நேசித்த
ஒவ்வொன்றும்
தொலைந்து கொண்டே இருக்கின்றன…
இனி எவற்றையும் நேசிக்கக்கூடாதென புதிதாய்
தொடங்குகிறேன் ஒரு விடியலை,
வந்தமர்கிறது என் கைகளில்,
என்றோ ஒரு நாள்
தொலைத்த பறவையொன்று!

**

வயதான பிறகு
வீட்டை விட்டு வெளியேற்றிவனிடம்
ஏமாந்து போயிருந்தது…
நாய்,
நன்றியை எதிர்பார்த்து!

**

நாற்பது வயதைக் கடந்த பிறகும்
குழந்தையாய் இருப்பவனை
மனநல மருத்துவனை ஒன்றில் கடந்து கொண்டிருக்கிறேன்…
சிரிப்பிலும் அழுகையிலும்
அவன் சொல்ல வந்ததை
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறது…
அருகில் நின்று கொண்டிருந்த குழந்தை!

**

குழந்தையின்
பசி தீர்க்க வைத்திருந்த
கடைசி பிஸ்கெட்டை
வாசலின் முன்பு ஒட்டிப்போன
வயிற்றோடு
முனங்கிக் கொண்டிருந்த
நாய்க்குட்டிக்கு வீசி விட்டு
திரும்பிக் கொண்டிருக்கையில்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறது…
நீண்ட நேரமாய் அழுதுகொண்டிருந்த குழந்தை!



**

பஞ்ச பூதங்கள்
காக்கின்றன
இலஞ்ச பூதங்கள் அழிக்கின்றன…
இந்த தேசத்தை!

**

மழைநாளில்
குழந்தைகளிடத்தில்
அடைக்கலமான குருவி,
வீடு கூடானது!

**

சந்தையில்
விற்பனைக்கு வந்த
ஆட்டுக்குட்டிகளில்
விற்காமல் வீடு திரும்பக் காத்திருக்கும்
கால் ஒடிந்த குட்டிகளை வாங்கிச் செல்கிறாள்…
ஒவ்வொரு முறையும்
மாற்றுத்திறனாளிப் பெண் !

**

குழந்தையின் பசி தீர்க்க
கடவுள் வேடமிட்டவனை
கண்டும் காணாமல்
கடந்து கொண்டிருக்கிறார்கள்…
மனித வேடமிட்டவர்கள்!

மு.முபாரக்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *