அரிவாளும் சுத்தியலுமாய்…..

**************************************

புரட்சியைப்

பெயரின்

முன்னொட்டாய்ப் போட்டவர்கள்

முதலமைச்சர் ஆனார்கள்

கடைப்பிடித்தவர்களோ

கம்பி எண்ணினார்கள்!

தமிழகத்தின் முகவரியில்

வரலாற்றில் நேர்ந்த

தகவல் பிழைகள்!

 

எடுப்பார் கைப்பிள்ளை என்பதால்

அப்பன் பேர் அறிவதில் அநேகக் குழப்பம்!

 

அதனால்தான்

தறுதலைகளின் தர்பார்.

 

நம்பிக்கை இருக்கிறது

வரலாறு ஒருநாள்

தன் புதையலைக் கண்டெடுக்கும்

 

சரித்திரத்தின் சகாப்தம்

சங்கரய்யா

இந்த சிங்கத்தின் வார்த்தைகள்

கர்ஜனைகள்

 

இந்த சிங்கம்

காட்டில் இருந்ததைவிட

கூண்டில் அடைபட்டதே அதிகம்.

 

அதிகாரத்தை வேட்டையாடும்

அதிசய சிங்கம்

மான்களுக்காக மறியல் நடத்தும்.

இதன் கர்ஜனையில்

காடே மகிழும்

தங்களுக்கான இரை கிடைத்ததாய்

பறவைகள் பாட்டிசைக்கும்.

தாவரங்கள் நடனமிடும்.

*****

 

மார்க்ஸ் ஒருநாள்

இந்தியாவை எட்டிப் பார்ப்பார்

அப்போது

சிக்காகோ** டீ ஸ்டாலில்

சங்கரய்யா

தோழர் நல்லக்கண்ணுவுடன்

தேநீர் அருந்திக் கொண்டிருப்பார்.

..நா.வே.அருள்

14/7/2020

** அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் ஹே மார்க்கட் சதுக்கத்தில் 1886 ஆம் ஆண்டு 4 ஆம் நாள் தொடங்கிய போராட்டத்தின் மூலமாகத்தான்  உழைப்பு 8 மணி நேரம், ஓய்வு 8 மணி நேரம் உறக்கம் 8 மணி நேரம் என்கிற தொழிலாளர்களின் கோரிக்கை பின்னாளில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *