தேவராஜ் எனும் சிறுவனுக்கு தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது.
அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம்.
தன்னை சரிவர புரிந்து கொள்ளாத குடும்பம், தோசைக்கரண்டியால் அடிக்கும் தந்தை,  இவர் தனது மூத்த மகனுக்கு மட்டும் பால்கோவா வாங்கி வருவார். காது கேட்க வேண்டி கோவில் கோவிலாக அலையும் அன்னை, உன் துணிகளை எல்லாம் இனி நீயே துவைத்துக் கொள் என பாகுபாடு காட்டும் அக்கா என தேவராஜின் வாழ்க்கை.
நன் சமுதாயத்தில் சிறப்புக் குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளும் படும் அவமானங்கள் சொல்லில் வடிக்க இயலாதவை.
தேவராஜின் தந்தை, ஒருவேளை லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் புத்தகத்தை படித்திருந்தாலாவது அறிவு வந்திருக்கும்.
சிறப்புகுழந்தைகள் அவர்களுக்கென அழகான உலகத்தை தனக்குள் வைத்திருக்கிறார்கள். நமக்குதான் பொறுமை இல்லை. அதனாலேயே அவர்கள் உலகத்துக்குள் நுழைய முடியவில்லை.
உதாரணமாக, சர்க்கஸில் வித்தை காட்டும் அத்தனை மிருங்கங்களையும் பார்த்து மற்ற குழந்தைகள் சிரிக்க, தேவராஜுக்கு மட்டும் கோபம் வருகிறது. ஏன் இந்த புலியும் யானையும் தன் கம்பீரத்தை இழந்து உணவுக்காகவும் பிரம்படிக்காகவும் வளைந்து கொடுக்க வேண்டும் என வருத்தபடுகிறான்.  அவன் ரோட்டோரம் மூத்திரம் பெய்வதில்லை.
 செவிட்டு முண்டமே என திட்டி பள்ளிப் படிப்பைக் கெடுத்த ரசாக் வாத்தியார்,
அதன்பின் காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மாற்றம். அங்கும் கடைசி பெஞ்சில். படிப்புக்கு தலைமுழுக்கு.
நிமித்தம் (தேசாந்திரி) | Buy Tamil & English ...
ஒரு நாள் கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் பொழுது லத்தியால் அடிக்கும் போலிஸ்.இலங்கை அகதி பெண்ணிற்கு உதவி செய்ய முதலாளியை வேண்டியதால், சம்பள பணத்தை முகத்துக்கு நேரே வீசியெறிந்து வேலையை விட்டு துரத்தும் முதலாளி.
முதல் காதல் பூத்து,  ஜோஸ்லினோடு திரைப்படம் பார்த்து வெளியே வரும் போது, திடீரெனஅவன் அப்பா வந்து,  காதலியை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு, அவனையும் எல்லோர் முன் செருப்பால் அடிக்கிறார். என்ன ஜென்மம் இவர்.
சிறப்பு குழந்தையென்றாலோ மாற்றுத் திறனாளி என்றாலோ அவர்களுக்கு காதல் வர கூடாதா?
காமம் மறுக்கப்பட வேண்டுமா? (பேரன்பு படம் நியாபகத்திற்கு வருகிறது)
அவமானப்பட்டதால் கர்நாடகாவுக்கு ஓடிப் போகிறான். சோப்பு கம்பெனியில் வேலை செய்து, கெமிக்கல் பாதிப்பினால் மிகவும் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி வீடு திரும்பியவனை மறுபடியும் வாழ்க்கை பந்தாடுகிறது.
தேவராஜுக்கு இனிமையானவர்கள்
இத்தனை கசப்புகளுக்கிடையே அவனுக்கு கிடைத்த வரம் அவனது நண்பன் ராமசுப்பு. அவனிடம் மட்டுமே சிரித்து பேசுகிறான் தேவராஜ். அவனுக்கு எல்லாமும் ஆகிறான்.
அவன் கேட்ட இனிமையான குரலென்றால் அது அங்கையற்கண்ணி டீச்சருடையது தான். ஓவியம் வரையும் சுதர்சனம் வாத்தியாரின் மனைவியார் இவர். புத்தகம் படிப்பதை சிறுவயதிலேயே தேவுக்கு(அவள் அப்படித்தான் செல்லமாக அழைப்பாள்) சொல்லிக் கொடுத்தவள். இனியவள். செருப்பு போட சொல்லிக் கொடுத்ததோடு வாங்கியும் கொடுத்தவள்.
சுதர்சனம் வாத்தியாரின் தயவால் மாற்று திறனாளிகளுக்கான, அரசின் உதவியோடு பயில தூத்துகுடியில் பிரிண்டிங் பிரஸ் தொழிலை கற்றுக்கொள்ள செல்கிறான். அங்கு இவனை போலவே, ஆனால் இவன் போல் தாழ்வுணர்ச்சி இல்லாது சுதந்திரமாக, இருக்கும் ஜோசப்.
வண்டிப்பேட்டை தாத்தா, காந்தி மெஸ் ராஜாமணி, (கதைக்குள் கதையாக).
கறுப்பும் வெள்ளையுமாக தேவராஜின் வாழ்க்கை பக்கங்கள்.
மீதியை நாவலில் படித்து அனுபவியுங்கள்.
எஸ்.ரா அவர்கள் தனது சிறுவயதில் பள்ளியில் படித்த காது கேளாத தனது நண்பன், அழுக்கான கிழிந்த காவி உடையில் கோவிலில் பிச்சை எடுத்ததை பார்த்த பின் அதன் தாக்கத்தில் அவர்கள் உலகத்தை அவர்கள் வலியை நிமித்தம் மூலமாக தருகிறார்.
யதார்த்தமும் கொஞ்சம் மாயையும்
(அவன் கனவு) கலந்து திரு.எஸ்.ரா அவர்கள் வழக்கம் போலவே ஒரு அருமையான நாவலை நமக்கு பரிசளித்திருக்கிறார்.
நிமித்தம் - எஸ். ராமகிருஷ்ணன், Buy tamil ...
புத்தகம்: நிமித்தம்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்
-தமிழ்மதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *