நூல் அறிமுகம்: தமிழவனின் ஷம்பாலா அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்  –  எஸ்.சண்முகம்நூல்: ஷம்பாலா ஒரு அரசியல் நாவல்
ஆசிரியர்: தமிழவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
விலை: ரூ.210
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/shambala-ore-arasiyal-novel/

“ சொல், சொல்லின்மையாக மாறுவது தானே கதையின் தோற்றம், ஹிட்லர் என்ற சொல் கதையாகிறது.” ஷம்பாலா

(பக்கம் – 19)

தமிழவனின் நாவல்கள் ஒவ்வொன்றும் அவர் எழுதிய முந்தைய நாவலின் தன்மையிலிருந்து முற்றிலும் விடுபட்டதாகவே இதுவரை அமைந்து வந்துள்ளது. அதற்கான காரணம் தமிழவனின் நாவல் எழுத்துமுறை அத்தகையது. நாவலுக்கும் அதன் கதையாடல் மொழிக்கும் உள்ள அணுக்கம் குறித்த கோட்பாடுகளை வாசகர்களின் முன் நிறுத்தியே தமிழவன் தனது நாவல்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தான் வாழும் காலத்திற்கும் – கடந்தகாலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையில் பயணிக்கக்கூடிய கதையாடல்களைக் கொண்டே தமிழவனின் நாவல்கள் அனைத்தும் அமைப்பாக்கம் பெற்றிருக்கின்றன. இவரது எழுத்துக்கள் பொதுவான வாசகனின் வாசிப்பு மனோபாவத்திற்கு முற்றிலும் வசப்படாத வகையிலான கதையாடல் வடிவத்தையே கைக்கொள்கின்றன. இதன்வழியே நாவல் வாசிப்பு என்ற கூட்டுச் செயல்பாடு பழக்கப்படாத தளங்களில் நிகழ்த்தப்படுகிறது. ஒத்திசைவான கதையாடல்களாக அல்லாமல் விடுபடல்களுக்கிடையில் எழுதப்படும் பிரதியாக தமிழவனின் நாவல்பிரதிகள் அமைந்துள்ளன. ’சுவாரசியம்’ என்ற சொல்லினால் வாசிப்பின் பன்முகத்தன்மை குறுக்கப்பட்டிருக்கும் சூழலில் பன்முகவாசிப்பிற்கான மொழி அமைவாக்கத்துடன் ’ஷம்பாலா’ உருபெற்றிருக்கிறது.

புறவுலகு அகவுலகு என்ற நிலைகளுக்கிடையில் தன்னிலையாக்கத்தின் பிரச்சனை ஒருபுறமும், மறுபுறம் அதிகாரத்துவத்தின் தொடர் கண்காணிப்பின் ஆளுகைக்குள் வாழும் ஒருவனின் மன ஒத்திசைவின்மையை ’ஷம்பாலா’ நாவல் பிரதியாக்கம் செய்திருக்கிறது. தனக்கான மனப்பரப்பின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும்விதமாக நாவல் விரிகிறது.

” அரசியல் சட்டத்தில் உள்ள வார்த்தைகளுக்கும் உங்கள் மனதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் பொருத்தமில்லை என்று எங்கள் மேலதிகாரிகள் நினைக்கிறார்கள்”

(பக்கம்- 35)

இந்நாவலில் வரும் அமர்நாத் தன்னை விசாரிக்க வரும் சிந்தனை போலீஸிடம் தன்னை ’ஒரு மத்தியதர வர்க்கத்தவன்’ என்றும் ‘ எதற்கும் எளிதில் பயப்படுகிறவன்’ என்று சொல்ல்கிறார். இதன்மூலம் தனது சமூகப்பண்பை வைத்து உளவறிந்து மிரட்டப்படுகிறார். தன்னை விசாரிப்பவர்கள், நான் எந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்ற அறிதலின்வழியே அணுகிறார்களோ, அவ்வகையிலேயே அமர்நாத்தும் அவர்களது உளவறிதலைக் கீழறுப்புச் செய்கிறார்.
நாவல் முழுவதும் விசாரனையும் உளவும் அதற்கெதிரான மனோவியமும் கதையாடல்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிராக நகர்த்தப்படும் ஒவ்வொன்றிற்கும் எதிர்நகர்வைப் பதிலீடாக வைத்துக் கொண்டே தொடரும் அமர்நாத்தின் குரலும் x சிந்தனை போலீஸின் குரலும் ஒன்றை மற்றொன்று கையக்ப்படுத்த முனைகிறது. நாவலில் வெளிப்படும் நிகழ்வுகளெல்லாம் புறவுலகிற்கானதாக இருந்தாலும், சில குறியீடுகள் நம்மை மனோ தளத்திற்குள்ளும் தள்ளிவிடுகின்றன.

ஒருபுறம் சிந்தனை போலீசின் கதையாடலும், மறுபுறம், அதற்கு இணையான கதையாடலாக ’ ஜூனியர் அமைச்சரின் அதிகார உருவாக்கம் பிரதியியலாகக் கையாளப்படுகிறது.. இதில் அதிகாரத்துவ மையத்தின் விசையாக இயங்குகிறான் ’ஹிட்லர்’. இவனது சிறுபிராயத்தின் பண்புபிறழ்சியிலிருந்து; பின்னாளில் எவ்வாறு ஆட்சி அதிகாராத்தின் தன்னிலையாக மாறுகிறான் என்பதை அவனது சிறுவயது குணாம்சத்தைச் சொல்லும் நாவல் பகுதிகள், பிற்கால அரசியல் குணத்தை முன் அனுமானிக்கும்படியாக உள்ளது. பயங்கரமான உடும்பு அவனுக்குள் இருக்கிறது. அவன் வீநோதமானவனாக காட்சியளிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவன் எதையோ வரைந்து கொண்டிருப்பதைக் கண்ட ஆசிரியை என்ன வரைகிறாய் என்ற கேள்விக்கு “ அது எந்திரம் தீட்டுகிறேன் என்றான்.” ஆசிரியைக்கு அது விளங்கவில்லை. ஆனால் உடனிருக்கும் சக ஆசிரியர் ,” மேடம் அது, எந்திரம் என்பதால் அந்தப் பையன் மர்ம சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பவன் என்று சொல்கிறான்.

அதிகாரத்துவம் எனும் மறைசக்தியின் குறியீடாக ஹிட்லர் நாவலில் புனைவாக்கம் பெற்றிருக்கிறான். இவனையொரு கதாபாத்திரமாக வாசிப்பதைவிட முழுநாவலின் கதையாடல்களின் ஊற்றுப் புள்ளியாகக் கொள்ள வேண்டும். இந்த ஹிட்லர் என்பவனிடம் ‘ஷம்பாலா” புறவடிவமாக மாற்றமடைகிறது. இங்கிருந்துதான் பிரதி இடது / வலது என பயணிக்கின்றன. இடதுபுறமாக ’அமர்நாத்’ விசாரணைக்குட்பட, சிந்தனை போலிசின் கதையாடல் நிகழ்கிறது. வலதுபுறமாக ஹிட்லரின் உருவாக்கம் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹிட்லரை ஒரு பெயராக மாத்திரமே இந்நாவலில் நாம் பொருள்கொள்ளக் கூடாது எனத் தோன்றுகிறது. நாவலின் பிற்பகுதியில் ஹிட்லரை புனைவுயிரியாக மனதில் கொண்டால்; அமர்நாத் என்பவர் ஒரு எதிரீட்டு குறியீடாகக் கொள்ளலாம்.
“ அமர்நத் தன் மனதின் ‘ஹிட்லர்’ என்ற சொல் ஒரு பெயரில் தோன்றி மெது மெதுவாய் வரைந்த்தது பற்றி யோசிக்கிறார். ஒரு புனைவு பாத்திரம் தோன்றி அதற்கேற்ற பிற பாத்திரங்களுடன் முழுக்கதையாய் உருக்கொண்டதன் நோக்கமென்ன என்று கேட்டுப் பார்த்த போது ஏதும் மனதில் தென்படவில்லை.”
உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா, …
————-
எனக்கு சிரிக்க முடிவதில்லை, ஏனென்று தெரியவில்லை,
————–
தனக்கு ஏன் நடக்கிற காரியங்களைப் பார்த்துச் சிரிப்பு வரவில்லை?

(பக்கம் – 59)

நாவலின் முக்கியமான உத்தியாக ஒத்திசைவின்மையைச் சொல்லலாம். மேலே நான் எடுத்துக்காட்டியிருக்கும் மூன்று வரிகள் மூன்று பத்தியில் வரக்கூடிய ’சிரிப்பு’ என்பதை ஒத்திசைவின்மையின் குறியீடாக்கிக் காண்பிக்கிறது. இயல்பான மனோநிலையில் உள்ளவர்களை மனோநிலை பிறழ்ந்தவர்கள் என்ற அடைப்புக்குறிக்குள் சிந்தனை போலீஸ் கொண்டுவருவர முயல்வதும். அதற்கெதிராக தன்னிலையைத் தற்காத்து கொள்ள நடக்கும் எதிராடலாக இந்நாவல் உள்ளது. இயல்பான மனோநிலையில் அதிகாரத்துவத்திற்கு எதிராக செயல்படும் பிரதிகளை உருவாக்குபவனாக அமர்நாத் விளங்குகிறான். அவனது கீழறுப்பு செயல்பாட்டின் பொருண்மையைத் தாங்கியுள்ள எழுத்தானது; சிந்தனையின் உயிர்ப்பையும் எதிர்வினையாற்றலையும் குலைக்கும்விதமாகச் சிந்தனை போலீசார் செயல்படுகின்றனர். அவர்களின் இடையீடுகள் அமர்நாத்தின் உடலியலைப் பரிசோதிப்பதின் வாயிலாக அவனுக்குள் அமைவுற்றிருக்கும் அதிகாரத்துவ எதிர்ப்புணர்வை அழிக்க முயல்கிறது.

“ இந்த ரகசியக் காவலர்கள் என் கழிப்பறையில் மூத்திரத்தை முகர்ந்த அன்றுதான் இப்படி ஆகிவிட்டேன் இப்படி என்னை மனோநிலை பாதிக்கப்பட்டவராய் மாற்றுவது இந்தக் காவலர்களின் வேலைதான் என்று கடைசி வாக்கியத்தின் கடைசிப் பகுதியைத் தன்னையும் அறியாமல் உரக்கச் சொன்னார் அமர்நாத் ‘
———-

”எந்தக் காவலரின் வேலை ? எந்தக் காவலர் ? என்ன சொல்கிறீர்கள் என்றார் ராம்நாத்.”

(பக்கம் – 60)

உடலினுள் நிகழும் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஆற்றலின் வெளிப்பாடாகத்தான், அமர்நாத்தின் உடலியத்தையே பிரதானக் கண்காணிப்பின் இலக்காக நாவல் முன்னிறுத்துகிறது. உடலையும் அதன் சிந்தனையாற்றலையும் இருவேறானதாக கொள்ளாமல் ஒரே அலகாக கொள்கிறது.

“ சிந்தனையை உளவு பார்க்க முடியுமா?

இவர்கள் முடியும் என்கிறார்கள் …..

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ற ரகசியத் தகவல்கள் திரட்டுகிறார்கள். நீங்கள் செல்லும் ஆஸ்பத்திரிகளில் மலம் பரிசோதனை செய்தால் அந்த ரிப்போர்ட்டைப் பெறுவதற்கு ஒரு சட்டம் கொண்டுவரப் போவதாய் கேள்வி. மலம் மூலம் சிந்தனை போலீஸ் அந்த மலத்துக்குச் சொந்தக்காரர் யார், எப்படிப்பட்டவர். அவர் எதிர்காலத்தில் இவர்களை எதிர்ப்பாரா அல்லது எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கிப் போகிறவரா எனக் கண்டு பிடிப்பார்களாம்.

(பக்கம் – 105-106)

நாவல் என்பது கதையாடலின் வழியாகவும்; குறியீடுகளின் வழியாகவும் நிகழ்த்தப்படுகிறது.. அது பிரதானக் கதையாடலின் வழியே நம்மைப் பயணிக்க வைத்தாலும் ; மற்றொரு இடத்தில் மாற்றுக் கதையாடலையும் கொண்டிருக்கிறது. அதற்கொரு எடுத்துக்காட்டாக “டாங்கி” என்பதைச் சுட்டலாம்

“ மீண்டும் மீண்டும் ஒரு பழைய டாங்கியைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் காட்சியும் கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு மனிதன் கைகளை நீட்டி நீட்டிப் பேசும் காட்சியும் காட்டப்பட்டதைப் பார்த்தபடியிருந்தார் ராம்நாத்.”

(பக்கம் – 61)

“ இவர்கள் கொண்டு வந்த ஒரு துணைவேந்தர் படிக்கவரும் மாணவர்களுக்கு நாட்டுப்பற்று ஊட்டுவதற்காக காம்பசில் ‘ டாங்கியை’ கட்டித் தொங்கவிடுகிறானாம் என்றார் சுரேஷ்.”

(பக்கம் -104)

’டாங்கி’ இராணுவ மனோபாவத்தைக் குறிப்பீடு செய்கிறது. ஷம்பாலா நாவலின் அடியோட்டமாக உள்ள கண்காணிப்பு, நாட்டுப்பற்றை உள்ளீடாக்கிவிடுகிறது. இதேபோல் நாவலின் பல இடங்களில் வரும் குறியீடுகள்; நவீன நாவல் வாசிப்பிற்கான திறவுகோள்களாக கிடைக்கின்றன. சிறுவனுக்குள் ’ஓர் உடும்பு’ இருப்பதாக சொல்வது, இந்நாவலில் ஒருவித மிருகியஇயல்பு பேசப்படுகிறது. பிற்காலத்தில் சிறுவன் எப்படி உருமாற்றமடையப் போகிறான் என்பதற்கான உந்துதலாக உடும்பு என குறிக்கப்படுகின்றது. உடும்பின் குணாம்சாங்கள் சிறுவன்மீது எழுதபட்டு பின்னாளில் அவனது அரசியல் பிடிப்பைப் பொருண்மைப்படுத்தி நிற்கிறது. பெரும்பாலும் நாவல் வாசிப்பு என்பது கதையின் முதன்மை இழையைப் பிடித்தபடியே பயணிப்பதாகப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஷம்பாலாவை வாசித்தால், வலதுசாரி அதிகாரத்துவத்தின் நுண்கண்காணிப்பு எவ்வாறு தனிமனிதத் தன்னிலையை அகப்படுத்தி உறைய வைக்கிறது என்பதை அறியலாம். நம்மை பிளவுண்ட மனோநிலைக்குள் ஆழ்த்தி செயலின்மைக்குள் தள்ளிவிடுவதையும் உணரலாம். எவ்வித எதிர்ப்புணர்வுமின்றி, கீழறுப்பு என்னும் எதிர்ப்புநிலையைக் குலைப்பதில் சிந்தனை போலீஸ் எவ்வளவு முனைப்புடன் செயலாற்றுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்நாவலின் உட்கரு என்னவென்று யோசிக்கையில் ஒரு எண்ணம் மேலிடுகிறது. ஒரு நாவல் பிரதிக்கு உட்கரு என்பது அவசியமா? என்ற வினாவும் கூடவே தோன்ற, இவ்வினா நாவலின் துவக்கம் – முடிவு என்ற வாசிப்பு பழக்கத்தின் மரபிலிருந்து தோன்றுவதாகப்படுகிறது. ஆனால் பின்-நவீனத்துவ நாவல் பிரதிகள்; கதையாடலின் துவக்கம் – முடிவு பிரதானக் கதையாடல் இரண்டாம்நிலைக் கதையாடல் என்ற தளங்களில் எழுதப்படுபவை அல்ல. அவ்வாறு வாசிக்கபடுவதும் இல்லை. ஒரு குறியீடு தனக்குள்ளிருந்தும் தனக்கு புறத்தேஇருந்தும் கதையைச் சொல்லும். அவ்வகையில் பார்த்தால் ஷம்பாலா என்ற சொல் குறியீட்டுத் தனித்துவம் பெறுகிறது.

ஷம்பாலாவை அடைய மேற்கொள்ளும் பயணம் குறித்து நாவலின் இறுதிப் பகுதியின் கதையாடல், பயணத்தின் விவரிப்புகளாக இடம்பெற்றிருந்தாலும்; அது அகமும் x புறமும் ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லுமிடமாக எழுதப்பட்டுள்ளது. “
அரசியல் அதிகாரத்தை கையக்ப்படுத்தும் வழித்தடங்களைப் போல் பிரதியின் உள்ளடுக்குகள் அமைவாக்கம் பெற்றுள்ளன. ஷம்பாலா என்ற சொல் பிரயோகிக்கப்படும் இடங்களில் எல்லாம் அதிகாரத்துவ மனோவியத்தின் எண்ணிலியான பரிமாணங்கள் தென்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒன்று மெய்ம்மை போலவும் மெய்ம்மையை இழந்ததைப் போலவும் தோற்றங்கள் மாறி மாறி வருகின்றன.

தமிழவன் நாவலில் தோன்றும் பிம்பங்களும் அதன் பரிமாணங்களின் வேற்றுமைகளுக்கிடையில் நாவல் பிரதி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.. ஷம்பாலா என்பது பல்வேறு இழைகள் சேருமிடமாகவும் பிரியும் இடமாகவும் உள்ளது ஷம்பாலா என்ற சொல் உடலியமாக உருமாற்றமடைகிறது. அதன் இடையாட்டமாக அரசியல் வேட்கை வெவ்வேறு குறியீடுகளால் இயக்கப்படுகிறது. இது எல்லோரது கூட்டு உணர்நிலையாகும்.
இதன்வழியே நாவலின் அசைவைக் கிளர்த்திக் கொண்டே இருப்பது எது? என்ற வினா நாவலை வாசித்து முடிக்கும்வரை எழுந்தபடியே தான் உள்ளது. அதற்கான விடை வாசகனுக்கான தேர்வாக ‘ஷம்பாலா’ – ‘ஹிட்லர்’ ’அமர்நாத்’ – ’சிந்தனை போலீஸ்’ என நீள்கிறது. நம் ஒவ்வொருவரது சிந்தனையும் உருவிலியானது என்றாலும் அதற்கொரு உடலிய பரிமாணம் இருப்பதை தமிழவன் சுட்டுகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் மலம் / சிறுநீர் / ஆடைகள் என எல்லாம் பரிசோதிக்கப்படுகின்றன. மனிதனின் உடலும் / மனமும் நாவலில் சுவடற்றுக் கரைகின்றன.
நாவலின் இறுதிப் பக்கங்களில் வரும் ‘நவீன சாமியார்’ – ’ஷம்பாலா’ என்பதற்கான பொருண்மையை நிறுவுகிறார். இவர் அதிகாரத்துவத்தை தனது வைதீக கருதுகோளை / வேதகால அறிவு என வரையறுக்கிறார். வலதுசாரி அதிகாரத்துவத்தின் குவிமையமாக “ ஷம்பாலா” என்ற சொல்லை உச்சாடனப்படுத்துகிறார்.
“ நவீன சாமியாரான சாஸ்திரிகள் வேதகால விஞ்ஞானத்தின் அறிவைக் கொண்டு உலகை அழிக்க், ஜெர்மனியில் தன்னிடம் வந்து கேட்டவர்களுக்கு அந்த ரகசிய அறிவைத் தன் அண்ணன் கொடுக்கவில்லை என்கிறார். பாரதத்தில் அந்த வேதகால அறிவு பரவினால் உலகம் அழியாது என்கிறார். தாங்கும் சக்தி கொண்டது பாரதம் என்கிறார். அதுதான்அவரது ஷம்பாலா பயணத்தின் குறிக்கோள். ஷம்பாலா…! எல்லா அதிகாரமுக் கிடைக்கும் இடம். ஷம்பாலா …. ஷம்பாலா…. முழக்கம் எழுந்து வானத்தை நிறைக்கிறது.

முற்றும்

(பக்கம் -219)

நாவலின் இப்பத்தியில் கேட்கும் குரலின் குறியீடாக ஷம்பாலா என்பது ஒலிக்கிறது. இந்த குரலுக்கு எதிரான வினையாகத்தான் நாவல் எழுதப்பட்டுள்ளது., மனித சிந்தனை எவ்விதமான நுண்கண்காணிப்பிற்குள் அகப்பட்டு இருக்கிறது என்பதற்கு எதிரான குரல்தான் நாவலின் கதைக்குரல்.

(நன்றி : கணையாழி பிப்ரவரி 2021)