இரவு கவிந்துவிட்டது.
அது தெரியாவண்ணம்
முக்குக்கு முக்கு கொழுந்துவிட்டு எரிகிறது நம் தீப்பந்தம்.
பூச்சிகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன.
ஒரு சுவரிலிருந்து
இன்னொன்றுக்குத் தாவுகிறது
வளர்ப்புப் பூனை.
இழவுச் செய்தியை
ஏந்தி ஊளையிடும் நாயை
எங்கிருந்தோ துரத்துகிறது ஒரு கல்.  கோட்டானுக்கும்
விசயம் தெரிந்து விட்டது.
கயிறை அறுத்துக் கொண்டு ஓடக்
கொம்பு சீவும் பசுவின் மடியைப்
பயத்தில் மேலும் முட்டுகிறது இளங்கன்று.
இணையோடு சேர்ந்து கொக்கரிக்கும் சேவலின் கொண்டை
சிவந்து மினுங்குகிறது.
நம் பறை
நம் கொம்பு
நம் முழவு
நம் நிசி
நம் விடியலில்
நம் தீக்கிரை.
நம் தோல்வியைப்
பல்லக்கில் தூக்கி வைத்துக்
கொண்டாடி வருபவர்களிடம்
குனிந்து நெற்றியைக் காட்டி
ஆசிர்வாதம் பெறுகிறோம்.
நம் மிச்சங்களைத் துரத்தியடிக்கத் தூவப்படும் நிவாரணத்தின் மீது
மாறிமாறிப் பாயும் ஊடக வெளிச்சத்தில்
கண்கூசுகிறது நம் இரவுக்கு.
மணம், திடம், சுவை மட்டும்
கொண்டதல்ல தேநீர்.
கோப்பைத் தேநீரை அருந்தும் போது மலைவாசிப் பெண்ணின்
உள்ளங்கைச் சூடு
உள்ளுக்குள் இறங்குகிறது.
குளுமையைப் போர்த்திய
அவள் ஸ்வெட்டரிலிருந்து நழுவும் துளி, பள்ளத்தாக்கில் தெறிக்கும் ஓசையை விழுங்கிவிட்டது
பெயர் தெரியாப் பறவையின் கீதம்.
அவளைக் கடந்து செல்லும் ஜீப்பிலிருந்து சரத்பாபு செந்தாழம்பூவைத் தவறவிடுகிறார்.
மெலிதாய்ப் புன்னகைத்துத்
திரும்பிப் பார்ப்பவளின் மூக்குக்குத்தியைத்
தடவித் தடவி மெருகேற்றுகிறது
அந்திச் சூரியன்.
சுவையூட்டப்பட்ட நறுமணத்திலிருந்து
ஒரு சிட்டிகை  ஆவியை உறிஞ்சிக் காமத்தைப் பருகும், அவர்களின்
விளம்பரக் கோப்பையிலிருந்து கொட்டப்பட்ட சக்கையாகக் கிடக்கிறாள்
வேறொரு மலைவாசி.
பெட்டி பெட்டியாக அடுக்கப்படும்
தரம் மிக்க தேயிலைப் பொட்டலங்களின் அடைப்புக்குறிக்குள்
“உள்ளூர் வரி”களும் உள்பட்டிருப்பதை வழக்கம் போல் தவிர்க்கிறார்கள்
திடீர் விருந்தாளிகளும்.
எப்படி எங்கே எப்போது உடைபட்டு
இப்படித் தெருவுக்கு வந்தேனெனத் தெரியவில்லை.
மழை வழிந்த ஈரத்தோடும்
பறவையின் உலர்ந்த எச்சத்தோடும்
காலக் கடுப்போடும் கிடந்த என் மேல்
அவ்வளவு அவசரமாக
அல்லது கவனியாமல்
உன்னை யார் மோதச் சொன்னது?
உன்னைப் பெயர்த்ததை அடையாளப்படுத்தும் சாக்கில்
உன் ரத்தக் கறையை வழித்தெடுத்தாய். கழிவைத் துடைத்தாய்.
பொழுது போகாச் சமயத்தில்
உன் மேதமைத்தனம் வெளிப்பட
உளி கொண்டு செதுக்குவானேன்?  மூளியாக இப்படி மூலையில் ஒடுங்குவதெல்லாம் என்ன வடிவம்?
நானாக உடைபட்டு நொறுங்கி கூழாங்கல்லாகச் சிதைந்து
நவீன சிறுபிஞ்சின் கையில் சொக்கட்டானாகக் குதித்துக் களித்திருப்பேன்.
உப்புத் தண்ணீரில்
குழைத்துப் பூசும் சாந்திலிருந்து பொடிப்பொடியாக உதிர்தலில் எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிடும் இம்மண்.
– மா. காளிதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *