நூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.120.00
பக்கங்கள்: 144
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/mohana-ore-irumbu-penmaniyin-kadhai/

தடைகளைத் தகர்த்த ஒரு போராளிப் பெண்ணின் கதையே மோகனாவின் வாழ்க்கை. இந்திய சமூகம் காலம் காலமாக உருவாக்கிய பெண் என்ற கற்பிதத்தை அவர் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உடைத்தெறிந்து புதுமைப்பெண்ணாய் மிளிர்கிறார்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற முதுமொழி கோலோச்சிய 1950களின் துவக்க காலம், சாதியமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி தனது கோர முகத்தை வெளிப்படுத்திய அன்றைய தஞ்சை மாவட்டத்தின் காவிரிக்கரையில் உள்ள அழகிய சிற்றூர் சோழம்பேட்டையிலிருந்து புதுமைப் பெண்ணாக புறப்பட்டிருக்கிறார் மோகனா.

ஐந்தாம் வகுப்போடு தனது படிப்பிற்கு சவக்குழி தோண்டப்படும் என்ற சூழலை கல்வியின் மீதான வேட்கையால் தகர்க்கிறார். சிற்றூரிலிருந்து பள்ளிப்படிப்பிற்காக காவிரி ஆற்றைக் கடந்த முதல் பெண் குழந்தை என்ற பெருமையோடு கூரை நாடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி கூடத்திற்கு செல்கிறார். குடும்ப வறுமை விவசாய பணிக்கு உதவுவது என்பதோடு கல்வியைத் தொடர்கிறார்.

ஒரு பெண் கல்வி கற்பதை குடும்பமும் உறவுகளும் விரும்பவில்லை. எப்படியாவது பள்ளிப்படிப்பை நிறுத்துவதற்கு வழி கிடைக்காதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டு பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலை குடும்பம் விரும்புகிறது.

தலைமை ஆசிரியரின் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதையும் அந்தக் குடும்பம் விரும்பவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு மாமா மகனுக்குத் திருமணம் முடிக்க திட்டம் போடுகிறது குடும்பம். மோகனாவின் உறுதிமிக்க விடாப்பிடியான போராட்டமே கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விக்காக நுழைய வழி வகுக்கிறது.



ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடமிருந்து கடிதம் வருவதை காதல் கடிதமாக குடும்பத்தினர் புரிந்துகொண்டு குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற மோகனா மீது வன்மம் கொண்டனராம். அனைத்தையும் உடைத்தெறிந்து முதுகலைப் படிப்பை நிறைவு செய்கிறார்.

கல்லூரியில் வேலை கிடைக்கிறது. வாழ்வில் புதிய வெளிச்சம், தன்னம்பிக்கை பெறுகிறார். குடும்பத்தினரின் முயற்சியால் நடைபெறும் திருமணம், கொடூரமான வாழ்க்கையை ஆணாதிக்க சமூகத்தின் குரூரத்தை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.

இருள் சூழ்ந்த வாழ்க்கையை 1975 முதல் 1992வரையிலான காலகட்டங்களில் எதிர்கொள்கிறார். அப்போது கல்லூரியில் சக பேராசிரியர்களான அருணந்தி, பழனிச்சாமி போன்றோருடன் ஏற்பட்ட நட்பு தோழமை மூட்டா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் அமைப்புகளின் அறிமுகத்தை ஏற்படுத்துகிறது.

ஆசிரியர், மாணவர் பிரச்சனைகளுக்காக போராட்டக்களங்களில் முன்வரிசையில் நிற்கிறார் மோகனா. சிறை செல்கிறார். பொது வாழ்க்கையினையும் புதிய புதிய படிப்பினைகளையும் கற்றுக்கொள்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மூட்டா ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளில் இரண்டற கலந்து விடுகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிகச்சிறந்த கருத்தாளராக தமிழகத்தின் எல்லா திசைகளையும் நோக்கி பயணிக்கிறார்.

அறிவியல் கருத்துக்களை விதைக்கும் சிறந்த பரப்புரையாளராகவும் அறிவியல் கருத்துக்களையும், கட்டுரைகளையும், சிறார் கதைகளையும், பெண் விஞ்ஞானிகள் பற்றியும் நிரம்ப எழுதி ஒரு எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

தமிழகம் அறிந்த அறிவியலாளராக தன்னை உயர்த்திக்கொண்டார். தனது மகன் வினோபாவையும் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறார். இயக்கச் செயல்பாடுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அவருக்கு அழையா விருந்தாளியாக மார்பகப் புற்றுநோய் வருகிறது. மிகச்சிறந்த செயல்பாட்டாளரை ஆளுமையை இழக்கப்போகிறோம் என்று எல்லோரும் கலங்கினர்.



மிகுந்த தைரியத்துடன் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திலும் வென்று முன்பைவிட வேகமாக கள செயல்பாடுகளுக்கு வந்துவிடுகிறார். பேராசிரியர் பணி ஓய்வுக்குப் பின்பு நேரடியாக தொழிற்சங்கப்பணிகள் துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான இயக்கங்களை நடத்தினார். நவீனமும் அறிவியலும் உச்சத்தில் இருக்கும் தேசத்தில் இன்னும் கையால் மலம் அள்ளும் கொடுமைகள் தொடர்வதைக் கண்டு சினம் கொள்கிறார்.

போராட்டங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டி சாதித்தும் காட்டியிருக்கிறார். சிஐடியுவில் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று திறம்பட செயலாற்றுகிறார். புதிய சிந்தனையை சமூகம் குறித்தான பார்வையை விசாலப்படுத்தியதில் தான் சார்ந்திருந்த அமைப்புகளின் பங்களிப்பை பெருமையோடு குறிப்பிடுகிறார் பேராசிரியர் மோகனா. இயக்கம்தான் பெண்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தது சுதந்திரமாக சிந்திக்கலாம், விவாதிக்கலாம், செயல்படலாம், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். தன் அனுபவத்தையும் இயக்கத்தின் அனுபவத்தையும் மிகச்சரியாக பதிவு செய்யும் அவர், இயக்கங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் தலைமைப் பொறுப்பிற்கு பெண்கள் வருவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தான் மாநிலத் தலைவராக பொறுப்பிற்கு வருவதற்கு கால் நூற்றாண்டு காலம் ஆகியிருக்கிறது. பெண் என்பதற்காகவே பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று வாதிடவில்லை. இயக்கத்திற்கான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வைத்தே தலைமைப் பொறுப்புக்கு உயர்த்த வேண்டும்.



ஆனால் அது எளிதில் நிகழ்வதில்லை. வெளிப்படையாக சரியான விமர்சனத்தை எழுப்புகிறார் தோழர் மோகனா. புதியவற்றை கற்கும் ஆர்வமும் தேடலும் மிக்க மனிதராக இருந்திருக்கிறார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்து வருகிறார். தமிழகத்தில் புற்றுநோயாளிகளின் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகிறார்.

தாய்ச்சி என்ற சீனத் தற்காப்பு கலையை கற்கத் தொடங்கிய அவர், இந்த வயதிலும் கற்பிப்பாளராக, பயிற்சியாளராக புதிய அவதாரமெடுத்தார். எல்லோராலும் இப்படி முடிவதில்லை. அவரது சுய வாழ்க்கை குறித்த பக்கங்களை கண்கலங்காமல் யாராலும் வாசிக்க முடியாது. அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து பன்முகச் செயற்பாட்டாளராக மிளிரும் தோழர் மோகனாவின் வாழ்க்கை கதையை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டியுள்ளது.

ஆயிரமாயிரம் மோகனாக்கள் இந்திய சமூக அமைப்பில் பெண் அடிமை என்ற விலங்கால் பிணைக்கப்பட்டுள்ளனர். மோகனாவின் வாழ்க்கை அனுபவத்தை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துவதன் மூலம் இந்த சமூகத்தை ஓரடியேணும் முன்னோக்கி நகர்த்த முடியும் என்பது உண்மையே.

வாங்குங்கள்
வாசியுங்கள்.

பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன்
தீக்கதிர் நாளிதழ் மதுரை பதிப்பு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



One thought on “நூல் அறிமுகம்: *மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை* – ஜோ.ராஜ்மோகன்”
  1. நல்லதொரு அறிமுகம். பிறக்கும்போதே தொப்புள் கொடியைத் தோளில் போட்டுக்கொண்டு போராடப் புறப்பட்டவர் மோகனா. தன்னுடைய வாழ்வின் வலிகளை, கடந்து வந்த கடினமான பாதைகளை, பெற்ற வெற்றிகளை, தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் சிறப்புடன் கொண்டுவந்துள்ளார். முயற்சித் திருவினையாக்கும் என்பதே தோழர் மோகனாவின் வாழ்வு உணர்த்திடும் பாடமாகும். கற்றுக்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *