Series 70 Engal kanmayum oru naal marukal pogum short story by Era.Kathaipithan synopsis by Ramachandra Vaidyanath எங்கள் கண்மாயும் ஒரு நாள் மறுகால் போகும்

பின்தங்கிய கிராமங்களின் வறட்சியையும் வாழ்க்கைத் துயரங்களையும் மையமாகக் கொண்ட இவர் படைப்புகளில் உண்மையும் நம்பிக்கையும் போர்கொண்டு பார்க்கின்றன.

ஐயா,

எங்கள் பேந்தநேரிக் கண்மாய், சந்திராபுரம் கிராமத்தில் உள்ளது. இதன் ஆயக்கட்டு சுமார் 300 ஏக்கர் ஆகும். பெரிய மேஜர் கண்மாய் ஆகும். இந்த கண்மாயை நம்பி நாங்கள் விவசாயிகள் சுமார் 150 பேர் குடும்பத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்கள் கண்மாய்க்குத் தண்ணீர் வரத்துக்கு கால்வாய் எதுவும் இல்லை. மேலே உள்ள சந்திராபுரம் கண்மாயிலிருந்து மறுகால் மூலம்தான் வரவேண்டும். ஆண்டுதோறும் சந்திராபுரம் கண்மாய் பெருகிவிடுகிறது. ஆனால் எங்களுக்கு அதன் மறுகால் தண்ணீர் வருவதில்லை
ஆகவே தர்ம எஜமானாகிய தாங்கள் நேரில் எங்கள் கண்மாயைப் பார்வையிட்டு, எங்களுக்கு நல்ல வழி பிறக்க ஆவன செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு விவசாயிகள்

சில கோணல்மாணலான கையெழுத்துக்கள், கட்டை விரல் ரேகைகள், கீறல்கள் பல.
மனுவை நிதானமாகப் படித்து முடித்த செக் ஷன் ஆபீஸர் சுந்தரராமன், மேஸ்திரி கருப்பையாவைப் பார்த்து விசாரிக்கவும் அறிக்கை ஒன்றை எழுதிக் கொண்டிருந்த கருப்பையா “சந்திராபுரமா சார், இங்கேயிருந்து பக்கம்தான் சார். சேத்தூர் போற வழியிலே இருக்கு. பஸ்லே போலாம் சார்” என்றான்.
சுந்தரராமன் விசாரிப்பதற்கு காரணங்கள் உண்டு. ஏனெனில் அவன் இந்த செக் ஷனுக்கு மாற்றி வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. மதுரை டவுன் செக் ஷனிலிருந்து புதிதாக இப்படி கிராமப்புறமும் கண்மாய்களும் நிறைந்த செக் ஷனுக்கு மாற்றி வந்திருப்பது அவனுக்கு ஒருவிதத்தில் சங்கடமாக இருந்தாலும், அனுபவங்கள்தான் ஒரு மனிதனை நன்கு உருவாக்குகின்றன என்பதில் அவன் அசையாத நம்பிக்கை கொண்டவன். மேஸ்திரி கருப்பையாவும், ஹெட்கூலி மாரிமுத்துவும் அந்த செக் ஷனில் ஐந்து வருடங்களாக சர்வீஸானவர்கள். அந்த ஏரியாவைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள்.

“சார், வருசா வருசம் இந்த மாதிரி மனுப்போட்டுக்கிட்டேதான் இருக்காங்க. சந்திராபுரம் கண்மாய் மைனர் கண்மாய்தான். அது வழியேதான் இவங்க கண்மாய்க்குத் தண்ணீர் வரமுடியும். ஆனா அது யார் கண்மாய்னு நினைக்கறீங்க? பூரா ஆயக்கட்டும் பண்ணையாருக்குச் சொந்தமானது சார். அவர் பார்த்து தண்ணீர் விட்டாத்தான் உண்டு. அவருக்கு பேந்தநேரிக்குத் தெற்கே உள்ள மூலைசேரி கண்மாயிலேயும் நிறைய ஆயக்கட்டு இருக்கு. ஆகவே சந்திராபுரம் பெருகினதும் தண்ணியை அப்படியே தெற்கோரமா கரையை வெட்டி மூலைசேரிக்கு விட்டுவிடுவாரு. கணக்குப்பிள்ளை, கிராம முன்சீபு சம்திங் வாங்கிவிட்டு பேசாம இருந்துடுறாங்க. நான் சொல்றேன்னு கோபப்படாதீங்க சார். கண்மாயைப் போய்ப் பார்ப்போம். அப்புறம் ஏதோ நமக்குத் தெரிஞ்சதை எழுதி அனுப்பிருவோம்” உண்மையை கருப்பையா நாசூக்காக விளக்கி முடித்தான்.

நீலக்கலரின் முட்டை வடிவங்களில் கண்மாய்களும், சின்னக் கருப்புச் சதுரங்களுக்கு நேரே ஊர் பெயர்களும் எழுதப்பட்ட அந்தப் படத்தில் அவன் உற்றுப் பார்த்தான். ஓ இதுதான் சந்திராபுரம் கண்மாயா? சரி இது பேந்தநேரி இது மூலைசேரி கிடங்கியாறு எங்கே இதோ என்று மெல்ல மேல்ல விவரங்களைப் பார்த்துக் கொண்டான்.

“சார், ஒரு விஷயம்” என்று இழுத்தான் கருப்பையா

“என்ன?”

“நம்ம ஆபீஸ்லே உள்ள இரண்டு நாற்காலிகள், மேஜைகள்லே ஒரு செட்தான் நம்மளது. இன்னொரு செட்டு பண்ணையாருது. அவருதான் நம்ம ஆபீசுக்கு யாராவது மேல் ஆபீசிலிருந்து வந்தா போன உட்கார இருக்கட்டுமேன்னு கொண்டுவந்து போட்டாரு”.

சுந்தரராமனுக்கு இதைக்கேட்டதும் சுருக்கென்றது. “சரி நாளைக்கு இதைக் கொண்டுபோய் அவர் வீட்லே சேத்திருங்க. அப்படியே என் வீட்டிலே இருக்கிற என் சொந்த சேர் டேபிளை இங்கே கொண்டு வந்து போட ஏற்பாடு செஞ்சிடுங்க என்ன ?” என்று உத்தரவிட்டபடி “நாளைக்குக் காலேல ஏழரை மணி பஸ்லே நம்ம இரண்டு பேரும் சந்திராபுரம் போகணும். பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருங்க” என்று சொல்லிவிட்டு அதற்கு வேண்டிய ரிக்கார்டுகளையும் எடுத்துக் கொடுத்துவிட்டு சைக்கிளில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினான்.

மறுநாள் காலை மணி எட்டு இருக்கும்.

சந்திராபுரம் என்று பெயர்ப்பலகை நாட்டப்பட்டிருந்த பாதையில் பஸ்ஸிலிருந்து இறங்கி மெல்ல நடக்கலானான் சுந்தரராமன். கூடவே கருப்பையா பின்னால் ரிக்கார்டுகள் அடங்கிய பையைச் சுமந்து வந்தான்.

சந்திராபுரம் ஒரு சின்ன கிராமம். சுமார் 300 400 வீடுகள் இருக்கலாம். பாதிப்பேர் ஹரிஜனங்கள். மீதிப் பேர் தேவமார் நயக்கமார் இப்படி எல்லோருக்கும் விவசாயந்தான் தொழில்.

எல்லோரும் வந்து சேர்ந்தவுடன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு “சாமீ, எசமான் வாங்க. நீங்கதான் எங்களுக்கு ஒரு வழி பிறக்கச் செய்யணும்” என்று பணிவுடன் கும்பிட்டார்கள். சுந்தரராமனுக்கு மனம் இளகியது. “சரி, கூட வாங்க கண்மாயைப் பார்க்கலாம்.” எல்லோரும் நடந்தார்கள்.
“சார், இதுதான் சார் கலுங்கு. சந்திராபுரம் கண்மாய் பெருகினாலும் மறுகால் இது வழியேதான் எங்களுக்கு வரணும்” என்றான் ஒருவன். அவன் பெயர் கருப்பன். ஆள் ஆஜானுபாகுவாக வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான்.

“சார், இதுலே கலுங்கு மட்டம் இருக்கு பாருங்க சார். அதுதான் இந்த கண்மாய்க்கு நிறை கண்மாய் டபெருகற மட்டம். அதுக்கு மேலே இருக்கற குத்துக்கல் சும்மா ஆள்கள் வெள்ளக் காலத்திலே கலுங்குக்கு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் போகறதுக்காக பிடிச்சிக்கிட்டு நிக்கறதுக்காக ஜமீன் காலத்திலே நட்டு வைச்சதுங்க. நீங்க ரிக்கார்டுகளை வேணுமானாலும் எடுத்துப் பார்த்துக்குங்க சார். நான் சொல்றது சரியா தப்பான்னு.”
“கலுங்கு மட்டம் வந்ததும், கட்டை மண் பலகை எல்லாத்தையும் வைச்சு அடைச்சு ரெண்டு அடி உயரமிருக்கும் இந்தக் குத்துக்கல் மட்டத்துக்கு தண்ணியைத் தேக்கிக்கிறாங்க சார்”.

“சரி அது போகட்டும். தெற்குக் கடைசிலே இந்தக் கண்மாய்க் கரையை வெட்டி ஒரு சின்ன வாய்க்கால் மூலமா மூலைசேரிக் கண்மாய்க்கு தண்ணி கொண்டு போறரு. ரிக்கார்டுபடி தண்ணி வரத்தே அதுக்கு கிடையாது, அதோட விடறாங்களா, தண்ணி பாய்ச்ச முடிஞ்சதும் கண்மாய் உடைஞ்சு போச்சுன்ன தந்தி கொடுத்து அந்த உடைப்பை அதிகாரிக வந்து அடைச்சு கொடுத்துட்டுப் போறாக”.

ராக்கன் ஆரம்பித்தான் “இப்பவும் தண்ணி முக்காக் கண்மாய் பெருகிடுச்சு. ஐயா, நீங்களே இந்தா பாக்கறீங்க. இன்னும் இரண்டு மூணு நாள்லே மழை பெய்யும்னு சொல்றாங்க. நல்லபடியா பெஞ்சு பெருகுதுன்னே வச்சுக்குங்க அப்பவாவது எங்களுக்கு மருகாத்தண்ணி வருணுமா இல்லையா? அதுக்குத்தான் இப்பவே பிடிச்சு நாங்க முயற்சி எடுக்கறோம், எங்களுக்குத்தான் மாத்து வழி ஒண்ணும் பிறக்கல்லேணு”.

“எங்களாலே இதுக்கு கோர்ட்டு வழக்குன்னு போய் அலைய முடியாது. அன்னாடச் சாப்பாட்டுக்கே திண்டாடுறவங்க. அதுக்கெல்லாம் எப்படிங்க போக முடியும்?”
“போன வருசம் பாருங்க, இவரு மச்சினன் மாரிமுத்துவும் என் மகன் வெள்ளையனும் சேர்ந்து இராத்திரியிலே வந்து கலுங்குக்க மேல கட்டியிருந்த மண்ணை எடுத்து ஒர அரை அடி உசரம் கலைச்சாங்க. தண்ணி எக்சகச்சக்கமாக கண்மாய்க்குள்ளே வந்துக்கிட்டிருக்கு. அதுக்குள்ளே பண்ணையாருக்கும் தகவல் போயிருச்சு, அவ்வளவுதான். ராத்திரியே ஒரு லாரி போலீஸ் வந்து எங்களையெல்லாம் அடிச்சு அவுங்க ரெண்டு பேரையும் கலுங்கை உடைச்சிட்டாங்கன்னு பொய்கேசு போட்டுக் கொண்டு போயிட்டாங்கய்யா”.

சுந்தரராமனுக்கு நிலவரங்கள் தெளிவாகத் தெரிந்தன. கலுங்கு மட்டம்தான் சரியான ஏற்கனவே வெள்ளைக்காரன் காலத்திலேயே வரையறுத்து நிர்ணயிக்கப்பட்ட மட்டம் என்று ரிக்கார்டு கூறும்போது குத்துக்கல் மட்டத்துக்கு எப்படி அனுமதிக்க முடியும்?
“ சரி நீங்க சொன்னதெல்லாம் புரிந்து கொண்டேன். நியாயப்படி ரிக்கார்டுலே உள்ளதை அப்படியே எழுதி பதில் அனுப்பி குத்துக்கல்லைப் பூராவும் எடுத்துட்டு உங்களுக்கு இந்த வருசம் கண்டிப்பா மறுகால் வர நான் ஏற்பாடு செய்யறேன், போதுமா?” என்றான் சுந்தரராமன்.

“ஐயா, ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னபடி நடந்துச்சுன்னா உண்மையிலேயே எங்களுக்கு நல்ல காலம் பொறந்த மாதிரிதான்” என்று அவர்கள் நாத்தழுதழுக்கச் சொன்னார்கள்.
நல்ல மனிதர் என்று சொல்லப்படுகிற இந்தப் பண்ணையார், ஏன் இப்படி பேந்தநேரி விவசாயிகளை வயிற்றலடிக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை.
சாயங்காலம் ஆபீஸிலிருக்கும்போது அவனைப் பண்ணையார் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் வீட்டுக்குப் போகும்போது அவரை அப்படியே சந்திக்கலாம் என்று ஆள்வந்து சொன்னதாக ஹெட்கூலி மாரிமுத்து தெரிவித்தான்.

சரி பார்த்தால் போகிறது ஒரு முடிவு தெரியுமல்லவா என்றெண்ணி சைக்கிளில் ஏறியவன் அவர் பங்களா வாசலில் ஓரமாக அதை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

சார் வாங்க வாங்க பண்ணையார் எழுந்து வந்து அடக்கமாக வரவேற்றதைப் பார்த்தபோது சுந்தரராமன் சற்று அசந்து போனான்.
காலேல நீங்க சந்திராபுரம் போயிருந்தீங்களாம். ஆபீ1லே சொன்னாங்கன்னு ஆள் வந்து சொன்னான். என்ன விசேஷம் ஏதாவது எஸ்டிமேட் போடப் போறீங்களா-
சுந்தரராமன் சுருக்கமாக விஷயத்தை அவரிடம் சொன்னான். பண்ணையார் வாய்விட்டே சிரித்தார்.

சரியாப் போச்சு. போங்க இதுக்காகவா நீங்க போகணும். அப்படிப் போகணும்னாக்கூட நம்ம கார்லே கொண்டுபோய் விடச் சொல்லியிருப்பேனே? பழைய ரிக்கார்டுபடி தண்ணி கட்டினா எங்களுக்கு தண்ணி காணலை. சரியா விளையாம பாதி சாவியாப் போயிடுதுன்ன நான் போன வருசம்தான் மனுப்போட்டு அதுக்கு வேண்டிய நடவடிக்கையெல்லாம் எடுத்துக்கிட்டிருக்கேன். உங்களுக்குகூட தெரிஞ்சுருக்குமே போன மாசம் மினிஸ்டர் வந்தப்ப நான் ஒரு பார்ட்டி கொடுத்தேனே பேப்பர்லல்லாம் வந்துதே நீங்க பார்க்கலியா அடாடா அவசரப்பட்டு குத்துக்கல்லை எடுக்கறது வைக்கறதுன்னு எதுவும் எழுதி அனுப்பிராதீங்க காப்பி ஆறிப் போகுமே சாப்பிடுங்க

ஒரு வாரமாக நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஆபீஸ் வாசலில் நாலைந்து பேர் ஓரமாகக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பதை சுந்தரராமன் பார்த்தான்.
வணக்கம் சார் கும்பிடறோம் சாமி
கருப்பன் ராக்கன் மூக்கன் இன்னும் பலர்.

சந்திராபுரம்லாம் பெருகிப் போச்சு. வழக்கம்போல் குத்துக்கல் வரைக்கும் அமைச்சுக்கிட்டு தண்ணி விடமாட்டேங்கிறாங்க. கலுங்குப் பக்கத்திலே காவலுக்கு பத்துஆளு கடப்பாரை மம்மட்டியோட ரெடியா நிக்கறாங்க. உங்க ஆபீஸ்லேந்து ஏதாவது உத்தரவு வரும்னு எதிர்பார்த்தோம். அதான் நேர்லே உங்களை வந்து இழுத்தபடி அவன் முகத்தை ஆர்வத்தோடு நோக்கினார்கள்.

ஐயா ஏற்கனவே கண்மாய் பெருகாம்ப் போய் வாங்கிய கடனையெல்லாம் கட்டமுடியாமல் தவிக்கிறோம். கிணத்து லோன் மாட்டு லோன் அப்படி இப்படின்னு ஒன்னும் விளைச்சலும் இல்லை. கேப்பைக் கஞ்சிக்குக்கூட ஒரு மாசமா வழி இல்லை. ஒரு நாள் தாமதித்தாலும் எல்லாத் தண்ணியும் அங்கே போயிரும். சீக்கிரம் சொல்லுங்க ஐயா

தாலுகாபீஸ் போனீங்களா?

ஆமாம் சார் அங்கே தாசில்தார் இல்லையாம். மதுரைக்கு ஏதோ அவசர காரியமா போயிருக்காராம். வரதுக்கு மூணு நாளாகுமாம்
சுந்தரராமன் ஆபீசுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு சற்று யோசித்தான்.

நீங்க உடனே போய் கலுங்கு மட்டத்திற்கு மேலே உள்ளதை அகற்றி மறுகால் உங்க கண்மாய்க்கு எடத்துட்டுப் போறதுக்கு உள்ள வழியைச் செய்யுங்க. போங்க . நான் எங்க மேல் அதிகாரிங்களுக்குத் தகவல் அனுப்பி அவங்களோட வந்து சேர்ரேன் சைக்கிளில் ஏறி வேகமாகச் சென்றான்.

கருப்பன், ராக்கன், மூக்கன் எல்லோரும் கலுங்கை நெருங்கியதும் பண்ணையார் ஆட்கள் தயாராக முன்னால் வந்து “என்னடா, எங்கேடா வரீங்க? நில்லுங்கடா” என்று மிரட்டினார்கள்.

“எங்களுக்குண்டான தண்ணியைக் கொண்டுபோக வந்திருக்கோம்” என்றபடி முன்னேறி கருப்பன் கலுங்கில் ஏறி அடைத்திருந்த மண்மேல் கையை வைத்தான்.
மண்டையிலிருந்து வழிந்த ரத்தம் மறுகால் தண்ணீரோடு செக்கசெவேலென்று சிவந்த நீராக ஓடியது, தூரத்தில் பண்ணையார் கார் பின் தொடர, போலீஸ் லாரியும் ஜீப்பும் வருவதைப் பார்த்தவுடன் பண்ணையார் ஆட்கள் ஒரு சிலர் குத்துக்கல்லைப் பெயர்த்துக் கீழே தள்ளிவிட்டார்கள். கான்ஸ்டபிள்கள் இறங்கி ராக்கனையும், கருப்பணையும் அவர்களருகில் கிடந்த கடப்பாரைகளோடு கரைக்கு தூக்கிக் கொண்டு வந்தார்கள். ராக்கனுக்குச் சுயநினைவு வந்தது.
“சார், சார்” என்று ஆரம்பித்தான்.

அதற்குள் ஜீப்பிலிருந்து இறங்கிய இஞ்சினியரைப் பார்த்ததும் ராக்கன் “ஐயா உங்க ஆபீஸ்லே உத்தரவு வாங்கிட்டுத்தான் வந்து” என்று தயங்கி நிறுத்தினான். மண்டையிலே ரத்தம் வழிந்து கொண்டிருந்ததால் மயங்கி மயங்கிப் பேசினான்.

இஞ்சினியர் சொன்னார் “சார், எங்க எஸ் ஓ இன்னிக்கு லீவு. ஆபீசுக்கே வரலை. உடம்பு சவுகரியமிலைன்னு. நான் இப்பதான் அவரை வீட்லே பார்த்துட்டு வரேன். இவன் இவங்க சொல்றமாதிரி நல்லா தண்ணி போட்டுட்டு உளர்றான்”.

இன்ஸ்பெக்டர் உடனே “இவனெல்லாம் அப்படி ஆளுதான். சரி சரி வண்டிலே ஏத்துங்க” என்றார் கான்ஸ்டபிள்களிடம். பண்ணையார் உடனே “இந்த குத்துக்கல் மட்டத்துக்குத் தண்ணி கட்டிக்கலாம்னு நேத்து எனக்கு ஆர்டர்ஸ் வந்திருக்கு சார். காபி கூட வைச்சிருக்கேன்” என்று இஞ்சினியரிடம் அதை எடுத்து பெருமையாகக் காட்டினார்.

ராக்கனின் உடல் நரம்புகள் துடித்தன.

“ஏய் பண்ணையாரே, மண்டையிலேந்து வழிஞ்சு ஓடும் இந்த ரத்தத்தின் மீது ஆணை! மறுகால் எங்களுக்கு வரக்கூடாதுன்னா இப்படி செய்யறே! காலம் ஒரு நாள் மாறும், கேட்டுக்கோ. இன்னிக்கில்லேன்னாலும் என்னிக்காவது ஒரு நாள் அதுவும் கூடிய சீக்கிரம் எங்க கண்மாயும் தண்ணி வந்து பெருகி மறுகால் போகத்தான் போவுது, அது நிச்சயம்”.
அவனை மேலே பேசவிடாமல் பூட்டிய விலங்கோடு லாரிக்குள் ஏற்றினார்கள்,

@பின் குறிப்பு:
தாமரை மே 1971

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *