Roman Polanski Andrzej Wajda Polish History of film - European Cinema

கிழக்கு ஐரோப்பிய சினிமா
போலந்து திரைப்படங்கள்-1

கிழக்கு ஐரோப்பிய சினிமாவில் ஜெர்மன் நாஜி ஆக்கிரமிப்பும், ஹிட்லரின் கொடிய ஜெஸ்டபோ போலீஸ் எஸ்.எஸ். படையினரின் கொடுமைகளோடு நரகமயமான அவர்கள் அமைத்த “CONCENTRATION CAMS”கள் ஏற்படுத்திய சிறை முகாம்களுக்கும் போலந்து பெயர் பெற்றது. போலந்திலுள்ள நாஜிகள் அமைத்த சிறை முகாம்களிலேயே வன்கொடுமை மிக்கது ஆஸ்விட்ஸ் [AUZWITZ] சிறை முகாம். வரலாற்று முக்கியத்துவம் மிக்க சித்ரவதைகளும் மரணமும்  நடைபெற்ற இடம்  ஆஸ்விட்ஸ். மிக அதிகமான யூதர்களும்,  கம்யூனிஸ்டுகளும், நாடோடி மக்களும் வயது வேறுபாடின்றி சுடப்பட்டும் நச்சுவாயு செலுத்தப்பட்டும் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை ஆஸ்விட்ஸ் முகாமில்தான் ஏற்பட்டது. ஆஸ்விட்ஸ் இன்று போலந்துக்கு சுற்றுலா வருபவர்கள் காணும் முக்கிய இடங்களில் ஒன்று. போலந்து சினிமா என்பதில் முக்கியமாக  இரண்டாம் உலகப்போரும், நாஜிகள் ஆக்கிரமிப்பின் கொடுமைகளும், நாஜி ஆக்கிரமிப்புக்கான எதிர் நடவடிக்கைகளும் கைதி முகாம்களும் அதிகமாய் திரைப்படமாகியுள்ளன. இவற்றைத் தவிர்த்தும் அற்புதமான போலிஷ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட திரைப்படங்களைச் செய்தவர்களில் ரோமன் போலான்ஸ்கி ஒருவர். இவரது முதல் முயற்சியாக போலிஷ் மொழியில் செய்த திரைப்படமே இவரது இறுதி போலிஷ் மொழியிலான படமாகும். ரோமன் போலான்ஸ்கி ஒரேயொரு படத்தைத்தான் தன் தாய்மொழியான போலிஷில் செய்தார். அதுவே அவரது திரைப்படக் கன்னி முயற்சியும். அடுத்து அவர் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் திரைப்படங்களை ஆங்கிலத்தில் இயக்கினார். பொதுவாக இவரது பெரும்பான்மை திரைப்படங்கள் “THRILLER” வகைமையைக் கொண்டிருப்பவை. பல்வேறு திரைப்படங்கள் – சில அற்புதமான படங்களையும் போலான்ஸ்கி செய்தளித்துள்ளார்.

Knife in the Water (1962) - IMDb

இவரது முதல் படமான போலிஷ் மொழித் திரைப்படம், “நைஃப் இன் தி வாட்டர்”  [THE KNIE IN THE WATER] மிகவும் பாராட்டப்பட்ட படம்.

ரோமன் போலன்ஸ்கி  [ROMAN POLANSKI] 1933-ல் போலந்துப் பெற்றோருக்கு பாரீஸில் பிறந்தார். பிறகு போலந்திலேயே வளர்க்கப்பட்டார். இரண்டாவது உலகப்போர் சமயம் இவரது பெற்றோர்கள் சிறை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே இவரது தாய் இறந்து போனார். ரோமன் எங்கெங்கோ ஒளிந்து மறைந்து உயிர் பிழைத்தார்.  யுத்தம் முடிந்தபிறகு திரைப்படப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். இவரது முதல் முழு கதைத் திரைப்படம் “KNIFE IN THE WATER” 1962-ல் வெளிவந்தது. இந்தப் படம் சர்வதேசப் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றதையடுத்து இவர் இங்கிலாந்துக்குச் சென்று “REPULSION” எனும் மயிர்கூச்செறியும் படமொன்றை இயக்கினாறர். 1968ல் நடிகை ஷரோன் டேட்டின் [SHARON TETE] உறவு கிட்டவும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அதே ஆண்டில் [1968] அங்கே திகில் படமான “ரோஸ்மேரிஸ்பேபி”யை [ROSE MARY’S BABY] இயக்கினார்.  ரோஸ்மேரிஸ் பேபியை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் இரா லெவின் [IRA LEVIN.] மறு ஆண்டு ரோமன் போலான்ஸ்கியின் காதல் மனைவி டேட், “மான்சன் குடும்பம்” [MANSON FAMILY]  என்றழைக்கப்பட்ட தொடர் தொலைக்காரர்களால் கொலை செய்யப்பட்டார்.

போலான்ஸ்கி அமெரிக்காவை விட்டு பாரீசுக்குப் போனாலும் “சைனா டவுன்” படத்தை இயக்க அழைக்கப்பட்டதால் திரும்பிச் சென்றார். சில வருடங்கள் கழித்து பதிமூன்று வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு விரோதமாக  உடலுறவு கொண்டதற்காக அவர் தண்டனைக்குள்ளானதும் அமெரிக்காவிலிருந்து பிரான்சுக்கு ஓடிப்போனார். அங்கிருந்தவாறு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது “ஆலிவர் டிவிஸ்ட்”, “பியானிஸ்ட்” ஆகிய படங்களும் அதி சிறப்பானவை.

“THE KNIFE IN THE WATER” [NOZ W WODZIE]  1962-ல் போலிஷ் மொழியில் ரோமன் \ போலான்ஸ்கி இயக்கிய திரைப்படம். இதைத் தொடர்ந்து தம் தாய்மொழியாம் போலிஷில் படம் எதுவும் பண்ணாமல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆங்கில மொழியிலேயே திரைப்படங்களைச் செய்து வருபவர். இருப்பினும் அவையெல்லாவற்றிலும் அவரது இந்த முதல் போலிஷ் படமான “கத்தி”-யின் உளநிலை தெறிப்புகள் வெவ்வேறு தளங்களில் அடிநீரோட்டமாய் இருக்கவே செய்கின்றன. இந்தத் திரைப்படம் குறித்து ரோமன் பொலான்ஸ்கியை பாரிஸில் 2002-ல் நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது. இப்படத்தின் திரைக்கதையமைப்புக்கு இணைந்து செயலாற்றிய ஜெர்ஸி ஸ்கோலிமோவ்ஸ்கியை [JERZY SKOLIMOWSKY] 2005-ல்தான் லாஸ்ஏஞ்சலீஸில் இப்படம் குறித்தான நேர்காணலை எடுத்தார்கள்! ஜெர்ஸி சிறந்த ஓவியர். இந்தப் பேட்டியின் பின்னணியில் அவரது பெரிய நவீன ஓவியமொன்று தொங்கிக்கொண்டிருப்பது ஒரு கலைச் சூழலை உணர்த்தும்.

Roman Polanski – Wikipedia

இளம் வயதைக் கடந்துகொண்டிருக்கும் ஒரு ஜோடி-ஆண்டாஸெஜ் [ANDAZEJ] என்பவனும் அவன் மனைவி கிறிஸ்டினாவும் [KRYSTYNA]வும் படகுத்துறையை நோக்கி காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். அந்தத் துறையில் அவர்களுக்குச் சொந்தமான விசைப்படகு இருக்கிறது. விடுமுறை வார இறுதியை படகில் கழிக்கும் அவர்கள். கிறிஸ்டினாவைவிட ஆண்டாஸெஜ் வயதில் அதிகம் மூத்தவன். தன்னைவிட அவள்  வெகுவாக இளையவள் எனும் உணர்வு  அவனுக்கு அதிகம். அவன் படகுக்குத் தன் மனைவியின் பெயரையே வைத்து படகின்மேல் அதையே எழுதியுமிருப்பான். போக்குவரத்தில்லாத சாலை. கார் எளிதாக வேமாய் ஓடிக்கொண்டிருக்க, தூரத்தில் நட்டநடுப் பாதையில் குறுக்காக ஒருவன் நின்றுகொண்டு கையசைக்கிறான். ஒசிச் சவாரிக்கு ஒரு வேண்டுதல். இளம்வயதில் பல்லாவரம் – திரிசூலம் வளைவில் நானும் இருசக்கர, நாற்சக்கர வண்டிகளை கையசைத்தபடி ஓசிச் சவாரிக்கு கேட்டதுண்டு. சிலர் சில சமயம் நிறுத்தி ஏற்றிக்கொள்ளுவார்கள், பல சமயம் நிறுத்தாது போய்விடுவார்கள். இந்த ஓசிச் சவாரிக்கான வேண்டுதல் உலகமயமாக்கப்பட்டிருந்ததை ரோமன் பொலான்ஸ்கியும் விட்டுவைக்கவில்லை. ஆண்டாஸெஜ் மிகுந்த கோபத்தோடு அந்த இளைஞனை மோதிவிடாது காரை ஒடித்து வளைத்துப் போய் நிற்கிறான். இளைஞன் “லிஃப்ட்”  கேட்டதால், பின்னால் உட்கார்ந்துகொள்ள அனுமதிக்கிறான். இளைஞன் கேட்கும் ஓரிரு கேள்விகள் மூலம் அன்றைய போலந்தின் பின்தங்கிய பொருளாதார நிலைமை உணர்த்தப்படுகிறது.

“உங்க சொந்தக்காரா இது?”, என்று கேட்ட இளைஞன் “ஆம்” என்ற பதிலையடுத்து, “இப்போ போலந்தில் சொந்தமான காருங்க கொஞ்சம் ஓடுறது”, என்கிறான். கிறிஸ்டினா தன் கவர்ச்சிமிக்க உடல் தோற்றத்தால் இளைஞனை அலைக்கழிக்க வைத்தாலும் அவன் படு நாசூக்காக கண்டும் காணாதவனாகவே நடநது கொள்ளுகிறான். ஆண்டாஸெஜுக்கு இளைஞன் மீது பொறாமையும் எரிச்சலுமாய். அவ்வப்போதுதான் பலசாலி என்பதை படகின் பாயை அவிழ்த்து விரித்துக் கட்டுவது முதலான செயல்கள் மூலம் காட்டிக்கொள்ளுகிறான். இந்த நிலையில் ஒரு புயற்காற்று வீசி படகை ஆழம் குறைந்த நீரோட்டத்துக்குள் தள்ளி நிற்க வைத்து விடுகிறது. அவர்கள் சாப்பிடுகின்றனர். ஒரு பொழுதுபோக்காக இளைஞன் தனது மடக்கும் கத்தியைக்கொண்டு விதவிதமாய் வீசி சாகசம் புரிகிறான். இந்த மடக்கும் கத்தியை வைத்து சாகசம் செய்வது போலந்து இளஞைர்களின் பொழுது போக்குகளின் ஒன்றாய்த் தோன்றுகிறது. ஆண்ட்ரீ வாஜ்தாவின் “ஜெனரேஷன்” எனும் போலிஷ் திரைப்படத்திலும் வேலையற்ற இளைஞன் ஒருவன் இந்த விதமாய்த்தான் கத்தியை வைத்து சாகச விளையாட்டு செய்யும் காட்சி வருகிறது.

அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இளைஞனின் கத்தி உப்பங்கழி நீரில் விழுந்து விடுகிறது. சற்று நேரத்திற்கு முன் எதற்கோ தண்ணீரில் குதிக்கச் சொன்னபோது, தனக்கு நீந்தத் தெரியாது என்று இளைஞன் சொல்லியிருப்பது கதையின் முக்கிய “முடிச்சு”. இந்த முடிச்சைப் பின்பற்றி தமிழில்கூட ஒரு முடிச்சுப்படம் வந்து அசாத்திய ஆரவார கைத்தட்டலைப் பெற்றது வேறொரு சோகம்! இப்படியாக பேச்சும் எதிர்பேச்சுமாய் போகையில் இளைஞனை தண்ணீரில் தள்ளிவிடுகிறான் ஆண்டாஸெஜ். இது படத்தின் மூன்று முடிச்சுகளில் இரண்டாவது முடிச்சு. இளைஞன் மூழ்கி விடுகிறான். எங்கு தேடியும் இல்லை. கிறிஸ்டினா கணவனைக் குற்றம் சாட்டித் திட்டுகிறாள். தண்ணீர் சலனம் எதுவுமின்றி அப்பாவியாய்த் தோன்றுகிறது. ஆண்டாஸெஜ் குற்ற மனப்பான்மை கவிந்தவனாக முகம் தொங்கிப் போய் தண்ணீரை வெறிக்கிறான்.

Cube: Knife in the Water

தனக்கு நீந்தத் தெரியாது என்று ஒப்புக்கொண்ட இளைஞனை பொறாமையால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டதாகச்  சாடுகிறாள் கிறிஸ்டினா. போலீசிடம் சரணடையச் சொல்லுகிறாள். இளைஞனைத் தேடிக்கொண்டே நீந்திச் செல்லும் ஆண்டாஸெஜ் ஒரு சிறு தீவு போன்ற மணல் திட்டில் சேருகிறான்.
ஆனால், இதையெல்லாம் தண்ணீரில் மிதக்கும் பெரிய மிதவை ஒன்றுக்கடியில் நீரில் அமிழ்ந்தும் ஒளிந்தும் கவனித்தபடியே மிதக்கிறான் இளைஞன்.
அவனுக்கு நீந்தத் தெரியும். தனக்கு நீந்தத் தெரியாதென்று பொய் சொல்லியிருக்கிறான். இப்போது அவன் விசைப்படகை அடைகிறான். அச்சமயம் படகில் தனியாயிருக்கும். சிறிஸ்டினா அவன் உயிரோடு வந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமுமாகிறான். குளிரில் நடுங்கும் அவனுக்கு சூடேற்ற பிராந்தியும் போர்வையும் தருகிறாள். ஒரு கணம் அவர்களிருவரையும் ஈர்க்க வைத்து அவர்கள் உடலுறவு கொண்டுவிடுகின்றனர். படகும் நகர்ந்தபடியாயிருக்கிறது. படகு சிறிய துறையொன்றை நெருங்கும் சமயம் இளைஞன் இறங்கி ஓடிவிடுகிறான். அதே சமயம் கிறிஸ்டினாவின் கணவனும் படகைச் சேர்கிறான். அவன் போலீசிடம் போகத் தேவையில்லை என்பதை கிறிஸ்டினா கூறவும் அவர்களை தங்கள் கரையையடைந்து படகை நங்கூரமிட்டு கட்டிவிட்டு காரையடைகின்றனர்.
ஒரு தொலைக்காட்சிப் படம்போல உணரப்படும் இந்தத் திரைப்படத்தில் அதியற்புத கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு நாட்டாமை செலுத்துகிறது. இந்த துல்லியமான ஒளிப்பதிவை கேமராமேன் ஜெர்சி லிப்மன் [JERZY LIPMAN] செய்திருக்கிறார். மிகக் குறைந்த வார்த்தைகள் – வசனங்கள் கொண்ட இப்படத்தின் கேமரா கோணங்களே நமக்கான வார்த்தையாடல்களையும் வசனத்தையும் உணர்த்திவிடுகிறது.

ஆண்டாஸெஜ் பாத்திரத்தில் லியோன் நைமிஜ்கி [LEON NIEMCZYK]யும் கிறிஸ்டினாவாக ஜொலாண்டா உமெக்கா [JOLANTA UMECKA] வும் நன்றாக நடித்திருக்கின்றனர்.

ரோமன் பொலான்ஸ்கியின் பிற ஆங்கிலப் படங்களும் சிறப்பானவை. இவர் தன் குருநாதர் எனப் போற்றும் ஆன்றீ வாஜ்தாவின் “GENERATION” மற்றும் “ZEMSTA” என்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Andrzej Wajda – IMDb

களின் இறுதியில் இத்தாலிய நியோரியலிஸம் நடை தளர்ந்து மறையத் தொடங்கின சமயம், பிரெஞ்சுப் புதிய அலை தோன்றுவதற்கு சற்று முந்தைய காலகட்டம்,  போலிஷ் சினிமா [POLISH CINEMA]  கலைப்படமாக  [ART FILMS] மிளிர்ந்தது. ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒருகாலாக போலந்து சினிமா 2-வது உலக யுத்த காலத்து ஒற்றுமை- தியாகம் ஆகிய விஷயங்களை முக்கியமாய் மனிதாபிமானம் குறைந்த சோஷலிஸத்தை தன் திரைப்படங்களில் வைத்தது. ALEKSANDR FORD, ANDRZEJ MUNK, JERZY KAWALEROWICZ ஆகிய திரைப்பட கர்த்தாக்களின் சில படங்கள் ஓரிரு திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றதால் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கிழக்கு ஐரோப்பிய சினிமாவின் இயக்குனர்களில் புத்தி ஜீவித்தனத்தோடும் கலாமேதைமையோடும் படங்களை எடுத்தவர் ஆண்ட்ரெஜ் வாஜ்தா [ANDRZEJ WAJDA],  வாஜ்தா போலந்தில் 1926-ல் பிறந்தவர். போலந்தின் மிகவும் பாராட்டப்பட்டும் கொண்டாடப்பட்டவருமான திரைப்பட கர்த்தா. ஜெர்மானிய நாஜி பாசிஸ்டுகளின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் காலகட்டம் முழுமையிலும் வாழ்ந்திருந்த வாஜ்தாவின் திரைக்கதை வடிவம் அதன் பாதிப்புக்கும் பெரிதும் ஆட்பட்டிருந்தது. இவரது படங்கள் நியோரியலிஸ வகைமைக்குள் அடங்கினவையென்றே சினிமா குருமார்கள் கூறுகட்டுகின்றனர். சென்ற நூற்றாண்டில் போலந்துக்கு என்னவெல்லாம் நேர்ந்தது என்பதும் அதன் தொடர்பாக உலகுக்கு நேர்ந்ததையும் சொல்லவதில் வாஜ்தாவின் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிப்பவை.

திரைப்படப் பயிற்சியில் சேருமுன் வாஜ்தா க்ராகோவ் நகரிலுள்ள ஃபைன் ஆர்ட்ஸ் அகாதெமியில் ஓவியம் பயின்றார். 1939 முதல் 1954 வரை ஓவியம் தீட்டி காட்சிப்படுத்தினார்.

Ashes and Diamonds

ஆண்ட்ரெஜ் வாஜ்தா நாஜிகள் போலந்தை ஆக்கிரமித்திருந்த காலத்தையும் சூழலையும் கொண்டு மூன்று திரைப்படங்களை ஆக்கினார். அவை “A GENERATION”, “KANAL”  மற்றும் “ASHES AND DIAMONDS” என்பவை. “ஜெனரேஷன்” இவரது முதல் முயற்சி. இவர் மூன்று குறும்படங்களைச் செய்தார். அவற்றில்  ‘CERAMICS FROMLLZA -1951” [CERAMIC LLZECKA] என்ற படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. வார்சாவில் இவர் திரைப்பட இயக்கத்துக்கான பயிற்சிப் பள்ளியொன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.  இங்கு இவரின் அரிய நேர்காணல்களில் ஒன்று 2003-ல் இடம் பெற்றது. போலந்தின் திரைப்பட விமர்சகரும் சினிமா குறித்தும் திரைப்பட வரலாறு குறித்தும் 21 புத்தகங்கள் காத்திரமாய் எழுதிய ஜெர்ஸி பிளாஜியுஸ்கி [JERZY PLAZEWSKI] என்பவரின் துணையில் இந்த புகழ்பெற்ற நேர்காணல் இடம் பெற்றது.

“ஜெனரேஷன்” திரைப்படம் 1954-ல் தயாராகி 1955ல் வெளிவந்தது. படத்தின் கதை 1942-ல், போலந்து ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு காலத்தில் நடைபெறுகிறது. இக்கால கட்டத்தில் ஜெர்மன் ராணுவம் தன் ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாட்டின் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், கனிமங்களின் சுரங்கங்கள், சுரங்கத் தொழிலாளர்களை முற்றிலுமாய் தன் வசம் வைத்திருக்கும். 2-ம் உலகப் போரில் ஜெர்மன் ராணுவத்துக்குத் தேவையான யுத்த தளவாடங்களும் இதர பொருட்களும் ஆக்கிரமிப்பான நாடுகளில் தயாராகி ஜெர்மனிக்கு – அதன் போர் அரங்குக்கு ரயிலிலும் கப்பலிலும் போய்க்கொண்டிருந்தன. போலந்தின் \முக்கிய உற்பத்திப் பொருள்களில் நிலக்கரி முதன்மையானது. இது ஜெர்மனிக்கு ரயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. மூன்று வாலிப நண்பர்கள், வெலை வெட்டியற்றவர்கள். அவர்களில் ஸ்டாச் [STACH] என்றழைக்கப்படும் STANISLAW MAZUR, ஜேசியே [JASIO] மற்றும் ஜேசெக் [JACEK] என்பவர்கள் இணை பிரியாதவர்கள்.
ஒருநாள் நிலக்கரியேற்றிக்கொண்டு ஜெர்மனிக்கு போகும் சரக்கு ரயிலில் ஓடிச்சென்று ஏறி, திறந்த சரக்கு வண்டிகளில் போகும் நிலக்கரியை களவாடத் தொடங்குகின்றனர். ஜேசெக் ஒரு பெரிய நிலக்கரிப் பாளத்தைத் தூக்கி வெளியில் எறிகிறான். இது அவர்களின் வழக்கமான தொழில். ஆனால், ஜெர்மன் ராணுவ சிப்பாய் எந்திரத் துப்பாக்கியால் ஜேசெக்கை சுட்டுத்தள்ள, மற்ற இருவரும் தப்பியோட, ஸ்டாக் ஒரு செங்கல் சூளைக்குள் ஒளிகிறான். அங்குள்ள சூளைக்காரன் ஸ்டாச்சை நக்கலடிக்கிறான். அவன் மணி என்னவென்று ஸ்டாச்சை கேட்டுவிட்டு, “ஓ,  கடிகாரமில்லையா?” என்று நக்கலாகக் கேட்டுவிட்டு முகம் கோணிக்கும் தருணம் – போலந்து ஜனங்ள்  கைக்கடிகாரம் வாங்க வசதியற்ற போர்க்கால வறுமையை வாஜ்தா கோடி காட்டுகிறார். சூளைக்காரன் ஸ்டாச் மீது இரக்கம் கொண்டு அவனை அழைத்துச் சென்று ஒரு தொழிற்கூடத்தில் பயிற்சியாளனாக [அப்ரண்டிஸ்ட்] சேர்த்துவிடுகிறான். அங்கு ஜெர்மன் போர்க்கைதி முகாம்களுக்கான கட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. நாஜி ராணுவ அதிகாரிகள் திடீரென வருகை தந்து தயாரிப்புகள் ஒழுங்காயும் துரிதமாயும் நடைபெறுகின்றனவா என்று சோதித்துப் பார்ப்பார்கள். அங்கு வேலை செய்யும் நடுத்தர வயதான செகூலா [SEKULA] என்பவர் ஸ்டாச் பேரில் அன்பு மேலிட்ட விசேஷ கவனம் வைக்கிறார்.

A Generation (Original photograph from the 1955 Polish film) von Andrzej Wajda (director); Roman Polanski (starring); Bohdan Czeszko (novel, screenwriter); Tadeusz Lomnicki, Urszula Modrzynska, Tadeusz Janczar, Janusz Paluszkiewicz, Ryszard Kotys: (1955) |ஜெர்மன் ஆக்கிரமிப்பை எதிர்த்து ரகசியமாய் போரிடும் புரட்சியாளர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இரு பிரிவினராயிருந்தனர். ஒரு பிரிவு வலதுசாரி தேசிய வாதிகள். மற்றொன்று இடதுசாரி கம்யூனிஸ்டுகள். இவ்விரு பிரிவினருக்குள்ளும் எதிர்ப்பும் மோதலும் இருந்துகொண்டே வந்தது. செகூலா ஸ்டாச்சை ஒருநாள்தான் முக்கிய உறுப்பினராயிருக்கும் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் ரகசியகுழு சந்திப்புக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். அதன் கிளைத் தலைமையாயிருந்தது டோரோடா [DOROTA] எனும் அழகிய இளம்பெண். டோரோடாவும் ஸ்டாச்சும் ஒருவரையொருவர்  காதலிக்கத் தொடங்கினாலும் கடமை முக்கியம் என்பதை டோரோடா அவனுக்கு சொல்லி வைக்கிறாள்.  அந்த கம்யூனிஸ்ட் படையின் பெயர் “போராடும் இளைஞர்களின் ஒன்றியம்” – என்பது. தொழிற்கூடத்து உயர் அதிகாரிகளும், உரிமையாளரும் வலதுசாரியான வலதுசாரி தேசியவாதப் படைக்கு ஆயுதங்கள் கடத்தி உதவுகின்றனர்.  அதில் கிடைக்கும் ஒரு சக்தி வாய்ந்த கைத்துப்பாக்கியை ஸ்டாச் ஒளித்து வைக்கிறான். டோரோடா அதை சோதித்துப் பார்க்கிறாள். அதைக்கொண்டு நாஜி ராணுவத் தலைவர்களை தீர்த்துக் கட்டலாமென ஜேனெக்  கூறுவதோடு துப்பாக்கியை வைத்துக்கொள்ளுகிறான். நிதானம் அவசியம் என்கிறான் இன்னொரு இளைஞன் முன்டெக் என்பவன். ஒரு மது அருந்தும் கூடத்தில் ஜெர்மன் ராணுவத்தினர் ஜல்சா செய்து கொண்டிருக்கிறார்கள். ராணுவ அதிகாரிகள் பெண்களோடு நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். ஜேனெக் அந்தக் கைத்துப்பாக்கியால் ஒரு ஜெர்மன் அதிகாரியை சுட்டுக்கொன்று விட்டு ஓடி விடுகிறான். ராணுவம் அவன் ஒளிந்துள்ள கட்டிடத்தைச் சுற்றி வளைத்து எந்திரத் துப்பாக்கியால் அவனை சுடுகிறது.

ஜேனெக் இரண்டு மூன்று ஜெர்மன் சிப்பாய்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன் துப்பாக்கியில் ரவை தீர்ந்தவனாய் வளைக்கப்பட்ட நிலையில் வெகு உயரத்திலிருந்து விழுந்து மரணமுறுகிறான். கம்யூனிஸ்ட் குழுவினருள் இந்நிகழ்வு ஆழ்ந்த துக்கத்தை எற்படுத்துகிறது.

எல்லாம் நல்லபடி நடந்து, எதிரிகளின் ஆக்கிரமிப்பு நீங்கி போலந்து விடுதலையடைகையில் தங்களுக்கான எதிர்காலத்தை எதிர்கொள்ள ஸ்டாச்சும் டோரோடாவும் கனவு காண்கின்றனர். அந்த இனிய கனவைக் கொண்டாடும் விதமாக ஸ்டாச் அவளுக்கு மலர்க் கொத்து வாங்கப் போகிறான். அச்சமயம் ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் அவர்களின் ரகசிய அறையைப் பிடிக்கிறது. ஸ்டாச் மலர் கொத்தோடு வருகிறபோது ஒருவன் எச்சரிக்கிறான்.
“உஷார், அங்கே ஜெஸ்டபோ போயிருக்கு.”

ஸ்டாச் கதி கலங்கி ஒளிந்து கவனிக்கிறான். டோரோடா திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மௌனமாக ஜெஸ்டபோவோடு நடக்கிறாள். அவர்களின் காரில் ஏறுமுன்கூட ஒருமுறை ஸ்டாச் போன திசையில் பார்த்துவிட்ட காருக்குள் நுழைகிறாள்.

“ஜெனரேஷன்” திரைப்படம் சோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலின் இறந்த சில நாட்களுக்குப்பின் தயாரிக்கப்பட்டது.

ஸ்டாச் பாத்திரத்தில் சிறப்பாக நடித்த இளைஞர் டடியாஸ்ஜ் லோம்னிகி [TADEUSZ LOMNICKI] என்பவர். டோரோடாவாக நெகிழச் செய்தவர் உர்ஜுலா மோட்ரிஜின்ஸ்கா [URSZULA MODRZYNSKA]  என்பவர். செகூலாவாக ஜானுஸ் பாலுஸ்கைவிக்ஸ் என்பவர் [JANUSZ PALUSZKIEWICZ ] அற்புதமாய் செய்திருக்கிறார்.
“EAST OF EDEN” ஜான் ஸ்டீன்பெக்கின் [JOHN STEINBECK] சிறந்த நாவல்களில் ஒன்று. இதை திரைப்படமாக்கியவர் எலியா கஸான் [ELIA KAZAN]. ஈஸ்ட் ஆஃப் ஈடென் நடிகர் ஜேம்ஸ் டீன்-கு [JAMES DEAN] அவர் நடித்த மூன்றே மூன்று திரைப்படங்களில் முதலாவதாகும். முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துப்போட்ட ஜேம்ஸ் டீன் குறித்து ஆங்கிலப் பட ரசிகர்கள் கூறுவார்கள், “ஜேம்ஸ் டீன் மாத்திரம் இருந்திருந்தால், மார்வின் பிராண்டோவுக்கு இப்போதிருக்கும் புகழில் பாதிதானிருக்கும்” என்று. ஜேம்ஸ் டீன் தம் இளம் வயதிலேயே – மூன்றே படங்கள் நடித்திருந்த நிலையில் கார் விபத்தில் இறந்து போனார். போலந்தில் ஆண்ட்ரெஜ் வாஜ்தாவின் கண்டுபிடிப்பும் உகந்த நடிகருமான சைபுல்ஸ்கி [CYBULSKI] முகம்,  தோற்றம், மானரிஸம் மற்றும் நடிப்புப் பாணியென்று சகலத்திலும் அச்சு ஜேம்ஸ் டீன் போலவே இருப்பார்.  “போலந்தின் ஜேம்ஸ் டீன்” என்ற பட்டப்பெயரும் இவருக்குண்டு. சைபுல்ஸ்கியும் இளம்வயதிலேயே ரயில் விபத்தில் காலமானார்.

சைபுல்ஸ்கி  [ZBIGNIEW CYBULSKI]யின் மிகச் சிறந்த படமாய் கருதப்பட்ட “ASHES AND DIAMONDS” [POPIOL I DIAMENT] 1958-ல் வாஜ்தா இயக்கிய படம். வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படத்துக்கு வாஜ்தா விருதளிக்கப்பட்டார். வாஜ்தாவின் முப்படங்கள் வரிசையில் இறுதிப்படம் இது.

ஜெர்சி ஆண்ட்ரெஜெவ்ஸ்கி [JERZY ANDRZEJEWSKI]யின் சர்ச்சைக்குரிய, 2-ம் உலக யுத்தத்தின் இறுதி நாட்களின் சூழலில் எழுதப்பட்ட நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

இறுதி நாட்கள் ஒன்றில் நாஜிகளால் குண்டுவீச்சுக்காளாகி நாசமாக்கப்பட்ட பழங்கால தேவாலயத்துக்குள் கதாநாயகன் மசிக்கும் [MACIEK] அவன் காதலி கிறிஸ்டினாவும் [KRYSTYNA] ஒதுங்குகின்ற சமயம் குண்டு வீச்சில் உருக்குலைந்த சர்ச் சுவரில் ஓர் அற்புதக் கவிதையின் எஞ்சி நின்ற வரிகளைப் படிக்கிறாள். அந்தக் கவிதை 19ம் நூற்றாண்டு போலிஷ் கவிஞர் சிப்ரியான் நோர்விட் [CYPRIAN NORWID] எழுதியது.

‘WILL THERE REMAIN AMONG THE ASHES A STAR – LIKE DIAMOND, THE DAWN OF ETERNAL VICTORY?”, என்ற வரிகளில் தென்படும் நிச்சயமற்ற தொனிதான் வாஜ்தாவின் எல்லா திரைப்படங்களிலும் எதிரொலிக்கும். இந்தக் கவிதை வரியிலிருந்துதான் இத்திரைப்படத்தின் தலைப்பும் கதையும், போகும் அமையப்பெற்றுள்ளது.

MOSTRA SP ANO 4O – POLANSKI COMO ATOR, EM GERAÇÃO, DE WAJDA – Almanakito da Rosário

2-ம் உலகப்போரின் இறுதிச் சூழல். எதிரி சரணடைந்தாயிற்று. ஹிட்லர் தற்கொலை புரிந்துகொண்டு முடிந்து போய்விட்டார். ஆனால் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் எதை வெற்றி பெற்றார்கள் என்பதில் நிச்சயமற்ற உணர்வில் இருந்தார்கள். முழு வெற்றி என்பதில் கேள்வியே எழுந்து நின்றது. போருக்காக மேற்கு நாடுகளின் வலது சாரிகளும் கம்யூனிஸ்டுகளும் முழுமனதாக இல்லாமலே யுத்த நேரத்தக்கான காத்திரமற்ற கைகோர்த்தலின் உறுதியற்ற பலத்தில் இணைந்து போரிட்டு பெற்ற வெற்றி இருசாராருக்குமே ஒருவர்மீது ஒருவர் சந்தேகமும் நிச்சயமற்ற ஒற்றுமையுமாகவே இருந்தது அவர்கள் நிலையில்.
ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருதுகள் பெற்ற 2-ம் உலகப்போர் இறுதிக்கட்ட படம் “BATTON” என்பதில் நேசநாடுகளின் இறுதிப்போரில் அமெரிக்கப் படை பெர்லினை கைப்பற்ற மேற்குப் பகுதியில் நிற்கும் கிழக்குப் பகுதியில் ரஷ்யபடை நிற்கும். யார் பெர்லினுக்குள் நுழைந்து கைப்பற்றுவது என்பதில் அமெரிக்க ஜெனரல் பேட்டனுக்கும் சோவியத் ஜெனரல் ஜுகாவுக்கும் [GEN.ZUCKOV] வார்த்தைப் போர் மூள்கிறது. ஸ்டாலினும் ஐசனோவரும் தலையிட்டு விடுவிக்கிறார்கள். அப்போது பேட்டன் பேசும் வசனம்: “அடுத்து நாம் எதிர்கொண்டு போர் செய்ய வேண்டியவர்கள் இவர்களே” என்பது இத்தகைய சூழலில் தொடங்குவதுதான் நாவலும் அதையொட்டி எடுக்கப்பட்ட வாஜ்தாவின் திரைப்படமுமான “ASHES AND DIAMONDS.”

1945-போலந்து அரசியல் ரீதியாக வலதுசாரி சார்பு, இடதுசாரி சார்பாக ஆழமாய் பிளவுற்றிருந்த சயம். அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த சூழலும்கூட. வலதுசாரி இயக்கத்திலிருந்தபடியே நாஜிகளுக்கெதிரான போரிட்ட இளைஞன் மசீக் [MACIEK] போலந்து கம்யூனிஸ்டுகள் வசமானதையடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போகிறான். சோவியத் யூனியனிலிருந்து பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க கம்யூனிஸ்ட் அதிகாரி வருகிறபோது அவரை தீர்த்துகட்ட முடிவு செய்யும் வலதுசாரி தேசியவாதிகள் அந்த வேலைக்கு மசீக்கை அனுப்புகின்றனர். அவன் முதலில் குழம்புகிறான். அநியாயமாய் இரு அப்பாவிகளை சுட்டுக்கொன்றுவிட்டு ஓடிவிடுகிறான். யாருக்காக செய்யப்பட்ட கொலை என்பது கம்யூனிஸ்டுகளுக்கு புரிந்து விடுகிறது. மீண்டும் மசீக் இடதுசாரி அதிகாரியை கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறான். அவன் ஒரு பெரிய தங்கும் விடுதியில் அறையெடுக்கிறான். இவனது அறைக்கு அடுத்த அறையில்தான் தலைவர் தங்கியிருக்கிறார்.  அங்கு அவரைக் கொல்வதால் எளிதில் பிடிபடக்கூடுமென நன்கறிந்த மசீக் அதை வெளியில் வைத்துக்கொள்ளவே நினைக்கிறான். அதே சமயம், விடுதியில் மது வினியோகிக்கும் அழகிய இளம்பெண் கிறிஸ்டினாவுக்கும் மசீக்கிற்கும் காதலுறவு மலர்கிறது. இந்த மென்மையான உணர்வுகளால் மசீக் தணிந்து போகிறான். கொலை செய்யத் தயங்குகிறான். இறுதியில் அந்தத் தலைவரை சாலையில் சுட்டுக்கொன்றுவிட்டு பைத்தியம்போல நடந்துபோகையில் வேறு சிலர் சந்தேகிக்கப்பட்டு சுடப்படுகிறான். ரத்தம் சொட்ட ஓடுகிறான். ஒரு குப்பைமேட்டில் ஆளரவற்ற இடத்தில் விழுந்து உயிரை விடுகிறான்.

இப்படத்தில் ஒளிப்பதிவு அபாரம். கருப்பு வெள்ளை கேமரா கோணங்கள் வியப்பூட்டுகின்றன. கேமரா கலைஞர் ஜெர்ஸி ஓஜ்சிக்  [JERZY WOJCIK]  சில அதிர்ச்சிகரமான ஒளிப்பதிவுகளை விளையாடுகிறார். குண்டுவீச்சில் குட்டிச் சுவராகிக் காட்சிதரும் புராதன தேவாலயத்துக்குள் மசீக்கும் கிறிஸ்டினாவும் ஒதுங்கும் காட்சியில், தொழுகை ஆல்டரிலிருந்த ஏசுநாதரின் பெரிய சிலை தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிற காட்சி அதிர வைக்கிறது.
மசீக்காக சைபுல்ஸ்கியும் கிறிஸ்டினாவாக ஈவா கிறி ஜெஸ்வஸ்காவும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

The Revenge (2002) - IMDb

2002-ல் வாஜ்தா “ஜெம்ஸ்டா”  [ZEMSTA – வஞ்சம்] என்ற வண்ணப்படம் ஒன்றைச் செய்தார். இப்படம் புகழ் பெற்ற போலிஷ் கவிஞரும் நாடகாசிரியருமான அலெக்சாண்டர் ஹிராபியா ஃபிரெட்ரோ [ALEKSANDER HRABIA FREDRO] என்பவரின் நன்கறியப்பட்ட அதே தலைப்பிலான நாடகத்தை வைத்துச் செய்ததாகும். மிகுந்த நகைச்சுவை ததும்பும் கதை – திரைப்படம். வாஜ்தாவிடமிருந்து இந்த வகைமையில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது எதிர்பாராதது.
இந்தப் படத்தில் பிரபல போலிஷ் திரைப்பட இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி ஜோசப் பாப்கின் [JOSEF PAPKIN] என்ற கோமாளி போன்ற பாத்திரத்தில் அற்புதமாய் நடித்திருக்கிறார். ஆண்ட்ரெஜ் வாஜ்தாவின் திரைப்படப் பட்டியல் எதிலும் “ZEMSTA” காணப்பட்டதே இல்லை.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆகாத இரண்டு சீமான்கள். காலத்தின் கோலம் – செல்வம், ஜம்பம், மிடுக்கு எல்லாவற்றிலும் சீணித்துப் போனாலும் அவை எதையும் குறைந்து போனதாக ஒப்புக்கொள்ளாது வாழ்ந்து வருபவை. ஆனால் சத்யஜித்ரேயின் “ஜல்சாகர்” கணக்கிலான ஜமீந்தாரிய சீணிப்பும் அல்ல. இரு சீமான்களும் பகைமையோடு வாழ்பவர்கள். இருவரும் மனைவியிழந்தவர்கள். ஒருநாள் கடும்பனியில் 17-ஆம் நூற்றாண்டு கப்பற்படைத் தளபதியின் உடையில் ஒருவன் தள்ளாடி கோட்டைக்கு வருகிறான். அவன் பெயர் ஜோசப் பாப்கின் [JOSEF PAPKIN]. ஒரு கோமாளித்தனமான குண விசேஷங் கொண்டவன். இவன் நாடி வந்த சீமான் “CUP BEARER” என்ற பட்டப்பெயரில் நடமாடும் மாத்யூ. மாத்யூவின் சகோதரியின் இளம்பெண் கிளாரா [KLARA] கப்பேரர் மாத்யூவின் வளர்ப்பில் இருப்பவள். மற்றொரு பகுதியிலுள்ள சீமான; ரிஜெண்ட் மில்க்ஜெக் [REZENT MILCZEK]  என்பவர். இவர் பத்திரம், பதிவு, நீதிமன்ற ஞானம் கொண்டவராதலால் இவரை “நோட்டரி” [NOTARY] என்றழைக்கின்றனர். இவர் வீட்டில் பருமனும் கவர்ச்சிமிக்கவளுமாய் நடுத்தர வயது விதவை ஹன்னா [HANNA]  அடுத்த திருமணத்தை எதிர்பார்த்தபடி ஏங்கியிருப்பவள். நோட்டரியின் இளம் வயது மகன் வாக்ளா [WACLAW].

அவர்கள் இருப்பது தூளும் தூசும் பறக்கும் சிதிலமான மாபெரும் கோட்டை மாளிகை. பேராசை – வீண் பெருமை – காம் – முட்டாள்தனங்களின் சாட்சியாக தொட்டால் உதிரும் சுவர்கள்… பக்கத்தில் பக்கத்தில் இரு பகுதிகளாய் பிரிக்கப்பட்ட தனித் தனிப் பகுதிகளில் அவர்கள் வசித்தாலும் இரு குடும்பங்களையும் குடியிருப்பு ரீதியாகப் பிரிக்கும் பெரிய மதிற்சுவரில் இரண்டுபேர் தாராளமாய் நுழையக்கூடிய வகையில் இடிந்து நிற்கும் இடைவெளி கொண்ட சுவர். இந்த இடைவெளி நோட்டரிக்கு கண்ணையும் மனத்தையும் உறுத்துகிறது. கொத்தனார்களைக் கூப்பிட்டு பிளவை அடைக்க ஏற்பாடு செய்கிறார். அதையறிந்த மாத்யூ அதை தடுக்கிறார். அவரது ஆட்கள் கட்டிடத் தொழிலாளர்களை கீழே தள்ளி வேலையை நிறுத்திவிடுகின்றனர். சீமான்களுக்கிடையிலான பகைமையும் வஞ்சமும் கூடுகிறது. நோட்டரி மாத்யூமீது நீதிமன்றப் புகாரளித்து சட்ட நடவடிக்கையெடுக்கும் முயற்சியில் மேஸ்திரியையும், தொழிலாளர்களையும் எவ்வளவுக்கு கீறல் – சிராய்ப்பு – காயம் ஏற்பட்டது என விசாரித்து எழுத முற்படுகையில் ஜோசப் பாப்கின் பிளவு வழியாக நுழைந்து வருகிறான். நோட்டரியின் உதியாளருக்கு எழுதவே வருவதில்லை. பாப்கினை நோட்டரி வெளியில் தள்ளிவிடுகிறான்.

பாப்கினுக்கு கப்பேரரின் இளம் பெண் கிளாரா மீது ஒரு தலைக்காதல். கிளாராவும் நோட்டரியின் மகன் வாக்களாவும் காதலிக்கின்றனர். கப்பேரருக்கு விதவைப் பெண் ஹன்னாவை மறுமணம் செய்து கொள்ளும் ஆசை.  நோட்டரிக்கு பணக்காரியான விதவை ஹன்னாவைத் தன் இளம் மகன் வாக்ளாவுக்குத் திருமணம் செய்து விடவேண்டுமென்று ஆசை. விதவை ஹன்னாவுக்கும் இளைஞன் வாக்ளாவுக்கும் கொஞ்சகாலம் முன்னர் கள்ள உறவு இருந்திருக்கிறது. இந்த பன்முக கல்யாண ஏற்பாட்டு சதுரங்க ஆட்டம் முடியும் விதம்தான் படம். வாஜ்தா ஒவ்வொரு இணையாக விடுவித்துக்கொண்டே இறுதித் தீர்வுக்கு நம்மையும் அழைத்துப் போகிறார். சீமான்கள் கப்பேரரும் நோட்டரியும் தங்கள் வஞ்சத்தை எவ்வாறு தீர்த்துக்கொள்ளுவார்கள் என்பது காதல் சதுரங்க ஆட்டத்தின் முடிவைப் பொறுத்திருக்கிறது.

ஜோசப் பாப்கின் கிளாராவைத் தனியாக சந்திக்கையில் தன் காதலை வெளியிட்டு விட்டு தன் பராக்கிரமங்களை அடுக்கவான். அவளோ, தன்னை மணம் முடிக்க விரும்புகிறவன், தான் இடும் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே கணவனாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்று விதிக்கிறாள். அதற்கு பாப்கின் ஒப்புக்கொள்ளவும், அவள் தன் மூன்று நிபந்தனைகளை வெளியிடுகிறாள்:-

ஒன்று: நீ வீரன் என்பதை நிரூபிக்க முதலில் பணிவு மேற்கொள்ள வேண்டும். அதாவது நீ ஆறு மாதங்களுக்கு எதையுமே பேசக்கூடாது.

இரண்டாவது: உன் தாங்கும் சக்தியை நிரூபிக்க, ஒரு வருடம், ஆறு நாட்களுக்கு நீ வெறும் ரொட்டியையும் தண்ணீரையுமே உட்கொள்ள வேண்டும்.  கடைசியாக
மூன்று: உன் சாகச பராக்கிரமித்தை நிரூபிக்க, நீண்டதூர நாட்டில் அதிபராக்கிரம சாலியையும் பயமுறுத்தும் முதலை என்றழைக்கப்படும் ராட்சதப்  பறவையை உயிரோடு பிடித்து உயிரோடு கொண்டு வந்து எனக்குப் பரிசாக அளித்து என்னை மகிழ்விக்க வேண்டும். இவை மூன்றையும் நிறைவேற்றினால் உன்னைக் கணவனாக ஏற்றுக்கொள்ளுவேன் என்கிறாள் கிளாரா.  பாப்கினுக்கு முதலை ஒன்றுதான் தீர்க்கமுடியாத நிபந்தனையாகப்படுகிறது. இருப்பினும் அவளை தினமும் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினவனாய், அங்கு கன்னத்தனமாய் வரும் வாக்ளாவை ஓர் அறைக்குள் முடக்கி வைக்கிறான். கப்பேரர், நோட.டரியை ஒண்டிக்கொண்டி யுத்தத்துக்கு [DUEL] அழைப்பு விடுத்து கடிதமெழுதி பாப்கின் மூலம் அனுப்புகிறார். வாக்ளா அங்கு வருகையில் அவனை எதிர்பார்க்காத ஹன்னா தனக்கும் அவனுக்குமிருந்த பழைய உறவை நினைவூட்டி இருவரும் கணவன், மனைவியாக இருக்க ஒப்புதல் வேண்ட, அவனோ தன் இளமையில் நடந்தது இளைஞர்களுக்கு ஏற்படும் வெகு சகஜமான செயலனுபவம் எனக்கூறி அவளை நிராகரித்துவிட்டு கிளாராவை சென்றடைகிறான். இருவரும், இரு குடும்பங்களுக்கும் இடையிலுள்ள பாழடைந்த சுவர் அருகில் கட்டியணைத்து ஆழ முத்தமிடும் அழுத்தத்தில் சுவரை மோத, அந்தச் சுவர் இடிந்து சரிவது, அவர்களுக்கிடையேயான தடுப்புத் தடைகள் தகர்ந்தன என்பதின் குறியீடாக வைக்கிறார் ஆண்ட்ரெஸ்ஜ் வாஜ்தா. அருமை!
கிளாராவையும் வாக்ளாவையும் தம்பதியாய் ஏற்று ஆசீர்வதித்து திருமணத்தை முடிக்க புரோகிதரையும் அழைக்கிறார் கப்பேரர்.

ஒண்டிக்கொண்டி யுத்தத்துக்கு வந்து நிற்கும் நோட்டரி வேறு வழியின்றி மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு எதிரியாயிருந்து சம்பந்தியாகிவிட்ட கப்பேரரை சமாதானக் கையாகப் பற்றி உறவு கொண்டாடுகிறார். திரை ஒரு நாடக அரங்காக மாறி, விதூஷகனாக படத்தை முடிக்கிறான் ஜோசப் பாப்கின் – ரோமன் பொலான்ஸ்கி.

ரோமன் பொலான்ஸ்கி [ஜோசப் பாப்கின்], ஆண்ரெஜ் செவரின் (ANDRZEJ SEWRYN) [நோட்டரி], ஜானுஸ் கஜோஸ்   (JANOSZ GAJOS) [கப்பேரர்], கடார்ஜைனா ஃபிகுரா (KATARZYNA FIGURA) [ஹன்னர்],  அகதா புஜெக் (AGATA BUZEK) [கிளாரா]  ஆகியோரின் நடிப்பு இயல்பாயும் சற்று நாடகத்தனமாயும் (நாடகந்தானே) இருக்கிறது. வண்ண ஒளிப்பதிவு அபாரம். பாவெல் எடெல்மன். காமிரா கோணங்கள் அற்புதம்.

Man of Marble (1977) - IMDb

வாஜ்தாவின் “MAN OF MARBLE” [CZLOWIEKZ MARMURU-1977] அரிய கருப்பு வெள்ளை திரைப்படம் மேற்கு நாடுகளின் திரை விமர்சகர்கள் இப்படத்தை வாஜ்தாவின் மிகச்சிறந்த ஒன்றாகவும், போலந்தின் மிகச்சிறந்த படம் சிலதில் இது ஒன்று என்றும் கொண்டாடுவது அதிசயமல்ல. இப்படம் கம்யூனிஸம் குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதால் மேற்கத்திய சினிமா விமர்சகர்களுக்கு அரசியல் ரீதியாக லட்டு. கான் விழாவில் விருதளிக்கப்பட்ட படம். எனவே தயங்காமல் உடனடியாக ஒருவித ஆயத்த ஒப்பீட்டு விமர்சனமாக இப்படத்தை ORSON WELLES-ன் “CITIZEN KANE”  திரைப்படத்தின் வடிவமைப்பின் ஆச்சரியங்களை நினைவூட்டும் படமாக கொண்டாடுகின்றனர். ஆனால் இதையெல்லாம் மீறி “பளிங்குக்கல் மனிதன்” சிறந்த படம் என்பதுதான் முக்கிய விஷயம்.

திரைப்படக் கல்லூரி மாணவியான அக்னீஷ்கா [AGNIESZKA] போலந்தின் மறக்கப்பட்ட தொழிலாளி நாயகன். செங்கல் கட்டிடக் கொழுத்துக்காரத் தொழிலாளி – பிர்குத் [BIRKUT] பற்றிய ஆய்வைத் தன் டிப்ளமோ பட்டப் படிப்பின் திரைப்படத்துக்கு அர்ப்பணிப்பாக்க எடுத்துக்கொண்ட கடும் உழைப்பு – முயற்சிகள்தான் படம். பிர்குத் 1950-களில் வாழ்ந்து தொழில் ரீதியாக புகழின் உச்சியை அடைந்து அரசியல் ரீதியாக காணாமற்போனவன். ஒருநாளில் ஆயிரக்கணக்கான செங்கற்களை மின்னல் வேகத்தில் வைத்து காரைக் கலவையால் இறுக்கி கட்டுமான கின்னஸ் ரிக்கார்டு புரிந்தவனான பிர்குத் அதிபர் ஸ்டாலின் கால கம்யூனிஸ்டுகளால் தேசிய நாயகன்என கொண்டாடப்பட்டவன். இவனது காதல் திருமணம் அதையடுத்து புதுமனைப்புகும் முகமலர்ச்சியெல்லாம் என் இளமைக்கால நிகழ்வுகளில் சஞ்சரிக்கச் செய்வன. ஆயிரக்கணக்கில் செங்கற்களை எடுத்து அடுக்கி அற்புதமான பல மாடிக் குடியிருப்பு மனைகளை சோஷலிஸ அரசின் திட்டங்களில் அடிப்படையான ஒன்றாக லட்சக்கணக்கான எளிய மக்களின் வசிக்குமி வசதியைச் செய்த கட்டிடத் தொழிலாளி பிர்குத், அவன் எழுப்பிய சுவர்களிலமைந்த குடியிருப்புகளில் தனக்கும் ஒன்றை அரசு அளித்த சமயம் தன் இளம் காதல் மனைவியோடு மனைக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்து “தான் கட்டியது –தன் உழைப்பு இது” என்று சொற்களால் பேசாது முகப் பரவசத்தால் உணர்த்தும் கட்டம் அற்புதம். வாஜ்தாவும் பிர்குத்தாக நடிக்கும் ஜெர்ஸி ராட்ஜிவிலோவிக்ஸ் [JERZY RADZIWILOWICZ]  நடிப்பும் அபாரம். பிர்குத் சலவைக்கல் சிற்ப வடிவம் பெறுகிறான். பெரிய சிலை. கட்டுமானப் பணியின் போதான மேல்சட்டையில்லாத வெற்று மார்புடன் ஒரு சிற்பத்துக்கான சகல அங்க லட்சணங்களோடும் – அகஸ்டி ரோதன், ராய் சவுதரி – மூக்கய்யா சிற்பிகளின் வடிவ நேர்த்தியில் பளிங்கின் சிற்பமாகி அருங்காட்சியகக் கூடத்தில் சிலை வைக்கப்பட்டவனாகிறான். இதுவரை உழைப்பைத் தவிர வேறெந்த சிந்தனையுமற்றிருந்த பிர்குத் எனும் அப்பாவியான தொழிலாளி ஒருநாள் மாறிப்போகிறான்.

அவன் புகழில் பொறாமை கொண்டோர், துரோகச் செயல் புரிகின்றனர். வெகுமுசுவாக பணியில் ஈடுபட்டிருக்கும் அவனது கையில் ஒருவன் சூளையிலிருந்து கொண்டுவந்த வெகு சூடான கொதிக்கும் செங்கல் ஒன்றை அவன் கையில் வைக்கவும் கையோடு மனமும் வெந்து போகிறான் பிர்குத். அக்கணம் முதல் அவனது அப்பாவித்தனமான வார்ப்பு மாறுகிறது. பழைய ரஷ்ய திரைப்பட மேதை புடோவ்கின் [VSEVOLOD PUDOVKIN]  படங்களின் பாத்திரங்களை நினைவூட்டும் வகையில் அடுத்தடுத்து காட்சிகள் நகருகின்றன.

தான் ஒரு குட்டித் “தலைவன்” அந்தஸ்தை அடைந்தது எவ்வளவு கேவலமானது என்று நினைக்கிறான் பிர்குத். அக்கணமே அவனது அப்பாவித்தனமும் அவனைவிட்டு அகலுகிறது. ஒரு சமூக உணர்வு தலைதூக்குகிறது, ஆனால் புரட்சிகர உத்வேகமென்று ஆகிவிடாது. கம்யூனிஸ்டுகளை அவன் தைரியமாக கேள்விகள் கேட்கிறான். கொண்டாட்டங்களில் புகழ்பெற்ற சாகச வீரர்களின் பதாகை போன்ற பெரிய அளவு புகைப்படங்கள் நகரில் அலங்கரிக்கப்படும் சடங்குகளில் அவனது படம் அகற்றியெறியப்பட்டு வேறு ஒருவரின் படம் இடம் பெறுகிறது. மியூசியத்தின் சிற்பக்கூடத்தில் இதுவரை எல்லோரையும் கவர்ந்து வந்த பெரிய அவனது சலவைக்கல் சிற்பம் ஏற்கெனவே தேவையில்லையென அடைத்து வைக்கப்பட்டுள்ள கிடங்கில் அகற்றப்பட்டு படுக்கவைக்கப்படுகிறது. அவனும் மறக்கப்பட்டவனானான்.

Człowiek z marmuru (1976) - Filmwebஅக்னீஷ்கா தன் டிப்ளமோ பட்டத்துக்கான ஆய்வு ரீதியில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில் சேர்க்க தன் புகைப்படக் கலைஞர், உதவியாளர்களோடு அந்த சிலையைப் படமெடுக்க மியூசியத்துக்குள் நுழைவதுதான் படத்தின் ஆரம்பக் காட்சி. அந்த சிற்பம் இல்லை. மேலும் அன்று மியூசியத்துக்கு விடுமுறை. பொறுப்பான அதிகாரி வரவில்லை. ஒரு பெண்மணி மேற்பார்வையாளர் மட்டுமே இருக்கிறார். எந்த பதிலும் சரியாயில்லை. அவளுக்கு போக்குக் காட்டிவிட்டு அக்னீஷ்கா கிடங்கை தலைக் கொண்டை ஊசியால் திறந்து பிர்குத்தின் தூசு படிந்த சிற்பத்தைக் கண்டு வேக வேகமாக பல்வேறு கோணங்களில் கேமராமேனை படமெடுக்க வைக்கிறாள். அது தொடர்பான சிலரை கஷ்டப்பட்டு தேடிச்சென்று பேட்டியெடுக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற போலிஷ் திரைப்ட இயக்குநர் ஜெர்சி புர்ஸ்கி [JERZY BURSKI] என்பவரை விமான நிலையத்திலிருந்து பின்தொடர்ந்து சந்தித்து பேட்டி கண்டு சில உண்மைகளை கண்டெடுக்கிறாள். பிர்குத்தின் புகழ் உச்சிக்குச் செல்லுகையில் புர்ஸ்கி கூட இருந்தவர்.

அக்னீஷ்கா தன் படத்தை முடிக்கிறாள். சில காட்சிகள் தணிக்கைக் குழுவால் ஆட்சேபிக்கப்பட்டு வெட்டப்படுகின்றன. வண்ணப்படம். பழைய நினைவுகள், சம்பவங்களைக் காட்ட சற்று தேய்ந்த நிலையிலுள்ளதுபோலத் தோன்றும் கருப்பு வெள்ளையில் படம் ஓடுகிறது. அற்புதமான ஒளிப்பதிவு. எட்வவார்டு குளோசின்ஸ்கியின் [EDWARD KLOSINSKI] யின் கேமரா கணமும் சோர்ந்து நிற்பதில்லை.

பிர்குத் பாத்திரத்தில் ஜெர்சி ராட்ஜிவிலோவிக்ஸ் தத்ரூபமாக நடிக்கிறார் என்றாலும் அகனீஷ்காவாக நடிக்கும் கிறிஸடினா ஜண்டா [KRYSTYNA JANDA] தான் தன் அற்புத நடிப்பால் கவர்கிறார்.

ஆண்ட்ரெஜ் வாஜ்தா 2016-ல் காலமானார்.
——–




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *