“ஆறாத நெஞ்சோடு”
****************************

ஒரு நாளாவது
அரசுப்பள்ளி என்ற
எங்கள் ஆலயத்திற்கு
வந்ததுண்டா நீங்கள்?

தினம் தினம்
எங்கள் தலை
கண்டதும்….

அருவியென
ஓடி வந்து….
அலை அலையாய்
வணக்கம் வைக்கும் அரும்புகளின் பாசம்
அறிவீர்களா நீங்கள்?

வகுப்பறைக்குள்
நுழையும் பிள்ளை
வயிறு நிறைந்து வந்திருக்கிறதா?

பல் விளக்கிக்
குளித்து வந்திருக்கிறதா?

தலை எண்ணெய் வைத்து
சீவப்பட்டிருக்கிறதா?

கிழிந்து போன
வீட்டுச் சூழலில் அது
கிழியாமல் வந்திருக்கிறதா?

என்றெல்லாம்
நாடி பிடித்து நலம்
விசாரித்துவிட்டு

அறிவு புகட்டும் ஆசிரியத் தாய்களை
அறிந்ததுண்டா நீங்கள்?

தகாத வார்த்தை பேசி
சண்டையிடும் சிறுசுகளை…

வகுப்பிற்கு
வெளியே நிறுத்தி…
ஆளுக்கொரு
அடி வைத்து

அது அழுது
தேம்பும் போது
அருகணைத்து

ஒழுக்கம்
சொல்லிக் கொடுத்த
அனுபவம் உண்டா உங்களுக்கு?

பிள்ளைகளைப்
பேச வைத்து.,
வரைய வைத்து..
ஆட வைத்து…
பாட வைத்து…

அதுகள்
வாங்கிக் குவிக்கும்
பரிசுகளில்…

ஆனந்தக்
கூத்தாடியதுண்டா நீங்கள்?

பிள்ளைகளைப்
போட்டிக்கு
அழைத்துப் போய்

அங்கு அவர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்காக
பொங்கி எழுந்து…

பேரிரைச்சலுடன்
சண்டையிட்டுச்
சதிராடிய
அனுபவம் உண்டா உங்களுக்கு?

பள்ளி வளாகத்தில்
மயங்கி விழுந்த பிள்ளையைத்
தோளில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்கு ஓடி
அது கண் விழித்ததும்
நிம்மதிப் பெருமூச்சு
விட்டதுண்டா நீங்கள்?

‘உங்கப் பள்ளிக்கூடத்துப் பையன
மதுக்கடை வாசலில்
பார்த்தேன் என்றோ…

உங்கப் பள்ளிக்கூடத்துப் புள்ளைய
திரையரங்க வாசலில்
ஒரு பையனோட
பார்த்தேன்’என்றோ

யாராவது வந்து சொல்லும் போது
பதறி மனம் உடைந்து
அடுத்த நாள்
பள்ளிக்கு வந்து…

குஞ்சுகளைக் காப்பாற்றத்
துடிக்கும்
ஒரு தாய்ப் பறவையாய்…

கொதித்தும்
குழைந்தும்…
அறிவுரைகளைக் கொட்டித் தீர்க்கும்…

ஆசிரிய அறத்தை
அறிவீர்களா நீங்கள்?

பள்ளி மாணவர்களில் ஒருவன்
முறைகேடாய் நடந்தானென்றால்…

வெட்கி தலைகுனிந்து
வேதனைப் பட்டு
தனக்கு நேர்ந்ததாய்…

அந்த அவமானத்தை
அள்ளி உண்டு
அழுதிருக்கிறீர்களா நீங்கள்?

ஆசிரியர் நாளில்
வகுப்பறையைத்
திருவிழாக் கூடமாக்கி
பிஞ்சு மேகங்கள் கொட்டும்
அன்பு மழையில்…

ஆறாய்ப் பெருக்கெடுத்து
கண்களில் வழிந்திருக்கிறதா
உங்கள் மனசு?

உடம்புக்கு முடியவில்லை என்றாலும்…

பொதுத் தேர்விற்குப்
பிள்ளைகளை
ஆயத்தப் படுத்த வேண்டுமென்று…

மல்லுக்கட்டி பள்ளிக்கூடம் வந்து
சண்டையிட்டு…

பாடவேளை வாங்கி
கத்திக் குரல் தீர்த்து
இல்லம் போய் இற்றுவிழும்…

எங்கள் உடன்பிறப்புகளின்
உழைப்பை அளக்க
அளவுகோல் உண்டா உங்களிடம்?

தேர்வு காலங்களில்
தின்பண்டம்
வாங்கித் தந்து

திரும்பத் திரும்பச் சொல்லி
தன் காலடியில் அமர்ந்திருக்கும்…

கடைநிலைக் கண்மணிகளைக்
கரையேற்றிவிடக்

கதறும் ஆசிரியக் குரல்களை
அறியுமா உங்கள் செவிகள்?

மண்வெட்டி எடுத்து
மாணவப் படையோடு
மரம் நட்டு
அது
தழைக்கத் தழைக்க
மனம் தழைக்கும் நம்மாழ்வார்களைப்
பள்ளிக்கூடங்களில்
பார்த்ததுண்டா நீங்கள்?

தேர்வு முடிவுகள் வருமன்று
படபடக்கும் மனதோடு..

தன்னிடம் படித்த
எல்லாப் பிள்ளையும்
தேற வேண்டுமென…

இறைவன் முன்
உருகி நின்றதுண்டா நீங்கள்?

‘ கட்டிக் குடுக்கப் போற
பொட்டப் புள்ளைக்குக்
கல்லூரிப் படிப்பெதற்கு?’

என்று
சித்தாந்தம் பேசும் பெற்றோரிடம்

‘புள்ள நல்லாப் படிக்கிறா!
அவ பெரிய ஆளா வருவா!
அவ படிப்பைக் கெடுத்துடாதீங்க’

என்று மன்றாடி விளக்கும்
ஆசிரியத் தாய்களின்
தவிப்பு புரியுமா உங்களுக்கு?

மாணவர்களின் வாழ்நிலை
உயர்வடையும் போது

‘எம் புள்ள அவன்
மருத்துவரா இருக்கான்!
மாவட்ட ஆட்சியரா இருக்கான்!
இயக்குநரா இருக்கான்!
இங்கிலாந்தில் இருக்கான்!’

என்று
பாசத்தோடு பெருமையடித்து
பயித்தியமாய் நெகிழ்ந்துண்டா நீங்கள்?

பள்ளியில் சேரும்
ஒவ்வொரு பிள்ளைக்கும்

ஆதார்அட்டை சாதிச்சான்று
குடும்ப அட்டை வருமானச்சான்று

என்று
தேடித்தேடிச்
சேகரித்து
நலத்திட்ட உதவி வாங்கிக்கொடுக்க
நைந்து போனதுண்டா நீங்கள்?

ஒவ்வொரு ஆண்டும்
மாறிக் கொண்டேயிருக்கும்
பாடத் திட்டத்தை,
தேர்வுமுறையை….

மாணவர்கள்
மனதில் கடத்த
புதுப்புது அவதாரம் எடுத்துப் போராடிப் போராடிப்
புண்ணாய்ப் போயிருக்கிறீர்களா நீங்கள்?

இப்படி ஏராளமான
காட்சிகள் உண்டு
எங்கள் ஆலயத்தில்!

இதில் ஒன்றைக்கூட
வரவு வைக்காமல்
பொத்தாம்
பொதுவாய்ப் பேசிக்
குத்திக் கிழிக்கிறீர்கள்
எங்களை!

கொரோனா நாட்களில்
பொதுத்தேர்வு தாள்களைத்
திருத்திக்
கொடுத்தது யார்?

நடக்காத பொதுத்தேர்விற்குக்
காலாண்டு அரையாண்டு தாள்களைத்
தேடியெடுத்து

தர அட்டை முகப்புத்தாளோடு
சேர்த்துத் தைத்து

மதிப்பெண் சரிபார்த்து
வருகை சரிபார்த்து
வகைவகையாய்
வேலை செய்தது யார்?

கொரோனா நிவாரணப் பொருள்களைத்
தேடித் தேடி மாணவர்களிடம்
கொண்டு போய்ச் சேர்த்தது யார்?

பாடப்புத்தகம் வழங்கி
பாடக் காணொளிகளைப்
பதிவேற்றம் செய்ய

இணையத்தோடு
இணைந்து சுற்றி
மாணவர்களின் மடிக் கணினிக்குள்
அதைக் கடத்தியது யார்?

சொந்த வாழ்க்கையில்
துன்பங்கள் எங்களைத்
துண்டு துண்டாய்
வெட்டி எறிந்தாலும்

நாங்கள் எழுந்து நிற்கும்
ஒரே இடம் வகுப்பறைதான்!

எங்களின் உரமும்
வரமும் பள்ளிக்கூடந்தான்!

இதையெல்லாம் அறியாமல்…

அரசாங்கப் பணம் வீணாவதாய்
அரை வேக்காட்டுத் தனமாய்ப் பேசி…

எங்களை அவமானப் படுத்துகிறீர்கள்!

வயல் காடென்றால்
ஒன்றிரண்டு சோடைகள் உண்டுதான்!

எங்களுக்கு
மட்டுமல்ல
எல்லா வயல் காட்டிற்கும்
இதே விதிதான்!

‘ சமூகத்தின் தலையெழுத்து
வகுப்பறையில்தான்
தீர்மானிக்கப் படுகிறது’

என்று எத்தனை அறிஞர்கள் சொன்னாலும்
ஏறாத மண்டையோடு
ஏதேதோ பேசுகிறீர்கள்!

ஒரு மாத கோடை விடுமுறை
எங்களைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் விரும்புவதுதான்!

ஆனால், கால வரையற்ற
இந்த விடுமுறை
எங்களைக் கலங்க வைக்கிறது!

கால வரையற்ற
இந்த இடைவெளியில்
எங்கள் கல்விக் கதிர்கள்
கருகிப் போய் விடுமோ?

எங்கள் குரல்கள்
காணாமல் போய்விடுமோ?

என்று
இயலாமையில்
நாங்கள் கரைவது

எட்டி நிற்கும் உங்களுக்கு
எட்டவே எட்டாது!

சிறகுகள் வெட்டப்பட்டுச்
சிறைக்குள் இருப்பது போல்

கொரோனா வாழ்வியல்
கொடுமையாய் இருக்கிறது!

பயிர்கள் இல்லாத
பாலை நிலங்களாய்
எங்கள் பள்ளிக்கூடங்கள்
காய்ந்து கருகிக் கிடக்கிறது!

திறந்தால் ஓடிவர
ஏங்கிக் கிடக்கிறோம் திருவாளர்களே!

‘உட்கார்ந்து கொண்டே
ஒரு லட்சம் வாங்குகிறோம்’,

என்று
பாமரரைத் தூண்டிப்
பேச வைத்து மகிழ்ந்த

பாலிமர் தொலைக் காட்சிக்குக்
கடைசியாய் ஒரு வார்த்தை!

அறம் கடந்த சொல்லும்
அழுகிய பிணமும்
ஒன்றென்பதை…

நாங்கள்
உணர்ந்ததால்
நீ வாரியிறைத்த
அவதூறுச்சேற்றை…

வழித்தெறிந்து விட்டு
அவசரமாய் விரைகிறோம்
எங்கள் மாணவர் சேர்க்கைக்கு..!

ஆறாத நெஞ்சோடு…

ஆசிரியன் *சந்துரு*
நெல்லை நகர் ..

(அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவு படுத்திய தொலைக்காட்சி சானலுக்கு எதிராக
அனல் கக்கும் வெளிப்பாடு இது:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *