Pitchumani Two Poems ( Order Order...., Athu Yaar ) in tamil language. Book day website is Branch of Bharathi Puthakalayam



1.ஆடர்ர்.. ஆடர்ர்..
********************

வானத்தில் பயங்கர சப்தம்!..
இடியென்று நினைத்தேன்
ஆனால் இடி இல்லை..

கூரையில் ஓட்டை விழுவது போல்..
அந்த சப்தத்தால் வானத்தில் ஓட்டை விழுந்திருந்தது.

ஒரு ஆள் மட்டும் குதிக்கும் அளவுதான் அந்த ஓட்டை இருந்தது.
சொல்லி வைத்தது போல்
ஓர் உருவம் பூமி நோக்கிக் குதித்தது.

என்ன ஆச்சரியம் அந்த உருவம் பூமியில் விழுந்தும்
பூமி எந்த சலனமும் இல்லாமல் இருந்தது.
ஆனால் உருவம் வேகமாய் செயல்பட்டது.
விழுந்த களைப்பு கூட அதற்கு ஏற்படவில்லை..
விழுந்த வேகம் போல் நடையுமிருந்தது

ரோட்டில் கழிவு நீர் ஓடையில்..கையால் அடைப்பெடுத்தவரை
அந்த உருவம் கவனிக்க வாய்ப்பே இல்லை
அவ்வளவு வேகமாய் சென்றது..
குறுக்கே வந்த நகர பேரூந்து..
நகர முடியாமல் சென்றது..
அந்த உருவத்திற்கு வசதியாய்ப் போனது..

ரோட்டின் ஒருபுறத்தில்
நான்கு காவலர்..
அலங்கரிக்கப்பட்ட பாடையில்
ஒரு பிரேதத்தைத் தூக்கிக்கொண்டு ஓடினர்..
அவர்களுக்குப் பின்னாலேயே
ஒருவன் தன் மனைவியின் பூத உடலை
தோளில் தூக்கி வர
அவன் கைப்பிடித்து குழந்தையொன்று
அழுது கொண்டே வந்தது..
அந்த உருவம் இவற்றைக்
கவனிக்க நேரமில்லை போலும்..
வேகமாய் நடப்பதில் மட்டும்
கவனம் செலுத்தியது.

அருகே,குறுக்கே
எதிரே.. தூரத்தில். எதையும்
அந்த உருவம் கணக்கில் கொள்ளவில்லை.
நேராக ஓர் அரங்கத்திற்குள் சென்றது.

அந்த அரங்கத்தில்
யாரும் அந்த உருவத்தை தடுக்கவில்லை.
அரங்கில் நூழைந்து..
இருக்கையில் அமர்ந்து..
அந்த உருவம் தன் கண்களில் கட்டியிருந்த
கருப்புத் துணியை அங்கிருந்த சிலைக்கு கட்டிவிட்டு..

பேச தொடங்கியது..
ஆர்ட…ர்! ஆர்ட..ர்..!! ஆர்ட..ர்!!!.



2. அது யார்?
***************
ஒரு வினோத உயிரனம்.
அதுக்கு மொழி தெரியும்..
பேசும்.
ஆனால் மனிதனில்லை.

அது
கத்தும் உறுமும்…
ஊளையிடும்.
ஆனால் மிருகமில்லை.

மனிதஉருவில்
ஒரு விசித்திர உயிரினம்.

அந்த உயிரினம் உங்கள்
அருகில்
தொலைவில்
வாட்ச்அபில்
பேஸ்புக்கில்
யூ டீப்பில்
ட்விட்டரில்
ஊடகத்தில்
எங்கும் இருக்கும்.

தேடிப்பிடிக்க தேவை இல்லை.

எது நடந்தாலும்
அதை கண்டுப்பிடிப்பதெளிது.

நீ மனிதம் சொல்
அது மதமென்று கத்தும்

நீ உரிமையென்று சொல்
அது பிச்சையென்று உளறும்

நீ சமூக நீதியென்று சொல்
அது சாதியென்று அலறும்.

நீ உழைப்பாளியென்று சொல்
அது வேலைக்காரன் என்று சிரிக்கும்

நீ பெண் என்று சொல்
அது காமமென்று ரசிக்கும்.

நீ பசியென்று சொல்
அது பாரத்மாதாகி ஜே சொல்லும்.

பிச்சுமணி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *