*வேறு*
*உலகச் சந்தையில்*
*ஒரு மனிதன் போனால்*
*இன்னொருவன்*
*உனக்கென்று*
*ஒரு லாபநஷ்ட*
*கணக்கிருந்தால்*
*விசயம் வேறு*
           *நகுலன்*.
இன்றைய உலகமயச் சூழலில் எவ்வளவு பொருத்தப்பாடான வரிகள்.
உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்  அமலாகி 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  அதோடு நவீன தொழில்நுட்பங்களும் பல்கி பெருகிய காலமிது. தேசத்தின் இண்டு இடுக்குகளிலும் கூட இக்கொள்கைகளும் நவீன தொழில்நுட்பமும் ஊடுருவி தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுவிக் கொண்ட காலமும் கூட. குறிப்பாக ஐ.டி துறை. தேசத்தின் முக தோற்றத்தை மாற்றியுள்ளது மட்டுமல்ல. சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
கண்ணாடிகளால் சூழப்பட்ட உயரமான கட்டிடங்கள்… பல வண்ண, பல வடிவங்களிலான கார்கள்… எப்பொழுதுமே புத்தம் புதிது போன்று தோற்றமளிக்கும் நாகரிக உடைகள்… இன்னது என்றே அறிந்திரா முடியாத, தினந்தோறும் ஒவ்வொன்றாக  பல வார்த்தைகளில் உச்சரிக்கப்படும்  எலெக்ட்ரானிக் சாதனங்கள்…
இவைகள் தான் ஐ.டி துறையின் அடையாளங்களாக நாம் அறிந்தது. இவைகள் மட்டும் தானா? ஐ.டி. துறை
இங்கு நிகழும் சிறு சிறு அசைவுகள் கூட பெருத்த செய்தியாக ஊடகங்களால் மாற்றப்படுகின்றன. தேச வெளியில் கேட்கும் இப்பெரு ஒசைகள் உண்மையானது தானா? அத்துறைக்குள் மாந்தர்கள் எப்படி எல்லாம் தங்கள் வாழ்வை கட்டமைத்துக் கொள்கிறார்கள்? சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார்கள்? அவர்கள் வாழ்வில் சிக்கல்களே இல்லையா? இவற்றை எல்லாம் நாவல்கள்  தானே சரியான முறையில் பிரதிபலிக்க முடியும்.  இரத்தமும் சதையுமாக  லட்சகணக்கானவர்கள் இயங்கும் இத்துறை குறித்த பதிவுகளை நாவல்கள் போதுமான அளவு  செய்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்ற பதிலே அநேகமாக கிடைக்கிறது. இவ்வெற்றிடத்தை தான் இளம் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் தன் நட்சத்திரவாசிகள் எனும் நாவலின் மூலம் வெற்றிகரமாக நிரப்பிட முயன்றுள்ளார்.


ஐ.டி துறையில் பணியாற்றும் கணவன் – மனைவி  ஆகியோரின் உறவில் ஏற்படும் சிக்கல்களை நித்திலன் – மீரா தம்பதியினர் மூலம் மிக அழகாக நாவல் பேசுகிறது. ஒரு நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு சூழலில் வளர்ந்த நித்திலன்  முற்போக்கான, நவீன குடும்பச் சூழலில் வளர்ந்த மீராவை மணம் முடிக்கிறான்.
எற்றைக்கும் ஏழெழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் என உருகி உருகி அன்பினை பரிமாறி, காதல் மொழி பேசிக் கொண்டவர்கள் ஏழு மாதம் கூட தாக்கு பிடிக்காமல் பிரிகின்றனர். காரணம், நவீன சூழலில் ஜனநாயகப்படுத்தப்பட்ட குடும்ப சூழலில் இருந்து வந்த மீராவின் யதார்த்தமான அன்பையும் அறிவையும் நித்திலனால் எதிர் கொள்ள இயலதாதும், பல்வேறு பெருநிறுவனங்களுக்கான சாப்ட்வேர்களை எழுத முடிந்த நித்திலனுக்கு தன் சொந்த வாழ்விற்கான சங்கேத மொழிகளை கையாள போதுமான ஞானம் இல்லாமல் போனதும் தான். வளர்ந்த சூழ்நிலை ஒரு புறம் இருந்தாலும் பணி சூழ்நிலையும் பணியிடங்களில் உருவாக்கப்படும் அழுத்தங்களும் தீர்வினை நோக்கி தனது கவனத்தை செலுத்துவதற்கு இடம் தரவில்லை என்பதும் யதார்த்தமாக உள்ளது.
 *அவளுக்கு அவனின் சின்ன சின்ன அசைவுகளின் நுணுக்கங்கள் புரியும். அவ்வாறே தன் தோளைப் பற்றிய கைகளையும் அறிவாள். அப்போது தான் அவள் அவனை இன்னும் வெறுத்தாள்*
 போன்ற வரிகள் மூலம் இத்தலைமுறை பெண்களின் உணர்வுகளை அனாசியமாக எடுத்தாள்கிறார் நாவலாசிரியர். அது மட்டுமல்ல, பணித்தலங்களில் சக பணியாளர்களால் உளவியல்ரீதியாக அவர் மட்டுமே உணரும்படியாக நடக்கும் அறிவார்ந்த தாக்குதல்கள்… போன்றவற்றைகளையும் மிக நுட்பமாக நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பல்கலைகழகங்களுடன் இணைந்து உயர் மதிப்பெண்களை பெற்று பள்ளி இறுதி வருடப் படிப்பை முடிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து  வார இறுதியில் வகுப்புகளை நடத்துவது; வார நாட்களில் தங்கள் நிறுவனத்துக்குரிய பணிகளை பெற்றுக் கொள்வது; இவர்களுக்கு சொற்ப ஊதியம் அல்லது உதவி பணம் மட்டும் அளித்து அதிக பணிகளை உறிஞ்சுவது; போன்ற நிகழ்வுகளை எல்லாம் விவரிக்கும் பொழுது சிவகாசியின் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், திருப்பூரின் பனியன் மில்லிலும் தங்கள் பள்ளி கனவுகளை சிதைத்துக் கொண்டு பணியாற்றும் சிறார்கள் தான் நம் நினைவிற்குள் வந்து போகிறார்கள். சமூகத்தில் நிலவும் வறுமையை தன் லாபவெறிக்காக எப்படி எல்லாம் காலத்திற்கேற்றப்படி முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனையும் அதற்கான கருத்தியல்ரீதியான நியாயங்களை எப்படி எல்லாம் உருவாக்கி சமூகத்தில் உலவ விடுகிறது என்பதனையும் இது போன்ற பல நிகழ்வுகளை பேசுவதன் மூலம் நாவல் தற்கால் அரசியலை பேசிச் செல்கிறது.  அதுவும் மிகவும் உயிர்ப்புடன்…
அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை எல்லாம் ஒரு நாவலுக்குள்ளே கொண்டு வந்து விட முடியுமா? என்றால் முடியும் என்ற நம்பிக்கையினை *நட்சத்திரவாசிகள்* அளிக்கிறது. *’இங்க நாம நாலு பேரு தான் வெஜ்ஜா?’* என்று ஒரு விருந்தில் தலைமை அதிகாரி ஒருவர் கேட்கும் ஒற்றை கேள்வி ஒராயிரம் விளக்கங்களை கோருகிறது. *உழைப்பையும் திறமையையும் மீறி நுட்பமான ஒன்று தான்* பதவி உயர்வை  ஐ.டி துறையிலும் தீர்மானிக்கிறது என்பதை நாவல் மிக அழகாக பதிவு செய்துள்ளது.
Image
ஐ.டித் துறையில்  ஊழியர்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு  தாக்குதல் குறித்து பல்வேறு இடங்களில் நாவல்  பேசுகிறது. துல்லியமாகவும் பேச வேண்டும்; அழகாகவும் சொல்ல வேண்டும்; பிரச்சாரமாகவும் இருக்க கூடாது அதனை நாவல் மிக நிறைவாக செய்துள்ளது.
பணியில் சேர்ந்த உடனேயே ஒரு சிலரை திரட்டிக் கொண்டு கேள்வி கேட்ட கமலக்கண்ணனை முளையிலேயே கிள்ளி எறிந்தது; பதவி உயர்வு அளிக்காதற்காக தனது கோபத்தை வெளிப்படுத்திய சாஜுவை அணுகிய விதம்; தனது சொந்த ஊருக்கு பணி மாற்றம் கேட்ட பார்கவி மீது நிகழ்த்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்… இதில் பார்கவிக்கு ஏற்ப்பட்ட மனசிதைவு… காஃபேயில் தனியாக அழுதுக் கொண்டிருந்த இளம் பெண்… என பல்வேறு வலி மிகுந்த நிகழ்வுகளை எல்லாம் நாவல் பேசும் பாணி மிக அலாதியானது.
சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் அமெரிக்க பெண்மணி  டெய்ஸியாகட்டும், இந்திய நிறுவனத்தின் உயரதிகாரி வேணுவாகட்டும்… பல ஆண்டுகள் இவர்கள் தங்கள் நிறுவனத்திற்காக பணி செய்திருந்தாலும் இவர்களின் திறன் குறைந்தாலோ, நிறுவனத்தின் இலாபம் குறைந்தாலோ இவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் வலி தெரியா அறுவை சிகிச்சைகள் குறித்து மட்டும் பேசிவிட்டு, அறுவை சிகிச்சை முடிந்த பின் ஏற்படும் வாதைகளை எல்லாம் நமது கற்பனைக்கே விட்டு விட்டு நாவல் விலகிச் செல்லும் புள்ளிகள் அவ்வளவு அற்புதமானது…
அதே போல் கிராமப்புற பின்புலத்திலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விவேக்கின் காற்றில் கரைந்து போன காதல்… கம்பர் போன்ற புலவர்களின் பெயர்களை தங்கள் கட்டிடங்களுக்கு சூடிக் கொண்டு ,  மண்ணுக்கேற்ற கார்ப்பரேட் நிறுவனங்களாக காட்சி அளிக்கும் உத்திகள்…  என இந்நாவல் பேசும் பொருள்கள் எல்லாம் மிக ஆழமானது.
அதே போல் கருவுற்றிருக்கும் இளம் பெண்ணிடம் ஒப்படைக்கும் பணிகள் எல்லாம் சிறப்பாக நிறைவேற்றப்படுவது குறித்தும், மனித வளங்களை ஆக்கப்பூர்வமாகவும் ஜனநாயகபூர்வமாகவும் பயன்படுத்த தெரிந்த தனி நபர்களும் ஐ.டி. துறையில் இருக்கிறார்கள் என்பதனையும் ஐ.டி துறையினால் பல்வேறு ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களில் பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக ஏற்பட்டுள்ள பாசிடிவ்வான மாற்றங்கள் குறித்தும் நாவல் நேர்மையுடன் பதிவு செய்துள்ளது.


இளம் வயது தான் என்றாலும் தனது விரிவான, ஆழமான வாசிப்பின் மூலமும் நிகழ்வுகளை, மனித மனங்களை உற்று அவதானிப்பதன் மூலமும் வயது, பாலின வித்தியாசங்களை எல்லாம் கடந்து மனிதர்களின் மிக நுட்பமான அம்சங்களை எல்லாம்  நாவலின் பல இடங்களில் நாவலாசிரியர் மிக அழகாக விவரிக்கிறார்.
ஒட்டு மொத்தத்தில் நாவல் குறித்து சொல்ல வேண்டும் என்றால் பிரமிளின் வார்த்தைகளில் தான் நிறைவு செய்ய முடியும்.
*நக்ஷத்ரங்களை விட* *நிறையவே பேசுவது*
*அவற்றின் இடையுள்ள*
*இருள்*
 நூல் ஆசிரியர் : *கார்த்திக் பாலசுப்ரமணியன்*
*காலச்சுவடு பதிப்பகம்.*
264 பக்கங்கள்
விலை ரூ.290
+-+++++++++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *