நூல் அறிமுகம் – முட்டை பொம்மை
நூல் : முட்டை பொம்மை
ஆசிரியர் : வேம்பார் ச.வள்ளுவன்
வெளியீடு : வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம், விளாத்திகுளம்
குழந்தைகளின் உலகம் அலாதியானது. அந்த அலாதியான உலகம் கட்டுக்கடங்கா கற்பனையால் நிறைந்தது. அந்த கற்பனையை மேம்படுத்தி, குழந்தைகளின் சிந்தனைகளை அடுத்தநிலை நோக்கி இட்டுச்செல்ல்லும் ஆற்றல் கதைகளுக்குண்டு.
அண்மைக்காலமாக சிறுவர் கதைகள் வருவது குறைந்து வருகிறது. இந்நிலையை போக்கும் விதத்தில் இனிதே மலர்ந்துள்ளது வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம் வெளியீட்டில் வெளிவந்துள்ள வேம்பார் ச.வள்ளுவன் அவர்களின் முட்டை பொம்மை.
தனது கல்விப்பணிக்காக 2014ஆம் ஆண்டு தினமலர் நாளிதழால் வழங்கப்பட்ட ‘இலட்சிய ஆசிரியர்’ விருது, தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய ‘ஆசிர்யர் செம்மல்’ விருது, தென்னிந்திய கலாச்சார அகாடமி வழங்கிய ‘சேவா ரத்னா’ விருது என பல விருதுகளால் கெளரவிக்கப்பட்டவர் நூலாசிரியர். பல்வேறு சிற்றிதழ்கள், வார-மாத இதழ்கள், மின்னிதழ்களில் படைப்புகளை எழுதி வரும் இனிய படைப்பாளர் நூலாசிரியர் வேம்பார் ச.வள்ளுவன் அவர்கள்.
சிறுவர்களுக்கான ஏழு கதைகளுடன் 32 பக்க அளவில் இனிதே மலர்ந்துள்ளது இந்த முட்டை பொம்மை நூல்.
மாறன் தன் பள்ளியில் நடக்கும் கண்காட்சிக்கு, தானே செய்த முட்டை பொம்மையை கொண்டு சென்று பரிசு பெற்ற “முட்டை பொம்மை” கதையே இந்நூலின் முதல் கதை. “வயதானவங்கக அறிவுப் பெட்டகம். அவங்க அனுபவத்துல இருந்து நமக்கு பல ஐடியாக்கள் தருவாங்க. யாரும் கேட்பதில்லை. கேட்ட நீ ஜெயிச்சுட்டே” என்று கதையின் நீதியாக பெரியோரின் அறிவுரையே கேட்க இனிதே வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்ற இனிய நீதியை எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் ரமேஷின் கதாபாத்திரத்தின் வழி, நெஞ்சில் நிலைநிறுத்துகிறார் நூலாசிரியர். இதே கதையில் யாரையும் ஏளனப்படுத்தக் கூடாது, ஆபத்தில் உதவும் நல்ல உள்ளங்களே நம் நல்ல நண்பர்கள் என்னும் நீதிகளையும் இழையோட விட்டிருப்பது சிறப்பு.
செல்போன், கணினி போன்ற சாதனங்கள் மனிதர்களின் நேரத்தை விழுங்கிவருவது எல்லோரும் அறிந்ததே. அதிலும் செல்போன் விளையாட்டுகளில் தங்களை தொலைக்கும் குழந்தைகளின் நிலையோ இன்னும் அதிகம். அத்தகையை செல்போன், கணினியில் நாம் அதிக நேரம் செலவிடக்கூடாது என்பதை காட்டுக்குள் வாழும் மாருதியின் வழியாக நம் கண் முன் கொண்டுவருகிறார் எழுத்தாளர் வேம்பார் ச.வள்ளுவன் அவர்கள்.
“தம்மின் தம் மக்கள் அறிவுடைமை” என்கிறது திருக்குறள். இன்றைய குழந்தைகள் பெரியவர்களைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்களாக இருப்பது எல்லோரும் அறிந்த கண்கூடு. அத்தகைய அறிவிற் சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனங்கண்டு பாராட்ட வேண்டும் என்ற நற்கருத்தை கண்முன் கொண்ர்ந்து, பெரியோரின் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் என்ற நீதியையும் சொல்கிறது பூங்கா தாத்தா கதை.
நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு எந்த குறையும் வராது என்ற நல்ல நீதியை பிரான்சிஸ் என்ற சிறுவன் மூலமாக வாசகர்களுக்கு உணர்த்தும் ஆசிரியர், பெற்றோரின் சூழல் அறிந்து பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.
தென்னைமரமும் பனைமரமும் சண்டையிடும் கதை. தென்னைமரங்களும், பனைமரங்கும் எந்தெந்த வகையில் நமக்கு பயன் தருகின்றன என்ற பட்டியலை அறிய இந்த கதையே போதும். மேலும் விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற நீதியையும் உணர்த்துகிறது இக்கதை.
இயற்கையை நேசிக்கும் இனிய மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அப்படி இயற்கையை நேசிக்க ஒவ்வொருவரும் அவர்களால் இயன்றளவு மரங்களை நட்டு வளர்க்கவும், பராமரிக்கவும் செய்ய வேண்டும் என்பதை “மரம் வளர்ப்போம்…!” கதையில் உணர்த்துகிறார் நூலாசிரியர்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏழு கதைகளும் ஒரே கல்லில் இரட்டை மாங்காய்கள் என்று சொல்வதை போல், நல்ல நல்ல நீதிகளை சிறுவர்களுக்கு உணர்த்துகின்றன. எளிய மொழிநடை சிறுவர்கள் வாசிக்க எளிதாகவும், அவர்களின் வாசிப்பை மேன்மைப்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.
விளாத்திகுளம், வேம்பு மாணாக்கர் வாசிப்பு இயக்கம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, நல்ல நல்ல படைப்புகளை தேடிப்பிடித்து நூலாக வெளியிட்டு நற்பணியாற்றுகிறது. இத்தகைய நற்பணியில் மலர்ந்துள்ள இந்த இனிய நூலை மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த வாங்கி ஆதரவளிப்பது சிறப்பாக அமையும்.
நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்