பாங்கைத் தமிழனின் கவிதைகள்

Pangai Thamizhanin Kavithaigal 7 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 7

‘மாடுகளுக்குப் புல்லே போதும்’
*************************************
இந்த தேசந்தானே வேண்டும்?
எடுத்துக்கொள் தெய்வமே!
இந்த நாட்டின்
ஆட்சிதானே வேண்டும்?
நடத்திக்கொள் சாமி!

என்ன நினைக்கின்றீரோ
அந்த
வண்ணம் பூசிக்கொள்ளும் சாமி !

அடியேனின்
சிறிய விண்ணப்பம்
சாமி…..

ஏர் ஓட்ட மாட்டேன்
மூட்டை சுமக்க மாட்டேன்
சேற்றில் இறங்க மாட்டேன்
லாரி ஓட்ட மாட்டேன்
ஆடு மாடு வளர்க்க மாட்டேன்
மண் சுமக்க மாட்டேன்
குப்பைகள் அகற்ற மாட்டேன்
மொத்தத்தில்
ரத்தமோ வியர்வையோ
சிந்த மாட்டேன்….

நெய் மணக்க
சோறு போடு சாமி….
போதும்!

அதை
மந்திரத்தால்
கொடுப்பாயோ;
தந்திரத்தால்
கொடுப்பாயோ;

வாயால்
வடைசுட்டு விற்பாயோ;
மகா சக்தி கொண்ட
மயிர் வளர்த்துத் திரியும்
மகான்கள் மூலம்
வரவழைப்பாயோ….

அந்தக் கதை
எனக்கு ஏன் சாமி!
ஆண்டிக்கு
அம்பாரக் கணக்கு!

மாடுகளுக்குப்
புல் போதும் சாமி!
போதும்!

நீயே… (க)விதை!
*********************
கவிதையே…
உனக்கான நாளாம் இது!
எழுந்திரு;
போ…
ஓடு…
கவிஞர் உள்ளமெல்லாம்
ஊற்றுப் பெருக்கெடு!

கயமைகளை
கண்டிக்கச்சொல்;
கனவுகளை
காணச்சொல்;

கண்ணீரைத்
துடைக்கச்சொல்;
நம்பிக்கை ஆயுதத்தை
கொடுக்கச்சொல்;

பெண்மையை
போற்றச்சொல்;
வாய்மையை
வளர்க்கச்சொல்;

வறுமைக்கு
காரணம் தேடச்சொல்;
சமய வெறியைச்
சாடச்சொல்;

சாதியை
ஓடச்சொல்;
கல்வியை
கற்கச்சொல்;

கறைகளை
அகற்றச்சொல்;
கர்விகளை
அடக்கச்சொல்;

காதலை
வளர்க்கச் சொல்;
உன்னை
எழுதி…

ஓங்கு புகழ்
அடையச்சொல்;
கவிஞனக்கு
நீ அடையாளம்;
உனக்கு
கவிஞன் அடையாளம்!

காலத்தை மீறிக் கனவு காணும்
கவிஞர்களை ஈன்றெடுக்க
புதிய கருப்பையைப்
பொருத்திக் கொள்.

**************
மந்திரத்தால்
மாங்காயை
விழவைப்பதற்காகவே
ஒரு தேசம் வேண்டுமாம்!

அடேய்….
மாங்காய்
வேண்டுமென்றால்
மரத்தை நட வேண்டும்!

மரம் நடுவதற்கு
மனிதன் வேண்டும்!
மந்திரம் சொல்வதற்கு
மாயாவி போதும்!

இப்போது சொல்;
இந்த தேசத்திற்கு
மரத்திலிருந்து
மாங்காய் வேண்டுமா?

மந்திரத்தால்
மாங்காய் வேண்டுமா?
மாயாவி வேண்டுமா?
மனிதன் வேண்டுமா?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.