அன்று பொங்கல் பண்டிகை. காலையில் எழுந்தவுடன் தான் பார்ப்பது புதிய உலகமாகத்தெரிய மனதில் உற்சாகம் பொங்கியது வீரனுக்கு.

பொங்கல் நாளில் அணிவதற்காகச் சென்ற வாரம் உள்ளூரில் துணிக்கடையில் துணி தைப்பவரிடம் அவரே விற்பனைக்கு குச்சியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணியை தேவையான அளவுக்கு கிழித்துக்கொடுத்து, அளவும் கொடுத்து விட்டு வந்தது ஞாபகம் வந்து போனது.

எடுத்துக்கொடுத்த துணி, டவுசர், சட்டையாக மாறியிருக்கும் என நம்பி மகிழ்ந்தான். அப்பா ராமசாமி ஆடு, மாடுகளை காட்டிற்குள் ஓட்டிச்சென்றார். அம்மா ராணி விரிந்த முடியை குடுமையாக முடிந்த படி ஆட்டாங்கல்லில் முறுக்கு சுட அரிசி மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள். அக்கா வீராயி அடுப்புக்கரியை வாயில் போட்டு மென்றவாறு ஆள்காட்டி விரலில் பற்களைத்தேய்த்ததால் ‘நரக், நரக்’ என சத்தம் வர, அதைக்கேட்டு தனது பற்கள் கூசியதை உணர்ந்து சற்று தூரம் தள்ளி இருந்த கொய்யா மரத்தின் கிளைகளுக்கிடையே தனக்காக வாங்கி மறைத்து வைத்திருந்த கோபால் பல்பொடியை எடுத்து பற்களில் தேய்த்து பாசம்பிடித்து மண் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரை கைகளில் அள்ளி வாய் கொப்பளித்த பின் தொட்டிக்குள் உற்றுப்பார்த்தபோது புழுக்கள் நெழிவது கண்டு “ஓய்…ஓய்…” என வாந்தி எடுப்பவன் போல் கக்கினான். வீட்டிற்குள் ஓடிச்சென்று வெங்கலச்சொம்பில் பானைத்தண்ணீரை மோந்து வாயில் ஊற்றி பலமுறை துப்பி சாந்தமானான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் பத்து வயது சிறுவன் வீரன்.

“சாமி வீரா, அக்கா வீராயி காப்பித்தண்ணி வெக்கிறதுக்குள்ள மாட்டுக்கட்டித்தாரைய சித்த கூட்டி சுத்தம் பண்ணி சாணிய வளிச்சு குப்பமேட்டுல கொட்டிப்போடு. உங்கொய்யம் வந்தா ஒன்னஞ்சாணி வளிக்காம எனத்த புடுங்கீட்டிருந்தீங்கன்னு சத்தம் போடுவாரு” என தன் மகனிடம் கெஞ்சினாள் ராணி.

“போம்மா. இன்னைக்கு பொங்கல் நோம்பி மறந்துட்டியா? இன்னைக்கு எனக்கு வேலையெல்லாம் சொல்லாதே. பள்ளிக்கொடத்துலியே லீவு. பக்கதுதோட்டத்து ரகு கூட செய்யாம் பொட்டி வெளையாடப்போகோணும். ஒன்னம்புட்டு சுடுலியா? பசிக்குது. நோம்பிக்கு கூட பழையசோறு தாங்குடிக்கோணுமா?” அடம்பிடித்து அழுதான்.

” ஏய் வீராயி, உன்ற தம்பி வீரனுக்கு ஒரு அடசலு புட்டுச்சட்டில புட்டு மாவு ஊத்தி வெச்சு வெறகு எடுத்து பத்தவச்சுடு. எல்லாமே நானே செஞ்சு தொலையோனுமா…?” கோபப்பட்ட தாயை முறைத்துப்பார்த்த படி சொன்னம் வேலையைச்செய்யத்தொடங்கினாள் வீராயி.

விறகு முறித்து அடுப்பு பற்ற வைத்த வீராயி, இட்லிச்சட்டியில் மாவு ஊற்றி வைத்து, இன்னொரு மண் அடுப்பில் தோசை சுடும் கல்லை எடுத்து வைக்க, ஈயத்தட்டை எடுத்து சாணம் போட்டு சற்று முன் மெழுகிய தரையில் உட்கார்ந்த போது போட்டிருந்த ஓட்டை டவுசர். ஈரமானதும், அருகிலிருந்த ஒரு முக்காலியை எடுத்துப்போட்டு அதன் மேல் அமர்ந்தான் வீரன்.

” புட்டுக்கு தொட்டுக்க சட்னி ஆட்டுலியா….?”

“அம்மா முறுக்கு மாவு ஆட்டுறா? இந்தா கரும்பு சக்கர போட்டுக்க”

“சக்கர வேண்டா. நேத்து களிக்கு வெச்ச பழைய பருப்பு சாறு இருக்குதா…?”

” இல்லே கொட்டிட்டேன்…”

“எங்கே…?”

“எதுக்கு….?”

“புட்டுக்கு தொட்டுக்க…”

“குப்பத்தொட்டிலியே கொட்டிப்போட்டேன் ஒன்னிப்போயி எடுக்க முடியாது….”

புட்டு எனும் இட்லி ஈய தட்டத்திலிருந்து வாசல் வழியே பறந்து மாவாட்டிக்கொண்டிருந்த தாயின் மீது விழ, எழுந்து ஓடி வந்து கோபத்தில் பிரம்பு போலிருந்த அடுப்பு விறகை எடுத்து வீரனின் முதுகில் தாய் ராணி அடிக்க, “அய்யோ, அம்மா…”எனக் காட்டிற்குள் புகுந்து ஓடியவன் மதியம் வரை வீடு திரும்பவில்லை. யாரும் தேடவும் இல்லை. மதியம் வந்தவன் பூனை போல் வீட்டிற்குள் நுழைந்து கிழிந்த அழுக்கடைந்த பாயில் போய் குப்புறப்படுத்துக்கொண்டான்.

குளிப்பதற்க்காக சட்டையை கழட்டிய போது விறகு மாரில் அடித்த தழும்பு முதுகில் சிவந்து அடுப்பில் வெந்த விறகின் கனல் போல் தெரிய, பதறிய தாய் தழும்பு மீது தேங்காய் எண்ணை வைத்து போது அழுதாள். தாயின் கண்ணீர் தழும்பில் பட்டு எரிச்சலாக “ஆ….” என அலறினான் வீரன்.

காலையில் ஆட்டிய மாவில் சுட்ட முறுக்கை எடுத்து உடைத்து மகனுக்கு ஊட்டி பாசத்தைப்பொழிந்தாள் தாய் ராணி. சூடான அரிசி சோற்றை தயிரோடு பிசைந்து தட்டில் வைக்க, முறுக்கோடு சேர்த்து வயிறார உண்டு மகிழ்தவனுக்கு புதுத்துணி ஞாபகம் வர பொத்தான்கள் உடைந்த கிழிந்த சட்டையைப் போட்டுக்கொண்டு ஊருக்குள் ஓடினான்.

துணி தைப்பவர் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ‘தனது துணியை தைத்து விட்டார்களா?’ என எட்டிப்பார்த்தான். இன்னும் வெட்டாமல் கிடந்தது தெரிந்ததும் கண்களில் கண்ணீர் பெருகியது.

“பணம் கொண்டு வந்தியா?”

“இல்ல”

“லொல்லைன்னா. துணி கெடைக்குமா? போன பொங்கலுக்கு எடுத்ததுக்கே ஒன்னங்கொடுக்கலே… போயி உங்கொம்மாள கூட்டிட்டு வா போ…”

ஓடினான். போகும் வழியில் நிறைய பேர் புது துணி போட்டுக்கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தனர். அந்தக்கோவிலில் பெண்கள் கூடி கும்மியடிப்பதும், ராட்டன் தூரி ஆடுவதும், குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிடுவதும், கருப்பு கண்ணாடி வாங்கி அணிந்து மகிழ்வதும் கண்முன் வந்து போக ‘அவர்களோடு நாமும் செல்ல முடியவில்லையே…’ எனும் கவலை கண்ணீரை கண்களில் அதிகப்படுத்தியது.

“சொல்லாம எங்க போனே…?”

“புதுத்துணி வாங்க….”

“இன்னேரத்துக்கெல்லாம் நமக்கு குடுக்க மாட்டாங்க”

“ஏ…?”

“பணங்குடுக்கறவங்களுக்குத்தான் மொதல்ல குடுப்பாங்க. கடனுக்கு வாங்கறவங்களுக்கு கடைசிலதாங்குடுப்பாங்க.”

“கடைசீலீன்னா நாளைக்கா…?”

“என்னடா எதுத்து பேசறியா…? உங்கொய்ய மட்டும் மாடோட்டீட்டு வருட்டு. கொரடவுலியே அடிக்கச்சொல்லறம் பாரு….? புதுத்துணி போடுலீன்னா ராசாவுக்கு பொங்கல் போகாதா…? மாடு கன்னுக்கு அந்து போன கவுத்துக்கு பதுலா புதுக்கவுறு வாங்கவே காசில்ல. பத்து மூட்ட ராயி வெளைய வேண்டிய காட்ல ஒரு மூட்ட தான் ஆயிருக்குது. ராயி கஞ்சி அர வயித்துக்குதா இந்த வருசங்குடிக்கோணும் போல இருக்குது. எனக்கு இருக்கற ஒரு சேலய ஒரு பக்கந்தப்பி காயப்போட்டு ஒன்னொரு பக்கத்த இடுப்புல கட்டியிருக்கறம்பாரு. இப்ப வந்து துணிக்கடைக்கு வான்னா எப்படி வாரது? நீயே போயி நாஞ்சொன்னான்னு சொல்லிக்கேட்டுப்பாரு.” என கூறிய தாயின் பேச்சால் மனம் சோர்வுற்று மீண்டும் துணிக்கடைக்குச்சென்ற போது துணிக்கடை மூடப்பட்டிருந்தது.

வெளியில் ஒருவரிடம் கடை முதலாளி பேசிக்கொண்டிருந்தார். “பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால ஊரே வந்து துணி எடுத்துக்குடுத்தா எப்படி தெச்சுக்கொடுக்க முடியும்? அதுல பாதிப்பேரு பணமே ஒரு வருசமானாலும் கொடுக்கறதில்ல. டெய்லரும் பொங்கலுக்கு மாமியா ஊட்டுக்கு போகோணும்னு கெளம்பி போயிட்டாரு. அது தான் கடைய சாத்திட்டேன்” என பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வீரன் கதறி அழுதவாறு வீட்டிற்கு ஓடியவன் வீட்டின் முன் உள்ள மண் வாசலியே கீழே படுத்து அழுது புரண்டான். பெற்றோர் கெஞ்சியும், என்ன சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை. பின் மன சோர்வில் அன்று இரவ சாப்பிடாமலேயே உறங்கிப்போனான்.

சிறுவன் வீரன் இன்று பெரிய தொழிலதிபராக உயர்ந்து, அறுபது வயதில் தனது ஊரில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு பொங்கல் பண்டிகை நாளில் அணிவதற்காக ஒரு மாதம் முன் கூட்டியே ரெடிமேட் ஆடைகளை இலவசமாக வழங்கி மகிழ்ந்தார்!

அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *