அவருடைய சிறுகதைகள் அனைத்திலும் அடிப்படையாக இழை ஓடுவது மனிதாபிமானம்தான்.

செர்வர் சீனு

ஜெயகாந்தன்

ஹோட்டல்களில் வேலை செய்வோரிடம் குறிப்பாக செர்வர்களிடம் என்னவோ கால வித்தியாசத்தால்தான் தாங்கள் இந்த செர்வர் உத்தியோகத்துக்கு வந்துவிட்டதாகவும், இல்லாவிட்டால் நடிகனாகவோ, சங்கீத வித்வானாகவோ, எழுத்தாளனாகவோ மாறி இருக்கலாம் என்ற மனோபாவத்தோடு, எதிர் காலத்தில் அந்த லட்சியத்தைத் தாவிப் பிடிக்கும் ஆசையுள்ளவர்களாகவே இருப்பர்.

ஆயின் அம்புஜா லாட்ஜில் இருக்கும் சீனுவுக்கு முன் குறிப்பிட்ட லட்சியங்கள் ஏதும் கிடையாது. அவன் அப்பா ஹோட்டலில் சர்வராகவும், தாத்தா ஹோட்டலில் சமையற்காரராகவும் இருந்தவர்கள்தான். அவனுக்குச் செர்வர் தொழில் பிதுரார்ஜிதம்.

ஹோட்டர் சின்ன முதலாளி ஜனார்த்தனம் மாதிரி அழகாக டிரஸ் பண்ணிக் கெண்டு கழுத்தில் ஒரு செயின் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை சீனுவுக்கு இருந்தது. இதற்கு முன்பெல்லாம் துவைத்துத் துவைத்து நீர்க்காவி ஏறிய மல் சட்டையும், மல்வேஷ்டியும் கட்டிக் கொண்டு திரிவான். இப்போது சம்பளமெல்லாம் லாண்டிரிக்கும், சோப்புக்கும், பௌடருக்கும், ஸ்நோவுக்குமே செலவாகி விடுகிறது. ஏனென்றால் சீனு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்.

லாட்ஜின் பின்புறமுள்ள தகரக் கொட்டகையில் தங்கியிருக்கும் சீனு, அந்தப் பெண் போவதையும் வருவதையும் பார்த்து வந்ததோடு, தன்னையும் அவள் பார்ப்பதை அறிந்ததும் அவனிடம் பலவிதமான மாற்றங்களும் ஏற்பட்டன.

அடுத்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் அவன் செய்த முதல் காரியம் சின்ன முதலாளி ஜனார்த்தனம் மாதி சில்க் ஜிப்பா ஒண்ணு தச்சுப் போட்டுண்டான். அடுத்த மாதம் சீட்டுப் பணம் எடுத்து ஒன்றரைப் பவுனில் ஒரு மைனர் செயினும் அடித்துப் போட்டுக் கொண்டான்.

சீனுவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களை சரக்கு மாஸ்டர் சங்கரய்யர் கவனித்தே வந்தார். சீனுவுக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையில் உருவான நட்பை கண்டறிந்தார். ஓய்வு நாளன்று சங்கரய்யர் சீனுவுடன் பேசிக் கொண்டிருந்தார். “இப்படியே உட்கார்ந்து உறங்கிண்டு காரியத்திலே கண்ணாய் இல்லேன்னா கிளி பறந்துடும் பாத்துக்கோ” என்றார். மேலும் “நேரே அவ வீட்டுக்குப் போய் ஒங்க பெண்ணை நேக்குப் பிடிச்சிருக்கு கல்யாண ஏற்பாடு நீங்க பண்றேளா நான் பண்ணிக்கவான்னு பட்னு கேட்டுட்டு வந்துடேன்” என்று ஆலோசனையும் வழங்கினார்.தான் நேற்று அவளை பின்தொடர்ந்து சென்றதாகவும், பார்க்கிலே சென்று பேசியதையும் சீனு சொன்னான். அவ பேரு கமலாவாம், அவ அப்பா வக்கீல் குமாஸ்தா கணேச ஐயராம். பத்தாவது படிக்கிறா. நல்ல இடமா கெடச்சா கல்யாணம் பண்ணிட ரெடியா இருக்காராம்.

“அப்பறம் என்ன யோசனை?” என்றார் சங்கரய்யர்.

“நான்தான் அண்ணா ஒரு வம்பிலே மாட்டிண்டுருக்கேன்”.

“என்ன உளறி வெச்சாய்? இந்த ஓட்டல் முதலாளின்னு பேத்தினியா?”

கௌரவம் கருதி தான் இந்த ஓட்டல் அறையில் தங்கியிருப்பதாகவும், மனோன்மணி பத்திரிக்கையில் சீனுங்கற பேர்லே எழுதறேனு புளுகியதையும் சொன்னான்.

“அதுக்கென்ன மனோன்மணி உதவி ஆசிரியர் இங்கேதான் சாப்பிட வருவார் அவரிடம் பேசலாம்” என்று சங்கரய்யர் தைரியமளித்தார்.

எழுத்தாளர் விச்சுவை விசேஷமாக கவனித்தான் சீனு. தன் காதலையும் எழுத்தாளர் என்று பொய் சொன்னதையும் அதன் பொருட்டு அவரே கதையெழுதி தன் பெயரில் வெளியிட வேண்டும் என்று சீனு கேட்டுக் கொண்டான். ஒரே இதழில் எத்தனையோ புனைபெயர்களில் எழுதி நிரப்ப வேண்டியிருக்கிறதே சீனு என்ற பெயரிலும்தான் எழுதி வைப்போமே என்று விச்சுவுக்குத் தோன்றியது.

சீனு என்ற பெயரில் அடிக்கடி கதைகள் வெளியாகின. மதிப்பு கூடியது. அவன் காதலி கமலா அவனைப் பாராட்டி அடிக்கடி கடிதங்கள் எழுதினாள். ஒரு சுபயோக சுப தினத்தில் சங்கரய்யரின் துணையுடன் பெண் பார்க்கப் புறப்பட்டான் சீனு. பிரசுரமான அக்கதைகளையெல்லாம் எடுத்துக் கொண்டான்.

சங்கரய்யர் தனது தமக்கை மகன் என்று சீனுவை அறிமுகம் செய்ததோடு தான் அம்புஜா லாட்ஜிலே சரக்கு மாஸ்டராயிருப்பதையும் சொன்னார்.

“பிள்ளையாண்டானுக்கு என்ன உத்யோகம்?” என்ற கேள்வி வந்தது.

“நல்ல எழுத்தாளன். எதிர் காலத்திலே பிரமாதமா ஷைன் பண்ணப் போகிறவன்” என்கையில் காபி வந்தது. கணேசய்யரின் நெற்றி சுருங்கியது. கண்ணாடியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டு சீனுவை ஏற இறங்கப் பார்த்தார்.“நான் சொல்றேன்னு கோவிச்சுக்கப்படாது” என்ற பீடிகையோடு பேச்சைத் துவக்கினார். “எழுத்தாளன் கிழுத்தாளன்னு சொல்லிக் கொண்டிருக்கறவாளை எனக்குப் பிடிக்கறதேயில்லை. அவாளுக்கும் வாழ்க்கைக்கும் ரொம்ப தூரம். எழுத்தாளன்னா ஏமாளி பொழைக்கத் தெரியாதவன்னுதான் அர்த்தம். உங்க மாமாவைப் பாருங்கோ ஹோட்டல்லே வேலை செய்யறவர். நல்ல தொழில். இவரை மாதிரி ஒரு ஹோட்டல்லே காபி ஆத்தறவனுக்குப் பெண்ணைக் கொடுத்தா அவனுக்கு லைப்னா என்னன்னு தெரியும். மூணு வேலை சோறு போடுவான். எழுத்தாளன் மேதை என்ன புண்ணியம் சொல்லுங்கோ?”

“நாங்க வர்ரோம் சார்” என்று எழுந்து வெளியே ஓடி வந்தார் சங்கரய்யர். அவரைப் பின் தொடர்ந்து வந்து முந்திக் கொண்டு நடந்தான் சீனு.

“நீங்க தப்பா நினைச்சுக்கப்படாது. எதுக்குச் சொல்றேன்னு கேளுங்கோ” என்ற கணேசய்யரின் குரல் பின்னாலிருந்து ஒலித்தது.

ஆனந்த விகடன், 1959

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டுத் தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *