nool arimugam : pengalin aadai: varalaarum arasiyalum - theni seerudayan நூல் அறிமுகம்: பெண்களின் ஆடை;வரலாறும் அரசியலும் - தேனிசீருடையான்.nool arimugam : pengalin aadai: varalaarum arasiyalum - theni seerudayan நூல் அறிமுகம்: பெண்களின் ஆடை;வரலாறும் அரசியலும் - தேனிசீருடையான்.

பெண்களின் ஆடை.
வரலாறும் அரசியலும்.
சிந்துஜா.
பாரதி புத்தகாலயம்.
பக்கம் 144. விலை 140

மனித சமுதாயம் நிர்வாண நிலையில் இருந்து ஆடை அணியும் வாழ்க்கை முறைக்கு மாறியது என்பது ஒரு பண்பாட்டுப் புரட்சி. மிருகங்களுக்கு தோலின்மேல் உள்ள ரோமக்கட்டும் தோலும் உடலுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. பனிக்கரடிகளுக்கு அதன் தோல் 13 அங்குலத் தடிமன் கொண்டது என்கின்றனர் உயிரியலாளர்கள். அதனால்தான் தூந்திரப் பிரதேசத்துப் பனிப் பொழிவின் அழுத்தத்தை அவற்றால் தாங்கிக் கொள்ள முடிகிறது. மனிதனின் தோல்தடிமன் கால் அங்குலம் மட்டுமே.

மனித வாழ்க்கை நதிக்கரையை ஒட்டியே தோன்றி வளர்ந்துள்ளது.வெயிலுக்குக் குளுமையையும் பனிக்கு வெப்பத்தையும் உடல் கேட்டபோது போர்த்திக் கொள்ள ஆடையைக் கண்டறிந்தான். ஆம்பல் ஆடை அணிந்த மனிதர்களை இனங்காட்டுகின்றன சங்க இலக்கியப் பனுவல்கள். ஆம்பல் செடியின் இலைகளை, தாவரக் கொடியின் இழைகளால் தைத்து அணிவதுதான் ஆம்பல் ஆடை. பரத்தை ஒருத்தி ஆம்பல் ஆடை அணிந்து ஊருணியில் குளித்தபடி இருப்பதை அவ்வையாரின் அகப்பாடல் ஒன்று பதிவு செய்கிறது. காலப்போக்கில், ஆம்பல் தாவரம் அரிதானபின் பருத்திப் பழங்கள் கைகொடுக்கின்றன. பருத்தி என்பது மனிதகுலப் பண்பாட்டு நோக்கில் இன்னொரு புரட்சியாகும்..

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஓலைப்பாய் அணிந்த ஏழைப் பெண்கள் கூலிவேலைக்குச் சென்றதை நான் கண்டிருக்கின்றேன். கிழிந்த ஓலைப்பாய் பெண்களின் ஆடையாய்த் திகழ்ந்திருக்கிறது. கூலி விவசாயப் பெண்கள் இரவில் படுப்பதற்குப் பயன்படுத்திய ஓலைப் பாய் பகலில் நிர்வாணத்தை மறைத்த மேலாடையாய்ப் பயன்பட்டிருந்த சூழல் ஏழ்மையின் உச்சம். சேலை வாங்க வசதியில்லாதவர்கள் அவர்கள்.

ரவிக்கை அணிவதைத் தடுத்த அதிகாரத்தின் ஆணவத்தை இந்நூல் பிரத்யேக்மாகப் பதிவு செய்திருக்கிறது. அதுவே ஏழைகளுக்குப் பொருளாதார இன்மையின் வழியாக ஓர் ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது என்றும் சொல்லலாம். ரவிக்கை வாங்கப் பணம் இல்லாத நிலையில் அது அவர்களுக்கு சௌகரியம். அதாவது ஏழ்மையின் வழியாக ஆணாதிக்கம் மேலும் வலுப்பட்டிருக்கிறது. “என் ரவிக்கை என் உரிமை” என்ற முழக்கத்தை முன் வைக்க முடியாத சூழலை வறுமை பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.

இப்படியாக உடலின் பாதுகாப்புக்கானதாய் இருந்த ஆடைப் பண்பாடு, ஆணாதிக்க அதிகாரத்துக்குள் நுழைந்து பெண்களைப் போராட்டக் களத்திற்குள் இறக்கிவிட்ட வரலாறு இந்த நூலில் பேசப்பட்டிருக்கிறது

தமிழில் இதற்குமுன் இப்படி ஒருநூல் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடை அனைத்து உடல்களுக்குமான பண்பாட்டுக் கருவி.தனிமனித ஒழுக்கத்தையும் அந்தஸ்தையும் அவனின் பொருளாதார இருப்பையும் பறைசாற்றும் அரசியல் கருவியும் கூட. தோழர் ச. தமிழ்ச்செல்வன் ஒருமுறை கூறினார். “நீங்கள் அணிந்துள்ள ஆடை உங்கள் பொருளாதார நிலையைக் காட்டிக் கொடுக்கிறது.”  பொருளாதார இருப்பும் இன்மையும் வர்க்க முரண்பாட்டைப் பிரதிபலிப்பது போல ஆடைக் கலாச்சாரம் ஆண் பெண் மற்றும் வர்க்கங்களின் முரண்பாட்டையும் கோடிட்டுக் காட்டுகின்றன.

பெண்கள் தமது ஆடைக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க நீண்ட நெடிய பாராட்டம் நடத்தியதைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் சிந்துஜா.

“ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக் கூறும் நூல் அல்ல இது; ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைமைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாகவும் இருக்கிறது.” என்று தன் முன்னுரையில் தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.

5900 ஆண்டுகளுக்குமுன் ஆர்மேனியாவில் கண்டெடுக்கப்பட்ட பெண்கள் அணியும் பாவாடையும் 3000 வருடங்களுக்கு முன் சீனாவில் கிடைத்த ஆண்களின் கால்சட்டையும்தான் அகழ்வாய்வில் கிடைத்த தொன்மையான ஆடைகள். அதற்குமுன் தாவர இலைகளால் ஆன ஆடைகளை உடுத்திய பாங்கு இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறது.

என்னை மிகவும் வியக்கவைத்த செய்தி, பெண்கள் பாக்கெட் வைத்துத் தைத்த ரவிக்கைக்காக எவ்வளவுதூரம் போராடியிருக்கிறார்கள் என்பதுதான். இன்றும் சுருக்குப் பையை இடுப்பில் செருகி சில்லரைக்காசுகளையும் பொடி டப்பாவையும் போட்டு வைத்துக் கொள்ளும் மூதாட்டிகளைப் பார்க்க முடியும். பெண் போலிஸ் நியமனம் ஆன பிறகு பாக்கெட் வைத்த சட்டை அணிவது நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கும் முன்பாகவே போராடியிருக்கிறார்கள்  என்பது ஓர் அரிய செய்தி. இன்னும் அந்தப் போராட்டத்தின் வீச்சு முழு வெற்றிபெறவில்லை. ரவிக்கையில் யார் சேப்பு வைத்துத் தைக்கிறார்கள். அறிதிறன் அலைபேசி வைத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேறியிருக்கும் பெண்கள் பாக்கெட் வைத்த ரவிக்கை அணிய முடியவில்லை. மொபைலை ரவிக்கையின் உள்புறமாக நெஞ்சுக்கூட்டில் வைத்துக் கொள்கிறார்கள்.

பெண்கள் ஆடை உடுத்துவதற்காக ஆடைகளைந்து போராடும் வரலாறும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மக்களின் நிர்வாணப் போராட்டம் முக்கியமானது. “மணிப்பூரில் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்ற இந்திய ராணுவம், அவரை வல்லுறவு செய்து கொன்று வீசியது. இதற்கு எதிரான போராட்டம் மணிப்பூர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.” என்கிறது நூல். அதற்கு எதிரான போராட்டத்தில் 12 பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் நடத்தினர். ”உங்களிடம் ஆயுதம் இருக்கிறது; எங்களிடம் உடல் இருக்கிறது; நாங்கள் மனோரமாவின் தாய்மார்கள்” என்ற அந்த நிர்வாண முழக்கம் மலைமுகடு வரை சென்று எதிரொலித்தது. (இன்று 2023 மேமாதம் முதல் மணிப்பூரில் நடக்கும் இன அழிப்புக் கலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அன்று பெண்களே நிர்வாணமாகிப் போராடினார்கள். இன்று நிர்வாணப் படுத்திக் கலவரம் செய்கிறது ஆணாதிக்கமும் ராணுவமும்.)

பெண்கள் ஆடைகளுக்காகப் போராடினார்கள் என்றால் அதே ஆடையை வைத்து அவர்களை அடக்கியது அதிகாரவர்க்கம். இப்படியான விநோதமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட இந்த நூல் தமிழில் வெளிவந்துள்ள வித்தியாசமான வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பிரதி. எதிர்கால ஆய்வாளர்கள் இதை அடியுரமாகக் கொண்டு மேலும் செழுமைப் படுத்துவதற்கான கையேடாக இது பயன்படும். ஒவ்வோர் இல்லத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான நூல். தோழர் சிந்துஜாவின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *