பைசாசத்தன்மையிலான தனது தி ஷைனிங் திரைப்படத்தை நிறைவு செய்ததற்கு பிறகு, 1980ம் வருடத்தில் அடுத்ததாக ஒரு போர் மையத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஸ்டான்லி குப்ரிக். அதற்கு அவரது நண்பர், “ஆனால் நீங்கள் உங்களது திரையுலக பயணத்தின் துவக்க காலத்திலேயே Paths of Glory எனும் அற்புதமான  போர் மையத் திரைப்படத்தை இயக்கிவிட்டீர்களே ஸ்டான்லி” என்று தெரிவிக்கிறார். அதனை மறுக்கும் முகமாக, “Paths of Glory- யை எல்லோரும் போர் எதிர்ப்பு திரைப்படம் என்றுதான் வகைப்படுத்துகிறார்கள். நான் எடுக்க விரும்புவது முழுமையான ஒரு போர் திரைப்படத்தை!” என்று பதிலுரைத்திருக்கிறார். ஷைனிங் வெளிவந்ததிலிருந்து ஏழு வருடங்களை கடந்து திரையிடல் கண்ட Full Metal jacket அவரது கூற்றின்படி முழுமையான போர் திரைப்படமாக மட்டுமல்லாமல், உண்மையில் போர் சூழலை, அதற்காக தயார்ப்படுத்தப்படும் மனிதக் குழுவை அபத்தங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக திரையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது.

ஹாஸ்போர்ட் எழுதிய The Short Timers (குறுகிய காலத்தவர்கள்) எனும் நாவலை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் திரைக்கதையை ஹாஸ்போர்ட், மைக்கேல் ஹெர்ர் மற்றும் ஸ்டான்லி குப்ரிக் மூவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஹாஸ்போர்ட்டும், ஹெர்ரும் அவ்வப்போது எழுதி மெயில் அனுப்பும் குறிப்புகளை வைத்து இறுதி வடிவத்தை ஸ்டான்லியே எழுதியிருக்கிறார். ஹெர்ர் இதுக் குறித்து சொல்லும்போது, “நான் எனது வசிப்பிடத்தில் இருந்தும், ஹாஸ்போர்ட் ஓரிடத்தில் இருந்தும் அந்த நாவலில் இருந்து திரைக்கதை மாற்றத்தை தேவையான காட்சிகளை, தருணங்களை தொகுத்து ஸ்டான்லிக்கு அனுப்புவோம். அவர் அதனை திருத்தி எழுத்தி ஒரு படத்துக்கான நேர பரப்பிற்குள் பொருத்தமான காட்சிகளாக வடிவமைப்பார். இறுதி திரைக்கதை வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை ஸ்டான்லி மட்டுமே அறிந்திருந்தார்” என்கிறார். இந்த மூவரும் இணை ஒரேயொரு மறை மட்டும் நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். ஆனால் அதுவும் சுமூகமாக நகரவில்லை. ஹாஸ்போர்ட் மற்றும் ஸ்டான்லி இருவருமே எளிதில் கோபப்படக்கூடிய மனிதர்களாக இருந்ததால், அந்த சந்திப்பு கிட்டதட்ட தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. எனினும், தொடர்ந்து திரைப்படத்துக்கான தனது பங்களிப்பை எழுத்து நிலைகளின்போது ஹாஸ்போர்ட் வழங்கியிருக்கிறார்.

பொதுவாக, ஒரு நாவலை அல்லது சிறுகதையை தனது திரைப்படத்துக்கான மூல பிரதியாக தேர்வு செய்யும் ஸ்டான்லி குப்ரிக், அந்த கதை வடிவத்தை அப்படி திரைப்படமாக பிரதிபலிப்பு செய்வதில்லை. அந்த எழுத்தாளரையே தனது திரைக்கதைக்கான எழுத்து பணியில் ஈடுபடுத்துவதுடன், மீண்டும் புதிதாக தனது எண்ண ஓட்டங்களின் அடிப்படையில் அந்த கதையை திருத்தி எழுத்தும்படி பணிப்பார். இதன் மூலமாக, திரைப்படத்துக்கென எடுத்தாளப்படும் புத்தக பிரதிகள் ஸ்டான்லிக்கு ஒரு உந்துதலாகவும், தனது கருத்தியல்களை வெளிப்படுத்துவதற்காக சாத்தியபாடுகளை உடையதாகவும் மட்டுமே இருக்குமே தவிர, அப்படி அப்படியே திரைப்படமாக மாற்றுவது அவரது வழக்கமில்லை.

Full Metal Jacket' Review: 1987 Movie | Hollywood Reporter

இரு பகுதிகளை கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில், முதல் பகுதி முழுக்க வியாத்நாம் போரில் ஈடுபடுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆண்களுக்கு ஒரு கடுமையான அதிகாரியால் பயிற்சி புகட்டப்படும் நிகழ்வுகள் வருகின்றன. தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களும் ஒருவரும் இறுக்கமானவர்களாகவோ, போர் களத்தில் கொலை புரிவதான செய்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்களாகவோ தெரியவில்லை. நேற்றைய தினம் வரையில் பெண்களை வம்புக்கு இழுத்துக்கொண்டும், புட்பால் போன்ற விளையாட்டுகளில் தங்களது நேரத்தை கடத்திக்கொண்டிருந்தவர்களுமாக பலகீனமான உடலமைப்பும், கல்லூரி பருவ மாணவர்களைப் போன்ற முகத்துடன் பயிற்சி களத்தில் நெஞ்சு விடைக்க வரிசையில் நிற்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நின்றிருக்கும் பயிற்சியாளர், “உங்களுக்கென்று எவ்வித முக்கியத்துவமும் இல்லை. உலகத்தில் அருவருப்பான இனம் என்று ஒன்று இருக்கிறதென்றால் அதைவிடவும் கீழானவர்களாகத்தான் உங்களை நான் கருதுவேன்” என்று உரக்க சொல்கிறார்.

பயிற்சியாளருக்கும், போர் சூழலுக்கு தயார்ப்படுத்தப்படும் இராணுவ இளைஞர்களுக்குமான உரையாடலே வேடிக்கை மிகுந்ததாக இருக்கிறது. ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியில் நின்றிருக்கும் இவர்கள் தங்களால் இயன்ற அளவில் தொண்டை நரம்புகள் புடைக்க சப்தமாக குரலுயர்த்தி உரையாடுகிறார்கள். போர் நிகழும் நிலவெளியில் வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கி வெடிப்புகளாலும் அருகில் இருப்பவரின் குரலை கேட்பதுக்கூட சாத்தியமில்லாதது என்பதால், தமது முழு உடலின் ஆற்றலை குரலின் வழியாக ஒலியாக ஒன்றிணைத்து அருகிலிருப்பவரின் கவனத்தை இழுக்கச் செய்யும் செயல்வடிவிற்கான ஒத்திகையைப்போல பயிற்சி தினங்களில் அவர்களது உரையாடல் அமைந்திருக்கிறது என்றாலும், ஸ்டான்லி குப்ரிக் அதனை வேடிக்கை மிகுந்ததாகவே அமைத்திருக்கிறார்கள்.

இராணுவ இளைஞன் ஒருவனிடம் பயிற்சியாளர் கேட்கிறார், “எனது இறுக்கமான நடைமுறையினால் என்னை மல துவாரம் என்று கருதுகிறாயா?”. போலவே, அங்கிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் வேடிக்கையான பெயர்களை சூட்டுகிறார். குழு நடை பயிற்சியின்போதும் ’அம்மாவும், அப்பாவும் ஒருவர் மீது ஒருவர் புரளுகிறார்கள். அம்மா அப்பாவிடத்தில் எனக்கு இன்னும் கொஞ்சம் கொடுங்கள், எனக்கு கொஞ்சம் கொடுங்குள் என கேட்கிறாள்” என்றொரு வேடிக்கையான பாடலை பாடுகிறார். அவரது குரலைத் தொடர்ந்து அவர்களுக்கு அந்த பாடலைப் பாடுகிறார்கள். மற்றொரு காட்சியில் துப்பாக்கியை தோலில் சாய்ந்துக்கொண்டு ஓரறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது, ஆணுறுப்பை ஒரு கையால் பலமாக பிடித்து அழுத்துவதான பயிற்சியை மேற்கொள்ளும்படி அவர் பணிக்கிறார். ஒருவகையில், இக்காட்சியின் பார்வை அனுபவமானது, போர் நிலத்தில் எதிரி படையணியனரை பெண்ணுடலென பாவித்து, அவர்களின் மீது ஆண்மையை பேராற்றலுடன் திணிப்பதான உணர்வே எழுகிறது அல்லது அந்த பயிற்சியாளரின் சொற்களின்படியே, துப்பாக்கியுடன் மட்டுமே படுக்கையை இனி அவர்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் அடங்கியிருக்கும் இயந்திர துப்பாக்கியுடனான அவரது உறவு முழு உடல் சார்ந்ததாக  இருக்க வேண்டும் என்கிற அர்த்தமும் அக்காட்சியில் கிடைக்கிறது. பிந்தைய காட்சிகளில் வியத்நாமில் இந்த போர் பயிற்சி இளைஞர்களின் செய்கைகளைப் பார்க்கும்போது, இந்த கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

Hey Ram' turns 16, Kamal Haasan touched - The Hindu

ஹே ராம் திரைப்படத்திலும், கமலஹாசன் தனது இரண்டாவது மனைவியான வசுந்துராவுடன் உடலுறவு கொள்ளும் காட்சியில், அவளது உடல் மறைந்து துப்பாக்கியாக உரு மாற்றமடையும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. காந்திக்கு எதிராக இறுகி வெறிப்பிடித்திருக்கும் கமலஹாசனின் உடலும் மனமும் எவ்வாறு இயந்திரகதியில் செயல்புரியத் துவங்கியிருக்கிறது, தன்னில் இருந்து மனிதத்தன்மை என்பது எவ்வாறு முழுமையான வெளியேற்றப்பட்டிருக்கிறது என்பதை விளக்கும் காட்சி அது. இறுதியில் காந்தியின் கொலையை அருகில் ஒரு சாட்சியாளனாக நின்று வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வின் பின்னால் அவனது மனிதம் அவனிடத்தில் மீண்டும் மீட்டுக்கொடுக்கப்படுகிறது.

Full Metal Jacket படத்தின் முதல் பகுதி ஒரு கொலை மற்றும் தற்கொலையுடன் நிறைவுபெறுகிறது. அந்த பயிற்சிக்கூடத்திலேயே, மிகவும் பருமனான உடலமைப்பும், எந்தவொரு பயிற்சியையும் மிகுதியான சிரமத்திற்கு பிறகே கைவசப்படுத்தும் Pyle என்பவன் தனது பயிற்சியாளரால் வெகுவாக அவமானப்படுத்தப்படுகிறான். தனது பசியை கட்டுப்படுத்த முடியாமல் ஒரேயொரு பிரட்டை தனது படுக்கையில் பதுக்கி வைத்திருக்கும் செயலுக்காக,  மற்றைய அனைத்து இராணுவ இளைஞர்களுக்கும் தண்டனை அளிப்பதன் மூலமாக அவர்களது ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் Pyleக்கு எதிராக பயிற்சியாளர் திருப்பிவிடுகிறார். இதனால், இரவில் படுக்கையில் அவன் வீழ்ந்திருக்கும்போது, ஒட்டுமொத்த பயிற்சி இளைஞர்களும் ஆளுக்கு ஒரு அடிவீதம் அவன் மீது தாக்குதலை நிகழ்த்துகிறார்கள். அவனால், அவ்விடத்தில் நேசிக்கப்பட்ட ஜோக்கர் என்பவனும் அக்கூட்டத்தில் இருந்து Pyleஐ தாக்குகிறான். அது Pyle மீது பெரும் பாதிப்பை நிகழ்த்துகிறது.

பயிற்சியின்போது Pyle ஜோக்கரிடம், “நீ என்னை வெறுக்க மாட்டாய் தானே” என்று கேட்பான். ஆனால், அவனும் உடன் சேர்ந்து தன்னை தாக்கியதால் ஒட்டுமொத்த மனிதத்தன்மையின் மீதே நம்பிக்கை இழக்கும் Pyle தன் மீதிலான தாக்குதலுக்கு பிறகு மெல்ல மெல்ல இறுகி, ஒரு இயந்திரமாக நாட்போக்கில் மாறிவிடுகிறான். அந்த பயிற்சி கூடத்தில் ஏனைய அனைவரும் எந்த குறிக்கோளை வைத்துக்கொண்டு, கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்களோ (Born to kill), அதன் உச்சபட்ச சாத்திய நிலையை Pyle பெறுகிறான். தான் ஒரு இயந்திரமாக இருப்பதன் தீவிரமும் அழுத்தமும் தாங்காமல் பித்து பிடித்தவனைப்போல, தன் மீதும் மற்றும் பிற அனைத்து இராணுவ இளைஞர்களின் மீதும் கட்டுப்பாட்டை செலுத்தி வந்த பயிற்சியாளரை கழிவறையில் வைத்து சுட்டு கொன்றுவிட்டு, அதற்கு பதிலீடாக தனது வாயில் துப்பாக்கியை திணித்து தலையை சிதறடித்து உயிர் பிரிகிறான். தற்கொலையின் பின்பாகவே, அவனது இறுக்கம் தளர்கிறது.

R. Lee Ermey, 'Full Metal Jacket' Actor, Dead at 74 - Rolling Stone

படத்தின் இரண்டாம் பகுதி வியாத்நாமில் நடக்கிறது. முதல் பகுதியில் பயிற்சிப் பெற்ற இராணுவ இளைஞர்களை இப்போது நம்மால் போர் களத்தில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு கொலை செய்வதன் மீதான ஆர்வம் பெருகியிருக்கிறது. கொலை செய்வதில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்கிறான் ஒருவன். மற்றொருவன் கொலை செய்யும் நாளை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறான். தீ ஒருபுறம் புகைந்துக்கொண்டே இருக்கும் நிலவெளியில் இயந்திர துப்பாக்கிகளையும், உடல் முழுக்க பின்னப்பட்டிருக்கும் தோட்டாக்களையும் சுமந்துக்கொண்டு அசைவுறும் இந்த இளைஞர் குழு, கொலை செய்வதன் வாயிலாக, வீடியோ கேமில் பிறிதொருவரை கொன்று அதில் மகிழ்ச்சியுறும் உளக்கிளர்ச்சிக்கு நிகரான பரவசத்தை அடைகிறது. கொலை செய்வதற்கான உடல்களை தேடும் நகர்வுகள் இரண்டாம் பகுதியில் தொடர்ந்து வருகிறது.

கூடுவே, தங்களது பாலியல் தேவைகளை வியத்நாமிய பெண்களின் மூலமாக தணித்துக்கொள்ளும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். காமத்தையும், கொலை புரிவதன் உன்மத்தத்தையும் வியத்நாமிய மனித உடல்களின் மூலமாக தணித்துக்கொள்கிறார்கள். ஒருபுள்ளியில் பெண்ணுடலும், துப்பாக்கி எனும் கொலை ஆயுதமும் ஒன்றெனவே இணைகிறது.

ஆனால், இவர்களது ஒட்டுமொத்த கொலையின் மீதான பிரேமையையும் பதின் வயதுகளில் இருக்கும் ஒரு வியத்நாமிய சிறுமி சவாலுக்கு அழைக்கிறாள். உடைந்த கட்டிடத்திற்குள் தனது இருப்பை மறைத்துக்கொண்டு, இராணுவ இளைஞர்களை இரைகளைப்போல தேடித்தேடி அவள் வேட்டையாடுகிறாள். இளைஞர்களிடத்தில் பதட்டம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு திட்டமாக அவர்கள் வகுக்க வகுக்க, அந்த சிறுமியும் அதனை எதிர்கொண்டு தனது கரங்களில் இருக்கும் துப்பாக்கியால் அதனை தகர்த்தப்படியே இருக்கிறாள். எனினும், எதிர்புறத்தில் இருக்கும் மனிதக்குழுவின் எண்ணிக்கையும், அவர்களது பிரிந்து சூழ்வதான தந்திரமும் அந்த சிறுமியை நெருங்குவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது. எந்தவொரு இராணுவ இளைஞர்களிடமும் இல்லாத முக இறுக்கமும், தீவிரமும் அந்த சிறுமியின் முகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களைப்போல இருக்கும் இராணுவ இளைஞர்கள் போர் குறித்த பரசவ உணர்வின் காரணமாக மட்டுமே அந்த நிலத்திற்கு வந்திருக்க, தனது நிலத்தின் மீதான அதீத பற்றுறுதியின் காரணமாக அதனை காக்கும் பொறுப்பினை தனது உடலை முன்னிறுத்தி செய்கை மேற்கொள்கிறாள் அந்த சிறுமி. அவளை நாம் எதிர்கொள்கையில் ஒட்டுமொத்த திரைப்படத்தின் கண்ணோட்டமே மாறுதலடைகிறது. முன்பகுதியில், இறுக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டு, இயந்திரங்களாக மாற்றப்பட்ட மனிதர்கள் அந்த சிறுமியை கொலை செய்வதற்காகவே தயார்ப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் எனும் உணர்வு நமக்கு அந்த குறிப்பிட்ட காட்சியில் எழுகிறது.

Stanley Kubrick | Biography, Movies, & Awards | Britannica
Film director Stanley Kubrick

அந்த சிறுமியின் துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுகின்றன. அவளுக்கு எதிரில் நின்றிருக்கும் ஜோக்கர் எனும் இராணுவ இளைஞன் தனது துப்பாக்கியை சரிவர கையாள முடியாமல்கூட அத்தருணத்தில் திணறுகிறான். ஆனால், வேறொருவனின் பங்கேற்பால் அந்த சிறுமியை அவர்களால் தோற்கடிக்க முடிகிறது. தரையில் ரத்தம் வழிந்தோட வெறித்த திறந்த விழிகளுடன் கிடக்கும் சிறுமியை கொலை செய்யும்படி ஜோக்கரையே மற்ற இராணுவ இளைஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இறுதியில், அவளது உயிர் பறிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகான குழு நடையின்போது மிக்கி மவுஸ் பாடலை பாடிக்கொண்டே இராணுவ இளைஞர்கள் நடந்துக்கொண்டிருக்க, சிறுமியின் உயிரை பறித்த ஜோக்கர் தனக்குள்ளாக, “இனி எனக்கு எதுக் குறித்தும் பயமில்லை” என்கிறான். அதாவது, அவனது போர் குறித்த எண்ண ஓட்டத்தில் எவ்வித பின்னகர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, இனி மேலும் அவன் அதிக ஊக்கத்துடன் கொலை செயல்களில் பங்கேற்பான் என்பதைதான் அவனது குரலொலி விளக்குகிறது. அது முழு முற்றிலுமாக போர் பங்கேற்பாளர்கள் எவ்வளவு அபத்தமாக இயங்குகிறார்கள் என்பதை உணரச் செய்கிறது.

Full Metal Jacket திரைப்படத்தில் ஸ்டான்லி குப்ரிக்கின் நோக்கமும் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. போர் என்பது எப்படி பெரும் பெரும் அபத்தங்களின் மையமாக விளங்குகிறது, அங்கு மனித உடல்கள் எவ்வாறு இயந்திரங்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டு பரவசமடைகிறார்கள், போர்களம் வெளியேற்றும் மனிதாய உணச்சிகள் போன்றவை இத்திரைப்படத்தில் பேசுபொருள்களாக இருந்திருக்கின்றன. ஒரு காட்சியில், ஜோக்கர் கதாப்பாத்திரம் நெஞ்சில் அமைதிக்கான சின்னத்தையும், நெற்றியில் Born to Kill எனும் வாசகத்தையும் பதித்திருக்கும். அதனைப் பார்க்கும் அதிகாரி ஒருவர், “என்ன இது இரண்டையும் உடலில் பொருத்தி வைத்திருக்கிறாய்?” எனக் கேட்பார். உடனடியாக, ஜோக்கர், “மனிதர்களின் இரட்டைத்தன்மையை பிரதிபலிப்பதற்காகவே” என்பான். இப்படி போர் எனும் ஆணியிக்கம், பெண்மையையும், மனிதத்தன்மையையும் ஒன்றாக அழித்து, எப்படி ஒரு கொலை இயந்திரமாக மாறுகிறது என்பதை நிறுவுவதும் அதனை பகடி செய்யும் ஒரு படைப்பாளியாகவுமே ஸ்டான்லி குப்ரிக் full metal jacketல் இருந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *