புதிய பகுதியாகக் கவிதை முன்னோட்டத்தை அறிமுகப் படுத்துகிறோம்.
கவிஞர்கள் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
கவிதை முன்னோட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(கவிதை முன்னோட்டம் பகுதிக்குத் தங்கள் வெளிவர இருக்கும் கவிதைத் தொகுப்பினை  அனுப்புகிறவர்கள் [email protected]  என்கிற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பலாம்.  புக் டே இணைய இதழில் ஒரு அறிமுகம் செய்யப்படும். )
கவிஞர் கோ.வசந்தகுமாரின்
“முறிந்த வானவில்”
****************************
சொந்த தேசத்து அகதிகள், மனிதன் என்பது புனைபெயர், சதுரப் பிரபஞ்சம் என்கிற மூன்று தொகுதிகள் தந்தவர் தனது நான்காம் தொகுப்பாக “முறிந்த வானவில்” கொண்டு வருகிறார்.
“சதுரப் பிரபஞ்சம்” என்கிற தொகுப்பில் அனைத்துக் கவிதைகளும் குறுங்கவிதைகள்.
“மலரினும் மெல்லிது குறுங்கவிதை, சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்.  அந்த ஒரு சிலரில் கவிஞர் கோ.வசந்தகுமாரனின் இடம் முக்கியமானது.  குறுங்கவிதை எழுதுவதற்குப் பாலைச் சுண்டக் காய்ச்சுவது போல ஒரு பதமான மொழி தேவை.  சொற்களின் எடை அல்லது எடையின்மை குறித்த தெளிவு மிக முக்கியம்.  தாங்க முடியாத சுமை ஏற்றப்பட்ட ஒட்டகத்தின் முதுகில் ஒரு சின்ன வைக்கோல் துரும்பை அதிகமாகப் போட்டால் கூட ஒட்டகம் நிலை குலைந்து உட்கார்ந்துவிடும்.  குறுங்கவிதையிலும் இப்படித்தான்” என்கிறார் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.
ஒட்டகத்தை ஏமாற்றுவதற்கு ஒரு உபாயத்தைக் கையாள்வார்கள்.  ஒரு மிகச் சின்ன சுமையை ஒட்டகம் பார்வையில் படும்படி இறக்கிக் கீழே போட்டதும் ஒட்டகம் சுமை குறைந்ததாக எண்ணி எத்தனைச் சுமையையும் இழுத்துப் போய்விடும்.  இப்படியான ஏமாற்று வேலையையும் ஒரு குறுங்கவிதைக்காரன் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
வசந்தகுமாரனுக்கு இந்த யுக்தி கைவந்திருப்பதைப் பல கவிதைகளிலும் பார்க்க முடிகிறது
சாம்பிளுக்குச் சில கவிதைகள்
கோ. வசந்தகுமாரன் கவிதைகள்
1. குழி பறிப்பதொன்றும்
தவறில்லை
மரம் நடுவதாயிருந்தால்.
2. கூண்டு திறந்தேன்.
‘நெல் மணி கொடு
வெளியே வருகிறேன்’
என்றது கிளி.
3.அதிகாரங்கள் இருப்பதால்
இரண்டு அடிகள்
கொடுக்கிறது குறள்!
4.உதிர்ந்த  இறகுக்குத் தெரியும்
பறவை இதுவரை
கடந்த தூரம்.
5.பார்வை இழந்தவளின்
விலகியிருந்த மாராப்புச் சேலையை
என் கண்கள் மூடிச் சரி செய்தேன்.
6.என்னைத் தேடாதீர்கள்.
விதைத்தபின் யாரேனும்
விதையைத் தேடுவார்களா?
7.முகக் கவசத்துக்குள் பூத்து
அங்கே உதிர்ந்துவிடுகிறது
யாருக்கும் பயனற்று  ஒரு புன்னகை.
8.அவன் பாடை சுமக்கும்
நான்கு பேரில் ஒருவன்தான்
அவனைக் கொலை செய்தவன்.
9.ஒரு பறவையை
வரைவதற்குமுன்
ஒரு கூட்டை வரைந்துவிடு.
பாவம்
எங்குபோய்த் தங்கும்
அந்தப் பறவை?
10.எரியாத விளக்குகளில்
சுடராக இருக்கிறது
இருள்.
11. வானம்
வசப்பட வேண்டாம்.
பூமியே எனக்குப் போதும்.
    —கோ.  வசந்தகுமாரன்
கவிஞரின் வெளிவரவிருக்கும் “முறிந்த வானவில்” கவிதைத் 
தொகுப்பிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *