இவரது கதைகளின் பாத்திரங்கள் யாவும் புழுதி படிந்தவை.  கிராமத்து மனிதாத்மாக்கள். வறுமையும், துன்பங்களுமாக சமூகத்தின் அடித்தளத்திற்குள் உழல்கிற அன்புமிக்க மனிதர்கள்

மனுஷி

அல்லிநகரம்  தாமோதரன்

“ஏனுங்க புருஷங்காரன் செத்துப் போனதுக்கப்பறம் போயி, குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாளே மயிலம்மா, அவ நம்ம வீட்டுக்கு வந்து நாளைக்கு உமாவ பொண்ணு பாக்க வர சமயத்தில  நாந்தர்ற இந்த மல்லிகைப் பூவையாச்சும் எங்க சினேகிதத்துக்கு அடையாளமா குடுத்து, அவ தலையிலே வெச்சிக்கச் சொல்லு”னு கூத்தாடினா.  “நாந்தே ஒம் பூவிம் வேணாம், ஒரு புண்ணாக்கும் வேணாம்”னுட்டுத் திருப்பியனுப்பிச்சிட்டேன்

தோட்டத்திலிருந்து வந்த பூதமுத்துவுக்கு மனைவி பூவதி கூறிய வார்த்தைகள் உள்மனசை வெகுண்டெழச் செய்தது. “அவ வந்தப்ப நா மட்டும் இருந்தேன்னு வெய்யி, ஏ ஆத்திரந்தீரும் மட்டிலும் முதுகுல நாலு அடி வெச்சியிருப்பேன்” என்றவர் “இனிமே அவ இங்க வந்தான்னு வெய்யி அவளுக்கு நாந்தே எமன்” என்று விளாசினார்.

பெண் பார்க்க நாளை மாப்பிள்ளை வீட்டார் வருவது பற்றிய சிந்தனை இருந்தாலும், மீண்டும் மீண்டும் மயிலம்மா பற்றியே மனசு ஆழ்ந்து விடுகிறது.

மயிலம்மா அவளது கணவன் உயிரோடிந்த வரையில் பூதமுத்துவின் தோட்டத்தில்தான் கூலி வேலை செய்து வந்தாள். வேலை முடிந்ததும் அவரது மகள் உமாவிற்கு எடுபிடி வேலைகளை செய்து வந்ததோடு, சமையல் வேளைகளில் ஒத்தாசையாயும் இருந்து வந்தாள்.  மயிலம்மா உமாவைக் காட்டிலும் பத்து வயது மூத்தவளாக இருந்தாலும், அவளது நெருங்கிய தோழியானாள். வியர்வையும் பன்னீரும் வித்தியாசம் பார்க்காது கலந்துக் குலாவியது.  

மயிலம்மாவின் கணவன் எதிர்பாராத விபத்தொன்றில் செத்துப் போய்விட, ஒரு வித விரக்தியில் சிறிது காலம் வீட்டோடு முடங்கிக் கிடந்தவள், பின்  ஏதோ ஒரு பருத்தி அரவை மில்லுக்கு உட்கார்ந்து சொத்தைப்  பருத்தி பொறுக்குகிற வேலைக்குச் சென்று, தன் பிள்ளையைக் காத்து வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது தோட்டத்துக் காவலாளி பரமசிவன் ஒரு தகவலை அவரிடம் சொன்னான்.  மயிலம்மா போனமாசம் கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போயி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக் கொண்டதாக  கூறினான்.  எந்தப் பயலோட களியாட்டம் போடுறதுக்கோன்னு ஊர்லே இதே பேச்சா இருந்தது என்றும் அவன் சொன்னான்.



மயிலம்மா பற்றிய அவரது மதிப்பு தரம் குன்றியது.  “இனிமே அந்த மயிலம்மா இங்கே வரவோ போகவோ கூடாது” என்றவர் “ஒத்தப் புள்ளைய வளர்த்து ஆளாக்குறதுல கவனஞ் செலுத்தாம இப்படி நேந்துவுட்ட மாடு கணக்கா கண்ட மேனிக்கு திரியுது” என்றும் கூறினார்.  பின் ஒரு நாள் உமாவைப் பார்ப்பதற்கு மயிலம்மா வந்திருக்க, பலவாறு திட்டி அனுப்பப்பட்டிருந்தாள்.   

“உமாவைப் பொண்ணுப்பாக்க வர்ற சங்கதிய ஊரெல்லாஞ் சொல்லியிருக்கீங்க! என்ன மறந்துட்டீங்களாக்கும்” என்று ஒரு நாள் நேரில் கேட்டாள்.

“காரணம் கத்திரிக்கானுட்டு எதுவும்  கேக்காத.  குடிக்க குளிக்கக் கூடத் தண்ணியில்லாத இந்தக் கிராமத்துல, பொண்ணு குடுக்கவோ எடுக்கவோ வராமே ரொம்பப் புள்ளைக்கி  கல்யாணமாகாம இருக்குற நெலமயிலே, ஏதோ டவுண்லேர்ந்து நல்ல வரன் தேடி வருது.  இந்தச் சமயத்திலே ஒன்னப்போல ஓடுகாலி காத்துப் பட்டாக்கூட, இந்த நல்ல காரியம் போயிரும், ஓடிப் போயிடு” என்று பூதமுத்து துரத்திவிட்டார்.

மாப்பிளை வீட்டார் குறைந்தது இருபத்தைந்து பேர்களாவது வரக்கூடும் என்பதால் தேங்காய் குடவுணில் சமையல் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.  இரண்டு வேன்களில் வந்திறங்கி மாப்பிள்ளை வீட்டார் உமாவைப் பெண் பார்த்து விட்டும், பின் சாப்பிட்டு முடித்துவிட்டு மாப்பிள்ளையுடன் வராண்டாவில் குழுமி நின்றனர்.

தரகர் வந்தார்.  “தண்ணி வாடையே இல்லாத இந்தப் பொட்டல் பூமியிலே, மாப்ள எப்படித்தாஞ் சம்மதிக்கப் போறாரோன்னு எனக்கு கலக்கமா இருந்தது.  ஆனா அந்தக் கொறய மறக்கடிக்கறாப்பல பொண்ணையும் காண்பிச்சிட்டு, அசத்தலா சமையலும் பண்ணிப் போட்டுருக்கீர்.  ஒங்க பொண்ணைக் கட்டிக்கறதுக்கு பூரணச் சம்மதஞ் சொல்லிட்டாரு.”

மாப்பிள்ளை வீட்டார் திரும்பிப் போகவும், பூதமுத்து சமையல் காண்டிராக்டரை அழைத்து பாராட்டினார்.  சமையல் அம்புட்டு ருசியா இருந்ததுக்கு தான் காரணமில்லையென்றும் புதுசா சேர்ந்துருக்கிற பொம்பளைதான் என்றும் கூறி அழைத்தார்.



நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடவும் கலைத்த தலையுடனுமாக மயிலம்மா வெளியே வந்தாள்.  பூதமுத்துவுக்கு  உலுக்கிப் போட்டது.  உச் கொட்டியது உள்மனசு.  இணக்கமற்ற சுணக்கம் நீங்கி நெஞ்சுக்குள் ஈரமாய் வேர் விடும் கலக்கம். “இன்னிக்குச் சமையல் ஒன்னோடக் கைவண்ணந்தானா?  ஏங்கண்ல தட்டுப்படவேயில்லீயே?” ஆச்சரியத்தில் கேட்டார்.

மயிலம்மா பதிலளித்தாள்.  

தன்மீதுள்ள வெறுப்பினால் திருப்பியனுப்பிடுவாங்களோன்னுதான் மறைஞ்சு வேலை செய்ததாகவும்,  தான் தெனமும் வேலைக்குப் போனாத்தான் பிள்ளையக் காப்பாத்தி பொழப்ப ஓட்டமுடியும் என்பதால் பருத்தி மில்லுக்கு வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததாகவும் சொன்னாள்.  மேலும் கெராமம் சார்பாக குடி தண்ணிக்காக ஊரணி வெட்டுறதுக்கு தங்கிட்ட பங்குப் பணம் கேட்டதாகவும், எங்கும் கிடைக்கதாததினால்  கவர்மெண்ட்  ஆஸ்பத்திரிக்குப் போயி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு ஐந்நூறு ரூபாயை பங்குப் பணமாக கொடுத்ததாகவும் சொன்னாள். அதுக்கப்பறம் மில்லுல வேலை செய்ய முடியாததினாலே சமையல் வேலைக்கு வந்ததை தெரிவித்தாள்.

“எப்படியோ ஊரணி வெட்டி தண்ணிக் கஷ்டம் தீர்ந்து, அப்புறமாச்சம் இந்தக் கிராமத்துல பொண்ணுக் குடுத்து பொண்ணு சம்பந்தம் பண்ண,  அசலூர்க்காரங்க வரட்டும்.  வந்து நம்மூர்லே பொம்பளப் புள்ளைங்க பொழப்பு வௌங்கட்டும்”  கண்கள் கசிய சமையல் குடவுனை நோக்கித் திரும்பி மயிலம்மா நடந்தாள்.

பிரமிப்புடன் அவளை நெக்குருகப் பார்த்தவாறு நின்றிருந்தார் பூதமுத்து.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *