ஒரு வயதான பாட்டி, தினமும் ஒரு வேப்ப மரத்துக்கு அடியில உட்காந்து உளுந்த வடை சுட்டு வியாபாரம் செஞ்சிட்டு வந்தாங்களாம்… அந்த ஊருலேயே அந்தப் பாட்டி சுடற வடை அவ்வளவு ருசியா தொடுவதற்கே பஞ்சு போல இருக்குமாம்… வடை ரொம்ப சுவையா இருக்கறதால, எப்போ பார்த்தாலும் அந்தப் பாட்டி கடையில கூட்டம் அலை மோதுமாம்.

திடீருனு அந்தப் பாட்டி கடை வழியாக பறந்து வந்த ஒரு குட்டி காகத்துக்கு சரியான பசியாம். வேப்ப மரத்துக்கு மேல வந்து உட்கார்ந்த காகம்…

“பாட்டி… பாட்டி… ரொம்ப பசிக்குது. எனக்கு ஒரு வடை தாங்களேன்…” அப்படினு அந்தக் குட்டி காகம் வயித்த தடவிக் கிட்டே கேட்டுச்சாம்.

“கண்டிப்பா தர்றேன் கண்ணு! ஒரு ரூபாய் கொடு கண்ணு” என்று கூறி ஒரு காகிதத் தாளில் வடையை மடித்து குட்டி காகத்திடம் நீட்டினார் பாட்டி.

“ஒரு ரூபாயா?”

“ஆமாம் கண்ணு”

“பாட்டி எங்கிட்ட காசு இல்லையே! நான் வேணும்னா நாளைக்கு வந்து காசு தரட்டுமா?”

“இல்ல கண்ணு… காசு கொடுத்தா தான் வடை” என்று பாட்டி கூறியதும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு பறந்து சென்றது காகம். குட்டி காகத்தின் முகம் வாடியிருப்பதைப் பார்த்ததும்.

“என் செல்லத்துக்கு என்னாச்சு? ஏன் முகம் வாடியிருக்கு?” என்று தாய் காகம் விசாரித்தது.

“அம்மா… எனக்கு ரொம்ப பசியா இருந்ததுனு, அந்த வடைக்கார பாட்டிட்ட போய் வடை கேட்டேன். ஆனால் பாட்டியோ, காசு கொடுத்தா தான் வடை தருவேனு சொல்லிட்டாங்கம்மா” என்று சோகமாக கூறியது.

“செல்லம்.. இதுக்கா இவ்வளவு சோகமா இருக்கீங்க?

“பாட்டி கேட்டது சரிதான் செல்லம். எந்தப் பொருளையும் கடையில இருந்து வாங்கும் போது காசு கொடுத்து தான் வாங்கனும். பிறருடைய பொருளை அவங்க அனுமதி இல்லாம எடுக்க முயற்சிக்க கூடாது. அந்தப் பாட்டிக்கு ரொம்ப வயசானாலும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காம சொந்தமாக உழைக்கறப்போ, நாமளும் நேர்மையா காசு கொடுத்து வாங்குறதுதான் செல்லம் சரி.”

“ஓ அப்படினா சரிம்மா… இனி எந்த கடையில பொருள் வாங்கனும்னாலும் கண்டிப்பா காசு கொடுத்து தான் வாங்குவேன்ம்மா… அப்போ எனக்கு இப்போ ஒரு ரூபாய் தருவீங்களா?”

“கண்டிப்பா தர்றேன் செல்லம்!” என்று தன் குட்டி காகத்தைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து ஒரு ரூபாயை கொடுத்து அனுப்பியது தாய் காகம்.

“தன் அம்மாவின் பேச்சை கேட்டு பறந்து சென்ற குட்டி காகம், பாட்டி இந்தாங்க ஒரு ரூபாய்… இப்போ எனக்கு வடை தருவீங்களா?”

“கண்டிப்பா கண்ணு… கொஞ்சம் பொறு.. இந்தா சூடா போட்ட வடையை தர்றேன்..” என்று கூறிய பாட்டி, குட்டி காகத்திடம் இரண்டு வடையை காகத்தில் வைத்து மடித்து கொடுத்தார்.

“காகித்தைப் பிரித்து பார்த்ததும், பாட்டி… என்ன இரண்டு வடை இருக்கு?”

“ஆமாம் கண்ணு… இங்க வர்ற சில காகங்க எல்லாம், வடைக்கு காசு கேட்டதும், இல்லனு சொல்லிட்டு என்னைய ஏமாத்திட்டு வடையை தூக்கிட்டு போயிருங்க. ஆனால் நீ மட்டும் தான், நான் சொன்னதும், பசியோட வீட்டுக்குப் போய் காசு எடுத்து வந்திருக்க கண்ணு. என்ன தப்பா நினைச்சுக்காத கண்ணு!
பசியோட வந்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கலைனு வேதனையாத்தான் இருந்தது. ஆனால் உன்னை மாதிரி எல்லாருக்கும் இலவசமா கொடுத்தால், நான் பிழைப்பு நடத்த முடியாதுல கண்ணு.

இரண்டு வடையும் சூடு ஆர்ற குள்ள சாப்பிடு கண்ணு…”

“ரொம்ப நன்றி பாட்டி…” என்று கூறிய குட்டி காகம், மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக பறந்து சென்றது.

“செல்லம்… ரொம்ப குஷியா இருக்கீங்க போல..”

“ஆமாம்மா… இங்க பாருங்க இரண்டு வடை…”

“ஒரு வடை ஒரு ரூபாய் தான செல்லம்?”

“ஆமாம்மா… இது நான் காசு கொடுத்து வாங்குனதால இரண்டு வடை கிடைச்சது” என்று குட்டி காகம் பாட்டி கடையில் நடந்த கதையெல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியது.

“பார்த்தியா செல்லம்… இது தான் உன் நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தன் குட்டி காகத்தை தழுவிக் கொண்டு நெற்றியில் முத்தம் கொடுத்து பெருமிதம் கொண்டது தாய் காகம்.

 

                 எழுதியவர் 

இராஜதிலகம் பாலாஜி M.Tech

ஒரு பொறியியல் முதுகலை பட்டதாரி.   சொந்த ஊர் சாயல்குடி. தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர்  எண்ணங்களை எழுத்துகளாக்கி உயிர் கொடுத்து உயிர்ப்பித்து வருகிறார் .  மாம்ஸ்ப்ரெஸ்ஸோ தமிழ், பிரதிலிபி தமிழ், சஹானா இணைய இதழ், வளரி மின்னிதழ், பிரித்தானிய தமிழ் இதழ் போன்ற தளங்களில் பெண்ணியம், தாய்மொழி, சமூக சீர்த்திருத்தம், சுயமுன்னேற்றம் குறித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தனைத் துளிகள், கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல் எழுதி வருகிறார்.  2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகவினை திறன் நூல்களில் இவரின்  புத்தகமான “சிந்தனைச் சிறகுகள்” புத்தகமும் ஒன்று.  பிரதிலிபியில் 200க்கு மேல் followers உள்ளவர்களுக்கு சூப்பர் பேன் பேட்ஜ் அடிப்படையில் எனக்கும் Award கொடுத்தார்கள். 2021 ஆண்டு ஜெர்மனியில் உள்ள பண்ணகாம் குழு நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறந்த சிறுகதையாக இவரது  கதையும் தேர்வு செய்யபட்டது. கடந்த வருடம் Books and Readers புத்தக வாசிப்பு குழுவில் 95 புத்தகங்கள் வாசித்தற்காக இரண்டாம் பரிசு பட்டியலில் 5வது இடம் .

இவர் எழுதிய நூல்

புத்தகத்தின் பெயர் :  சிந்தனைச் சிறகுகள், 2022 ஆம் ஆண்டு வெளி வந்த புத்தகம். பெங்களூர் பாவாணர் பாட்டரங்கப் புலனக் குழுவின் உலக வினைத்திறன் நூல்களில் இவரது  புத்தகமும் ஒன்று. ஒரே நாளில் திருக்குறளின் 133 அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு நூல்கள் வெளியிட்டு உலக சாதனை செய்தார்கள். இந்தப் புத்தகத்தில் தனிமனித ஒழுக்கம், நம் தலைமுறைகளைப் பேணி காக்க வேண்டிய அவசியம், அலைபேசி மற்றும் இன்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு, தாய்மொழி மற்றும் மொழி குறித்த புரிதலையும், முதுமை மற்றும் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்காமல், துணிந்து நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டுவதைக் குறித்தும், பெண்ணியம், படிப்பு, வேலை, தன்னம்பிக்கை போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல் தான் சிந்தனைச் சிறகுகள்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *