வர்க்கசமூகத்தின் தோற்றமும், பெண்ணடிமைத்தனத்தின் தோற்றமும்
’குடும்பம் என்றாலே அதில் கணவன்தான் தலைவன்.
மனைவி இரண்டாம்பட்சம்தான்.
சொத்து, வாரிசுகள் எல்லாம் தந்தைவழிதான்.
இதுதான் ஆதிமுதலே இருந்து வரும் பழக்கம்’ – இப்படித்தான் சமூகம் வெகுகாலம் கருதிவந்தது. ‘ஆப்ரகாமின் வம்சாவழி வந்த சந்ததிகள்’ என பைபிள் கூறுவதை வைத்து, தந்தைவழிச் சமூகம்தான் காலங்காலமாக இருந்து வரும் முறை என ஐரோப்பிய சமூகம் நினைத்தது. ஆங்காங்கே பழங்குடி மக்கள் மத்தியில் தாய்வழிக் குடும்பமுறை நிலவியதைப் பார்த்திருந்தாலும், அவை எப்படித் தோன்றி, நிலைத்து வந்திருக்கின்றன என்கிற முறையான ஆராய்ச்சிக்குள் யாரும் போகவில்லை; போக விரும்பவில்லை. விவிலிய நற்பண்புகள் அடிப்படையில், ‘அய்ய…ச்சீ…அசிங்கம்’ என்கிற மனநிலை இந்தச் சமூகங்கள் குறித்த முறையான ஆய்வுகளைத் தடுத்திருக்கின்றன.

1850-60 தொடங்கும் காலப்பகுதி வரை குடும்பத்தைப் பற்றிய வரலாறு என சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான ஆய்வுகள் ஒன்றுமே இருக்கவில்லை. 1861ல் ஜொகன் ஜேக்கப் பாக்கோபனின் ‘தாய் உரிமை’ (Mother Right) என்ற நூல் வெளிவந்தது. இந்த நூல் முதன்முதலாக தாய்வழிமுறைக் குடும்ப அமைப்புகளை ஆராய்ந்தது. ஆரம்பகாலத்தில் மனித குலம் வரைமுறையற்ற பாலுறவுகளில் ஈடுபட்டிருந்த நிலை இருந்தது. இந்த உறவுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய் யார் என்று மட்டுமே உறுதியாக நிறுவ முடியும். இதனால் ‘வம்சாவளி’ என்பது ‘தாய்வழியாக’ ‘தாய்-உரிமை’ என்ற அடிப்படையில் தான் கணக்கிடப்பட்டுவந்தது. இளம் தலைமுறையினரின் பெற்றோர்கள் எனப் பெண்கள் மட்டுமே திட்டவட்டமாக நிச்சயிக்கப்பட வாய்ப்பிருந்ததால் பெண்கள் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார்கள் என்கிற விஷயங்களை இந்த நூல் முதன்முதலாக முன்வைத்திருக்கிறது. குடும்ப அமைப்பின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பாக்கோபனின் நூலில் இருந்துதான் தொடங்குவதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு வந்த ஆய்வுகளில் மிக முக்கியமான ஆய்வுகளாக லூயி ஹென்றி மார்கனின் ஆய்வுகளைப் பார்த்தார் எங்கெல்ஸ். 1877ல் வெளிவந்த அவருடைய ’பண்டைக்கால சமுதாயம்’ (Ancient Society) என்கிற ஆய்வுநூலை, மனித சமூகத்தின் வரலாற்றிலேயே மிகமிக முக்கியம் வாய்ந்த ஆய்வாக எங்கெல்ஸ் கருதுகிறார்.

டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவம் எவ்வளவு புகழ்பெற்றது என்பதை நாம் அறிவோம். பெரிதாக அறிவியல் தெரியாத நபர்கள்கூட, ’குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பதே டார்வின் கண்டுபிடிப்பு’ எனத் தெரிந்து வைத்திருப்பதை நாம் பார்க்கிறோம். அந்தளவுக்கு உயிரியலில் பெரிய புரட்சியை விளைவித்த கண்டுபிடிப்பு டார்வினுடையது. அதேபோல, மார்க்ஸின் கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமானது சமூகத்தில் உபரி மதிப்பு எப்படித் தோன்றுகிறது என்பதுதான். அரசியல் பொருளாதாரத்துறையில் மார்க்ஸ் செய்த இந்தக் கண்டுபிடிப்பு சுரண்டலை ஒழிப்பதற்கு மனித சமூகம் என்ன செய்யவேண்டும் என்கிற அவசியமான புரிதலை உலகுக்கு வழங்குகிறது. உயிரியல் துறையில் டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானதோ, அரசியல் பொருளாதாரத் துறையில் மார்க்ஸின் கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு அதிகாலச் சமூக வரலாற்றுத்துறையில் மார்கனின் கண்டுபிடிப்பு முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ்.

“…நாகரிகமடைந்த மக்கள் சமூகங்களின் தந்தை-உரிமைக் கணத்துக்கு முந்தைய கட்டமாக ஆதிகாலத் தாய்-உரிமைக் கணம் இருந்தது என்ற மறுகண்டுபிடிப்பும் ஆதிகாலச் சமுதாய வரலாற்றுத்துறையில் முக்கியத்துவம் கொண்டது. அதைக் கொண்டு குடும்பம் பற்றிய வரலாற்றை முதல் தடவையாக மார்கன் வரைந்து காட்ட முடிந்தது” என்கிறார் எங்கெல்ஸ்.
மார்கனின் ஆராய்ச்சி முடிவுகளின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவுபடுத்தி எழுதும் திட்டம் மார்க்ஸுக்கும் இருந்தது. மார்க்ஸ் மறைந்த பிறகு, அந்த முக்கியமான பணியை எங்கெல்ஸ் செய்துமுடித்தார். அதன் விளைவுதான், 1884 ஆம் ஆண்டில் வெளியான எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற நூல். குடும்பம், திருமணமுறை குறித்து மார்கன் முன்வைத்த ஆதாரங்களுடன், தன்னிடமிருந்த ஆதரங்களையும் இணைத்து, பொருளாதாரம் குறித்த அடிப்படைகளை விளக்கி இந்த நூலை இயற்றினார் எங்கெல்ஸ்.
பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன காலக் குடும்ப அமைப்பின் தோற்றம் குறித்து இந்நூல் என்ன சொல்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆதிகாலச் சமூகங்கள்

ஜேன் குட்டால் எனும் புகழ்பெற்ற சிம்பான்சி ஆய்வாளர், சிம்பான்சிகளை ஆய்வு செய்து நிறைய கண்டுபிடித்திருக்கிறார். அவர் கண்டுபிடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என புகழப்படுகிறது. எறும்புப்புற்றுக்குள் இருக்கும் எறும்புகளைப் பிடித்துச் சிம்பான்சிகளுக்குச் சாப்பிட வேண்டும். சிம்பான்சிகள் குச்சிகளை ஒடித்து வளைத்து எறும்புப் புற்றுக்குள் விட்டு வெளியில் எடுத்தன. அதில் ஏறிவரும் எறும்புகளைப் பிடித்துத் தின்றன. உணவுக்கான தேவையை ஒட்டி இப்படியான கருவி செய்யும் திறன் மனிதர்களின் மூதாதையர்களான சிம்பான்சிகளிடம் இருக்கிறது என்பதை முதல்முறையாக ஜேன் கண்டறிந்தார்.
குரங்கில் இருந்து பரிணமித்த மனிதர்களுக்கு உயிர்வாழ்வதற்குக் கருவிகள் செய்யும் திறன் மிகமிக அடிப்படையானது. ’மனிதன் கருவிகள் செய்யத் தெரிந்த விலங்கு’ என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். இன்றைக்கு கம்ப்யூட்டர், ஆன்ட்ராய்டு ஃபோன், இணையம் போன்ற கருவிகள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றன. மனிதர்களின் ’அடிப்படைத் தேவையாக’ இணையம் இருக்கிறது என ஐக்கியநாடுகள் சபையே அங்கீகரிக்கிறது. இந்தளவுக்கு இன்றைக்கு உற்பத்தி சாத்தியமாகி இருக்கிறது. தொடக்க காலத்தில் மனித சமுதாயம் அடிப்படையான வாழ்வுக்குத் தேவையான வெகு எளிமையான கருவிகளையே உருவாக்கத் தொடங்கியது.
உயிர் வாழ்வதற்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், மனித சமூகத்தின் பரிணாமத்தை காட்டுமிராண்டி சமூகம் (Savagery), அநாகரிக சமூகம் (Barbarism), நாகரிக சமூகம் (Civilisation) என மூன்று சகாப்தங்களாக மார்கன் பிரித்திருந்தார்; எங்கெல்ஸும் அதையே பின்பற்றுகிறார். காட்டுமிராண்டி சமூகமூம், அநாகரிக சமூகமும், கடைக்கட்டம் (Lower stage), இடைக்கட்டம் (Middle stage), தலைக்கட்டம் (Upper stage) என அவற்றுக்குள் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. காட்டுமிராண்டி சமூகமூம், அநாகரிக சமூகமும் நாகரிக சமூகத்தின் தோற்றத்துக்கான அடித்தளத்தை இட்டுச்சென்றன.

காட்டுமிராண்டி சமூகம்

முதல் சகாப்தமான ’காட்டுமிராண்டி’ சமூகத்தின் முதல்கட்டம் உபயோகத்திற்குத் தயாராக இருந்த பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதில் இருந்து ஆரம்பமாகிறது. இடைக்கட்டத்தில் நெருப்பை உருவாக்கத் தெரிந்துகொள்கிறார்கள், விலங்குகளை வேட்டையாடுவதற்கு கல்லால் ஆன பட்டைத்தீட்டப்படாத ஈட்டி முதலான எளிய ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். தலைக்கட்டத்தில் வில், நாண், அம்பு முதலிய ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். காய்ந்த புற்கள், கொடிகள், நார்களைக் கொண்டு நார் ஆடைகளைக் கைகளால் தறியின்றி பின்னி உடுத்துகிறார்கள். கூடைகளைச் செய்கிறார்கள். மரத்தால் ஆன பாண்டங்களைச் செய்கிறார்கள். கீற்றால், மரப்பலகைகளால் குடிசைகள் கட்டத் தொடங்குகிறார்கள்.
வாழ்விடங்களைப் பொறுத்தவரை இந்த சகாப்தம், காடுகளில் மரங்களில் இருந்து இறங்கிவந்து மனிதர்கள் வாழத்தொடங்கியது முதல் (கடைக்காலம்), கிராமங்களாக குடியமைத்துத் தங்கத்தொடங்கிய நிலை (தலைக்காலம்) வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

இந்தத் தொடக்ககால மனிதசமூகத்தில் பெரிய அளவில் உற்பத்தி நடக்கவில்லை. காய்கனிகள், கிழங்குகளைச் சேகரித்து, விலங்குகளை வேட்டையாடி, மீன்பிடித்து அடிப்படையான உணவுத்தேவையை உறுதிசெய்து பிழைத்திருப்பது என்றளவில் மட்டுமே அன்றைக்கு மனிதசமூகம் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் குழு முழுமைக்கும் தேவையான உணவை உறுதிசெய்வது என்பதே பெரும்பாடாக இருந்தது. ‘உபரி உற்பத்தி’ என்பது அறவே இல்லை. வர்க்கங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இந்த மனிதகுழுக்களில் உடைமைகள் பொதுவாகவே இருந்தன. உடைமைகள் அனைவருக்குமானதாக, பொதுவானதாக இருந்ததாலேயே, இந்தச் சமூகங்கள் ’ஆதிப்பொதுவுடைமைச் சமூகம்/ புராதனப்பொதுவுடைமைச் சமூகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

உடைமைகள் என்றால் பெரிய சொத்துகள் அல்ல. ”வீடு, உடை, சாதாரண அணிகலன்கள், படகுகள், ஆயுதங்கள், எளிமையான வீட்டு உபயோகப் பாத்திரங்கள் போன்ற உணவு உற்பத்தி, சேகரிப்புக்குப் பயன்படும் கருவிகள்” என எளிமையான, தேவைகளுக்கான பொருட்களே இந்தக் குழுக்களின் உடைமைகளாக இருந்தன.
இந்தச் சமூகங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்குத் யார் தாய் என்று மட்டுமே உறுதியாக நிறுவ முடியும், தந்தை யார் என நிறுவ முடியாது. இதனால் ‘வம்சாவளி’ என்பது ‘தாய்வழியாக’, ‘தாய்-உரிமை’ என்ற அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுவந்தது. இதனால் பெண்கள் மதிப்பு மிக்க நிலையில் இருந்தார்கள்.

அநாகரிக சமூகம்

இந்த இரண்டாம் சகாப்தத்தில், மண்பாண்டங்கள் செய்தல், மிருகங்களை வீட்டுவிலங்குகளாக வளர்க்கும் முறை, இரும்பு சாதனங்கள் செய்யும்முறை எல்லாம் வருகின்றன. ஆடு மாடுகளை வளர்த்தல், விவசாயம் செய்வது, தறி நெசவு செய்வது, உலோகக்கருவிகள், கைவினைப்பொருட்கள் செய்வது என மனிதசமூகத்தின் உற்பத்தி வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.
மனிதர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரிக்கவே, அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மனிதர்கள் செலுத்திய கூட்டு உழைப்பும் அதிகரித்தது. இந்த வளர்ச்சிப்போக்கில் மனிதர்களின் அறிவும் தொடர்ச்சியாக விரிவடைந்துகொண்டே வந்தது. மனிதர்கள் இயற்கை மூலப்பொருட்களின் பண்புகளையும், இயற்கையின் இயக்கத்தையும் மேன்மேலும் ஆராய்ந்து, புதிய புதிய உற்பத்திக்கருவிகளை உருவாக்கி உற்பத்தித்திறனை அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அன்றாடம் செய்துவந்த வேலையின் அளவும் கூடிக்கொண்டே வந்தது. சமூக அளவிலான வேலைப் பிரிவினை தோன்றியது.
அநாகரிக சமூகத்தில் ஒரு கட்டத்தில் மனிதசமூகம் பிழைத்திருப்பதற்குத் தேவையானதைவிட அதிகமாக உற்பத்தி செய்யும் நிலை உருவாகத்தொடங்கியது. சமூகத்தில் உபரியை உற்பத்தி செய்யும் நிலை உருவானது. மேலும் அதிகமான உழைப்புச் சக்தி தேவைப்பட்டபோது, யுத்தத்தில் பிடிபட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்.

“ஆகவே, அன்றிருந்த பொதுவான வரலாற்று நிலைமைகளில், முதல் மாபெரும் சமுதாய வேலைப் பிரிவினை என்பது, உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, அதனால் பொருட்செல்வத்தை அதிகப்படுத்தி, உற்பத்தித் துறைகளையும் விரிவுபடுத்தி, அதன் பின்னே அவசியத் தேவையாக அடிமை முறையையும் இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தது. ஆக, முதல் மாபெரும் சமுதாய வேலைப் பிரிவினையிலிருந்து முதன் முதலாகச் சமுதாயத்தின் மாபெரும் வர்க்கப் பிரிவினை தோன்றியது; எஜமானர்கள் -அடிமைகள், சுரண்டுகிறவர்கள் – சுரண்டப்பட்டவர்கள் என்று இரண்டு வர்க்கங்கள் உண்டாயின” என்கிறார் எங்கெல்ஸ்.

தனிச்சொத்தோடு தோன்றிய பெண்ணடிமைமுறை

காட்டுமிராண்டி சகாப்தத்தில் வேட்டையாடி, மீன்பிடித்து வாழும் நிலையைக் கடந்து, அநாகரிக சகாப்தத்தில் மேய்ச்சல் சமூகமாக மாறிய காலத்தில்தான், மனிதர்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான உற்பத்தி என்பதைக் காட்டிலும் உபரியான உற்பத்தியை முதன்முதலாகக் கண்டார்கள். இந்தக் காலகட்டத்தில் மந்தைகள்தான் குழுவின் வாழ்வாதார வளங்கள். முதலில் அவை குழுவின் பொதுச்சொத்தாகவே இருந்தன. என்றாலும், காலப்போக்கில் குழுக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்து வழிகாட்டியவர்கள் இந்தப் பொதுச்சொத்துகள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட்டது. தனிச்சொத்தின் தோற்றம் உருப்பெறத் தொடங்கியது.
உற்பத்தி முறை என்ற அடிப்படையில், கால்நடைகள் என்கிற புதிய சொத்துகள் – புதிய உற்பத்தி சாதனங்கள், பொதுவுடைமை என்கிற முந்தைய உடைமை நிலையில் இருந்து மாறி தனியுடைமைகளாயின. வர்க்கங்களின் வளர்ச்சியானது பாலினம் தொடர்பான முக்கியமான சமூக மாற்றங்களையும் உள்ளடக்கியே நிகழ்ந்தது.
மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கூட்டிச் செல்லும் வேலையை ஆண்கள் செய்துவந்தார்கள். பெண்கள் வீட்டளவில் மண்பாண்டங்கள் செய்வது, நெசவு செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்கள். மந்தைகள் எனும் சொத்துகள் மீது தனிமனிதர்களின் ஆதிக்கம் என்ற நிலை உருவானபோது, ஆண்களின் கட்டுப்பாட்டில் மந்தைகள் இருந்தமையால், அவை ஆண்களின் சொத்துகளாக மாறின. இவை மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பரிவர்த்தனை செய்வதன் வாயிலாக்கக் கிடைத்த பொருட்களும் ஆண்களின் உடைமைகள் என்றாயின. அடிமைச்சமூகம் உருவானபோது அடிமைகளும் பரிவர்த்தனை சொத்துகள் என்கிற வகையில், அடிமைகளும் ஆண்களின் சொத்துகள்தான் என்றானது.

சமூக அளவில் உடைமை முறையில் நிகழ்ந்த இந்த மாற்றம், குடும்ப அமைப்புக்கு வெளியே சமூகத்தில் ’சொத்து படைத்தவர்-சொத்துகள் இல்லாதவர்’ ’அடிமைகள்-எஜமானர்கள்’, ’உழைக்காமல் சாப்பிடுபவர்கள்-உழைத்தும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள்’ என்கிற இரண்டு வர்க்கங்களை ஏற்படுத்தியது. வர்க்கங்கள் வந்துவிட்டாலே சுரண்டல் முறையையும் கூடவே வந்துவிடும் அல்லவா? அதனால் மனிதர்கள் மனிதர்களைச் சுரண்டும் முறையும் உருவானது. தனியுடைமையாகிவிட்ட சொத்துகள் மீதான உரிமை ஆண்களிடம் போய்ச் சேர்ந்ததால், குடும்ப அளவில் ஆண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலம்படைத்தவர்களாக மாறினார்கள். குடும்பத்திற்குள் ஆண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களை ஒடுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் புதிய நிலை உருவானது.

“கால்நடைகள் ஜீவனத்துக்கான புதிய சாதனம் என்றானது; அவற்றை தொடக்கத்தில் பழக்கிப் பின்பு பராமரிக்கும் வேலையை ஆண்கள் செய்து வந்தார்கள். எனவே, கால்நடைகள் ஆண்களுக்குச் சொந்தமாயின. அவற்றிற்குப் பரிவர்த்தனையாகப் பெற்ற சரக்குகளும், அடிமைகளும் அவர்களுக்கே சொந்தம் என்றானது. உற்பத்தியிலிருந்து இப்போது கிடைத்த மிச்சம் அல்லது உபரி எல்லாம் ஆணுக்குரியதாயிற்று. அதை அனுபவிப்பதில் தான் பெண் பங்கு கொண்டாள்; அதன் உடைமையில் அவளுக்குப் பங்கேதும் இல்லை” – இவ்வாறு குடும்ப அளவில் சொத்துகள் ஆண்கள் கைக்கு மாறின என்பதை எங்கெல்ஸ் விளக்குகிறார்.

மேய்ச்சல் சமூகமாக மனிதசமூகம் பரிணமித்த காலத்தில் பெண்கள் வீடுகளில் அடிமையாக்கப்பட்டதை எங்கெல்ஸ் இப்படி நுணுக்கமாக விவரிக்கிறார்:”’காட்டுமிராண்டித்தனமான’ போர்வீரனும், வேட்டைக்காரனும் வீட்டில் இரண்டாம் ஸ்தானத்தை வகித்துப் பெண்ணுக்கு முதலிடம் தருவதில் திருப்தியடைந்தார்கள். ’மென்மையடைந்த’ இடையனோ, தனது செல்வத்தைக் காட்டி முதலிடத்தை முண்டியடித்துப் பிடித்துக்கொண்டு பெண்ணை இரண்டாம் ஸ்தானத்துக்குத் தள்ளிவிட்டான்” என்கிறார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்!வர்க்க சமூகத்தின் வளர்ச்சி குடும்பத்தின் வடிவத்தையே மாற்றிவிட்டது. எப்படியான மாற்றம் ஏற்பட்டது என்பதை அடுத்து பார்ப்போம்.

-தொடரும்…

ஆதார நூல்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
2. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *