சை குறித்த கட்டுரை என்றாலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்று கடந்த வாரம் வெளியான முதல் கட்டுரையை ஆர்வம் பொங்க வாசித்தவர்களுக்கு, நன்றி சொல்லவே (உனக்கு என் மன்னவா) வார்த்தை இல்லையே….
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை…ஏனெனில் ‘பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்’! ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?’ என்று கேட்பதற்கு முன், ‘நீ தானா என்னை அழைத்தது’ என்றோ, ‘நீ தானா அந்தக் குயில்’ என்றோ உடனுக்குடன் பதில்கள் காத்திருக்கின்றன….
இசை உலகம் ஒரு கிறக்கம் ஏற்படுத்தும் தளம்.  ஒரு தேநீர்க் கடையில் அடுத்தடுத்து பிடித்தமான பாடல்கள் ஒலிக்கக் கேட்டிருப்பவர், தேநீரை மட்டுமா பருகுகிறார்? பரபரப்பான திருமண வரவேற்பில் நுழையும்போதே, வசமான ஒரு பாடலைச் சிறப்பாக ஓர் இசைக்குழு பாடிக் கொண்டிருக்க நேருமானால், மொத்த கவனத்தையும் அந்த இடம் நோக்கி செலுத்துபவர்கள் அடையும் இன்பம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. நாதஸ்வரக் குழு பக்கத்திலிருந்து நகராமல் அங்கேயே உட்கார்ந்து திருமணத்தை ரசிப்பவர்கள், அப்படி ரசிப்பவரைப் பார்த்து இன்னும் கிறுகிறுப்போடு வாசிக்கும் இசைக் கலைஞர்கள், வாத்தியக்காரர்கள்…..
மார்க்சிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், அண்மையில் மறைந்த தோழர் கே வரதராஜன் அவர்கள் ஒரு மாநாட்டு நிகழ்வின் ஊடே நடக்கும் இசை கச்சேரி மேடைக்கு மிக அருகே நெருங்கிப் போய் அவர்களை உற்சாகப்படுத்துவதும், அப்படியே அவர்கள் இசைக்கு நடனம் ஆடத் தொடங்கி, அதன் உச்ச கொண்டாட்டத்தில் விசில் அடித்துத் தூள் கிளப்புவதுமான உற்சாக வைபவத்தை  ஒரு தோழர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்.
மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகர் ...
நடிகர் சந்திரபாபு
எனக்கு, நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்களைக் குறித்த வாசிப்பில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லி ராஷ்ட்டிரபதி பவனுக்கு செல்லும் திரைக்கலைஞர்கள் குழு ஒன்று, குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்திக்கின்றனர். மிகவும் உற்சாகத்தோடு அவர்களை வரவேற்கும் அந்தக் கல்விமான், சந்திரபாபுவைப் பார்த்து, உங்களது பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், பாடுவீர்களா என்று கேட்டிருக்கிறார். இதைவிட ஆனந்தம் வேறென்ன வேண்டும், உடனே அந்த நகைச்சுவை மாமேதை அந்தப் பாடலை அவர்முன் இசைத்திருக்கிறார். பாடலின் உருக்கமான இடங்களைக் கேட்கையில், ராதாகிருஷ்ணன் அவர்களது கன்னங்களில் கண்ணீர்க் கோடு வைரம் போல் மின்னி இருக்கிறது. உடனே சந்திரபாபு குட்டிக்கரணம் போட்டு, அவர் மடியிலேறி உட்கார்ந்து அவரது  கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சி, “ரசிகம்மா கண்ணு, நீ ரசிகன்” என்று சொல்லி இருக்கிறார். பாதுகாவலர்கள் என்னவென்று புரியாமல் அதிர்ச்சியோடு குறுக்கிடப் போன போது, “அவர் ஒரு கலைஞர், உணர்ச்சி வசப்பட்டு விட்டார், ஒன்றும் பிரச்சனை இல்லை ” என்று சொன்னாராம் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
எழுபதுகளின் இறுதியில், வானொலியில் விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பில் (இது பற்றி நிறைய பேச இருக்கிறோம் இந்தத் தொடரில்), இரவு அன்றாடம் 7.45 மணிக்கு தேன் கிண்ணம் என்ற நிகழ்ச்சியில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு ஆகும். அதில் ரசிகர் தேன் கிண்ணம் என்ற நாட்களில் தேர்வு செய்யப்படும் ரசிகர்கள் யாரும் சென்று கலந்து கொண்டு தங்களது விருப்பப் பாடல்களை இணைப்புக் கவிதை மொழியில் தங்கள் கருத்துக்களையும் வாசித்து ஒலிக்கக் கேட்கலாம். சிறப்பு தேன் கிண்ணம் என்ற நிகழ்வு, பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை இழைத்து, தங்கள் விருப்பப் பாடல்களை வழங்குவது.
அப்படியான ஒரு நிகழ்ச்சியில், நடிகர் வி எஸ் ராகவன் வந்திருந்தார். ஏராளமான விஷயங்கள் சொன்னதில் முக்கியமாக மனத்தில் இன்றும் நின்றது ஒன்று: ராகவன், இளம் வயதில் வேலைக்காக ஓர் இன்டெர்வியூவில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். இவர் முறை வந்தது. உள்ளே சென்றார். மேலாளர் கேட்டாராம், உனக்கு சங்கீதத்தில் நாட்டம் உண்டா என்று. இவர் உடனே உண்டு என்று சொன்னதோடு அருமையான பாடல் ஒன்றைப் பாடிக் காட்டி இருக்கிறார். அந்த மேலாளர், ஆஹா, அருமையாக இருக்கிறதே உன் குரலும் சங்கீதமும். அதனால் ஓர் உண்மையை உனக்கு சொல்லப் போகிறேன், இந்த வேலைக்கு ஏற்கெனவே வேறு ஆள் போட்டாயிற்று, இந்த நேர்காணல் சும்மா ஒரு பேருக்கு, நீ போகலாம் என்றாராம். வெறுத்துப் போன ராகவன், வெளியே இன்னும் காத்திருக்கும் ஆட்களுக்குச் சொல்லி அனுப்பி விடட்டுமா என்று கேட்டாராம். வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்,  எனக்கு அதற்குத் தான் சம்பளம் கொடுத்திருக்கு என்றாராம்.
மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகர் ...
நடிகர் வி எஸ் ராகவன்
ஆவேச தொழிற்சங்கப் போராட்ட நாயகனாக, விஷய ஞானமிக்க நிபுணராகவும் அறியப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் இயக்கத் தலைவர் தோழர் என் எம் சுந்தரம், பொது காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகியாக பன்முகத் திறனாளியாக அறியப்பட்ட தோழர் சூரியநாராயணன் (சூரி) மறைவுக்குப் பின் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் பேசுகையில், மார்கழி மாதத்தில் சென்னை இசை கச்சேரியில் என்னருகே உட்கார்ந்து இசையை நுட்பமாக ரசித்து விவாதிக்க இனி யார் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் பேசிய மாணவர் இயக்கத்தின் களப் போராளியான தோழர் ஜி செல்வாகர்நாடக இசை என்றால் என்னவென்று தெரியாத என்னை, சூரி தான் அவரே டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்து கூடவே அமர்ந்து அறிமுகப்படுத்தி ரசிக்கக் கற்றுக் கொடுத்தவர் என்றார்.
தாலாட்டுப் பாட்டிலிருந்து இசை நம்மோடு ஒன்றி விடுகிறது, இசையும் இலக்கியமும் நாம் அறியாமலே நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார் தோழர் சீதாராம் யெச்சூரி.  எத்தனை அருமையான விஷயம்! தாலாட்டு கூட, குழந்தை பிறந்த பிறகு கேட்பது. கருவாக வயிற்றில் இருக்கும்போது தாய் கேட்ட பாடல்களை, பின்னர் தான் பிறந்தபிறகு கேட்க நேரும்போது அதே சிலிர்ப்பை உணர்கிறது குழந்தை. கர்ப்பிணிப் பெண்கள் உறக்க வேளைகளில் நல்ல இசையைக் கேட்பது இதனால் தான் சிறப்பான விஷயமாகிறது.
மனித உணர்வுகளை, பருவ கால மாற்றங்களை, அன்றாடப் பொழுதுகளை, வெயிலை, மழையை, பனியை எல்லாம் இசையால் பரிமாறிக் கொள்கிறோம். இசையால்  கேள்வி எழுப்புகிறோம். இசையால் பதிலும் பெற்றுக் கொள்கிறோம். (தயவு செய்து பதிலும் இசை ரூபமாகவே வர விரும்புகிறோம் என்று இராவணனிடம் கேட்கும் “வீணை கொடியுடைய வேந்தனே” பாடலை விடவா இதற்கு எடுத்துக்காட்டு!). வாதங்களால் அசராத மனத்தை, இசை அசைத்து விடுகிறது. இசைக்கு நான் அடிமை என்று சொல்லும்போது, இசை நம்மை உள்ளபடியே கவலைகளில் இருந்து விடுவித்துக் கொடுக்கிறது என்று தான் பொருள்.
சினிமா கோலிவுட் பாலிவுட் சினிமா ...
உங்கள் நகை மூழ்க இருக்கிறதா, எங்களிடம் வாருங்கள், அதை மீட்டெடுத்து, எங்களிடம் அடகு வைத்துக் கொண்டு குறைந்த வட்டிக்கு  நாங்கள் பணம் தருகிறோம் என்று சில நிதி நிறுவனங்கள் விளம்பரம் செய்வதில்லையா…வேறெங்கோ சிக்கி இருந்த உள்ளத்தை, வேறு எதிலோ தொலைந்து போயிருந்த சிந்தனையை, வேறு எதற்கோ பறி கொடுத்திருந்த நிம்மதியை எல்லாம் மீட்டெடுத்துக் கொடுக்கிறது இசை. அப்படியான இசையிடம் அடிமையாக இருந்தால் என்ன பிரச்சனை?
மறைந்த தனது மனைவியின் ஒட்டுமொத்த நினைவுகளை, ஓர் இசைத்தட்டாக, காதோடு தான் நான் பாடுவேன் (வெள்ளி விழா) என்ற பாடலை வைத்திருக்கிறான் கதாநாயகன். அந்தரங்கக் குரலில் தனது இதயத்திலிருந்து காதுகளுக்குப் பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்கும்போதும், அந்தப் பெண்ணுக்காகக் கரையும். சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது, சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்றால் எத்தனை வண்ணங்களில் பூக்கிறது சிரிப்பு.
காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்க வைக்கிறது இசை. காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ என மடக்குகிறது இசைப்பாடல். இசை ஒரு சுவை அடர்ந்த பெருங்காடு. அந்த வனத்தினுள் வனப்புற உலவும் பாடல்களைக் கொய்வோம். ருசிப்போம். ரசிப்போம்.
(இசைத்தட்டு சுழலும்……)
7 thoughts on “இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. I knew u are extensively read, but to recapitulate from the horse’s mouth is much more exhilarating.

  2. உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னால் இருக்கும் ரசனையையும், சுவையினையும் உணர்கிறேன், நானும் இந்த சுகானுபவத்தில் திளைத்தவன் என்பதால். இசைக்கு நான் அடிமை என்று ஒப்புக்கொடுத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *