nool arimugam : "The greatest show on earth" - era.esudoss நூல் அறிமுகம்: "The greatest show on earth" - இரா.இயேசுதாஸ்nool arimugam : "The greatest show on earth" - era.esudoss நூல் அறிமுகம்: "The greatest show on earth" - இரா.இயேசுதாஸ்

பரிணாமத்தை ஆதரிக்கும் சான்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன- வலுவாக உள்ளன. இருப்பினும் சரியான புரிதல் இல்லாமல் அதை எதிர்ப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பரிணாமம் என்பது வெறும் கோட்பாடு அல்ல; அறிவியலால் மறுக்க முடியாத உண்மை. பரிணாமம் ஏன் உண்மை என்று இந்த நூல் விளக்குகிறது .சார்லஸ் டார்வினின் 200 வது பிறந்த ஆண்டில்(2009)அவரது On the origin of the species நூலின் 150ம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்படுகிறது என்கிறார் ஆசிரியர்.

பரிணாமத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்ல நிதி வளமுள்ளவர்களாலும் ,நல்ல கட்டமைப்புகள் உள்ளவர்களாலும் ,அரசின் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் அச்சுறுத்தப்படுகிறார்கள். திருச்சபை பிஷப்கள் மற்றும் சக்தி வாய்ந்த நாட்டின் தலைவர்களின் ஆதரவு இந்த அச்சுறுத்துவோருக்கு உள்ளது. மாணவர்களின் பெற்றோர் மூலம் பரிணாமம் பாடம் நடத்துவோருக்கு அச்சுறுத்தல் வருகிறது .இது அமெரிக்கா, இங்கிலாந்து ,ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. வகுப்புகளில் இஸ்லாமியர்களின் இருப்பும் அதிகரித்து வருகிறது .

பரிணாமம் பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் பயந்து கொண்டே கற்பிக்கின்ற நிலை தற்போது அதிகரித்து வருகிறது.
2004 இல் பரிணாமம் என்பது உண்மை என்றும் அது கடவுளின் மிகப்பெரிய படைப்பு என்றும் சில விஞ்ஞானிகள் கட்டுரை எழுதினர்.கேட்ஸ்ஹேட்டில் உள்ள இம்மானுவேல் சிட்டி டெக்னாலஜி கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு பின் அறிவியல் பாடத் திட்டம் பற்றி பிரதமருக்கு விஞ்ஞானிகளும் பிஷப்புகளும் ஒரு கடிதம் எழுதினர் .அதில் “அறிவியலுக்கும்,மதம் சார்ந்த திட்டங்களுக்கும் அது அதற்குரிய முக்கியத்துவம் தனித்தனியே தரப்பட வேண்டும். விசுவாசத்துடன் அறிவியலை குழப்பக் கூடாது “என்று வலியுறுத்தப்பட்டது.

பிரபஞ்சத்தையும் அதன் சட்டங்களையும் உருவாக்குவதில் கடவுளும் ஒரு பங்கு வைத்தார் என்று அவர்கள் நம்பினர். அதே நேரத்தில் பரிணாமம் என்பது உண்மை என்பதை பகுத்தறிவு பூர்வமாக ஏற்க வேண்டும் என்றும் கூறினர்.
ஆயர்கள் மற்றும் படித்த குருமார்கள் பரிணாமக் கொள்கையை ஏற்றனர். ஆனால் அவர்களது சபையினர் ஏற்கவில்லை. கருத்துக் கணிப்பின்படி பலரும் பரிணாமத்தை ஏற்கவில்லை.
அமெரிக்காவில் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் மனிதனை கடவுள் உருவாக்கவில்லை என்றும் பரிணாம வளர்ச்சியின் மூலமே விலங்குகளும் மனிதர்களும் உருவாயினர்என்றும் 40 விழுக்காட்டினர் நம்புகின்றனர். பிரிட்டனில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும்.
பரிணாமக் கொள்கையை ஏற்கும் பிஷப்புகளும் மதகுருமார்களும் அதைப் பற்றி தீவிரமாக பேசுவதில்லை .ஆதாம் ஏவாள் இல்லை என்று உணர்ந்தாலும் அவர்களைப் பற்றி இன்றும் பேசுகிறார்கள். வேதத்தில் எந்த பகுதியை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. எதை உருவகமாக கருத வேண்டும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. பிஷப்புகளின் குழப்பத்தையே அறிவியல் ஆசிரியர்களும் நம்புகிறார்கள்.
பரிணாமக் கோட்பாடு என்பது உண்மை .நேரில் கண்ட காட்சி சாட்சியை விட, டிஎன்ஏ சோதனை நம்பகமானது .

நம் சொந்தக் கண்ணால் பார்க்க முடியாததை பகுத்தறிவு மூலமே கற்றுக்கொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சி என்பது நீண்ட காலத்திற்கு முன்பில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நம் வாழ்நாளில் பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் மெதுவாக நடக்க கூடியது .ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் பிரிந்து போனதை அறிவியல் அனுமான சக்தி மூலமே நாம் கண்டறிய முடியும். குற்றம் நடந்த பின் அதை விசாரிக்கும் துப்பறியும் நபர்களாகவே நாம் இருக்கிறோம் .ஆனால் டி என் ஏ, கைரேகை, கால் தடம், நாட்குறிப்பு ,எலும்புக்கூடுகள்,அகழாய்வு இவையெல்லாம் வரலாற்றின் ஆதாரமாக உள்ளன. இயற்கை தேர்வு( survival of the fittest) பற்றி டார்வின் தனது வாழ்நாளில் போதுமான ஆதாரங்கள் திரட்டவில்லை. பெரும்பாலும் கருதுகோள்களையே முன் வைத்தார். எளிய பரிணாம கருத்தை ஏற்க ஏன் இவ்வளவு கஷ்டம்? நீண்ட கால புவியியல் மாற்றம் ..மத நம்பிக்கை.. உயிரினங்களின் சிக்கலான தன்மை மற்றும் பிளாட்டோவின் அத்தியாவசியவாதம் (essentialism) ஆகியவை இதற்கு காரணம்.

டார்வினிலிருந்து சுயாதீனமாக பரிணாம வளர்ச்சியை கண்டறிந்த ஆல்பர்ட் ரசல் வாலஸ் தனது கட்டுரையை அசல் வகையிலிருந்து கால வரையறை இன்றி விலகும் வகைகளின் போக்கு என்று அழைத்தார். பிளாட்டோவின் அத்தியாவசிய வாதம் முயல் காலம் தோறும் முயலாகவே இருந்தது என்றும் ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது என்றும் கூறுகிறது. மேயரின் மக்கள் தொகை சிந்தனை(population thinking) முயல் காலப்போக்கில் மாறும் என்கிறது .ஒரு முயலலுக்கும்ஒரு சிறுத்தைக்கும் இடையில் இடைவெளி இனங்கள் நிறைய இருக்கின்றன என்கிறது. மரம்.. விலங்கு.. மனிதன் இவைகள் கலந்தன.. ஒரு குழந்தை வளர்வதை நம்மால் பார்க்க முடியுமா?

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு மூதாதையர் இருப்பர். இப்படி பின்னோக்கி.. பின்னோக்கி.. பின்னோக்கி சென்று கொண்டிருந்தால் இரண்டு தனித்தனி விலங்குகளுக்கு இடையே உள்ள தொடர்பை சிந்தனை பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம் .நவீன இனங்கள் மற்ற நவீன இனங்களாக மாறாது. சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் ஒரு பொதுவான மூதாதையர் உண்டு. சங்கிலியில் உள்ள ஒவ்வொரு விலங்கும் அதன் முன்னும் பின்னும் உள்ள விலங்குகளுக்கு மிகவும் ஒத்திருக்கும் .மாறாத சாரத்தைக் கொண்ட விஷயங்களைப் பற்றிய பலமான நம்பிக்கை உள்ளது .எனவே பரிணாமத்தை ஏற்க மறுக்கிறோம். இனங்கள் மாறாதவை என்று நம்புகிறோம் .

தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க நுட்பங்கள் மூலம் பல புதிய புதிய உயிர்கள் காய்கறிகள் உருவாவதை நாம் பார்க்கிறோம். காட்டு முட்டைகோசிலிருந்து காலிஃப்ளவர், ப்ராக்கோலி ,பிரஸ்சல்ஸ், காலே போன்ற காய்கறிகள் தோன்றின.ஓநாய்களிலிருந்து பல வகை நாய்கள் உருவாயின. வீட்டு வளர்ப்பின் மூலம் இது சாத்தியமானது. இங்கிலாந்தில் உள்ள கென்னஸ் கிளப் 200 வகையான அங்கீகரிக்கப்பட்ட நாய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .முன்பு பல்வேறு காட்டு நாய்கள் வழி ஓநாய், நரி ,வீட்டு நாய் வந்தது என கூறினர்; ஆனால் நாம் ஓநாய்களிலிருந்து தான் நாய்கள் வந்தது என்பதை இப்போது அறிவோம்.

வளர்ப்பவர்கள் அது தாவரமானாலும் விலங்குகள் ஆனாலும் எந்த விதமான பண்பை விரும்புகிறார்களோ அந்த வகையில் வளர்க்கிறார்கள் என்பதை நாம் அறிவோம் உயிர் வாழ்வதற்கு மிகவும் பயனுள்ள பண்புகளையும் இயற்கை தெரிவு செய்கிறது அதேபோலவே வளர்ப்போரும் சிறந்த பண்புகளை தெரிவு செய்கிறார்கள் வடிவத்தையும் நடத்தையையும் மாற்றுகிறார்கள்., மரபணு மாற்ற முறையில்! டார்வினுக்கு மரபணு பற்றி தெரியாது. ஆனால் குழந்தைகள் பெற்றோர்களை ஒத்து இருப்பதை கண்டார். மெண்டலின் விதிகள் பற்றியும் அவரது கவனத்திற்கு வரவில்லை.

நீங்கள் ஒரு குழந்தையை உருவாக்கும் போது உங்கள் முட்டை அல்லது விந்தணுக்களில் ஒன்று உங்கள் அப்பாவின் மரபணு அல்லது உங்கள் அம்மாவின் பதிப்பை கொண்டிருக்கும். இரண்டிற் கலவையும்அல்ல. அந்த மரபணு உங்கள் நான்கு தாத்தா பாட்டிகளில் ஒருவரிடம் இருந்தும் உங்கள் எட்டு பெரிய தாத்தாக்களில் ஒருவரிடம் இருந்தும் மட்டுமே வந்தது .

ஒரு ஆணும் பெண்ணும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாலும் ஒரே நேரத்தில் ஆண் பெண் உறுப்புகளை அது கொண்டு இருக்காது. பரம்பரை பண்புகளும் அப்படித்தான் .இது ஒன்று அல்லது மற்றொன்றாக இருக்கும். இரண்டும் கலந்ததல்ல. டார்வின் இதை கிட்டத்தட்ட கண்டுபிடித்தார். ஆனால் சரியாக தொடர்பு படுத்த முடியவில்லை.

பரம்பரை கலப்பதில்லை.. தெரிவு செய்யப்படுகிறது .உயிரினங்களின் மக்கள் தொகையில் ஏன் மாறுபாடு நீங்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். மரபணுக்குளம் ஒரு இனத்தின் மக்கள் தொகையில் உள்ள அனைத்து மரபணுக்களின் மொத்த தொகுப்பாகும். மரபணுக்கள் மாற்றப்பட்டு தலைமுறைக்கு தலைமுறை கடத்தப்படுகிறது. மரபணுக்கள் ஒன்றிணைவதற்கான போக்கு இல்லை. ஒவ்வொரு தலைமுறையும் முந்திய தலைமுறையை விட குறைவாக மாறாது; மாறாக மரபணுக்கள் தனித்தனியாகவே இருக்கின்றன. நன்கு அசைக்கப்பட்ட பேக்கில் உள்ள அட்டைகள் போல கலக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்கள் தொகையும் ஒரே மரபணு குழுவாக உள்ளது.

பல நூற்றாண்டுகளாகவே விலங்கு வளர்ப்பவர்களும், தாவர வளர்ப்பாளர்களும் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறார்கள். இயற்கையும் இப்படித்தான் .ஆனால் மனிதன் போல இயற்கை புத்திசாலியாக செய்வதில்லை. ஐசோ மெட்ரிக் வளர்ச்சி என்பது ஒரு விலங்கு அதன் அனைத்து உடல் பாகங்களிலும் ஒரே விகிதத்தில் வளர்வதாகும் .ஆனால் அலோ மெட்ரிக் வளர்ச்சி என்பது வெவ்வேறு உடல் பாகங்கள் வெவ்வேறு அளவில் வளர்வதாகும். இதன் மூலம் தனித்துவ உருவம் வாய்க்கிறது. நாய்கள் பல்வேறு வடிவங்களில் இருப்பதை காணலாம். பல மில்லியன் ஆண்டுகள் இயற்கை நடத்தும் பரிணாம வளர்ச்சியை மனிதன் சில பத்தாண்டுகளில் வளர்ப்புகள் மூலம் ஏற்படுத்துகின்றான்.

அதிக தசை உள்ள மாடு ..பன்றி ..கோழிகளுக்காக வேண்டி மரபணு மாற்றம் செய்கிறான். தசை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் myostatin என்ற மரபணுவை மாற்றுவதன் மூலம் பெரிய தசை உள்ள உருவத்தை உருவாக்க முடியும். மனித உடலிலும் இது சாத்தியம்தான். இது தார்மீக ரீதியில்.. அரசியல் ரீதியாக விரும்பத் தகாதது என்றாலும் இது சாத்தியம் என்பதை நாம் அறிய வேண்டும். அதிகப்படியாக பால் கறக்கும் மாடுகளை உருவாக்குவது போலவே பால் மனிதர்களும் சாத்தியமே. எனவே தெரிவு செய்த இனப்பெருக்கம் சாத்தியமாகி இருக்கிறது. கணினி விளையாட்டு மூலம் (Game)இது எப்படி என்று உருவகப்படுத்தி காண முடியும் .பிறழ்வுகளும் நிகழும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்தமான வடிவத்தில் பெற்றோரை கூட தெரிவு செய்ய முடியும் .சற்று வித்தியாசத்துடன் எட்டு புதிய வடிவங்களை உருவாக்க முடியும். உயிரினம் கிளைகளுடன் மரம் போல வளரும் முறையை பின்பற்றுகிறது.

காட்டு ரோஜா.. நம்ம வீட்டு ரோஜாவாக மாற மனிதனின் செயல்பாடுகளே காரணம். அதற்கு முன் மலர்களுக்கு வண்ணம்.. வடிவம்.. வாசனை தருவதில் பூச்சிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. ஒருவரை ஒருவர் ஈர்த்து ஒத்துழைக்க இரண்டுமே வடிவ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகள் பூக்களை தேடி வர.. பூச்சிகளுக்கு பரிசாக தேனை தருகின்றன பூக்கள். அதே நேரத்தில் அதிக அளவு தேனை கொடுத்து விட்டால் பூக்கள் அடுத்த பூவுக்கு தாவாமல் போதையில் மயங்கி விடும் என்பதற்காக அளவோடு தேனை சுரந்தன பூக்கள் .ஒவ்வொரு பூவின் உள்ள தேனின் ஆழத்திற்கு ஏற்ப பூச்சிகளின் அலகுகளும் வடிவம் பெற்றன.

பெண் பறவைகள் தன் இனப்பெருக்கத்துக்காக தேர்ந்தெடுக்கும் செயலில் ஈடுபட்டன. அதற்காக அதை கவர்வதற்காக ஆண் பறவைகள் பல்வேறு ஜோடனையான உறுப்புகளை படைத்துக் கொண்டன போலும் ஆண் மயில்களின் தோகை.. சேவல் கோழி கொண்டை…கிறங்க வைக்கும் பாடல் என்று பல உதாரணங்களை கூறலாம்.

ஆபத்தான பயமுறுத்தும் ஒன்றே நாம் தவிர்த்து விடுவோம். அதனால் அது உயிர் பிழைத்து விடும் உதாரணம் சாமுராய் நண்டு..கம்பளிப்பூச்சி.
. சிறிய இரைமீன்கள் தங்கள் வாழ்வையும் மரணத்தையும் தேடிச் செல்கின்றன. கவர்ச்சிகரமான ரோஜா பறிபடுவது போல ஆங்கூர் மீன்கள் தன்னுடைய கவர்ச்சியான தூண்டில் மூலம் சிறிய மீன்களைக் கவர்ந்து இழுக்கின்றன.

காட்டில் இருந்த ஓநாய் திடீரென வீட்டுநாயாக மாறிவிடவில்லை .முதலில் கிராமத்துக்கு அருகில் குறைந்த தூரம் மனிதர்களை விட்டு ஓடும் மிருகமாக மாறியது. மனிதர்களை விட்டு வெகு தூரம் ஓடினால் உணவு கிடைக்காமல்அவை ஓநாய்களாகவே தொடர்ந்தன .மனிதர்களுடன் கலந்து அவர்களை எதிர்கொண்ட ஓநாய்கள் படிப்படியாக வீட்டு நாய்களாக மாறின.

ரஷ்யாவில் பெல்யாவ் என்பவர் வெள்ளி ரோம நரிகளை மனிதர்களை அண்டி வாழும் வகையில் பல தலைமுறைகள் தொடர்ந்து வளர்த்தார். அவற்றின் மரபணுக்கள் மாறி ஒரு கட்டத்தில் நாய்களைப் போன்றே அவைகள் நடந்து கொள்ள ஆரம்பித்தன.
ஆர்கிட் மலர்களுக்கும் யூக்ளோசின் தேனீக்களுக்கும் இடையிலான உறவு சிக்கல் ஆனது. மகரந்த சேர்க்கைக்கு உதவ மல்லிகைகளுக்கு தேனீக்கள் தேவை. மற்றும் தேனீக்கள் மற்ற இடங்களில் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வாசனைகளை பயன்படுத்தி பெண் தேனீக்களை ஈர்க்க ஆர்க்கிடிட்டுகள் தேவை.

வாழ்க்கையின் முழு வரலாற்றையும் நாம் பார்க்கும் போது அது பல மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது .உதாரணமாக நமது கிரகத்தின் வயது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் அதாவது சுமார் 46 மில்லியன் நூற்றாண்டுகள். அனைத்து பாலூட்டிகளின் பொதுவான மூதாதையர் பூமியில் நடக்க சுமார் 2 மில்லியன் நூற்றாண்டுகள் எடுத்தனர். மேலும் மீன் மூதாதையர்கள் தண்ணீரிலிருந்து நிலத்தில் ஊர்ந்துசென்றதிலிருந்து சுமார் 3.5 மில்லியன் நூற்றாண்டுகள் ஆனது. இன்று நாம் காணும் பல்வேறு நாய் இனங்களை உருவாக்க எடுத்ததை விட இது சுமார் 20,000 மடங்கு அதிகம். 20 ஆயிரம் முறை பின்னோக்கிச் சென்றால் ஒரு மீனை மனிதனாக மாற்றுவதற்கு தேவையான மாற்றங்களை பரிணாமம் ஏற்படுத்த கூடும் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆண்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதும்.. பெண்கள் ஆபத்து குறைவான வேலைகளில் ஈடுபடுவதும் …மரபு ரீதியாக ஏற்பட்ட பழக்கத்தினால் தான்.
பரிணாமத்தை யாராவது நம்பவில்லை என்றால் அவர்களுக்கு உயிரியல் புரியவில்லை என்று பொருள் .உலகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவானது என்று கருதுவோர் முற்றிலும் தவறான மனநிலை கொண்டுள்ளோராவர். பாறைகளின் வயதை கதிரியக்க கடிகாரங்கள் மூலம் அறிவியல் ரீதியாக கணக்கிட முடியும் .இந்த கிரகத்தின் வயது மில்லியன் கணக்கான ஆண்டுகள் என்பதை அறிவியல் நிரூபிக்கிறது.

கார்பன் டேட்டிங் இயற்கை கடிகாரங்கள் மூலமாக பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையை நம்மால் கண்டுபிடிக்க முடியும். மரம் வெட்டப்பட்ட ஆண்டிலிருந்து பின்னோக்கிச் சென்று மர வளையங்கள் மூலம் மரத்தின் வயதை கணக்கிட முடியும் .அதேபோல எந்த ஆண்டில் அதிக வளம் இருந்தது.. எந்த ஆண்டு மோசமாக இருந்தது என்பதை அந்த வளையத்தின் தடிமன் மற்றும் மெலிமையை வைத்து நாம் கணக்கிட முடியும். அதேபோல பவளப்பாறைகளின் வயதையும் அவற்றின் வளையங்களை வைத்து கணக்கிட முடியும். கார்பன் டேட்டிங் மூலம் 50000-60000 ஆண்டுகள் வரையான பழமையை கண்டுபிடிக்க முடியும்.

கார்பன் 15.. பொட்டாசியம் 40.. ருபீடியம் 87. ஃபெரர்மியம்.. 244 ஆர்கன் 40 என்று பல்வேறு கணக்கீடு முறைகள் உள்ளன. வண்டல் அடுக்குகளின் வயதை கணக்கிட வேறு முறை உள்ளது .ஒரு குறிப்பிட்ட பழங்காலத்திற்கு முன்பு பாறைகளின் புதைபடிவங்களில் பாலூட்டி இனங்களை காண முடியாது. கிரெட்டேசியன் அடுக்குக்கு மேல் டைனோசர்களின் புதை படிவங்கள் இல்லை.. ஐசோடோப்புகள் பற்றி நூல் விளக்குகிறது. பல்வேறு கதிரியக்க கடிகாரங்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள நூல் உதவுகிறது. கார்பன் டேட்டிங் என்பது கரிம பொருள் எவ்வளவு பழமையானது என்பதை கண்டுபிடிக்கும் முறையாகும். பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்பதை பல்வேறு இயற்கை கடிகாரங்கள் உறுதி செய்கின்றன.பூமியின் வயது சில ஆயிரம் ஆண்டுகளே என்று வாதிடும் சிலரும் இங்கே இருக்கிறார்கள். கெடுவாய்ப்பாக இவர்கள்தான் பள்ளியின் பாடத்திட்டத்தில் என்ன போதிக்க வேண்டும் என்று கூறுவதற்கான அதிகாரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

நம் வாழ்நாளில் கண்முன்னே நடைபெறும் பரிணாம வளர்ச்சியை பற்றி சில உதாரணங்களை பார்க்கலாம்.

உகாண்டாவில் பெரிய தந்தங்களைக் கொண்ட யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதால் காலப்போக்கில் அந்த யானைகள் அழிந்து போய் சிறிய தந்தங்களுடன் தோன்றிய யானைகளே தாக்குப் பிடித்தன. அதேபோல மாமிச உண்ணிகளாக இருந்த சில பல்லிகள் குறிப்பிட்ட தீவில் கொண்டு போய் விடப்பட்டு தாவர உண்ணிகளாக மாறுகின்ற போது செல்லுலோசை செரிப்பதற்காக தன் வயிற்றில் புதிய உறுப்பினை ஏற்படுத்தின. பாக்டீரியாக்கள் ஒரே நாளில் பல தலைமுறைகளை எடுக்கும். இவற்றை பிரத்தியேக சோதனைக்கு உள்ளாக்கிய விஞ்ஞானி வென்ஸ்கி இந்த பாக்டீரியாக்களின் பரிணாம வளர்ச்சியை 20 ஆண்டுகள் தொடர்ந்து 45 ஆயிரம் தலைமுறை ஆராய்ச்சி செய்தார். ஈகோலி எனும் பாக்டீரியாவில் ஏற்பட்ட மாற்றங்களை நூல் விளக்குகிறது .

12 தனி தனி குழுக்களாக வைக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 12 தனித் தனி முறையான பரிணாம வளர்ச்சியை பெற்றாலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மாற்றத்தை பெற்றன என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது .இரண்டாம் உலகப்போருக்கு பின் பாக்டீரியாவை எதிர்த்து பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த பாக்டீரியாக்கள் தன்னை தகவமைத்து பென்சீலினை எதிர்க்க ஆரம்பித்தன. தற்போது கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை எதிர்கொண்டு புதுப்புது வகையான கிருமிகள் உருவாவதை நாம் காண்கின்றோம். நீண்டகால ஆன்டிபயாட்டிக் பயன்பாடு என்பது நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதிக்கும். விலங்குகள். பூச்சிகள்.. பறவைகள் தாங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப உருவங்களையும் வடிவங்களையும் பெறுவதை நாம் பார்க்கிறோம். புதைபடிவ ஆதாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை. ஏற்கெனவே பரிணாமத்திற்கான கூடுதலான ஆதாரங்கள் உள்ளன.

புதைவடிவம் மற்றும் ஒரு ஆதாரம் என்பதை அறிவோம். கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து புதைப்படிவங்களும் தான் வாழ்ந்த காலத்திலிருந்தஅடுக்குகளில் சரியான வரிசையில் பொருந்தியுள்ளன. புதைபடிவங்களில் உள்ள மிகப்பெரிய இடைவெளி கேம்பிரியன் சகாப்தத்திற்கு முன்னே நிகழ்ந்த அதாவது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பலவகையான விலங்குகளின் படிமங்கள் திடீரென காணப்பட்டன. இதை பரிணாமத்தை மறுப்போர் படைப்பை ஆதரிக்கும் தரவாக காட்டுகின்றனர். ஆனால் அதற்கு முன் மெல்லிய உடலைக் கொண்ட ஊர்வன இருந்ததால் இவை படிவமாக கிடைக்கவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். மிஸ்ஸிங் லிங்க் எனப்படும் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். ஆனால் இன்று ஏராளமான பல புதைபடிவங்கள் இந்த இடைவெளியை நிரப்புகின்றன.பரிணாம எதிர்ப்பாளர்கள் குரங்குகள் ஏன் மனித குழந்தையை நம் கண் முன்னே பெற்றெடுக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பரிணாமம் என்பது நீண்ட காலமாக நடக்கக் கூடியது ..அதை இருந்து பார்க்கக்கூடிய அளவுக்கு நம்முடைய ஆயுட்காலம் போதாது.. புதைபடிவங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. விலங்குகளின் தோற்றம் ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்துக்கு மாறுவதாக பரிணாமம் கூறுவதில்லை. அதை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த நவீன உயிரினமும் மற்றொரு நவீன உயிரினமாக மாறுவதில்லை. ஆனால் இவற்றுக்கு பொதுவான மூதாதையர்கள் இருந்தனர் என்பதை புதை படிவங்கள் நிரூபிக்கின்றன.

நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எனோமியா ..யானை மற்றும் சிம்பன்சிகளின் பொதுவான மூதாதையராகும். இது சிம்பன்சியாகவோ யானை போலவோ இல்லை .ஷாரூன் யாஹியா என்ற முஸ்லிம் மன்னிப்பாளர் அட்லஸ் ஆப் கிரியேஷன்ஸ் என்ற ஒரு தவறான விளக்கத்தை மக்கள் மத்தியில் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .மனிதன்.. குரங்குகள்/ சிம்பன்சிகளுக்கு நேரடியான வாரிசு இல்லை .இருவருக்கும் பொதுவான மூதாதையர் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தார். அது மனிதனை விட குரங்கையே அதிகம் ஒத்து இருந்தது. பரிணாமம் என்பது ஒரு தலைமுறையில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல .

கிரேட் செயின் ஆஃப் பீயிங் என்ற ஒரு கட்டுக் கதையை பரிணாம விரோதிகள் பரப்பி வருகிறார்கள். தேவதை.. மனிதன்.. விலங்கு ..தாவரம் மற்றும் பாறைகள் போன்ற உயிரற்ற பொருட்களில் கடவுளை மேலே வைத்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஒரே படி நிலையில் அமைக்கிறார்கள். இது ஏணி போன்ற நிலையாகும். இது அறிவியலுக்கு எதிரானதாகும். இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பரிணாமம் என்பது சிக்கலான பலவும் இணைந்த ஒரு வலைப்பின்னல்.இந்த வலைப்பின்னலில் ஒவ்வொரு இனத்திற்கும் உயர்ந்த …தாழ்ந்த ..என்ற நிலை எதுவும் இல்லாமல் ஒவ்வொன்றும் தனித்துவமான திறனுடன் விளங்குகின்றன .பரிணாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கோ அல்லது இறுதித் தன்மையோ இல்லை. சாதாரண உயிர் ..உயர்ந்த உயிர் என்ற வேறுபாடுகளும் கிடையாது. நாம் சாதாரணமாக கருதும் மண்புழு பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தங்க புலி என்று நாம் பாராட்டும் உயிரினம் அரிய வகை உயிரினமாக அழியும் நிலையில் உள்ளது.பாலூட்டி.. பறப்பன ..ஊர்வன நீர் வாழ்வன என்று முதுகெலும்புள்ளவை பிரிக்கப்படுகின்றன. பறவைகளும் ஊர்வணவும் தனித்தனி பிரிவாக கருதினாலும் புதை படிவங்களில் பறக்கின்ற டைனோசர்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன .எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் கடலில் இருந்து தான் தோன்றின. அதற்குப்பின் அவை நிலத்தை நோக்கி போவதற்காக சுவாசம் ..இரு பகுதியில் உயிர் வாழ்வதற்கான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன.. சில நிலத்தில் வாழ்ந்தவை நீருக்கு செல்லவும் ஆயத்தமாயின.

தரை இறங்கா முதுகெலும்பு அனைத்தும் மீன்கள் எனப்படுகின்றன. பறவைகள் எல்லாம் ஒரே குழுவை சேர்ந்தவையாகபிரிக்கப்படுகின்றன. ஆனால் மீன்களும் ஊர்வனமும் ஒரே குழுவை சேர்ந்ததல்ல .நமது முன்னோர்கள் மடல் துடுப்பு மீனிலிருந்து உருவானவர்கள் .”நீ எப்படி தோன்றினாய்?” (How you began ..written by Amabel Williams Elllis)என்ற நூல் தாயின் வயிற்றில் நாம் ஒரு செல்லில் இருந்து பத்து மாதத்தில் மனித உருவை பெறும் வரை இடையில் நடந்த அனைத்தையும் ஒரு பரிணாம வளர்ச்சியின் நாடகமாக நடப்பதை சுட்டிக்காட்டும் ஒரு அருமையான புத்தகம்.

360 -340 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் 20 மில்லியன் ஆண்டுகள் புதை படிமங்கள் கிடைப்பதில் உள்ள இடைவெளியை ரோமர்ஸ் இடைவெளி என்கிறோம். இந்த காலத்தில் மீன்கள் மட்டுமே இருந்தது .(மடல் துடுப்பு மீன்) சில முதலைகள் அளவு பெரிதாக இருந்தன. இது ராட்சதர் யுகம் .டிராகன்ஃப்ளைகள் மனித கைகளை போல நீண்ட இறக்கை கொண்டிருந்தன .இந்த இடைவெளியில் என்ன நடந்தது ..மீன்கள் எப்படி நிலத்திற்கு வந்தன என விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

க்ரீன்லாந்து பகுதியின் துருவப் பகுதியில் விரல்கள் போன்ற அமைப்பைகொண்ட சில புதைப்படிவங்கள் காட்டுகின்றது. இக்தியோஸ்டெமா.. இவை நிலத்தில் வாழ்வதற்காக நுரையீரலை வளர்த்திருந்தன. நிலத்திலிருந்து தண்ணீருக்கு திரும்பிய கடல் மாடு.. கடல் சிங்கம் போன்றவை நீரில் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்தன.நீர்நாய்.. கடல் பாம்பு கடன் சிலந்தி இவைகளும் இப்படித்தான்.

திமிங்கலங்கள் எப்படி படிப்படியாக தன் பின்னங்கால்களை இழந்து தன் முன் மூட்டுகளை துடுப்புகளாக மாற்றி தண்ணீரில் வாழ தகுதியாக்கிக் கொண்டன என்பதையும் புதைப்படிவ வடிவங்கள் உணர்த்துகின்றன.

*இந்த நூலை தமிழ்ப்படுத்தியவர்.. தமிழை பாடாய்படுத்தியிருக்கிறார் !.
.
நடக்கும் திமிங்கலங்கள் இருந்ததை புதை படிவங்கள் காட்டுகின்றன .அதேபோல சில புதை படிவங்கள் நீர்யானைக்கும் திமிங்கலத்திற்கும் உள்ள தொடர்பு காட்டுகிறது.

ஆமைகள் இன்றும் முழுமையாக தண்ணீருக்கு திரும்பாமல் அவை கரைக்கு வந்து முட்டையிடுகின்றன .தனது பிட்டங்களால் காற்றை சுவாசிக்கிறது. கடலில் சுறா மீன் தங்களை கீழே இருந்து தாக்குவதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக கடல் ஆமைகள் தம் வயிற்றுப் பகுதியில் அழுத்தமான ஓட்டை உருவாக்கிக் கொண்டன. நில ஆமைகளோ மேலும் கீழும் ஓடுகளை உருவாக்கிக் கொண்டன.

தண்ணீருக்கு போன திமிங்கலங்கள் அதற்குப் பிறகு மீண்டும் தரைக்கு திரும்பவே இல்லை.

டிஎன்ஏ என்பது இறந்தவர்களின் மரபணு புத்தகம். முன்னோர்களின் வாழ்வு.. தாங்கள் உலகத்தில் உருவான கதையை சொல்கிறது..

ஆதிகாலத்தில் ஆக்ஸிஜனின் அளவு சற்று அதிகமாகவே இருந்தது.
டார்வின் மனித மூதாதையரின் புதை படிவங்களை ஆப்பிரிக்காவில் தேடும்படி பரிந்துரைத்தார். ஆனால் பலரும் ஆசியாவில் தேடினர். மனிதனுக்கும் குரங்குக்கும் இடையிலான காணாமல் போன மூதாதையரின் முதல் இணைப்பு ஆசியாவில் தான் கிடைத்தது. ஆனால் அதற்கு முந்திய படிவங்கள் பின் ஆப்பிரிக்காவில் கிடைத்தது. டார்வின் கூறுவது போல குரங்கு “போன்ற “உயிரினத்தில் இருந்து தற்கால மனிதர்கள் படிப்படியாக மாறுவதை பார்க்கும் போது” மனிதன்” என்ற வார்த்தையை எந்த காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல முடியாது.

இந்த நூல்அதற்கு பல்வேறு எலும்புக்கூடுகளின் பெயர்களை வரிசைக்கிரமமாககொடுக்கிறது .ஆர்வம் உள்ள வாசகர்கள் நூலை வாங்கி படித்து தெரிந்து கொள்வது உத்தமம். மற்றபடி சிம்பன்சி மற்றும் மனிதர் இருவருக்குமானமூதாதையர் ஒருவர்.. சிம்பான்சியிலிருந்து மனிதன் நேரடியாக தோன்றவில்லை என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்வது போதுமானது. மண்டை ஓட்டின் அளவு.. மூளையின் அளவு உருவ அளவு ஆகியவற்றை வைத்து காலத்தை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்துகிறார்கள்.

மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிமிர்ந்து நடந்த சிம்பன்சியான லூசியிலிருந்து.. இன்றைய மனிதர்கள் வரையிலான புதை படிமங்கள் நம்மிடம் உள்ளன .ஆனால் ஆதாரங்களை முன் வைத்தாலும் அதை கண் கொண்டு பார்க்க பரிணாம எதிர்ப்பாளர்கள் முன்வருவதில்லை. சிம்பன்சி அளவிலிருந்து நவீன பெரிய மூளை உள்ள ஹோமோசேப்பியன்ஸ் வரை நமது மூளையின் படிப்படியான வளர்ச்சியை காட்டும் சிறந்த புதை படிவ பதிவுகள் நம்மிடம் உள்ளன.

நவ -டார்வினிச விஞ்ஞானி ஜே பி எல் ஹால்டேன்
தாயின் கர்ப்பப்பையில் ஒற்றை செல் எப்படி படிப்படியாக குழந்தையாக வளர்கிறது என்பதை தன்னுடைய புகழ்பெற்ற நூலான” நீ எப்படி தோன்றினாய்?(How you begun?) என்ற நூலில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான புத்தகமாகும் இது.

பரிணாமத்தை சந்தேகித்த ஒரு பெண் பேராசிரியர் ஹால்டேனிடம் கேட்டார்: “ட்ரில்லியன் கணக்கான செல்கள், எலும்புகள், தசைகள், நரம்புகள், துடிக்கும் இதயம் ரத்த நாளங்கள், சிறுநீரகக் குழாய்கள் மற்றும் சிந்திக்கும் ..பேசும் மற்றும் உணரும் மூளை ஆகியவற்றை கொண்ட சிக்கலான மனித உடல்கள் ஒரே செல்லில் இருந்து உருவானதாக அவரால் நம்ப முடியவில்லை .இந்த நபரின் கூற்றுப்படி பில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொண்டாலும் அது சாத்தியம் இல்லை. அதற்கு ஹால்டன் இப்படி பதில் அளித்தார்:” ஆனால் மேடம். நீங்கள் அதை 9 மாதங்களில் செய்தீர்கள் என்று!..”

ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே குழுவாக வானத்தில் பறப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஒரே நேரத்தில் திரும்புவதையும் பார்த்திருக்கிறோம். இந்தக் குழுவில் உள்ள எந்த ஒரு பறவையும் ஆர்டர் கொடுக்கவோ அல்லது குழுவை வழி நடத்தவோ இல்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு பறவையும் ஒழுங்கு மற்றும் அமைப்பு எளிய விதிகளை பின்பற்றி வெளிப்படுகிறது.

செல் பல்வேறு ரசாயனங்கள் ஒன்றாக கலந்த ஒரு பெரிய வேதியியல் ஆய்வகம் போன்றது. என்சைம்கள் உயிரணுக்களுக்குள் உள்ள தொழிற்சாலையில் ரோபோக்கள் போன்றவை. மேலும் அவை வெவ்வேறு ரசாயன கலவைகளை உருவாக்குவதற்கு பொருத்தமாகும். ஒரு செல் ஒரு தொழிற்சாலை போன்றது. அது பல்வேறு விஷயங்களை உருவாக்க முடியும். ஆனால் அது எந்தெந்த பொருட்களை உருவாக்குகிறது என்பது எந்த நொதிகள் உள்ளன என்பதை பொறுத்தது. சில மரபணுக்களை இயக்குவதன் மூலம் என்சைம்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கருவூம் ஒரு உயிரணுவாகத் தொடங்குகிறது .மேலும் அது பிரிவு படும்போது தைராய்டு, தசை, கல்லீரல் ,எலும்பு, கணையம் மற்றும் தோல் செல்கள் போன்று பல்வேறு வகையான செல்கள் உருவாகின்றன, இந்த செல்கள் அந்த ஒரு கருவுற்ற முட்டை உயிரணுவில் இருந்து தோன்றி ஒரு குடும்ப மரத்தை உருவாக்குகின்றன.

ஒரு உயிரினத்தின் அனைத்து உயிர் அணுக்களும் ஒரே மாதிரியான மரபணுக்களைக் கொண்டிருந்தாலும் திசுக்கள் இப்படித்தான் வேறுபடுகின்றன .மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருந்தாலும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் செல்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. கரு வளர்ச்சியின் போது அவர்களின் சமச்சீரற்ற செல் பிரிவின் வரலாறாகும். இது ஒரு கரு எப்படி வயது வந்தவராக உருவாகிறது என்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை .மாறாக செல்கள் உள்ளூர் விதிகளை பின்பற்றுகின்றன. ஒரு உயிரினம் அதன் டிஎன்ஏ வரிசையை படிப்பதன் மூலம் எப்படி இருக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது.

நிலம், கடல், தீவு, பாறை, மண் என பூகோள இடத்திற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி இருந்தது. உயிர்களின் உருவங்களும் மாறின. உணவு பழக்க வழக்கங்களும் மாறின. சில உயிரினங்கள் சில தீவுகளில் மட்டுமே இருந்தன. அதேபோல இயற்கை பேரிடராலும் பரிணாமம் மாறியது .சில தாவரங்கள், சில பறவைகள் சில தீவுகளில் மட்டுமே இருந்தன. கண்டங்கள் பிரிந்ததாலும் பூமியின் மேல் தகடுகளின் நகர்வாலும் இவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் வந்தன. இருப்பினும் “நோவா பேழை “கதையில் மடகாஸ்கரில் 37 வகை எலுமிச்சை இருந்தது பற்றியோ இங்கே குரங்கு என்ற இனமே இல்லாதது பற்றியோ குறிப்பிடாதது விமர்சனத்திற்கு ஆளாகிறது. எலும்புக்கூடுகளின் வடிவங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. தேவையற்றதாக.. இடையூறாக இருந்த பல உறுப்புகள் குறிப்பாக வால்,இறக்கை, கால் நகம் போன்றவை காலப்போக்கில் சில பிராணிகளிடம் இல்லாமல் போய்விடும்.வௌவாலின் எலும்புக்கூடும் மனிதனின் எலும்புக்கூடும் பொருந்துவதாக உள்ளன .குதிரைகள் தம் கால் விரல்களால் நடக்கின்றன. எலும்புகள் அனைத்தும் பாலூட்டி இனங்களில் ஒரே பெயரோடு அடையாளம் காணப்படுகின்றன. பறவைகள் அனைத்திற்கும் சிறகுகள்உள்ளன .ஆனால் பாலூட்டிகளுக்கு சிறகுகள் கிடையாது. தாவரங்களின் பல்வேறு இனங்களுக்கு இடையே மரபணு மாற்றம் ஏற்படுவது பொதுவானது. ஒட்டுண்ணிகளும் மரபணு மாற்றம் ஏற்படுத்தின. ஆர்ட்டிக் மீனின் மரபணுக்கள் தக்காளிகளுக்கும், ஜெல்லி மீன் மரபணுக்கள் உருளைக்கிழங்கிலும் விஞ்ஞானிகளால் வைக்கப்பட்டன. பரிணாம வளர்ச்சி என்பது முழுமையான வளர்ச்சி அடைந்த உயிரினங்களில் மற்றொரு முழு வளர்ச்சி பெற்ற உயிரினம் மூலம் ஏற்படாது..

டி. என். ஏ குறியீடு அனைத்து உயிரினங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளன. இருப்பினும் தாவரங்களின் மரபணுக்கள் வேறுபட்டவை. இவை பெருமளவு உயிரினங்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்ததை குறிக்கிறது. அனைத்து உயிரினங்களில் இருக்கும் ஜீன் புரத அமைப்பும் ஒன்றாகவே உள்ளது.
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் காரணமாக வெவ்வேறு உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்துவது சாத்தியம் ஆகி இருக்கிறது. மனித ஜினோ திட்டமும் வந்துள்ளது .மனிதனும் சிம்பன்சியும் தங்கள் மரபணு வரிசையில் 98 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன. பரிணாம வளர்ச்சியின் அனுமானத்தின் அடிப்படையில் வெவ்வேறு விலங்குகளின் டி என் ஏ அல்லது புரதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் எந்த விலங்கும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையது என கண்டறியலாம். மரபணுவில் உள்ள அனைத்து வெவ்வேறு மரபணுக்களுக்கு இடையேயான உடன்பாடு, ஒருமித்த மரபணுக்களில் வரலாற்றுத் துல்லியத்தை மட்டும் இன்றி பரிணாமம் நிகழ்ந்தது என்ற உண்மையும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.
டைனோசர்களின் இடுப்பு பகுதியில் ஒரு பெரிய கட்டி இருந்ததைக் கொண்டு அவை இரண்டாம் மூளையாக அது செயல்பட்டதை கண்டுபிடித்திருக்கிறோம்.

நாம் கோபத்துடன் அல்லது பயத்துடன் உள்ளபோது நமது முடிகள் சிலிர்த்து எழுவதை பார்க்கிறோம். மிருகங்களில் இதை கண்கூடாக பார்க்கலாம். எதிரிகளை பயமுறுத்த தம் உடலை பெரிதாக காட்ட இந்த ஏற்பாடு. இது பரிணாமத்தின் எச்சம்.

பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெளியில் உள்ள சூழலுக்கு ஏற்ப தன் உடல் வெப்பநிலையை மாற்றாமல் தனக்கென உள் வெப்பநிலையை பராமரிக்கின்றன .ஆனால் பல்லி போன்ற குளிர் ரத்தப் பிராணிகள் சூழலுக்கு ஏற்ப தன் உள் வெப்பநிலையை மாற்றிக் கொள்கின்றன. இருட்டிலேயே தொடர்ந்து வாழும் சில குகை விலங்குகள் காலப்போக்கில் தம் கண்களை இழந்தன .நமது உடலின் பல உறுப்புகளின் வடிவங்கள் அறிவுபூர்வமானதாக இல்லை. உதாரணம் குரல்வளை.
உயிரியலில் புதுமை எதிர்பாராத இடங்களில் இருந்தும் வரலாம். நமக்கு நுரையீரல்கள் செதில்களில் இருந்து வராமல் நமது குடலில் ஒரு பகுதி நுரையீரலாக மாறியது. மீன்களின் நீச்சல் உறுப்பு மாற்றி அமைக்கப்பட்ட நுரையீரலாகும். கிடைமட்ட முதுகலும்புடன் நான்கு கால்களில் நடந்தவை எப்படி இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தது என்பது விந்தையானது. இது உடலின் வளர்ச்சியில் ஒவ்வொரு பகுதியையும் பாதித்தது. ஒரு அறிவார்ந்த படைப்பாளி வடிவமைத்திருந்தால் நமது உடல் உறுப்புகளின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பல குளறுபடிகள் நிகழ்ந்திருக்காது .நமது உடலில் பல உறுப்புக்கள் முழுமையாக படைக்கப்படவில்லை.

இயற்கை பொருளாதாரம் சூரியனால் இயக்கப்படுகிறது .தாவரங்கள் உணவு தயாரிக்க சூரிய ஒளியை பயன்படுத்துகின்றன. இழந்த ஆற்றலை சூரியனே ஈடுசெய்கிறது.ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய ஆற்றலை பச்சை இலைகளில் சேகரிக்கின்றன .ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாக்டீரியாக்களால் இம்முறை கண்டுபிடிக்கப்பட்டது .நமது உடலில் உள்ள செயல் முறைகளை மைட்டோகாண்ட்ரியா எனும் பாக்டீரியாக்கள் செயல்படுத்கின்றன .அதேபோல தாவரங்களில் குளோரோபிளாஸ்ட்டுகள் எனும் பாக்டீரியாக்கள் செயல்படுத்துகின்றன. பூமியில் உள்ள உயிர்களின் இயக்கம் அனைத்திற்கும் ஆற்றலை சூரியனிடமிருந்து பெறுகின்றன.

மரங்கள் தாங்கள் அடையும் பயனுக்கு ஏற்ப உயரமாக வளர்வதை தீர்மானித்துக்கொள்கின்றன. மிருகங்களில் வேட்டையாடுபவையும் வேகமாக ஓடுகின்றன ;வேட்டையாடப்படுபவையும் வேகமாக ஓடுகின்றன.

நிற மாற்றம், போட்டிவேகம், நகம், பற்கள் ,முள்கள், நச்சு சுரப்பி, கவசம், கொம்புகள் போன்றவை உயிர்த்தப்பிக்கும் பரிணாம தேவைகளாகும். இதை பரிணாம ஆயுதப் போட்டி எனலாம். சிறுத்தை -மான் இரண்டுமே தத்தம் தாங்கள் வெற்றி பெறுவதற்கான உடல் அமைப்பை கொண்டுள்ளன. இதை படைப்பாளர்  என்ற ஒருவர் இருந்தால் அப்படி செய்திருப்பானா என்று கேள்வி எழுகிறது. உயிர் வாழவும் இனப்பெருக்கவும் செய்யவும் ஒவ்வொரு உயிரும் தத்தம் போட்டியாளர்களுடன் போராடுகிறது. மீன் பிடிதடைகாலம் என்பது வேட்டையாடுபவர்கள் ஏற்படுத்தியது .இப்படி மிருகங்களுக்கு சாத்தியம் இல்லை. சார்லஸ் டார்வின் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு” பிசாசு மத குரு” இயற்கையின் “கொடூரமான படைப்புகள்” பற்றி நூல் எழுத முடியும் என்று கடிதம் எழுதினார். இயற்கை துன்பப்படுவதை பற்றி கவலைப்படுவதில்லை. டிஎன்ஏ உயிர் வாழ்வதைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. ஒருபுறம் விலங்குகள் உயிரோடு இருக்கும் விலங்கை உண்கின்றன. மறுபுறம் உணவு கிடைக்காமல் இறந்து போவதும் நடக்கிறது.

ஜலதோஷம் வைரசால் ஏற்படுகிறது. வைரஸ், வைரஸ் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மட்டுமே வாழ்கிறது. அதனால் அதற்குப் பயன் என்று எதுவும் இல்லை. துன்பம் என்பது இயற்கை தேர்வு பரிணாம வளர்ச்சியின் ஒரு பக்க விளைவாகும். பரிணாமக் கோட்பாட்டின் படி வலி என்பது வாழ்வின் ஒரு பகுதி. நம் மூளை வலியை அனுபவிக்கும் போது எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்க்கின்றன. இருப்பினும் வலி என்பது தீவிரமாக இருக்க வேண்டுமா என்பது தெரியவில்லை. எதிர் எதிர் ஆசைகளுக்கு இடையே சண்டையிடும் போது வலியை நாம் உணர்கிறோம். மெலிதாக இருக்க வேண்டும் என்ற ஆசை பசியை முறியடிக்கும் .ஒரு நாடு ,சித்தாந்தம் அல்லது ஒரு குழுவுக்கு என ஒரு தனி நபர் தன்னை தியாகம் செய்வதை இயற்கை தேர்வு விரும்பவில்லை .ஆனால் அது தனிப்பட்ட உயிர்கள் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் ஊக்குவிக்கின்றது. வலி என்பது உண்மையில் விரும்பத்தகாத ஒன்றாக இருந்தாலும் உயிர் வாழ வலி அவசியம் . டைனோசர் போன்ற பெரிய மிருகங்கள் வலியை உரிய காலத்தில் உணராமல் போனதால்தான் அந்த இனம் அழிந்து போனது என்று பரிணாம
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நமக்கு வரும் ஆபத்தை உணர்த்துவது வலியாகும்.

வாழ்வதற்கு விலங்குகளுக்கு தொடர்ந்து உணவு இருக்க வேண்டும் ..அதற்கு விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். வாழ்க்கையும் மரணமும் பின்னிப்பிணைந்த இயற்கையின் உலகத்தில் கடுமையான மற்றும் கொடூரமான எதார்த்தமாகும். இயற்கையின் செயல்முறையில் வாழ்வதற்கான போராட்டமும் மற்றும் வளங்களின் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டமும் தொடர்கிறது.இதனால் உயிரியலில் மேம்பட்ட உயிர்களின் தோற்றத்திற்கு வழி ஏற்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் விரைவாக விகிதாச்சாரத்தில் பெருக முயற்சி செய்கின்றன. விலங்குகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. வலிமையான ஆரோக்கியமான மகிழ்ச்சியான மிருகங்கள் உயிர் தப்பி வாழ்கின்றன.

உயிர் சுவாசிக்கிறது என்று கூறுவது அபத்தமான வார்த்தை. இங்கே உயிர் எதை குறிக்கிறது? உயிர் உள்ளவற்றிற்கும் உயிர் இல்லாதவற்றிற்கும் உள்ள வித்தியாசம் அது எவ்வளவு தகவல்களை கொண்டிருக்கிறது( டிஎன்ஏ) என்பதாகும் .டிஎன்ஏ தான் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. எதிர்காலத்தில் வாழ கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் .இதை டிஎன்ஏ செய்கிறது. இவற்றை நாம் “நினைவுகள்”என்று கருதுலாம். இதை வேதாத்திரி மகரிஷி” பதிவுகள்” என்று கூறுகிறார். மரபணு பிளவு, நோய் எதிர்ப்பு தன்மை ,நரம்பு மண்டலம் மற்றும் சுவாச உறுப்புக்கள் நினைவுகளால் தொடர்கின்றன. புரதங்களை உருவாக்க உயிரணுக்கள் பயன்படுத்தும் மொழி போன்றது மரபணு குறியீடு அனைத்து உயிரினங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது என்பதால் அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதையிலிருந்து புறப்பட்டவர்கள் என்பதை பரிணாமம் உணர்த்துகிறது. எந்த உயிரினமும் தனித்தனியாக தோன்றவில்லை.

24 மணி நேரமும் இரவு பகல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. புவி ஈர்ப்பு விசை உள்ளது. புவியின் அச்சு சாய்வாக உள்ளதால் கோடையில் அதிக வெப்பமும் குளிரில் அதிக குளிரும் ஏற்படுகிறது .இதன் மூலம் உயிரின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது.

பூமியின் துணைக்கோளாக சந்திரன் இருக்கிறது. சூரியனை பூமி சுற்றி வருகிறது. இவை எல்லாமே பரிணாம வளர்ச்சியில்பங்கு வகிக்கின்றன. பரிணாமம் எப்படி தொடங்கியது என ஊகிக்க முடியவில்லை. ஏனெனில் அன்றைய கால அறிவியலுக்கு அது சாத்தியப்படவில்லை. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் முழுவதையும் தாவரங்கள்தான் உற்பத்தி செய்கின்றன என்பதை நாம் அறிவோம்.

விஞ்ஞானிகளால் உயிர் எப்படி தொடங்கியது என்பதை சரியாக சொல்ல தெரியவில்லை( இந்த நூலின் படி) ஆனால் அது தன்னைத்தானே நகல்எடுக்கக்கூடிய ஒன்றிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும் என்பது புரிகிறது. டி என் ஏ போலவே ஆர் என் ஏவும் நகலெடுக்கும் பணியில் முன்னிலை வகித்து உதவியது என்ற முடிவுக்கு வரலாம் .இத்துறையில் ஆராய்ச்சி தொடர்கிறது .நமது விண்மீன் மண்டலத்தில் மட்டும் ஒரு பில்லியனுக்கு அதிகமான கிரகங்கள் இருக்கின்றன. நமக்குத்தெரிந்து உயிர்கள் வாழும் கிரகமாக நாம் இருக்கிறோம். உயிர் வாழும் கிரகங்கள் வேறு ஏதும் இருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியது முக்கியம் .ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்பட வேண்டிய தூர இடைவெளியில் நாம் இல்லை.

பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பல பில்லியன் ஆண்டு பரிணாம வளர்ச்சியில் மிஞ்சி தனது வாரிசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மனிதனை மிஞ்சக்கூடிய உயிர்களும் ஒரு நாள் வரலாம் . பரிணாம வளர்ச்சியில்சிறந்து விளங்கச்கூடியவை மட்டுமே இந்த பூமியில் தப்பி பிழைக்க முடியும். நாம் பல்வேறு வகையான சுற்றுச்சூழலுக்கு இடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பல்வேறு விதமான சிக்கலான வாழ்க்கை முறைகளை தாண்டி இதுவரை உயிர் பிழைத்து இருக்கிறோம். தாவரங்கள் இல்லாமல் நம்மால் ஆற்றலை தக்க வைக்க முடியாது .அதேபோல சூரியன் என்ற நட்சத்திரமில்லாமலும் நமக்கு ஆற்றல் கிடைக்காது.

“பூமியின் மிகப்பெரிய அதிசய காட்சி “என்ற இந்த ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களின் நூல் இந்த உலகத்தில் உயிர்கள் பரிணாம வளர்ச்சி மூலமே உருவாகின என்பதற்கான பல்வேறு அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அடுக்கடுக்காய் எடுத்து வைக்கிறது.

விசுவாச நம்பிக்கையோடு இந்த உலகம்
படைக்கப்பட்டது… உயிர்கள் படைக்கப்பட்டன
என்று இருந்துவிட்டால் இவ்வளவு மண்டையிடி
தேவையில்லை என்றும் பலர் கருதலாம்..அப்படி
உயிர்கள் இருந்திருந்தால் அன்றைய ஒரு செல்
அமீபா இன்றைய “நான் எப்படி தோன்றினேன்?”
என்று சிந்திக்கும் மனிதனாய் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கமாட்டாள்(ன்)..

“பூமியின் மிகப்பெரிய அதிசய காட்சி”
ரிச்சர்ட் டாக்கின்ஸ்

தமிழில் :வேணுதுரை

ஆங்கில நூலின் பெயர்:
“The greatest show on earth “
The evidence for evolution
Published by :Knowledge House ,New Delhi

383 பக்கங்கள். : விலை ரூபாய் 499/-
நூலில் 13 அத்தியாயங்கள்உள்ளன .

நூல் அறிமுகம் : இரா.இயேசுதாஸ்-மன்னார்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *