங்களில் வருவதைப் போல் நடக்காது என்பதை நிரூபிக்கும் விதமாகத்தான் தனது மகளுக்கு இந்தப் பெயரை சூட்டுவார். ஆனால், கிட்டத்தட்ட அந்தப் புராணங்களில் வருவதைப்போலவே அம்பாவின் வாழ்வில் நடந்தேறும். பெற்றோர்கள் தீர்மானிக்கும் மாப்பிள்ளை சால்வன் மீது மிகுந்த மரியாதை உண்டு.  ஆனால் காதல் கிடையாது. அவருக்கோ இவள் மீது ஆழமான காதல்.

தன் வாழ்வின் லட்சியங்களுக்காக ஆங்கில இலக்கணம் படிக்க வேண்டும் என்ற அந்த வேட்கையோடு தேடும்போது எதிர்பாராதவிதமாக சந்திக்கும் பீஷ்மர் ராவுத் என அறியப்படும் மருத்துவர். எத்தகைய கூட்டத்தில் இருந்தாலும் தெளிவாக எல்லோரையும் ஈர்க்கும் உயரமும், ஐரோப்பிய மனிதனின் கலரும், நீலம் பச்சை வண்ணம் கொண்ட கண்களும்,  அனைவரையும் வசீகரிக்கும் அன்பான பார்வையும் அம்பாவைக் காதல் வசப்படுத்துகிறது. அம்பா, பீஷ்மா இருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிடும் வண்ணம் தங்கள் காதலின் உயிரோவியமாக வாழ்ந்தனர். பீஷ்மா கிழக்கு ஜெர்மனியில் மருத்துவம் படித்தவர்.

படிக்கும் போதே ரோசா லக்சம்பர்கையும் சேர்த்து படித்தவனாக இந்தோனீசியா வந்தவன். அமெரிக்கா, பிரிட்டனோடு சேர்ந்து சுகர்னோவை தூக்கயெறிந்து சுகார்த்தோ தற்காலிக அதிபராக பதவியேற்று 30 வருடம் அந்நாட்டை நரவேட்டையாடினான் என்றால் அது மிகையாகாது.  1978ஆம் ஆண்டு கைதிகள் அனைவரையும் அதிகாரப்பூர்வமாக சுகார்த்தோ அரசு விடுதலை செய்தது. அந்தப் பட்டியலில் பீஷ்மா பெயர் இடம்பெறவில்லை. விடுதலை அடைந்த சிலர் தங்கள் உறவைத் தேடி சென்றார்கள். சிலர் அந்த புரு தீவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய கைதிகளில் பீஷ்மாவும் ஒருவர். இத்தனை ஆண்டுகள் கழித்து சென்று அம்பாவின் வாழ்வை சேதப்படுத்தி விடக்கூடாது என்று அங்கேயே தங்கி விட்டான்.

பீஷ்மாவைக் கொலை செய்ய வந்த மதவெறி பிடித்த மிருகம் உனக்கு மதம் குறித்து கருத்து என்ன என்று கேட்பான் “அதற்கு பீஷ்மா நிதானமாக மனிதன் தான் மதத்தைத் படைத்தான். ஆனால் மதம் மனிதனை மனிதன் வெறுக்க காரணமாகிவிட்டது”. என்பான். பொதுவாக இந்தோனீசியா புரு தீவில் தங்கள் பெயருக்கு நீதி வழங்க வேண்டும் அல்லது பிறாவதிருக்க வேண்டும் என்ற சொலவடை ஒன்று உள்ளது.  ஒருவரின் பெயர் அவர் உள்ளத்தில் ஆழமான, கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறது அச்சொலவடை.

அதற்கேற்ப அம்பாவும், பீஷ்மாவும், சால்வாவும் வாழ்ந்தனர். காலத்தின் சூழலால் அறிவால் மட்டும் அல்ல, ஆற்றலால் மட்டும் அல்ல, உயிரினும் மேலாகத் தன்னை நேசித்த இரண்டு இதயங்களோடும் வாழ  வழியின்றி நின்ற போது தனக்கு ஆசிரியராகவும், ஆறுதலாகவும் பீஷ்மா விதைத்த ஸ்ரீகண்டிக்கு நல்ல தகப்பனாகவும்  அதல்ஹார்டு இருந்தார். பீஷ்மாவின் நண்பனான சாமுவேல் தன் உயிரினும் மேலான காதலன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் எல்லாமுமாக உதவிபுரிந்தான்.

வைரமுத்து தண்ணீர் தேசம் என்ற நாவலில் நீரின் அறிவியலை காதலர்கள் இருவரின் உரையாடல்களோடும், ஊடல்களோடும் மிக அழகாக  சொல்லியிருப்பார். அதேபோன்று அம்பா, பீஷ்மா, சால்வாவின் காதலை மகாபாரதத்தில் வரும் சால்வன் மன்னனின் கதையோடு இணைத்து அதில் இந்தோனீசியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் அழிப்பை அந்த வலி யோடு நாவலை லக்ஷ்மி பமன்ஜக் வடித்துள்ளார். இந்த நாவலை பேரா.பொன்னுராஜ் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்ட நாவலைப் போல் மிக அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

அம்பா ( சிவப்பின் கேள்வி)
ஆசிரியர்: லட்சுமி பமன்ஜக்
தமிழில்: பேரா. பொன்னுராஜ்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
7, இளங்கோ சாலை ,
தேனாம்பேட்டை, சென்னை- 600018
பக்: 409  விலை: ரூ.390/-
தொலைபேசி: 044 2433 2924

நன்றி:  தீக்கதிர், மார்ச் 9, 2020

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *