சிறுகதை: இது கதை அல்ல – யாழினி ஆறுமுகம் 

சிறுகதை: இது கதை அல்ல – யாழினி ஆறுமுகம் ப்போது பனிரெண்டாம் ரெண்டாம் வகுப்பு முடித்து ரிசல்ட்டுக்காக காத்திருந்த காலம். கமலின் தீவிர ரசிகன் நான்.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டின் வரவேற்பரையின் முகப்பில் வண்ணவண்ண கமலின் படங்களை ஒட்டவைத்திருப்பேன். எவர் க்ரீன் படமான சகலகலா வல்லவனில் ஜிகினா டிரஸ்ஸில் பைக்கின் மீது உட்கார்ந்த படி அல்ல பறந்தபடி வரும் உலக நாயகன் படம் தான் இருக்கும். பிறகு நம்மவர் இதழில், கமல் ரசிகன் இதழில் வெளிவரும் நடுப்பக்க படங்கள்…
அதிலும் குறிப்பாக வேட்டியை ஒரு கையில் பிடித்தபடி வேகமாக நடந்து வரும் படம் வீட்டில் நடுநாயகமாக…
அப்போது நாயகன் அதற்கு முன் விக்ரம் படம் வந்த புதிது என நினைக்கிறேன்…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் இருந்த அப்சரா தியேட்டரில் அம்மா வுடன் விக்ரம் படம் பார்த்த நினைவு.
எப்போதும் எங்கள் வீட்டில் விக்ரம் படப்பாடல்கள் தான் பாடிக் கொண்டேயிருக்கும்.
அதில் “ஹேய் விக்ரம்” என்று உச்ச தொனியில் கமலின் குரல் பாடும். நானும் அதே போலவே “ஹேய் விக்ரம், நான் வெற்றி பெற்றவன், இமயம் தொட்டுவிட்டவன் என்று அடித்தொண்டையிலிருந்து அதே போல பாடுவேன்… மன்னிக்கவும் கத்துவேன். வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பக்கத்து வீடு, தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நான் அப்படி பாடும் போது ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு போவார்கள். அந்த பார்வைக்கு அப்போது அர்த்தம் புரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் இருந்தே கமல் ரசிகனாய் இருந்த என்னை உறுதிப் படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவின் போது தான் வாய்த்தது என்றே சொல்லலாம்.
அதுவும் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த ஒரு சிறிய வீட்டில் தான் தாலுகா தலைமை கமல் நற்பணி மன்ற அலுவலகம் செயல்பட்டது. எனக்கு சொல்லவா வேண்டும். இரவு படுக்க வீட்டிற்கு போகும் நேரம் தவிர எப்போதும் அங்கேயே கதி. வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் அடிக்கடி நடந்து கொண்டேயிருப்பேன். தலையில் நடப்பது போல…
மன்ற அலுவலகத்திற்கு வந்து போகிறவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆட்களாக இருந்தார்கள். என்னைப் பொறுத்த வரை அப்போது பெரிய ஆட்கள் என்றால் பெரிய உருவம் மட்டும் தான். இருப்பதிலேயே நான் தான் சிறிய உருவம். அதனாலேயே அங்கு வருகிறவர்கள் எல்லாம் என்னை டீ வாங்கி வரக்கூடிய ஆபிஸ் பாயாகவே பார்த்தார்கள்.
மாபெரும் கலை ரசிகனான என்னை புரிந்து கொண்டவர் உண்டென்றால் அது மன்றத்தின் தலைவர் மேட்டுக்கடை முனுசாமி மட்டுமே.
என்னை விட பத்து வயது மூத்தவர். அவர் மட்டுமே என்னை வாங்க, போங்க என்று மரியாதையாக அழைப்பார். நட்புடன் எப்போதும் கனிவாகவே பேசுவார். அதுவே எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதையையும், அன்பையும் உண்டாக்கியது. அவரது பண்பு என்னை வெகு சீக்கிரத்தில் அவரிடம் நெருங்க வைத்து விட்டது.
அந்த மே மாதம் நடைபெற்ற அவரது ஊர் கோவில் திருவிழா விசேசத்திற்கு விருந்திற்கு வீட்டிற்கு என்னையும் அழைத்திருந்தார். அழைக்கப்பட்ட மிகச் சிலரில் நானும் ஒருவன்.
அன்று தான் எனக்கு பரிட்சை ரிசல்ட்டும். அப்போதெல்லாம் இப்போது மாதிரி ரிசல்ட் காலையில் வந்து விடாது. மாலை முரசு, மாலைமலரில் தான் முதலில் வெளிவரும். காலை பேப்பரில் மறுநாள் தான் வரும்.
அன்று மாலை அந்த ஊரில் இருந்த எனது வகுப்புத் தோழன் மாலை வரும் ஆறாம் எண் பேருந்தில் ரிசல்ட் பேப்பருடன் தொங்கி கொண்டே வந்தவன் என்னைப் பார்த்ததும்
அதிர்ச்சியுடன்  இவன் எங்கே இங்கு என்று மனதில் நினைத்திருப்பான் போலும். “டேய் நீயெல்லாம் பாசுடா” என்று உரக்கச் சொன்னான். ஒரு முறை முறைத்தேன்.  “நீ அப்பறம் நம் வகுப்பில் உள்ள எல்லோரும் பாசு” என்று சாந்தமாக சொன்னான்.பேப்பரை வாங்கி உறுதிப் படுத்திக் கொண்டேன்.


அருகில் இருந்த கடையில் இரண்டு ரூபாய்க்கு கைநிறைய சாக்லேட் வாங்கி தலைவருக்கு ம் விருந்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்தேன் மிகு‌ந்த மகிழ்ச்சியுடன்.
தலைவர் எனக்காக அன்று இரவு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு விருந்து அளித்து மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்.
பிறகான நாட்களில் அவரைப் போலவே என்னை வரித்துக் கொண்டேன். அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வது, யாரைப் பார்த்தாலும், பிறந்து மூன்று மாத குழந்தையாக இருந்தாலும் சரி வாங்க, போங்க என்று மரியாதையாக அழைப்பது என்று பழக்கப் படுத்திக் கொண்டேன். வீட்டில் உள்ளவர்கள் என்னை ஒரு தினுசாகத்தான் பார்க்க ஆரம்பித்தார்கள்.
தலைவருக்கு வருமானம் என்று ஏதுமில்லை, வேலையும் இல்லை என்பதே பெரு நாட்களுக்கு பிறகு தான் உணர்ந்தேன்.
மன்ற நற்பணியையே மூச்சாக கொண்டு செயல்பட்டார். ( அப்படியொன்றும் மன்றம் வேலைகள் பெரிதாக இருந்த மாதிரி நினைவில்லை.)
இந்நிலையில் நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நேருநகர் பகுதியில் மன்ற கண்மணி ஒருவர் தங்களது பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழா விற்கு நம்மவர் படங்களை திரையிட வேண்டும் என்றும், அதற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
உயர்ந்த உள்ளம், காக்கிச் சட்டை என இரண்டு படங்களை திரையிடலாம் என மன்றம் முடிவு செய்தது. ( ஒரு படம் சென்டிமென்ட்டாகவும் ஒரு படம் ஆக்சனாக வும் இருக்க வேண்டும் என்று திட்டம்)
விழாவின் இறுதிநாள் அன்று காலையில் இருந்தே ஒலிப்பெருக்கியில் நம்மவரின் பாடல்கள்
பிளிறிக் கொண்டிருந்தது. மன்றக் கண்மணிகள் நாங்கள் காலையிலேயே அங்கு சென்று விட்டோம். தலைவர் வருவதற்கு முன்னரே அங்கு சென்று வண்ண வண்ண முக்கோண காகிதங்களை ஒட்டி அங்கிருந்த மூங்கில் பூட்டுகளில் கட்டிக் கொண்டிருந்தோம்.
முகப்பில் தாலுகா தலைமை மன்ற பேனர் அலங்கரித்துக் கொண்டிருந்தது. தலைவர் எப்ப வருவார்… ஆவலுடன்  எதிர்பார்த்துக் கொண்டே கேட்ட பாடல்களையே திரும்பத் திரும்ப போட்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போதெல்லாம் 16 mm புரஜெக்டரில் தான் விழாக்களில் படத்தை திரையிடுவார்கள். புரஜெக்டர், ஸ்கிரீன், பாக்ஸ், பிலிம் ரோல்கள் கொண்ட பெட்டிகள் என அனைத்தும் கோவை அல்லது ஈரோடு லிருந்து டெம்போ மூலம் படம் திரையிடும் அன்று காலையே வந்து சேரும்.
பிலிம் ரோல்கள் கொண்ட பல ரீல் பெட்டிகள் எண்கள் இட்டு வரிசைப்படி அடுக்கி வைத்திருப்பார் ஆப்ரேட்டர். அப்படியிருந்தும் பல இடங்களில் ரீல் மாற்றிப் போட்டு ஏகப்பட்ட களேபரங்கள் நடந்திருக்கிறது.
தலைவரை பொறுத்தவரை எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். அளவாகத்தான் பேசுவார் அதுவும் மெதுவாகத்தான். சிரிப்பு கலந்தே பேசுவார், சீரியசாகப் பேசிப் பார்த்ததில்லை இந்த இரண்டு மாதங்களில்.
பெரும்பாலும் வெள்ளை சட்டையும், நீலக்கலர் பேண்ட் டும் தான் அணிவார். எதாவது விசேசம் என்றால் மட்டும் வேட்டி கட்டுவார்.
அன்று மதியம் வீட்டிற்கு சென்று அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு உடனே படம் திரையிடும் இடத்திற்கு வந்து விட்டேன்.


தலைவர் வரும் போது நான் அங்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் காலையில் இருந்து நான் அங்கு இல்லை, கடமையாற்றவில்லை என்று நினைத்துக் கொள்வாரோ என்கிற கவலை தான்.
மாலை நெருங்கி கொண்டிருக்கிறது. பொட்டியும் வரல, தலைவரையும் காணோம். அப்பவெல்லாம் இப்போது செல்போனில் பேசுகிற மாதிரி நினைத்த உடனேவெல்லாம் பேசிவிட முடியாது.
எனக்குள் துடிப்பு வேறு அதிகரித்துக் கொண்டே போகிறது. வெளியில் காட்ட முடியாத அளவிற்கு பதட்டம் வேறு. ” நான் தான் சகலகலாவல்லவன்” என்று எஸ் பி பி  வேறு ஒலிபெருக்கியில் அலறிக் கொண்டிருக்கிறார்.
படம் பார்க்க வேறு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது டிவிஎஸ் 50 யில் வேறொருவருடன் வந்து இறங்குகிறார் தலைவர். நான் உடனே அருகில் சென்று அவருக்கு விசயம் தெரியாது என்று நினைத்து, ” இன்னும் பெட்டி வரல ” என்கிறேன்.
தலைவர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக, ” நம்ம மன்ற மாவட்டத் தலைவரோட தாயார் இறந்துட்டாங்க அதனால நான் உடனே ஈரோடு கிளம்பனும், அதனால படத்தையும், விழாவையும் இன்னொரு நாளைக்கு நடத்திக்கலாம்” என்று கூறிவிட்டு, அப்படியே இதை மைக்கில சொல்லீருங்க என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கிளம்பி விட்டார். வண்டியில் உட்கார்ந்து கிளம்பும் தருவாயில் என்னைப் பார்த்து, “முருகேசோட வாங்க” என்று கூறி, வாடிய முகத்துடன் தலையசைத்து சென்றார்.
” நமது மன்றத்தின் மாவட்டத் தலைவரின் தாயார் இறந்து விட்டதால் உடனடியாக அனைவரும் ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் நடைபெற இருந்த விழாவும், படம் திரையிடலும் பின்னர் நடைபெறும் ” என்று ஒலிப்பெருக்கியில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இருட்டு கட்டிவிட்டது. எனக்கும் தான்.
சரி பேருந்து நிலையம் வரை சென்று தலைவரை வழியனுப்பி வைத்து வருவோம் என்று முருகேசனோடு மிதிவண்டியில் பின்னால் ஏறி அமர்ந்தேன்.
பேருந்து நிலையம் உள்ளே செல்லாமல் மிதிவண்டி எதிரில் இருந்த சாலையில் இருந்த பிராந்திக் கடைக்கு அருகில் உள்ள ஒரு இரவு உணவு விடுதிக்கு சென்றது.
” எனக்கு பசியில்லை, பஸ் ஸ்டாண்ட் போகலாம், தலைவர அனுப்பி வெச்சுட்டு வரலாம்” என்று நான் சொல்வதைக் காதில் கேட்காமல் “உள்ள வா” என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்க்காமல் உணவு விடுதியின் கடைசியாக இருந்த தனியறைக்குள் சென்றார்.
சிறிது மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் கூடிய இருட்டு அறையில் இருந்த டேபிளில் டிபனுடன் அருகில் இருந்த கண்ணாடி டம்ளரில் உறைந்த இரத்தம் போல் இருந்த சிவப்பு நிறத் திரவத்தை தலைவரின் கைகளில் பார்த்ததும் அதிர்ச்சியானேன்.
அவருக்கு என்ன கவலையோ… ஒருவேளை மாவட்டத் தலைவரின் தாயார் இறந்த கவலையோ என்று நினைத்துக் கொண்டிருந்த போது,
“என்ன பாக்கறீங்க…? உட்காருங்க” என்று தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியை காட்டிச் சொன்னார்.
நான் உட்கார்ந்த நிலையில் என்ன பேசுவது என்று தெரியாமல் “நானும் உங்களோட ஈரோடு வரவா” என்று கவலை தோய்ந்த முகத்துடன் உடைந்த குரலில் கேட்டேன்.


“படத்தை போட நாம புக் பண்ணியிருந்த அம்மன் பிலிம்ஸ் ஆப்ரேட்டர் இதுவரை வரல…வந்திருந்தா மதியமே வந்திருக்கனும்…
அவங்க கொடுத்த நம்பருக்கு டிரங்கால் புக் பண்ணி போன் பண்ணினா  எடுக்க மாட்டீங்கறாங்க…
இந்த காரணத்தைச் சொல்லி படத்தை போடலேன்னா அப்பகுதி மக்கள் ஏத்துக்கமாட்டாங்க ன்னு தான் எதச் சொன்னா சமாதானம் ஆவாங்களோ அதச் சொல்லி சமாளிச்சோம்…” என்று சிரித்தபடி மீண்டும் அந்த சிவப்பு நிற திரவத்தை எடுத்து கண்ணை மூடிக் கொண்டு மடக் மடக் என்று குடித்தார். தலைவரே
நீங்க நல்லவரா, கெட்டவரா…? ( தலைவர் என்ன வேலு நாயக்கரா…) என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்…
இத்தனை நாள் பழக்கத்தில் இன்று தான் இம்மாதிரி நிலையில் தலைவரைப் பார்க்கிறேன்.
எனது முகத்தை பார்த்த தலைவர் “மதுபடியும் பலத்தை போடறோம்”  கையைச் சொடக்கி “என்ன தாப்பிடறீங்க…
தாப்பிட என்ன சொல்றது….?” என்று
நா குழறியபடியே சப்ளையரை அழைத்தார்.
நான் அவர் முகத்தை பார்க்காமலே “வேண்டாம், எனக்கு பசிக்கல” என்கிறேன்.
“கொஞ்சமா சாப்பிடுங்க, ஒன்னும் செய்யாது” என்று என்னிடம் கூறிக்கொண்டே நான் பார்க்கவில்லை என்று நினைத்து அருகிலிருந்த கண்மணி யைப் பார்த்து கண்ணடிக்கிறார் சிரித்தபடியே…
அதற்கு பிறகு படத்தை திரையிட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை…
தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்யவில்லை. அச்சமயத்தில் எனக்கு கல்லூரியில் சேர அட்மிசன் கிடைத்தும் ஒரு காரணம்.
பிறகு மன்ற அலுவலகத்தையும் காலி செய்து விட்டார்கள். அது கூட எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரிய வந்தது.
தலைவரை அவ்வப்போது வழியில் பார்ப்பேன்… “காலேஜ் போன உடன் எங்களையெல்லாம் மறந்திட்டீங்க போல” என டிரேட் மார்க் சிரிப்புடன் நலம் விசாரிப்பார்.
நானும் “அப்படியெல்லாம் இல்லீங்க அண்ணா” என்று ஒரு சில வார்த்தைகளுடன் கடந்து விடுவேன்.
அதோடு சரி….
அதற்குப் பிறகு
சில ஆண்டுகள் கழித்து வீட்டிலிருந்த நம்மவரின் படங்களுக்கு பதிலாக வேறு படங்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டன.
( அந்தப் படங்கள் பற்றி அடுத்த முறை
கதைக்கிறேன்….)
– யாழினி ஆறுமுகம் –
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *