Lost wetland and Integrate to preserve existing இழந்து போன ஈர நிலங்கள்இருப்பதை காக்க ஒருங்கிணையுங்கள

இழந்து போன ஈர நிலங்கள்!
இருப்பதை காக்க, ஒருங்கிணையுங்கள!

 

கடந்து போன பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், உலக ஈர நில மற்றும் சதுப்பு நில தினம், நாடு முழுவதும் அனுசரித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்பட்டன.எனினும், உண்மையில் பல்லாண்டுகளாக நம் நாட்டில், பல ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஈர நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள், ஏரி, குளங்களை,அதிகம் அழித்து வந்துள்ளோம் என்பதை அறிகையில் மனம் சற்று வருத்த- முறுவதை தவிர்க்க இயலாது. வளர்ச்சி என்ற மயக்கத்தில்
ஆதாரங்கள், அடியோடு மறைந்து விட்டது.

ஆம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட அரசின் பாதுகாக்கப் படாத பகுதிகளில் உள்ள 90% சதவீதம் ஈர நிலங்களை, வருவாய் துறை மூலம் மீன் பிடிக்கும் குத்தகை செயல்பாடுகள், மற்றும் ரியல் எஸ்டேட் என்ற வீடு கட்ட தனியார் வசம், வீட்டு மனைப்பிரிவுகளுக்கு சென்று விடும் அவல நிலை தொடர்ந்து நடைபெறுகிறது. மீன் குத்தகை முடிந்த குளம், ஏரிகள் அலுவல் பூர்வமாக மீட்கபடாமல் ரியல் எஸ்டேட் வணிக ரீதியான நிலைக்கு போய்விட்டன. நீர் உயிரின வளர்த்தல் போன்றவற்றில் உள்ளூர் மீனவர்கள் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்ட நிலை என்பதை அறியும்போது, நம் மக்கள் இன்னும் இயற்கை அறிய எவ்வளவு காலம் ஆகும்? என எண்ணத் தோன்றுகிறது.

ஈர நிலம் என்பதை வெறும் நீர் நிறைந்த ஒரு இடம் ஆக காணுவதை தவிர்த்து அது பல்வேறு வகை தாவரங்கள் மீன்கள், ஊர்வன, பறவைகள், மிதவை (PLANKTON)
உயிரிகள், மெல்லுடலிகள், வளை தசை புழுக்கள், தவளை, பூச்சிகள் ஆகியவற்றின் அருமை வாழிடம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு ஈர நிலத்திலும் உணவு சங்கிலிகள் உருவாக்கி, உணவு வலை என்ற மிக சிக்கலான, சூழல் அமைப்பு உள்ளது. மழை காலத்தில் நீர் இங்கு சேமிக்கப்பட்டு, பின்னர் வறட்சி காலத்தில் வெளியேறி, உயிரினங்கள் வாழ உதவி செய்து வருகிறது. ஈரநீர் நிலைகள் கரிம பொருட்களை, உறிஞ்சி
பருவ கால மாற்றம் உருவாக்கிவரும் தீய விளைவுகள் பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஈர நிலங்களைப் பற்றிய,நாடு முழுவதும் தகவல் ஆய்வு முதன் முதலில் 1992-93 ஆண்டில் தான், இந்தியாவில் “இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (INDIAN SPACE RESEARCH ORGANISATION), தனது தொலை நோக்கும் செயற்கை கோள் படங்கள் முலம், ஒன்றிய அரசின், சுற்றுசூழல் அமைச்சகத்தின், ஆணைப்படி சேகரிக்க துவங்கியது. இந்த ஆய்வு தகவல் படி, நமது நாட்டில், உள் நாட்டு, மற்றும் கடற்கரை ஈரநிலங்கள்,8.26 மில்லியன் ஹெக்டர் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் விண்வெளி மையம் “தேசிய ஈர நிலை தகவல் மற்றும் கணக்கெடுப்பு “ஒன்றினை மின்னணு தரவு ஆதார மையம் மூலம் ஏற்படுத்தியது. மாநில அளவில், மற்றும் மாவட்ட அளவிலும், இத்தகைய தரவுகள், சேகரிக்க திட்டம் இடப்பட்டு பணிகள் துவங்கின. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 43,614ஈர நிலைகள் இனம் கண்டறியப் பட்டு பட்டியல் இடப்பட்டது. எனினும், இந்த எண்ணிக்கையினை விட கூடுதல் ஆக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை, மும்பையில் உள்ள பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் (BOMBAY NATURAL HISTORY SOCIETY ) என்ற
தன்னார்வ இயற்கை பாதுகாப்பு நிறுவனம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, உலக பிரபலம் பெற்ற “பரத்பூர் பறவைகள் சரணாலயம் என்ற ஈர நிலப்பகுதியில்,சதுப்பு நில சூழல் பற்றிய நேரடி கள ஆய்வினை இளம் இயற்கை ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டனர்.. இந்திய இயற்கை பறவையியல் நிபுணர் டாக்டர். சலீம் அலி அவர்கள்,இந்த ஆய்வு திட்டத்திற்கு, தலைமை ஏற்றார். நன்னீர் உயிரியல் ,நீர் நில பறவைகள், மீன்கள்,, ஊர்வன, பாலூட்டிகள் என்று
பரத்ப்பூர் ஏரிகளின், முழுமையான சூழல் அமைப்புகள், அதன் செயல்பாடுகள் பற்றிய மேற்கண்ட ஆய்வுகள் நம் நாட்டில், தொடர்ந்து பல்வேறு இயற்கை, ஈர நில கள ஆய்வுகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதில் மிகை இல்லை. உத்தரப் பிரதேச ஈர நிலங்கள், மிகப் பெரிய ஆறுகளை ஒட்டியவை.இங்கு உள்ள U வடிவ ஏரிகள், நிலத்திற்கும் நீர்ப்பகுதிக்கும், இடையில் உள்ள சூழல் அமைப்பு. இங்கு குறிப்பாக கங்கை சமவெளி பகுதியில்,1,20,000 என்ற எண்ணிக்கையில், ஈரநிலங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 24,000 ஏரி /குளங்கள்,2.2 ஹெக்டர் அளவில் அமைந்துள்ளன. மொத்தத்தில், உத்தர பிரதேச ஈர நிலங்கள், அளவு 1.5 மில்லியன் ஹெக்டர் ஆகும். இந்த மாநிலத்தில் உள்ள ஈர நிலங்களை 2021 ஆம் ஆண்டு மார்ச்,மாதத்திற்குள், சரியாக அளந்து அட்டவணை படுத்த
“தேசிய பசுமை தீர்ப்பாயம் “(NATIONAL GREEN TRIBUNAL )ஆணை இட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. மேலும் ஈர நில சட்டங்கள் 2010ஆம் ஆண்டு, மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), ஆகியவற்றின் படி மாநில ஈர நில ஆணையம், உருவாக்கப்பட்டாலும், மாவட்ட அளவில் 75 மாவட்டங்களில் எந்த ஈரநிலத்துக்கும், வரைபடம், எல்லை குறித்து அளந்து அட்டவணைபடுத்துவது முடியவில்லை.

அதற்கான மாவட்ட கூட்டம் கூட நடத்தவில்லை.1975 ஆம் ஆண்டு ராம்சர், பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி,10 புதிய ஈர நிலங்களை முக்கிய பாதுகாக்கப் பட்டவை என்றும் அறிவித்த நிலையில் அங்கு ராய்பரேலி, மாவட்டத்தில் 89%ஈர நிலங்கள் காணவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் 70% ஈரநிலங்கள் லக்னோ மாவட்டம் இழந்துள்ளது. பஹாரிச் மாவட்டத்தில் உள்ள பாகேல் தால் என்ற ஏரி 42 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இயற்கை அமைப்பு ஆகும். ஆனால் இதுவரை அதனை சட்ட பூர்வமாக ஈர நிலம் என்று அரசு அறிவிக்கவில்லை. ஹர்டாய் மாவட்டம் 2000 ஏரி, குளங்கள் கொண்டது. மேலும் சீதாபூர், பாரா பங்கி, ஆகிய மாவட்டங்களிலும் ஆயிரக் கணக்கான ஈர நிலங்கள் உள்ளன.

சரி!, இத்தகைய ஈர நிலங்கள் , இதுவரை, பாதுகாப்பு என்ற செயல்பாடுகள் துவக்கும் முன்னர், அடிப்படை அளவிடும் பணிகள் கூட அரசுத் துறைகள் நிறைவேற்ற இயலாத நிலை உண்மையில் வருந்ததக்கது. இந்த வட மாநிலத்தில், உள்ள சில ஏரிகள், இரு மாவட்டங்களின் வருவாய் துறை நிர்வாகங்கள், மற்றும் வனத்துறை வருவதாலும், தொடர் குழப்பங்கள் நீடிக்கின்றன.ஹெய்தர் பூர் ஏரி, ஈர நிலம் அஸ்தினாப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்குள் உள்ளது. இந்த சரணாலயம் பிஜ்னோர் மற்றும் முஜாபர்நகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. ஆனால் நிலம் வனத்துறை வசம் இல்லை. ஆக்கிரமிப்பு, அதிக நீர் நிலத்தில் எடுத்தல்,, மாசுபாடு, விவசாய கழிவு, தொழில் நிறுவனம் கழிவு, வீட்டு கழிவு, அந்நிய உயிரினங்கள், அந்நிய தாவரங்கள் போன்றவை ஈர நில சூழல்கள், ஆரோக்கியம் பாதித்து தொந்தரவு அடைகின்றன ஈர நிலங்கள், பல்வேறு மிதவை, வெளியேற்றும், மூழ்கு, ஆழ் நிலை தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ள ஈர நிலங்கள், உலகின் அச்சாணி ஆகும்..

ஈர நிலங்கள், பாதுகாப்பு, ஆய்வு என்பதை வெறும் மக்கள் விழிப்புணர்வு ஆக கருதாமல், உரிய நிர்வாக நடவடிக்கையினை, நாடு முழுவதும் எவ்வித இடர்பாடுகள் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். நம் இந்தியாவின் மிக பெரிய மாநிலத்தில், (உத்தர பிரதேசம் )ஈர நில பாதுகாப்பு, நிர்வாகம்,பிரச்சனைகள் சந்தித்து வருவது உண்மையில் சுற்று சூழல் பாதுகாப்பு சவால் ஆகும்.

பொது மக்கள், மற்றும் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே இயற்கை, சுற்றுசூழல், வனங்கள் பாதுகாப்பு எல்லா நாடுகளிலும் நிறைவேற்ற இயலும் என்பதைபுரிந்து கொள்வோமா!!????

                              எழுதியவர் 

          முனைவர். பா. ராம் மனோகர்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *