கடந்த வார இசை வாழ்க்கை கட்டுரை எழுதி முடிக்கும் தறுவாயில் அடுத்தடுத்து துயரச் செய்திகள். நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராசு அய்யா காலமானார். இயக்குநர் கே விஸ்வநாத் இயற்கை எய்தினார். பின்னர் தேனிசைக் குரலரசி வாணி ஜெயராம் மறைந்தார் என்ற செய்தி.

நெல்லை தங்கராசு எனும் நாட்டுப்புறக் கலைஞரை, பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் எழுத்தாளர் – திரை இயக்குநர் மாரி செல்வராஜ் மிகப் பரந்த ஜனத்திரளுக்குக் கொண்டு சேர்த்தார். கூத்துகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் பொதுவெளியில் ஸ்த்ரீ பார்ட் போடும் ஆண் கலைஞர்களின் வாழ்க்கை, பெண் கலைஞர்கள் படும் அவதிக்குச் சற்றும் குறையாதது. சொல்லப்போனால், சமயங்களில் மேலும் மோசமான நரகமானது. தனது வலுவான திரைக்கதையில் இந்த அம்சத்தை ஆணிவேராகக் கொண்டு நிறுவியிருந்தார் மாரி செல்வராஜ். பெற்றோரை அழைத்து வா என்று சொல்லும் கல்வி நிலையங்களில் இப்படியான ஒரு தந்தையைக் கொண்டு நிறுத்த ஒரு மாணவன் எப்படி துடிப்பான் என்பதை இதற்குமுன் திரையில் யாரும் காட்சிப்படுத்தியது இல்லை. கல்லூரியில் அவர் பிறகு பெருத்த அவமதிப்புக்கு உள்ளாகும் காட்சி யாரையும் பதற வைக்கும். படத்தில் நாயகனாக வரும் கதிர், அந்த மன உளைச்சலை, அவமானத்திற்கு எதிரான வெஞ்சினத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தார்.

அண்மையில் இயற்கை எய்திவிட்டார் தங்கராசு என்ற செய்தி பார்த்ததும், ‘எங்கும் புகழ் துவங்க’ பாடல் தான் உடனே நினைவுக்கு வந்தது. ஞானத் தங்கமே என்ற தத்துவ வரிசையில் ஒரு சோகக் கதையைத் தான் அந்தக் கலை விளக்கும். திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வண்ணம் அந்தப் பாடலைக் காட்சிப் படுத்தி இருப்பார்கள்.

ஒரே ஒரு நாள் இந்த முறை புத்தகக் கண்காட்சி சென்ற ஒன்றரை மணி நேரத்தில் மறக்க இயலாத சந்திப்பு, எழுத்தாளர் பால் நிலவனைப் பார்த்தது. இந்த வாக்கியத்தில் ஒரு பிழை இருக்கிறது, அவர் தான் என்னைப் பார்த்து அழைத்தது. மிக எளிய மனிதரான படைப்பாளி பால் நிலவன் நண்பர் ஒருவரது புத்தக ஸ்டாலில் அமர்ந்திருந்தவர் பார்த்து அழைத்ததும் மிகவும் நெருக்கமாகிப் போனது அன்றைய மாலை நேரம். அண்மையில் மறைந்த இயக்குநர் கே விஸ்வநாத் அவர்களுக்கு ஓர் அருமையான புகழஞ்சலி அவர் எழுத்தில் வாசித்ததும் அழைத்துப் பாராட்டுகையில் மிகவும் நெகிழ்ந்து போனார்.

திரைப்பாடல்கள் அவற்றின் தன்மைக்கேற்ப காட்சிப்படுத்தும் கலைஞர்களும் வாய்த்துவிட்டால் இன்னும் சிறப்படைந்து விடுகின்றன. கே விஸ்வநாத் அவர்களது படைப்புகள் பாடல்களுக்காகவும் சிறப்பாகப் பேசப் படுபவை. சலங்கை ஒலி திரைப்படத்தில் கடலோரத்தில் பாறையில் தெறிக்கும் நீரின் பிரதிபலிப்பு வேறொரு காட்சியில் கிணற்று மேடையில் ஆடும் நடனத்தில் பிரதிபலிப்பது ரசிகர்களை உணர்ச்சிவயப்பட்டுப் பாராட்ட வைக்கும். நண்பர்கள் சந்திப்பு ஒன்றில் அண்மையில் தெலுங்கு தாய்மொழியாகக் கொண்ட தோழர் டி சேகர், ‘சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா’ பாடலின் பல்லவியைப் பாடிய போதுதான், அவர் ஆர்வமுள்ள நல்ல பாடகர் என்பதும் தெரியவந்தது. அந்தப் பாடல் இடம் பெற்ற ‘ஸ்வாதி முத்யம்’, கே விஸ்வநாத் அவர்களது பெரிதும் பேசப்பட்ட படம். ‘சிப்பிக்குள் முத்து’ என்ற அதன் தமிழ் ஆக்கத்தில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதி இருந்தார்,

எஸ் பி பாலசுப்பிரமணியன் – எஸ் ஜானகி இருவரின் உருக்கம் நிரம்பிய குரல்களில், இளையராஜாவின் கற்பனை மிகுந்த இசையில் ரசிகர்கள் கொண்டாடிக் கேட்டுக் கொண்டிருக்கும் ‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா …சீதையம்மா’ பாடல் அதன் கருத்தாக்கத்திலும் அரியவகை திரைப்பாடல்களில் ஒன்று.

ஸ்வரங்களை இசைக்கிறார் ஜானகி. பாலு, மெல்ல பல்லவியைத் தொடங்குகிறார். அதில் இன்னும் பதமாகக் கலக்கிறார் ஜானகி. தான் வரைந்த ஓவியத்தைப் பெருமையோடு தாயிடம் கொடுத்து அவளிடமே வண்ணக் கலவையை நீட்டவும், குழந்தையின் மனம் நோக்கக்கூடாதே என்று அவள் அதில் ஏதோ வரைவதுபோல் போக்கு காட்டுகிறபோது, குழந்தை தானே மீண்டும் அவளிடமிருந்து வண்ணங்களைப் பறித்துத் தீட்டவுமாக நிகழும் குதூகல அனுபவம் போல் பல்லவியை அமைத்திருப்பார் ராஜா. பாலுவும் ஜானகியும் இணைந்து இசைப்பதும், தனித்தனியே ஒலிப்பதும், இடையே ஜானகி சுவாரசிய நகைப்பு ஒன்றைச் சிந்துவதுமாக அந்த விளையாட்டு ஆனந்தமாக நிகழும் பல்லவி அபாரமான சுவை நிரம்பியது.

‘துள்ளித் துள்ளி’ என்ற சொற்கள் இரு பாடகர்களிடையே துள்ளித் துள்ளி விளையாடும் தனி ஆனந்தம், பல்லவியில். ‘நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா…’ என்பது ஒரு பீடிகை. தனக்கு நேரும் சோகங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் கதையைச் சொல்லும் தாயும், அதை சமாதானப் படுத்தும் குழந்தையுமாகப் பாடல் பின்னர் மேலே வளர்கிறது.

பல்லவியிலிருந்து தொடரும் பாடல், தண்ணீர் சலசலக்கும்இசைத் துளிகளோடு பாலுவின் ஒய்யாரக் குரலில் ஓடக்காரரின் ராக ஆலாபனையாகத் தன்னுடன் இழையும் குழலும் உருக்கத்தின் சிதார் வாசிப்புமாக முதல் சரணத்தைச் சென்றடைகிறது. ‘கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்’ என்று பாலு குரலெடுக்கும் இடத்தில் எத்தனை கண்ணீர் காத்திருக்கிறது.

அதை, ஜானகி இன்னும் உருக்கமாக பிரதி எடுக்கிறார். ‘மன்னவன் உன்னை மறந்ததென்ன…உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன..’ என்ற அடுத்த அடி, பதட்ட உணர்ச்சியாக பாலுவின் குரலிலும், துயரத்தின் சுமையாக ஜானகியின் குரலிலும் வெளிப்படும் இடம் முக்கியமானது. ‘தாயே தீயில் மூழ்கி, தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்…’ என்கிற இடத்தில் மென்மையாக ஒலித்துவிட்டு, ‘நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு’ என்கிற இடத்தில் தாளக்கட்டு தன்னிலை மெய்ப்பித்த சீதையின் உணர்வாக வேகமெடுக்கிறது. ஆனால், அதற்குப் பிறகும் நீதி நிலைப்பதில்லை என்பதை, அதே வரிகளை ஜானகி சோகச் சுவையில் தாளக்கட்டு இன்றி இசைப்பதிலும், நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு என்று மாற்றி உரைப்பதிலும் தெரிவிக்கிறது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய இசை உள்ளத்தை இதப்படுத்தும் கட்டத்தில் கதையை நகர்த்தும் நோக்கில் சலங்கைகள் போடும் ஸ்வரத்திலும், வயலின் குழலிசை நேயத்திலும் துள்ளல் நடை போட்டுச் செல்கிறது. இரண்டாம் சரணம் முழுக்க பாலுவே பாடுகிறார்: ‘துன்பம் என்றும் ஆணுக்கல்ல, அது அன்றும் இன்றும் பெண்களுக்கே’ என்பது சமூக தரிசனத்தின் செறிவான சொட்டு. ‘நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா’ என்பதில் பாலு கடத்தும் துன்பியல் ரசம் ஆழம் நிறைந்தது.

‘இரவென்றால் மறுநாளே விடியும்’ ‘உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்’ என்கிற அடிகள் பாலுவின் குரலில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன. ‘அப்போது பூக்கள்’ என்கிற இடத்தை என்னமாக இசைக்கிறார்! ‘அன்பு கொண்டு நீ ஆடு, காலம் கூடும் பூப்போடு’ என்பது துள்ளலாக வந்து விழுகிறது. அந்த இடத்தில் சேரும் ஜானகியின் குரல், அடக்க மாட்டாத துக்கத்தின் வெடிப்பாக, ‘அன்பில்லை நான் ஆட…தோள் இல்லை நான் பூப்போட’ என்கிற வகையில் எதார்த்தத்தின் வாயிலில் கொண்டு நிறுத்துகிறது.

நாம் பார்த்திருந்த கமலை, நாம் பார்த்திராத அவரது திறமைகளின் வழி திரையில் படைத்தவர் என்பது மட்டுமின்றி, ராதிகாவின் நேர்த்தியான நடிப்பும் சேர்த்து வெளிப்படும் பாடல் காட்சி பேசுகிறது, இயக்குநர் விஸ்வநாத் அவர்களது சிறப்பை.

பத்ம விருது அறிவிக்கப்பட்ட சில நாட்களில் காற்றில் கலந்தது வாணி ஜெயராம் குரலிசை. பாட்டுடைமை மிக்க குரல் இப்போது நாட்டுடைமை. இசை ஞானத்தைக் காட்டிவிடாத குழந்தைமைக் கண்கள். அடுத்தவர் திறமைகளை விரும்பித் தேடிப் பாராட்டும் குணம். இசை மேதமைகளைக் கண்ணீர் மல்கக் கொண்டாடும் உள்ளம். வாய்ப்புகளில் சிறப்பாக ஒளிர்ந்து, வருத்தமோ புகார்களோ அற்றுத் தணிந்து வாழ்ந்து விடைபெற்றுச் சென்ற உன்னத மனிதம். வேறென்ன சொல்ல….

2020இல் கவிஞர் காமகோடியன், எம் எஸ் வியும் நானும் என்ற புத்தகம் வெளியிட்ட நிகழ்வில் வாணி ஜெயராம் அருமையாகப் பேசியது நேரே கேட்டது. எம் எஸ் வி மீது அவருக்கிருந்தது பக்தி.

 

எம் எஸ் வி அருகிருக்க ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மீனவ நண்பன் படத்திற்காக அவர் இசையமைத்த உயிரோவியம் பாடலில் வெளிப்பட்ட அவரது இசை ஞானம் குறித்து அன்று வீடு திரும்பியதும் கணவர் ஜெயராமிடம் சொல்கையில் அழுதுவிட்டேன் என்கிறார் வாணி. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி…..’ எனும் பக்தி இலக்கணம் அது. வேறு ஒரு நேர் காணலில், அவரது இசையில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்று கேட்டால், எல்லாமே தான், எதை மட்டுமே சொல்வது என்று தொடங்கி மனப்பாடமாக பல பாடல்களின் பல்லவியைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

பாடல் வரிகள் மறவாது வைத்திருப்பது எல்லோருக்கும் சாத்தியமன்று. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல்கள். இசை கச்சேரிகளில் திரும்பப் பாடாது போயிருந்த பாடல்களைக் கூட அவர் மறந்தது போல் தெரியவில்லை. சங்கர் கணேஷ், விஜயபாஸ்கர், சந்திரபோஸ் போன்றோர் இசையிலும் எழுபதுகளில், எண்பதுகளில் வானொலியில் அவர் குரல் ஒலித்திராத நாள் இராது.

பாடல்களின் உயிர் ரசிகையாக என் மாமியார் கோமதி அவர்கள், வாணி ஜெயராம் மறைந்த செய்தி காதில் விழுந்த நேரமுதல், தனது அலைபேசியில் மற்றொரு கருவியில் அவரது பாடல்களே கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். ‘பச்சைப் புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்…’ என்று எப்போதோ கேட்ட அருமையான பாடல் ஒலித்தது அந்த வரிசையில். எஸ் பி பி யோடு அவர் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே சிறப்பானவை. ;என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்…’ பாடல் என்னை இந்த நாட்களில் விடாது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது என்று செய்தி அனுப்பி இருந்தார் கேள்விக்காரன் எனும் துளிர் சந்த்ரு. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் வருமுன் விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பு இரவு நேர விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இரவு 9 மணிக்கு, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்….ஏன் கேட்கிறது…’ என்ற குரல் அந்த இரவு நேரத்தில் வேறெங்கோ கொண்டு உலவ வைக்கும்.

‘ஆலமரத்துக் கிளி’ (இப்படி எழுதினால் எப்படி? பாடல் எப்படி இசைப்பார் வாணி, ஆ ல……ம……ரத்துக் கி…..ளி…..) பாடலும், ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்’ பாடலும் சிற்றூர் திருமண நிகழ்ச்சிகளில் விடாது ஒலித்துக் கொண்டிருந்த காலமொன்று இருந்தது. ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ வித்தியாசமான சூழலின் கீதம். ‘நானா….பாடுவது நானா…’ அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருப்பது தெரிகிறது. அதுவும் பாலுவோடு இணைந்து அவர் பாடியது. அபூர்வ ராகங்கள் படம் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது, ஏழு ஸ்வரங்களில் பாடலுக்காக என்றாலும், ‘கேள்வியின் நாயகனே’ பாடல் இன்னும் நுட்பங்கள் நிரம்பியது. ‘ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால்….பார்த்துக் கொண்டால்…அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…’ போன்ற அசாத்திய இடங்கள் அதில் அதிகம். அபாரமாக இசைத்திருப்பார் வாணி.

‘என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை’ என்பதிலிருந்து ‘நானே நானா’ வரை, ‘அந்தமானைப் பாருங்கள்’ என்பதிலிருந்து ‘நான் உன்ன நெனச்சேன்….’ என்பது வரை….அவரது குரலின் மாயா ஜாலங்களைப் பேசிக் கொண்டே இருக்கலாம்.

அவரது குரலை, ‘பொங்கும் கடலோசை’ என்று வருணித்தால், உச்சரிப்புகளை, ‘கொஞ்சும் தமிழோசை’ என்று விவரிக்கலாம். அவருக்குமே மிகவும் பிடித்த பாடலது. ஆங்கிலத்தில் வி எழுத்தை வைத்துச் சிறப்பித்துக் கூறுகிறார் ஒரு நேயர் இந்தப் பாடலை, ‘வாலி விஸ்வநாதன் வாணி வலஜி’ என்று இந்தப் பாடல் அமைந்திருக்கும் ராகத்தையும் இணைத்து!

மீனவ நண்பன் படத்தின் இந்தப் பாடல் ஒரு காதல் நீர்ப்பரப்பில் இரண்டு இதயப் படகுகளின் துடிப்புகள், துடுப்புகள் போட்டு ஒன்றாவதைக் காட்சிப் படுத்துவது. அந்த நீரோசை, நெஞ்சத்தின் பேரோசையாக எழுகிறது எம் எஸ் வி இசையமைப்பில்!

https://youtu.be/tr4Xr8MFnSg

மலைகளில் எதிரொலிக்கும் ஒரு ஹம்மிங் கொடுக்கிறார் வாணி. பாடலின் உச்ச எல்லைகளை அந்த வரைபடம் உணர்த்திவிட, ஹம்மிங் இடைவெளிகளில் சைலோஃபோன் அழகாக அதிர்வுகள் ஏற்படுத்திட, ‘பொங்கும் கடலோசை…’ என்று தொடங்குகிறார் வாணி. காதலின் உரத்த பிரகடனம் அது. அந்த ஓசையில் காதலுக்கான சங்கதிகள் இசையிலும் கொணர்ந்து கொண்டே இருப்பார் பாடல் நெடுக வாணி. அந்தக் கடலோசைக்கு, மெல்லிசை மன்னர் கொடுக்கும் தாளக்கட்டு அபார கற்பனையில் தேர்வு செய்ததாக இருக்க வேண்டும். ‘தண்ணீரிலே ஓடங்களைத் தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை’ என்கிற அருமையான அடுத்த வரியை வாலி அநாயசமாக வந்தடைந்திருக்கிறார். ஒவ்வோர் ஓசைக்கும் எதிரொலிக்கிறது சைலோஃபோன். எப்போது எப்போது என்ற எதிர்பார்ப்பில் தயாராக இருந்து வீறு நடை போடுகிறது டிரம்ஸ் கருவி.

தன்னனன னன தானான….என்கிற மெட்டில் மூன்று சரணங்களும் தொடங்குமிடம் இருக்கிறதே….ஆஹா…உயிரின் லயமன்றி வேறென்ன….அல்லது, உயிர்க்காதலின் லயம்! அப்படியான மென் காதலை நோக்கிய படகோட்டத்தில் புல்லாங்குழலை இசைக்க அழைக்காமல் இருப்பாரா மெல்லிசை மன்னர்… வயலின் இசையும், புல்லாங்குழலும், சைலோஃபோனுமாக சரணத்தை வந்தடைய, ‘பச்சைக்கிளி ஒரு தோணியில் …’ என்ற முதலடியை எத்தனை உயிர்ப்பாக இழைக்கிறார் வாணி. ‘பக்கம் வரும் அதிகாலையில்’ என்பதில் ஒரு கிறக்கம். ‘மன்னவன் ஓடம் பார்த்ததோ’ வின் நீட்சியான சங்கதியில் எத்தனை கதைகள்….’மயக்கம் கொண்டு ஆடுதோ’ என்பதில் தான் எத்தனை காதல் சீண்டல்!

அப்புறம் சரணத்தின் கடைசி வரி, ‘சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் மயங்குவதேனோ’….இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்தின் கடைசி வரிகளும் மெல்லிசை மன்னரின் கற்பனைக்கான முத்திரை அத்தாட்சியாக அமைந்திருக்கும். அத்தனை சங்கதிகள், அத்தனை ஒய்யாரம், அத்தனை அழுத்தமாக வரவே வாணியைத் தேர்வு செய்திருப்பார் எம் எஸ் வி. பல்லவிக்கு அங்கிருந்து வாணி மேற்கொள்ளும் பயணமும், அதையும் முதல் வரியோடு முடித்துக் கொள்வதும் பாடலை மேலும் நெருக்கமாக அமர்ந்து கேட்க வைக்கிறது.

இரண்டாவது சரணத்தை நோக்கிய வழிப்பாதை புல்லாங்குழல் கலைஞரின் காதலிசை தான். ‘வெள்ளி அலை வந்து மோதலாம் ..செல்லும் வழி திசை மாறலாம்…’ என்கிற வரிகளைப் படகுக்குள் அமர்ந்து கேட்பதைப் போலவே உணர முடியும். ‘பொன்மலைக் காற்று வீசினால் படகு தாளம் போடலாம்’ என்பதில் எத்தனை உயிரோட்டம். கடைசி வரியை வாணி மிதக்க வைத்துக் கேட்க விடுகிறார், ‘நீரலை மேடையில் மீனவன் நாடகம் நடப்பதும் ஏனோ’ என்று! டிரம்ஸ் தயார் நிலையில் நின்று பல்லவிக்கு அழைத்துப் போகிறது அவரை.

மூன்றாவது சரணம், ‘சொல்லித் தர ஒரு வாத்தி யார்…. என்னை விட இங்கு வேறு யார்’ என்று கித்தாப்பாக ஒலிக்கிறது. வாத்தியார் என்று நாயகி தன்னைச் சொல்லிக் கொண்டாலும் எதிரே இருப்பவர் எம் ஜி ஆர். பாடலை வாணி பாடினாலும் சொல்லித் தருபவர் எம் எஸ் வி. இந்த முரணை ரசித்து எழுதி இருப்பார் வாலி. பிறகென்ன… கொண்டாட்டமாகத் தொடரும் சரணத்தில், நிறைவாக, ‘சோர்ந்தது போதும் வா…சேர்ந்து நாம் போகலாம்..’ என்று இழைத்து, ‘ஊர்வலமாக’ என்று முடிக்கிறார் வாணி. சரணங்களில் மிருதங்கத்தை அத்தனை கற்பனையோடு பயன்படுத்தி இருப்பார் எம் எஸ் வி.

தமிழ்த் திரை இசையில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் மிகப் பெரும்புகழ் சூடியவர் வாணி. அவரது தன்னடக்கம், பிறர் உயர்வினிலே அவருக்கு இருந்த இன்பம், அடுத்தடுத்த தலைமுறை பாடகர்கள் மேடையில் இசைக்கும்போது ஆர்வம் பொங்க ஆசி கூறி உவகையுற்ற அவரது கண்கள் மறக்க முடியாதது.

‘வாணி, ஆகாஷ்வாணி ஆகி விட்டார்’ என்று அவரது மறைவுச் செய்தி வந்ததும், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி – கவிஞர் ஏ எம் சாந்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். உயிரும் காற்றும் வேறு வேறு அல்ல….தன்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதத்தைக் காற்றில் கலந்து கொடுத்துக் கொண்டிருந்தவர், தானே காற்று என்று உணர்ந்த தருணத்தில் விடை பெற்றிருக்கக் கூடும்.

இசையில் நிறைந்திருக்கும் உயிர், உயிரிசையாக இருப்போரை வாழ்விக்கவும், இசைத்தட்டாக வாழ்க்கை நிறைவு பெறட்டும் என்று உணர்த்தவும் செய்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 84: பொங்கும் குரலோசை – எஸ் வி வேணுகோபாலன்”
  1. அற்புதமாக பாடல்களை தேடி தேர்ந்தெடுத்து நம்மை பர வசப்படுத்தி ஆஹா… எவ்வளவு அருமையான தொகுப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *