nool aarimugam: uyirththen- r.ramanan நூல் அறிமுகம்: உயிர்த் தேன் - இரா இரமணன்nool aarimugam: uyirththen- r.ramanan நூல் அறிமுகம்: உயிர்த் தேன் - இரா இரமணன்

உயிர்த் தேன் -தி.ஜானகிராமன் -காலச்சுவடு பதிப்பகம்

1967இல் வெளியிடப்பட்ட புதினம். கதை மயிலாடுதுறை அருகிலிலுள்ள ஆறுகட்டி எனும் கிராமத்தில் நடைபெறுகிறது. பட்டிணத்தில் 10 இலட்சம் வரை வியாபாரத்தில் சம்பாதித்த பூவராகன் என்பவர் அந்த வாழ்க்கையில்  விரக்தியுற்று தன்  சொந்த ஊருக்கே திரும்பி வருகிறார். அவருடைய மாமன் மகன் நரசிம்மன் அவர் விருப்பப்படி அவருக்காக வீடு நிலம் வாங்கி  வைத்திருக்கிறார். முதல் நாளே கிராமத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இல்லை என்பது தெரிகிறது. அவருடைய தந்தை மிகவும் விரும்பிய கோவில் இடிந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கிராமத்திற்கென்று பொதுவாக உள்ள குளம்,வாய்க்கால்,நிலம் ஆகியவை பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. இதையெல்லாம் சீர் செய்ய பூவராகன் முனைகிறார். ஆனால் கிராம முக்கியஸ்தர்கள் ஒத்துழைக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பூவராகவன் வாங்கிய வீட்டை அதற்கு முன் நிர்வாகம் செய்து கொண்டிருந்த பழனிவேலு என்பவர் தன்னை முறையாக அழைக்கவில்லை என்று கிரகப்பிரவேசம் அன்று கூச்சலிட்டு கலாட்டா செய்கிறார். இருந்தாலும் பூவராகவன் கோயில் திருப்பணியை தனியாகவே தொடங்குகிறார். அவருடைய நண்பன் ஆமருவி என்பவரை அழைத்து கோபுர பொம்மைகளை சீர் செய்ய வைக்கிறார். ஊர் ஒத்துழைப்பு இல்லாமல் கும்பாபிசேகம் எப்படி செய்வது என்று குழம்புகிறார். அவரிடம் வேலை செய்யும் கணக்குப் பிள்ளை கணேசனின் மனைவி செங்கம்மா முதலில் ஊர் பொது நிலத்தையும் குளத்தையும் சரி செய்யலாம்;பிறகு கோவிலை கவனிக்கலாம் என்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பூவராகவன், ஊர் பொது நிலத்தை மட்டுமல்ல எல்லோர் நிலத்திலும் நவீன விவசாயம் செய்ய உதவுகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊர் அவர் பக்கம் நிற்க தொடங்குகிறது. ஊர் பொதுவின் தலைவராக இருக்கும் பழனிவேலு பொது பணத்தையும் கணக்கையும் ஒப்படைக்க மறுக்கிறார். ஒரு சிலர் பழனிவேலுவை அடித்து மிரட்டி பொது பணத்தை பெற முயற்சிக்கிறார்கள். கோவிலில் உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்களை கைப்பற்றவே பூவராகவன் கோவில் திருப்பணி செய்வதாகவும் கும்பாபிஷேகம் செய்ய அனுமதிக்க கூடாது என்று போலீசில் புகார் அளிக்கிறார். இதனால் கோபமடைந்த ஊர் முக்கியஸ்தர்கள் பூவராகவனையே ஊர் பொதுவிற்கு தலைவராக இருக்குமாறு கூறுகிறார்கள்.. ஊர் செழிப்பானதற்கு தான் காரணமல்ல என்றும் செங்கம்மாவின் ஆலோசனைதான் அதற்கு காரணம் எனவே அவர்களையே தலைவராக போடுமாறு பூவராகவன் கூறுகிறார்.ஏற்கனவே செங்கம்மாவைப் பற்றி எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

செங்கம்மாவிற்கு தயக்கமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். எப்படியாவது பழனிவேலுவையும் இணைத்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறாள். அவள் கணேச பிள்ளையுடன் திருமணமாகி வந்த நாள் முதல் அவள் மேல்  பழனிவேலு ஆசை கொண்டவன் என்பதை செங்கம்மா அறிந்திருந்தாள். இருந்தாலும் அவனை தனியாக சந்தித்து பூவராகவனின் நல்ல மனத்தை பற்றி சொல்லி தன் நிலைமையையும் விளக்கி பொது பணத்தை தர வேண்டும்;கோவில் விழாவில் அவனும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறாள். பழனிவேலு ஒரு கணம் தடுமாறி அவளை வணங்குகிறான். பின் திடீரென்று அவளை அனைத்து கண்களில் முத்தமிடுகிறான்.  பொது பணத்தையும் கணக்கையும் கொடுத்து விடுகிறான். இதனால் நிலைகுலைந்த செங்கம்மா கோயில் தொடர்பான காரியங்களில் ஈடுபடாமல் தவிர்க்கிறாள்.

நடந்தவற்றை பூவராகவனின் மனைவியிடத்தும் பூவராகவனின் சிநேகிதி அனுசூயாவிடமும் சொல்கிறாள்.அவர்கள் அவளை தேற்றுகிறார்கள். பூவராகவன் தானும் அவளிடம் தடுமாறியதையும் பின் மனம் தெளிந்து அவளை பார்க்கும்போதெல்லாம் மனம் வானம் போல் சுத்தமாகிவிடுவதையும் கூறுகிறான். இதற்குப் பிறகு செங்கம்மா கோவில் விஷயங்களில் முன்பு போல் ஈடுபடுகிறாள். பழனிவேலு பூவராகவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஊரைவிட்டு போய் விடுகிறான். கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பழனிவேலு தற்கொலை செய்துகொள்வதை அவனின் கடிதம் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

ஊர்,கோவில்,விவசாயம் என மெதுவாக பழைய தமிழ் படம் போல் மெதுவாக நகரும் கதை கொஞ்சம் கொஞ்சமாக பெண்களை மய்யம் கொள்கிறது. திஜாவின் கதைகளில் அழகான பெண்கள் பொருத்தமற்றவனை திருமணம் செய்துகொண்டு துன்பப்படுவது ஒரு கருவாக வருவதை பார்க்க முடியும்.இதிலும் அது உள்ளது. ஆனால் இதில் கணவன்-மனைவி உறவு செங்கம்மா-கணேச பிள்ளை மூலமும் ஆண் பெண் உறவு அனுசூயா மூலமும் பரிசீலிக்கப்படுகிறது. கணேசபிள்ளையின் எளிமையும் களங்கமில்லாத்தன்மையும் செங்கம்மாவை உருக்குகிறது. பழனிவேலுவின் செயல் அவளுக்கு அருவருப்பை ஊட்டி அவளை முடக்கி போட்டாலும் அவள் ஆழ்மனதில் அவன் மேலும் அவன் செயல் மேலும் ஒரு பரிவு இருப்பதை பார்க்க முடிகிறது. மனிதர்களின் மனம் எத்தகைய சிக்கலான உணர்வுகளுக்கு ஆடப்படுகிறது என்பதை நுட்பமாக காட்டுகிறார். திருமணம் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை தன்னால் தனியாக வாழ முடியும் என்று கூறும் அனுசூயாவை 60களிலேயே திஜா படைத்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவேண்டாம் என்கிற அனுசூயாவின் முடிவிற்கும் ஒருவனின் மிகையான ஆசையும் இறப்பும் காரணமாக சொல்கிறார்.

பூவராகவனை எந்தவித ஆசாபாசமில்லாதவனாகவும் ஊருக்கு நன்மை செய்பவனாகவும் காட்டிக்கொண்டே வந்து கதையின் இறுதியில் அவனும் செங்கம்மாவின் மேல் ஆசைப்பட்டதும் அனுசூயாவுடன் அவனது உறவு என்னது என்பதை இலை மறை காயாகவும் சொல்கிறார். நரசிம்மனின் மனைவி ஒரே ஒரு கட்டத்தில்தான் பேசுகிறார்.ஆனால் நரசிம்மனின் மனதிலும் ஊராரின் மனதிலும் செங்கம்மாவை பற்றி என்ன நினைப்பு இருக்கிறது என்பதை உடைத்து சொல்கிறாள். செங்கம்மா, லட்சுமி, ரங்கநாயகி, அனுசூயா நான்கு பேரும் நாலு விதமான பெண்கள். சிந்திப்பவர்கள். புத்திசாலிகள். தைரியமானவர்கள். செங்கம்மா மட்டும் அவளுடைய சூழ்நிலையால்  தடுமாறவும் செய்ய வேண்டி வருகிறது. இதுதான் குடும்பத்தை மட்டும் சுமக்கும் பெண்களுக்கும் மற்ற பொறுப்புகளை ஏற்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடோ? அதைக் கூட அனுசூயா எந்த சிரமுமின்றி சமாளிப்பதாக காட்டுவது சற்று மிகையாக தெரிகிறது.  அதேபோல் நரசிம்மன், பூவராகவன், கணேச பிள்ளை மற்றும் பழனிவேலு நான்கு பெரும் நான்குவிதமான ஆண்கள். ஆசாபாசங்களுக்கு ஆட்படுபவர்கள்.எல்லோருமே மனதில் ஏற்பட்ட சபலங்களுடன் போராடுகிறார்கள். கணேசபிள்ளை எல்லாவற்றையும் மனதிலேயே போட்டு அமைதியாய் இருப்பவர்.

பழனிவேலுவின் முடிவை 80களில் வெளிவந்த  ‘சிதம்பரம்’ எனும் மலையாள திரைப்படத்துடன் ஒப்பிடலாம்.அதில் ஒரு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணை மேலதிகாரி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிடுகிறார். அவளது கணவன் தற்கொலை செய்துகொள்கிறான். குற்ற மனப்பான்மை தாங்காமல் அந்த மனிதன் குடிகாரனாகி அலைந்து திரிகிறான்.

பெண்களை பற்றிய பார்வையில் ஆண்களுக்கு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தமிழ்ச்செல்வன் போன்றோர்கள் வலியுறுத்துவது இது போன்ற புதினங்களில் சிறந்த முறையில் காட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *