“பெண் ஏன் அடிமையானாள்?”
தந்தை பெரியார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
பக்கங்கள்:79
₹.25
1938 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டிலேயே ” தந்தை பெரியார்” என்ற பட்டம் ஈ.வெ.ரா அவர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது என்று புரிந்து கொள்ள இக்கட்டுரை நூல் ஒன்றே அத்தாட்சி என்று நிச்சயமாக கூறலாம் என்றே கருதுகிறேன்.
1942 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட 10 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1992 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீட்டின் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
முத்தான பத்து (10) அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் மிக நேர்த்தியாக, எவ்வித தயவு தாட்சியமின்றி தெள்ளத் தெளிவான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
1.கற்பு
2. வள்ளுவரும் கற்பும்
3.காதல்
4.கல்யாண விடுதலை
5.மறுமணம் தவறல்ல
6.விபச்சாரம்
7.விதவைகள் நிலைமை
8.சொத்துரிமை 9.கர்ப்பத்தடை
10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும்
ஆகிய தலைப்புகளில் அவர் அளித்துள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் எக்காலத்திற்கும் பொருத்துவனவாகவே உள்ளன எனலாம். இந்நிலைமைகளில் பல இக்காலத்திலும் தொடர்வதும் வருந்தத்தக்கதே.. அக்காலத்திலே இக்கருத்துக்களை முறையாக செவிமடுத்து செயல்படுத்தாமையே முதற்காரணமென்றால் அது மிகையாகாது தானே!
பெண் அடிமைத்தனத்தைக் கையகப்படுத்தி வலுவூட்டத் துடிக்கும் மதத்தையும் ஆண்களையும் சாடுவதுடன் நிற்காமல் பெண்களையே காரணங்களாக்கி சதிராடியுள்ளார் பதிவிரதைகளை தந்தை பெரியார்!
சொத்துரிமை குறித்து அவர் முன் வைக்கும் வாதங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை ஏனோ இன்றளவும் ஆண்களுக்கு வராமல் இருப்பது வெட்கக்கேடானது தானே!
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னதாகவே பெண்கள் சுதந்திரத்தின் இன்றிமையாமையை வலியுறுத்திய விதத்திலேயே பெரியார் மிளிர்கிறார் எனலாம். பெண் அடிமைத்தனத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தையும் பொருத்திப் பார்க்கும் மனநிலை போற்றத்தக்கதே.
“பெண் விடுதலை” என்று பெயர்சூட்டாமல் “பெண் ஏன் அடிமையானாள்?” என்று வினாவைத் தலைப்பாக்கி அதற்குரிய நெத்தியடி பதில்களாக காரணங்களை வரிசைப்படுத்தி, தீர்வுகளை நோக்கி சிந்திக்கும் வழிமுறைகளை அளிந்த வகையில் இந்நூல் வோறொரு தளத்தில் உயர்ந்த இடத்தை அடைகிறது எனலாம்.
“ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கிய கைத்தடி” - தந்தை பெரியார் நினைவு  தின சிறப்பு பகிர்வு! #Periyar
“திருமண விடுதலையே” ஒரு புரட்சி தான். அதிலும் “கர்ப்பத்தடை” என்பது மாபெரும் புரட்சியே. இதனை நோக்கி நகரும் காலம் தான் எக்காலமோ??? ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் மலிந்து கிடக்கும் வலிந்து திணிக்கும் இந்த காலத்தில் நடைபெறும் சாத்தியம் உள்ளதா என்பது கேள்விக்குறியே…
“ஏனோ புனிதப் பெண்ணாய் பிறந்தோம்; பத்தாம்பசலியாய் வளர்ந்தோம்;ஏதேதோ படித்தோம்; காதல் மணம் புரிந்தோம்; முடிந்தால் பணியும் பெற்றோம்; பிள்ளைகள் பெற்றுக் கொஞ்சினோம்; இறுதி வரை ஆணினை அண்டியே வாழ்ந்து மடிந்தோம்!” என்பது தானா பெண்கள் விடுதலை என்ற வாதத்தை முன் வைக்கிறார் பெரியார்.
“பெண்ணியம்” என்று பேசித் திரியும் நமது செயல்கள் யாவும் உண்மையில் பெண்கள் விடுதலை தானா என்று நம் முகத்தில் அடித்து சிந்திக்கத் தூண்டுவதே இந்நூல்.
ஒவ்வொரு ஆணும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமன்றி ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பூசிக்க வேண்டிய நூலே இது. பூசிக்க என்றவுடன் வழக்கம்போல் மதச்சாயம் பூசிவிடாதீர்கள்.
இந்நூலிலுள்ள முத்திரைக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பெண்ணும் மனத்தால் உள்வாங்கி மூளையில் சலவை செய்து வாழ்வில் நேர்த்தியாக்கி பெரியார் காட்டிய புதுமைப் பெண்ணாக வாழ வேண்டும் என்பதே எனது அவா.
மேடை பேச்சுக்கும் தலைமை பண்புக்கும் சம்பந்தம் கிடையாது - தந்தை பெரியார் |  Periyar Speech on Stage Speech and orators - Tamil Oneindia
மிக மிக இளவயதிலேயே இந்நூலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே சாலச்சிறந்ததாக கருதுகிறேன். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு நிறைவிலேயே இதுகுறித்த விழிப்புணர்வைத் தூண்டுவது அவசியமே…
சற்றே அயர்ச்சியூட்டும் எழுத்துநடை  என்ற போதிலும் சமூகத்தை எழுச்சியூட்டும் பாதையில் முன்நகர்த்த உதவும் மணியான நூலே இது.
வாருங்கள் வாசிப்போம்! வானமளவு பெண்களை உயர்த்த முயல்வோம். ஆண்மை அழியுமோ?
நன்றி.
“பெண் ஏன் அடிமையானாள்?”
தந்தை பெரியார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
பக்கங்கள்:79
₹.25
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *