“மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்;

அது ஒடுக்கப்பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு;

அதுஒருஉயிராகவேமதிக்கப்படாதவர்களின்உயிர்;

அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும் ஒரு மருந்து.”

  • கார்ல் மார்க்ஸ்

மதம் குறித்த மார்க்ஸின் விளக்கம் உலகின் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். மதத்தின்பால் மனித குலம் ஈர்க்கப்பட்டிருப்பதற்கான காரணம் இதுவே. இவர்களுக்கிடையில் கோடிக்கணக்கான மதமறுப்பாளர்களும் வாழ்கிறார்கள். குழந்தைகள் பிறக்கும்போதே மத அடையாளங்களுடன் பிறப்பதில்லை. தங்களுடைய குடும்பம் அல்லது சமூகம்  பின்பற்றிவரும் மதத்தையே ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள். பதின்பருவத்தைக் கடந்த பின்னர் பிற மதக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் மதம் மாறலாம் அல்லது நாத்திகத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதமறுப்பாளர் ஆகலாம். அதற்கான நியாயங்களை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கிருக்கும் இந்த உரிமையை சிவில் சமூகம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயகப் பண்பாகும். தாங்கள் சார்ந்த குடும்பம் அல்லது சமூகத்தினரிடமிருந்து வேறுபட்டு மதமறுப்பாளர்களாக மாறிய சிலர் தங்களின் நியாயங்களைப் பதிவு செய்துள்ளார்கள். உலகுக்குப் பிரகடனம் செய்துள்ளார்கள்.

கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த பெட்ரண்ட் ரஸ்ஸல் ‘நான் ஏன் ஒரு கிறித்துவன் அல்ல’ என்ற கட்டுரையில் கிறித்துவ மதத்திலிருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இதே போல் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இபன் வராக் ‘நான் ஏன் ஒரு முஸ்லீம் அல்ல’ என்ற நூலையும், இந்துக் குடும்பத்தில் பிறந்த காஞ்ச அய்லைய்யா ‘நான் ஏன் ஒரு இந்து அல்ல’ என்ற நூலையும், இந்துக் குடும்பத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் ‘நான் ஏன்  நாத்திகன் ஆனேன்’ (Atheist) என்ற நூலையும் எழுதியுள்ளனர். இவ்வரிசையில் வந்தனா சொனால்கர் ‘நான் ஏன் ஒரு இந்துப் பெண் அல்ல’ என்ற இச்சிறு நூலினை ஆங்கிலத்தில் எழுதி தன்னுடைய நிலைபாட்டைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

வந்தனா சொனால்கர் மும்பையிலிருக்கும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில் (Tata Institute of Social Sciences) பெண்ணியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெண்ணியம் குறித்தும் சாதியம் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகின்ற வந்தனா நிறைய களஆய்வுகளை மேற்கொள்வதோடு செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார். ஆர்.பி.மொரே மராத்தியில் எழுதிய ‘ஒரு தலித் பொதுவுடைமைவாதியின் நினைவுகள்’, எனும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சிங்கப்பூரில் வங்கி மேலாளராக தந்தை பணியாற்றியதால், வந்தனா தனது வளரும் பருவத்தை சிங்கப்பூரில் கழித்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்துவிட்டு மகராஷ்டிராவில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.

வந்தனா மகராஷ்டிராவில் இருக்கும் ’சந்திரசேனிய கயஸ்தா பிரபு’ எனும் உயர்சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துளசி எனும் மனித உரிமைச் செயற்பாட்டாளரை வந்தனா சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தம்பதிகள் இருவரும் கரங்கோர்த்து சாதி வன்முறைகளுக்கு  எதிரான இயக்கங்களில் கலந்து கொள்கின்றனர். அவுரங்காபாத்தில் இருக்கும் பாபாசாகிப் அம்பேத்கர் – மரத்வாடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் (1979-2013) மரத்வாடா பகுதியில் நடந்த அனைத்து சாதியக் கொடுமைகளுக்கு எதிரான இயக்கங்களிலும் வந்தனா பங்கேற்றுள்ளார். மார்க்சீயத்திலும், அம்பேத்காரியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட வந்தனா மதமறுப்பாளராக இருப்பதில் வியப்பேதுமில்லை.

தன் வாழ்வியல் அனுபங்களிலிருந்தே வந்தனா இந்த நூலை எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனைகள் நிறைந்தவராக வந்தனாவின் தந்தை இருந்தமையால், குடும்பத்தினர் அனைவரும் சமத்துவ சிந்தனைகளுடனே வளர்ந்தனர். வெளியுலகிற்கு வந்த பின்னரே, இந்தியாவில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியத்தையும் அதன் கொடூர நடைமுறைகளையும் வந்தனா பார்க்க நேர்ந்தது.

ஒரு நீண்ட முன்னுரையுடனும் ஐந்து அத்தியாயங்களுடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்து மதத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை வந்தனா பட்டியலிட்டுச் சொல்வதை வாசகர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ’இந்துக் குடும்பம்’ எனும் முதல் அத்தியாயத்தில் தந்தைவழிச் சமூகத்தில் குடும்பத்தின் செயல்பாடுகள் ஆண்களை மையப்படுத்தியே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட தன் தந்தையிடம் கூட ஆணாதிக்கம் மேலிடுவதை அவர் குறிப்பிடுகிறார். இந்து மதத்திலிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டாலேயே தன் கணவனின் பலவீனங்களைப் பொறுத்துக்கொண்டு கலகம் செய்திடாமல் தன்னுடைய தாய் இருந்ததை வந்தனா சிறுவயதிலேயே பார்த்திருந்தார். பொதுவாக எல்லா மதங்களும் பெண்களை ஆண்களுக்கு நிகராகக் கொள்வதில்லை என்றாலும் இந்து மதம், அதிலும் பிராமணிய இந்து மதம் பெண்களை மிகவும் கீழ்நிலையில் வைத்திருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறார். சனாதன இந்து மதம் உயர்த்திப் பிடிக்கும் மனுஸ்மிருதி பட்டியலிடும் பெண்களுக்கான கடமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்கிறார்.

மனுஸ்மிருதி   விதி (147) “ஒரு பெண் எந்த வயதிலும் (குழந்தை, இளம் பெண், முதியவள்) சுதந்திரமாகச் செயல்படக்கூடாது என்றும்;

விதி (148) “குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், இளமையில் கணவனுக்கும், கணவன் இறந்தபின் மகனுக்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டும் என்றும்;

விதி (154) கணவன் நல்லொழுக்கங்கள் இல்லாமலும், வேறு பெண்களுடன் தொடர்புடனும், தீய பழக்கங்களுடனும் இருந்தாலும் மனைவி அவனுக்கு நேர்மையாக நடந்து அவனைக் கடவுளாகக் கும்பிட  வேண்டும் என்றும்;

விதி (155) கணவனுடன் இணைந்தே மனைவி எந்தவொரு சடங்கையும், நோன்பையும் மேற்கொள்ள வேண்டும் என்றும்; கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனைவி அதற்காகவே  விண்ணுலகில் கொண்டாடப்படுவாள் என்றும் கூறுகிறது.  இந்து மதம் போற்றும் நீதி நூலான மனுஸ்மிருதி பெண்ணுக்கு ஒரு நீதியையும், ஆணுக்கொரு நீதியையுமே வகுத்துள்ளது.

அடுத்து வரும் அத்தியாயங்களில் சாதியத்தில் தோய்ந்துள்ள இந்து மதத்தின் பலவீனத்தை வந்தனா சுட்டிக் காட்டுகிறார். வேறெந்த மதங்களிலும் இல்லாத சாதியப் படிநிலைகளை இந்து மதம் கொண்டுள்ளது. பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ள சூத்திரர்கள் மற்ற மூன்று பிரிவினருக்கும் சேவை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் கருதப்படுகின்றனர். பெண்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் இழைக்கப்படும் வன்முறைகள் மனுஸ்மிருதியில் நியாயப்படுத்தப்படுகின்றன. மனுஸ்மிருதியில் கூறப்படும் ஒழுக்கவிதிகளும், அறநெறிக் கோட்பாடுகளும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்திடாமல் சாதிய படிநிலைக்கு ஏற்ப வேறுபட்டிருப்பது  மற்றுமொரு அநீதியாகும். பிராமணனுக்கான தர்மமும், சூத்திரனுக்கான தர்மமும் ஒன்றல்ல என்பதே மனுநீதியாக இருக்கிறது.

இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் இடையிலான வேறுபாடு குறித்துப் பேசும் அத்தியாயத்தில் சாதி எனும் வலைக்குள், குறுகிய வட்டத்துக்குள், சிறைக்குள் அடைபட்டவர்களாகவே இந்துக்கள் வாழ்ந்து வருவதை சுட்டிக் காட்டுகிறார். சாதியைத் தாண்டிய திருமணம் அவர்களுக்குச் சாத்தியமில்லை. எனவே சாதிய விதிகளுக்கும், ஒழுக்க நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் என்றாகியுள்ளது. சாதி ஒழிப்பு ஒன்றே இந்தியாவை உய்விக்குமென அம்பேத்கர் நம்பியதன் காரணம் இதுவே.

இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாத கோட்பாடாக வர்ணாஸ்ரமம் இருப்பது  மிகப் பெரிய அவலமாகும். ”தீண்டாமை குற்றம் மட்டுமல்ல பாவமும் கூட” என்று சொன்ன மகாத்மா காந்தியால் இந்து மதத்தின் நால்வர்ணக் கோட்பாடான வர்ணாஸ்ரமத்திற்கு எதிராகப் பேச முடியவில்லை. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியதைப் போல் காந்தி சாதி நல்லிணக்கத்தை வலியுறுத்தினாரே தவிர சாதி ஒழிப்புக்கு ஆதரவாக அவர் குரல் கொடுக்கவில்லை. இந்துமதம் – சாதி – ஆணாதிக்கம்  இம்மூன்றும் பிரிக்க முடியாத இணைப்புடன் இருப்பதை உணர்ந்தே அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் பௌத்த மதத்திற்கு மாறியதை வந்தனா சுட்டிக் காட்டுகிறார்.

2014இல் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வந்தனா கவலையுடன் பார்க்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பின்னிருந்து நடத்தும் அரசாகவே மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கர் முன்னிறுத்திய இந்துத்துவம் எனும் அரசியல் கோட்பாட்டை நோக்கி நாடு விரைந்து செல்வதை ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.  இந்து மத அரசியல் என்பது வெறுப்பு அரசியலாகும். ‘நாங்கள்’ என்றும் ’மற்றவர்கள்’ என்றும் மத அடிப்படையில் மக்களிடையே பாகுபாடுவது காட்டுவது அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளித்திருக்கும் கோட்பாடுகளுக்கு எதிரானது அல்லவா என்ற கேள்வியை எழுப்புகிறார். இந்தியப் பிரிவினையின் போது இந்தியா என்றென்றும் மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தானே 1947இல் பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்து செல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்திட கோடிக்கணக்கான முஸ்லீம் குடும்பங்கள் முடிவெடுத்தன. அவர்களின் நம்பிக்கைகள் வீண் போகலாமா? இந்து மதத்தின் பேரால் எடுக்கப்படும் இந்த அரசியல் முடிவு எவ்வளவு தவறனாது என்பதை உணர்த்த வந்தனா விரும்புகிறார்.

1974 மே பதினெட்டு புத்த பூர்ணிமா நாளன்று இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனை (பொக்ரான் 1) நடத்தப்பட்டது. இச்சோதனை நடவடிக்கைக்கு ரகசியக் குறியீடு ”புத்தர் புன்னகைக்கிறார்” என்பதாகும். என்னவொரு கொடூர முரண்! அன்று இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்திருந்த போதிலும் அணுகுண்டுச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட அறிவியிலாளரின் திட்டமிட்ட செயலே அதற்குக் காரணம் என்பதை வந்தனா நினைவு கூர்கிறார். அதேபோல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (பொக்ரான்-2) அணுகுண்டு சோதனைக்கும் புத்த பூர்ணிமா நாளான 1998 மே பதினொன்று  தேர்ந்தெடுக்கப்பட்டதும் திட்டமிட்ட செயலாகும் என்று வந்தனா குறிப்பிடுகிறார். இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் ஆறாம் நாளை பாபர் மசூதியை இடித்து நொறுக்கியதற்கு தேர்ந்தெடுத்ததும் திட்டமிட்ட சதியே என்கிறார் வந்தனா. அன்று இடிந்தது பாபர் மசூதி மட்டுமல்ல, இந்தியாவின் மதச் சார்பற்ற கோட்பாடும் ஆகும்.

கடைசி அத்தியாயத்தில் இந்து மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளச் சுட்டிக் காட்டுகிறார். பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதோடு இவ்வன்முறைகளை நியாயப்படுத்தும் போக்கும் உருவாகியுள்ளது. இந்து மதத்துக்குள் தலித்துகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், இந்து மதத்திற்கு வெளியே இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை நியாயப்படுத்துவதுமே இந்துத்துவ அரசியலாகும்.

ஜெர்மனியிலும், இத்தாலியிலும் இருந்த ஃபாசிச அரசுகள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது போலவே இந்தியாவிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுப்பதை வந்தனா சுட்டிக் காட்டுகிறார்.

தான் ஏற்றுக்கொண்டுள்ள நாத்திக, மார்க்சீய, பெண்ணிய நிலைபாடுகளிலிருந்து தான் ஒரு இந்துப் பெண் அல்ல என்ற பிரகடனத்தை வந்தனா துணிச்சலுடனும், மனவுறுதியுடனும் பறைசாற்றுவதை, மதவாத இந்துத்துவ அரசியலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளமாகப் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இச்சிறு நூலினை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வரவிருக்கும் ஆபத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையை இந்திய அறிவுஜீவிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்.

                         — பெ.விஜயகுமார்.

  ———————————————————————-

 



4 thoughts on “’நான் ஏன் ஒரு இந்துப் பெண் அல்ல’ (Why I am not a Hindu Woman) : வந்தனா சொனால்கர் தன்னுடைய பிரகடனத்தை விளக்கிடும் நூல் – பெ.விஜகுமார்”
  1. நல்ல செறிவான அறிமுகம். ஆற்றொழுக்கான நடை. ஒரு குறை.
    ‘உயர்சாதி’ எனும் சொல் வழக்கத்தில் இருந்தாலும், முற்போக்காளரும் அதனையே பயன்படுத்துவது நெருடல். இழிசினர், தாழ்ந்த சாதி என்றிருந்ததை தாழ்த்தப்பட்ட சாதி என்றாக்கி இருக்கிறோமல்லவா.

  2. குறையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *