அகவி கவிதைகள்

 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
          கடைகள்
,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
O
ஒற்றைக் கால்சட்டையுடன்
நின்றிருந்தது
வெறிச்சோடிய
பேருந்து நிலையம்
ஊட்டி காபிபார் செல்லப் பிள்ளையின்
பேருந்து நிலைய
முச்சந்திக் கடை மட்டும்
தேநீரால்
கண் சிமிட்டிக் கொண்டிருந்தது
அங்கு இப்பொழுது
தேநீர் பருகி நின்றிருக்கும்
வெள்ளுடைக்காரர்கள்
பல பேர்
இயல்பு காலத்து
அந்திகளில்
கடை முதலாளியின்
புன்முறுவலை மென்று கொண்டே
உபசரிப்புத்தேநீர் பருகியவர்கள்
விற்பனைச் சொற்பமான
இன்றும் கூட
வட்டார முக்கிய வான்களுக்கு
தேநீர் கெளரவம்  தரப்படுகிறது
காவலே இல்லா
காவல் நிலையம்
நீதியே இல்லா
நீதிமன்றம் இருப்பது போலத்தான்
பேரூந்தே இல்லா
பேருந்து நிலையம்
O
வாடகைக் கட்டவியலா
அந்தரத்தொங்கல்
வயிற்றுப் பாட்டின்
தொந்தரவு அவலம்
இழுத்துச் சாத்திய
கடையின் சுருள் கதவிற்கு
நல்ல வேளை
கதறுவதற்கு வாயில்லை
உள்ளுர் மந்தைவெளிக்
கல்லில் அமர்ந்து
பீடி பிடித்துக் கொண்டோ
அரை போதையில்
மூக்குத்தியைக்
கழட்டித் தராத மனைவியை
தரதரவென இழுத்துப்
போட்டு
அடித்துக் கொண்டோ
சாகிற வரை மூஞ்சியில்
முழிக்க மாட்டேன்
என்பவனிடம்
கடன் கேட்டுக்
கெஞ்சிக் கொண்டோ
இருக்கலாம் அவர்கள்
கால நெருக்கடிகள் பற்றி
கதைகள்உதிர்த்து
கைவலுத்தவன் ஒருவன்
கடையை விலை பேசிக்
கொண்டும்
இருக்கலாம்
 கடைக்காரர்களின்ஊரோடு பெயர்
தெரிந்திருந்தால் மட்டுமே
ஒரு வேளை அவர்களை
மீண்டும்
சந்திப்பதற்கு வாய்ப்பு
இருக்கிறது
தெரியா விட்டால்
பயணக் காத்திருப்பின்
வெற்றிடப் பொழுதுகளில்
அவர்களை நீங்கள்
சந்திக்கவே முடியாது
நிலைமை சீராகி
கடைகளில்
வேறு வேறு
முகங்கள் இருந்தால்
கொேரானாவால்
அவர்கள் செத்திருக்கலாம்
என்று மட்டும்
தயவு செய்து
நினைத்து விடாதீர்கள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
        மழை வரையும் ஓவியம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எங்கோ இறங்குகிறது
மழைத் தாரைகள்
நடந்தோ  ஓடியோ
வருவதன் அறிகுறி
காற்றில் மிதந்து வரும்
ஈர மண் வாசம்
சொடுக்கொளி மின்னல்
இடிமத்தளம்  முழங்க
மழையின் குதியாட்டம்
மண்ணுக்குள்
நீர் முட்டைகள் உடைய
ஊற்றுக்கரு கண் திறக்கும்
வான் முகம் மூடும்
நீர் முந்தானை
நீர்மக்கண்ணாடிக்குள்
பூமியின் கழுவிய முகம்
மண் நிறத்தில் நாணும்.
வேர்கள் பாடும்
பாதாள பூபாளம்
வாழ்க்கைக்குப் பச்சை
கொடி அசைக்கும்
துகள்களாய்ச் சிதறிய
வானவில்
மலர்களாய் பூமியெங்கும்
எங்கே போயின
நட்சத்திரங்கள் ?
என்ன ஆனது வான்நிலவு?
மழையை
வேடிக்கை  பார்க்கும்
ஒவ்வொரு கண்களும்
நட்சத்திரங்கள்!
என்
மனத்தைப் போர்த்திக் கொண்டு
கதகதப்பாய் வெளித்தெரியாமல்
படுத்திருந்தது
வெண் நிலவு !
…………………………………………
 அகவி