தேர்தல் 2021
.
1

ஒப்பனை முகத்தில்
ஓராயிரம் அபிநயங்கள் மின்ன
ஆபத்தாண்டவர்
என முழங்கும் அதி நயக்காரரின் கைகள்
கால்களில்
நூல்கட்டியாட்டும் பெரும் முதலாளியொருவன்
பொம்மலாட்டக் கலையில்
சிறக்கிறான்!
வள்ளுவருக்கு வண்ணம் பூசுகிறவர்கள்
நீதிக்கிழவன் சிலையை
உருளிப்பட்டை போட்டு கொளுத்தியவர்கள்
எல்லாம்
மன நலன் குன்றியவர்களெனச் சொல்வது
இந்தக் கவிதையல்ல….
காவல்துறையின் குற்றப் பத்திரிக்கை!
ஆடுகளுக்குக்
காவலிருக்கும் ஓநாய்களுக்குச் சாப்பாடு போட….
பட்டியைத்
திறந்து விடச் சொல்வதும் கூட இங்கு சமத்துவம்!
.



………
தேர்தல் 2021
2
வெட்டாத ஆறுக்கு அடிக்கல் நாட்டி
விவசாயம் நடக்க
அறுவடைக்கு காத்திருக்கிறது மேடைப் பேச்சுகள்!
சமத்துவம் பேசுகிறவன் நாவில்
எப்போதுமே உட்கார்ந்திருக்கிறான் அஷ்ட சனி!
கட்டாத பாலத்திற்கு
ஒதுக்கியக் கோடியில் வப்பாட்டி பங்களா…
ஆகாத திட்டங்களுக்கு
வாக்கு நாள் வரை தற்காலிக விடுப்பு!
கோஷம் போட கூட்டிய கூட்டங்களில் வியர்க்கிறது
பஞ்சத்தின் முகவரி!
எல்லோருக்கும் வீடு! எல்லோருக்கும் கல்வி!
எல்லாமே
சாயம்போன வாக்குறுதிகள்…
வெற்றி நடை போடுகிறது 5 ஆண்டுக்கொரு முறை
அமோகமான எலெக்ஷன் பொய்கள்!




………….
தேர்தல் 2021
3
ஏத்தாளிப் பாடும் கூட்டம்
இருக்கின்ற வரைக்கும் என்றும்
பாட்டாளிப் பிழைக்க மாட்டான்
வைதாளிக் கேட்டுறங்கும்
ஆள்பவன் நாட்டிலென்றும்
வறுமைதான் ஆட்சிச் செய்யும்!
சீக்காளித் தேசமிது – ஏழைச்
சேர்த்து வைத்த பொருளையெல்லாம்
சோக்காளி மந்திரிகள் – எளிதில்
சுருட்டித்தான் போவார்கள்
பார்க்காமல் விட்டுவிட்டால் – நாட்டோடு
பாழும் நம் வீடும்தான்!
.


…………….
தேர்தல் 2021
4

இரவை
கிழித்துத் தொங்க விடுகிறது பகல்!
அராதகனின் கழுதைக் காதுகளில் தங்க மாட்டல்!
சூனியக்காரனின் விரல்கள்
தந்திரமெழுதி தாராளமயப் போர்வையில்
மாங்காய் பறிக்க
சுற்றி நிற்பவர்களின் கைகளில் பிச்சையோடுகள்!
இன்னமும் நம்புகிறார்கள்
குருடாக்கப்பட்ட விழிகளில் நிச்சயம் பகல்
மலர்ந்து விடுமென்று
நீலிக் கண்ணீரில் நிலவு மிதக்கும் என்பதும் கூட
ஒரு கற்பனை!
அராதகனின் சொற்குவியலில் நெளியும்
சர்ப்ப ஸ்வரத்தில் இசைக்கும்
தேசியகீதத்திற்கு
ஒட்டிய வயிறுள்ளவன் எழுந்து நிற்பதே இங்கு
தேசப் பற்று!
கோமணத்தை இறுகப் பற்றியவன்
இனி இழந்துவிட என்னதான் இருக்கப் போகிறது?




………….
தேர்தல் 2021

5

இடம் பிரிப்பதில் தொடர்கிறது இழுபறி…
ஓட்டு வங்கிகளின் உறுதி மொழிகள்
உருகி வழிய
சேமிப்பு கிட்டங்கிகளில்
புதிதாகவே இருக்கிறது திவால் புத்தகம்!
நேற்றைய எதிரிகள் நட்பாகிப் போக…
இன்றைய நண்பர்களும்
எதிர்க்கட்சி பென்ச்சுகளில் துண்டு விரிக்க…..
செல்லாத வோட்டுகளும்
சீட்டுகள் கேட்டு வரிசையில் நிற்பது எதற்காக?
பலன் சொல்வதை விட
தட்சணை தட்டுகளில் கண்களை உருட்டுவதே
குறியாக இருக்கிறவன்
சோழிகளை உருட்டுகிறவன்!
கேள்விகளைக் கேட்காதவன் ஊரில்
எண்
எத்தனை விழுந்தாலென்ன?
ஏணிகளில் சூதன் மட்டுமே ஏறிச் செல்வதைத்தான்
தர்மம் என்கிறது
தாயமுருட்டும் அரசியல் சூத்திரம்!




………

தேர்தல் 2021

6

அவசரகால அரசியல் வியாதியின் அட்ராசிட்டிக்குப்
பெயர்: கொரானா!
ஏழைகளின் பசியாற்றுவதான கற்பனை
தேர்தல் அறிக்கைகள்!
உழவர்களின் உடல் வெப்ப நிலை
மரணத்தின் செல்சியஸ்!
நகங்கள் வளர்ப்பதே வருடுவதற்குத்தான் என்பது
பாசிசத்தின் பாசாங்கு!
சாமானியர்களின் நரம்புகளையிழுத்து
தேசங்களைப் பிணைக்க….
அரியணையில் அமர்ந்து ஆட்சியாளர்களைக்
குரங்காட்டிக் கொண்டிருப்பவன்
தனியொருவன்!
விடியல் இதுதான் என்று
அழகாகப் படம்
காட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இருண்ட குகைகளில்…!
கை விலங்குகளைக் கழற்றி விட்டாலாவது
காட்சி மயக்கத்தில்
எல்லோரும் கை தட்டிக் கொண்டிருக்கலாம்…..
கருடபுராணம்
அவர்களுக்கு மட்டும் எப்போதும் இல்லை!




………..

தேர்தல் 2021

7

ஆளாளுக்கு கிரீடம் சூட்டிக் கொண்டு
அலைகிறார்கள்….
வீதிகளில் உதிர்ந்து கிடக்கும் சாமந்திப் பூக்கள்
எந்த பிணத்திற்கானது?
ராஜா வேஷம் கட்டியவன்
கட்டியங்காரன் முதுகில் ஏறி அமர்ந்திருக்க
கூத்து இன்னமும் முடியவில்லை!
காமிராக் கோணங்கள் சரி பார்க்கப்பட்டு
ஓநாயொன்று
மந்தை கூட்டங்களுக்கு பாதுகாப்பில்லையென்று
கதறியழ…
கிரீடத்தைக் கழற்றி வைத்த நர்த்தகி
கூத்துமேடை பாதுகாப்பிற்காக
இனி நடிப்பதில்லை என்று முடிவெடுக்கிறாள்!
கட்டாத ராஜா வேஷத்திற்கு
கைத்தட்டல் கிடைக்க
கோமாளி வேசம் போட்டவன் விழுந்து புரள
பார்வையாளர்கள்
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…
பார்வை மாடத்தில் வெடி வைத்திருப்பது
யாருக்கென்று கூட தெரியாமல்!

முகமது பாட்சா

………



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *