நூல் அறிமுகம்: பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை – அன்பூநூல்: பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை
ஆசிரியர்: திரு. வீரசோழன் க.சோ. திருமாவளவன்
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
பக்கம்: 110
விலை: 100

உண்மைக்கு அருகில் அழைத்துச் செல்லும் எதுவும் மனதோடு பச்செக்கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் ஒட்டிக்கொள்கிறது இந்த பேச்சியம்மாளின் சோளக்காட்டு பொம்மையும்.

//அன்றுமட்டும்
புத்தகங்களில் இருந்து விடுதலை செய்துவிட்டார் அப்பா
எதை வேண்டுமானாலும்
எழுதெனச் சொல்லி
தாழ்வாரத்தில் பெய்த மழையை
தாள்களில் கிறுக்கிக் கொண்டிருந்தான் மகன்//

…. இன்றைக்குப் புத்தகம் வேண்டாம்.. எதையேனும் எழுதென்று சொல்லும் அப்பாக்கள்.. பால்யத்தின் வரம். அப்படி புத்தகம் விலக்கி பேப்பரைத் தந்ததில் முளைத்தெழுந்த முதல் கவிதைக்கான தருணத்தையே.. தன் படைப்பின் பிள்ளையார் சுழியாகத் தொட்டுத் தொடர்ந்திருப்பதில் ஒரு சிறுவனுக்குள் கவிஞன் உருவான கதையோடு அறிமுகமாகிறது சோளக்காட்டு பொம்மை.

உருவமாயிருந்த போது சோளம் கொறிக்க வாராதிருந்த காக்கைக் குருவிகள்… அடித்த காற்றில் ஆடை பறக்க எஞ்சிய கூட்டை குடிலாக்கியதாக
விரியும் கவிதையில்… விழியை நிறைக்கிறது சோளக்காட்டுக்கு நடுவமர்ந்து அன்பைக் கொறிக்குமிந்த பொம்மை.

அயிரை கெண்டை கெளுத்தியென்று வைட்டமின் புதையல்களை அள்ளித்தரும் வற்றாத குளம் நினைவுகளில் மட்டுமே தழும்பும் துயரைக் கடத்துவதாக வரும்
“ஒரு குளத்தின் கதை”.. யில் வற்றிய குளத்து மீனாகத் துடித்தடங்கும் கம்மாய்க் கரையின் விசும்பலொலியில்..
நம் செவிப்பறை அதிர்கிறது.

இருபது ரூபாய்க்கு எதையேனும் வாங்கிக் குடித்துவிட்டு கம்புக்கும் சோளத்துக்குமாக ஏக்கம் பாரித்துக் கிடக்கும் நகரத்து நாக்குகளைப் பதம் பார்த்துவிட்டுச் செல்கிறது கரக்காட்டில் பூத்த கம்பு ருசியும் புதுக்கிணறில் பூத்த சோளத்தின் வாசமும்.//வறண்ட பூமியெங்கும்
விளம்பரப் பதாகைகள்
விளைச்சலில்லா பூமியில்
விலைபோகிறது நிலம்//

// முகமூடியில்லாமல்
இருப்பது
கருவறையிலும்
பால் பல் சிரிப்பிலும்//

// மகன் தங்கம் போடுவான்னு
அவ கழுத்து
வெறுமையா உலகு சுத்துது//

// வாழ்வைப் புரட்டிப் போட்ட
நுண்கிருமி
சொந்த ஊரில் உயிரை விட
கையிலேந்திச் செல்கிறது
கல்லறையை//

// புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக்
குழந்தைகளைக் கிழித்துப் பார்க்கின்றன//

//வேனிலன் இட்ட முத்தச் சுவடுகளை
கசாப்புக்காரன் வெட்டருவா
அறிந்திருக்கவில்லை//

// கிராமத்துத் திண்ணை வீட்டு
சிறுமிகள் எப்போதும்
கசாப்புக்குப் போகும் கோழிகளே//

… சோளக்காட்டின் பாதையெங்கும் இப்படியான முட்களைப் பதுக்கி வைத்திருக்கின்ற சொற்களின் லாவகத்தில்
நறுக்கென்று தைத்துவிட்டுப் போகிறது உண்மையின் சூடு.

பணி நிமித்தம் இடம்பெயர்ந்து வார இறுதியில் கூடடையும் இயந்திர முகத்தின் கையில் கிடைக்கும் ஒற்றை ஞாயிறும் கூட.. வந்துபோன சுவடு தெரியாது மின்னலெனக் கரைவதை சொல்லில் விரித்துத் தேம்புகிறது
“தினங்களின் மாலைப் பிரசங்கம்”.

“வேணிற்காலம் விளையும்” கவிதை..
வெறும் கவிதையல்ல…
ஆத்தா “வேணியின் காலம் விரட்டியடித்த
வெறுமையில் விளைந்த வித்துக்களை”
சோழி உருட்டுகிறது சொற்களில்.

// அம்மாவின் தலைக்கு
எலுமிச்சை மரம்
எத்தனை முள் மகுடம்
சூட்டியதென்ற கணக்கு
தெரியவேயில்லை//

// விலைபோகா எலுமிச்சை
அம்மாவின் ஹார்லிக்ஸ் பாட்டிலில் ஊறுகாயாக இடம்மாறும்//

…. இப்படியாக வரிவரியாய் வார்த்தைகளுக்குள் எட்டிப்பார்க்கும் .. ஒரு தலைமுறையைச் சுமந்தலைந்த தாயின் எலுமிச்சை வியர்வையைத் தரிசித்த கணத்தில்… தன்னிச்சையாய் நீர்மாலை கோர்த்துக்கொள்கின்றன நம் விழிப்பாவைகள்.பெளர்ணமி வாசத்தில் சிவந்து சிரிக்கும் மருதாணியும், பேரப் பிள்ளைகளின் பால்யத்தைச் செதுக்கும் தாத்தாக்களும்,
பிறந்த குழந்தையின் வடிவைத் திருத்தும் அம்மம்மாக்களும், ஆலமரக்கரையோரம் வெளையாண்ட டவுசர் கதைகளும், கால்ப் பரீட்சை அரைப் பரீட்சைக் காலங்களும், பால்யத்தின் பைகளை நிறைத்த பம்பரமும் சப்பரமும், தாயாய்த் தூளியாட்டும் மரப்பாச்சியும், பால்யங்களைச் சுமந்த பாலமுருகன் கொட்டகையும், முருங்கைக்குள் முகிழிந்து சிரிக்கும் நோய் தீர்க்கும் சாமியாக வேணித்தாயுமாக… பால்யத்தோடு நாம் இழந்தது அத்தனையையும் இழுத்து வைத்து நம் கண் முன்னே களமாட விட்டு வேடிக்கை செய்கிறது.. இந்த சோளக்காட்டுப் பொம்மை.

நீளும் இரவும், மீளும் புத்தனும், சூட்டில் சாதிமத பேதம் பார்க்காத தேநீரும்,
ஓடியே காலம் விரட்டும் கடிகார முட்களும், நெஞ்சக் குளத்தில் புழுதி பறக்க ராணி வரும் சதுரங்கமும்,
ஒற்றைக்கால் சிற்பமாய் ஓவியம் பேசும் மரங்களும், நினைவுகளைத் தாங்கும் ஆணிகளும், பூனையும் வேழமும் காக்கைக் குருவி கன்றென …
சோளக்காட்டு பொம்மையின்
பக்கங்களெங்கும்.. கவிஞரின்
விரலிடை வழியும் சொற்கள்
அத்தனைக்கும் சிறகு முளைத்துக் கொள்கின்றன.

// எப்போதும்
தெருவின் மீதே இருக்கும்
அங்கம்மாக் கிழவியின்
அரிவாள் கண்//

….வாசிக்கும்போதே.. கண்ணிலாடிச் செல்கின்றனர் அவரவர்களின் நினைவுச் சுவடாய் அரிவாள் கண் துரத்தும் அங்கம்மாக் கிழவிகள்.

இப்படி.. ஒவ்வொரு வார்த்தையிலும் வரிகளிலுமாக.. வாசிப்பவருக்குத் தன்னையே உணரும்
நெகிழ்வுத் தடங்கள்… தடமெங்குமாய்
உரசிப் போகின்றன.

//மீதமுள்ள கதைகள்
நாளை என் பெயரனுக்காக
இருக்கலாம்//

….வீட்டையும் காட்டையும்
தாத்தனையும், ஆச்சி பேச்சியையும், தாயையும் தகப்பனையும், வெண்டைக்காயின் ஆபரணத்தில் அழகு காட்டும் தங்கையையும், அசோகாவையும் வேனிலனையும், வயலையும் வெயிலையும், மழையையும் காற்றையும், பள்ளியையும் ஆட்டையும் மாட்டையுமாக … மனதோடு சுமந்து திரியும் தான் பிறந்த மண்ணையும் தன் மக்களையும் தீரத்தீர அச்சுக்களில் கோர்த்தெடுத்து.. அந்த மண்ணில் இவர் வாழ்ந்துவிட்டுப் போனதற்கான வரலாற்றை காலாகாலத்துக்குமாகப் பொறித்துக்கொண்டன சோளக்காட்டுப் பொம்மையின் சுவர்கள். இன்னும் மீதிக் கதைகளை நம் பெயரன் பெயர்த்திகள் படிக்கலாம்.

வார்த்தைகளோடு நம்மை அந்நியப்படுத்திவிடும் தொல்லிய
சொற்களென்று எதையும் எடுத்தாளாது..
தாத்தன் பாட்டி அம்மை அப்பனோடு பால்ப்பிடித்து வளர்ந்த வேர்ப்பிடித்த எழுத்தோவியங்களில் தோளணைத்து அழைத்துச் செல்கிறது சோளக்காட்டுப் பொம்மை.அணிந்துரை அளித்திருக்கும் சாகித்ய அகாதமி விருதாளர் ஐயா சா. தேவதாஸ் அவர்களின் ஆப்பிரிக்காக் கிளியின் கதை..

// சுதந்திரம் சொல் அல்ல
வேட்கை//
எனும் வரிகளுக்கு.. இன்னும் ஆழப் பொதித்திருக்கிறது அர்த்தத்தை.

எழுத்துலகப் பேராசான் ப.திருமாவேலன்
மற்றும் ஐயா ஆரூர் தமிழ்நாடன் ஆகியோரது வாழ்த்துரைகள் மிளிரும் மணிமகுடத்தில்… ஒளிர்கிறது பொம்மை.

ஹாசிப்கான் அவர்களின் விரலோவியத்தில்… காக்கைக் குருவி கதிரவனுடனான அட்டைப்படத்துச் சோளக்காட்டுப் பொம்மை ஆயிரமும் பேசுகிறது கருத்தோவியமாய்.

வேட்டுவம் நூறில் வியந்து வியந்து தடவிப் பார்த்த திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் கோட்டோவியங்கள் கம்பீரம் மிகு வேழமும் மறியுமாக
சோளக்காட்டுப் பொம்மையையும்
பிரமிப்பில் நிறைத்திருக்கின்றன.

நாம் புழங்கி விழுங்கிச் செரித்த செவக்காட்டையும் கரிசக்காட்டையும் .. மனம் மணக்கும் மனிதர்களின் முகவரிகளையும்.. மண்வாசனை மணக்க மணக்கப் படையலாக்கியிருக்கும் “எதார்த்த மொழிக் கவிஞரின்” முதல் பிரசவத்திற்கு
இதயமார்ந்த வாழ்த்துகள்.