“ வாழ்க்கையில் ஒருகதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள், நீ கைப்பிள்ளையை வச்சுகிட்டு அல்லல் படுறோமுன்னு கவலைப்  படுறதை நிறுத்து விமலா. நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே வெல்லனும் !“ என்று பக்கத்து வீட்டு சாரதா டீச்சர் சொன்னதைச்  சிந்தனை மேகங்கள் முகத்தில் சூழ்ந்திருக்க விமலா கேட்டுக் கொண்டிருந்தாள்.

மடியில் இரண்டுவயது  மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது. முகத்தில் தந்தையை இழந்த சோகமில்லை . மலர்ந்த மலரின் சோபை ஒளிர்ந்தது.  துக்கம்  துயரம் உணரும் வயதா  இது ? அவனது கவலையையும் சேர்த்து தானே நான் சுமந்தாகணும்.  பைக்கில் வீடு நோக்கிவந்த கணவன் பாதி வழியில் உயிரை விட்டுப் போவான் என்று யாருக்குத் தெரியும்?  அவனுக்கே தான் தெரியுமா…? மோதிய லாரிடிரைவருக்குத்தான் தெரியுமா….? என்னென்ன ஆசையில் கணவன் பைக்கை ஓட்டினானோ….? பாவி நடுத்தெருவில் கட்டினவளையும் பெத்த பிள்ளையையும்  ,பெத்த தாயையும் விட்டுட்டுப் போயிட்டானே…?  தான் பெத்தபிள்ளையோடு, தன்னைப்  பெத்தவளையும் என்னை சுமக்க விட்டுட்டுப்  போயிட்டானே…? அப்பாவும் அம்மாவும் சளைக்காம ஜாதகம் பார்த்து சொந்தத்தில் என்ஜினியர் மாப்பிள்ளைன்னு கட்டி வச்சாகளே அந்த ஜாதகத்தில் இதெல்லாம் தென்படலையா…?…

சாரதா டீச்சர் குறுக்கிட்டார்.  “என்ன விமலா, என்ன யோசனை?  கவலைப் படாதே.. வாழ்ந்து ஜெயிச்சுக் காட்டு….! வெறும்பேச்சு ஆறுதல் இல்லை. எங்க ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் கிட்ட சொல்லி உனக்கு எதாவது. வேலை வாங்கித் தர்றேன். அந்தம்மா இரக்கப்பட்டவங்க ,  நிச்சயம் உதவுவாங்க ! வருத்தப் படுறதை விட்டுட்டு பிழைக்க வேண்டியதைப் பாரு….! எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு“ என்று சாரதாடீச்சர் கிளம்பினார்.

விமலா கல்லாக உறைந்திருந்தாள். மாமியார் அவளது தோளைத் தடவி தலைகோதவும்,  உயிர்த்து விசும்பினாள். கன்னத்தில் நீர்த்தாரை உப்புபடிந்து மின்னியது.                                                                     “மகளே, அற்பாயுசுல செத்தமகனுக்காக அழுவுறதா, இப்படி ஒரு தங்கத்தைக் கட்டிவந்து கையில் ஒரு பிள்ளையைக் கொடுத்துட்டு வாழாவெட்டி ஆக்கிட்டு போயிட்டானே, எப்படி காப்பாத்துறதுன்னு அழுவுறதா….” என்று புலம்பிய மாமியார் எதோ நினைவில் வந்தது போல் திடுக்கிட்டு விமலாவைக் கட்டித்  தழுவி  , ”ஏம்மா வயித்தில சுமை ஏதுமில்லையே….”

“இல்லத்தே…அதுக்கு நான் இடம் கொடுக்கலை..! அதுக்குத்தான் ரெண்டு மூணு நாளா வம்பு பண்ணிகிட்டிருந்தார்…” என்று தொண்டை உடைந்த குரலில் முணுமுணுத்தாள். மாமியார் பெருமூச்சு  விட்டார் .‘ கெட்டதிலும் ஒரு நல்லது.!’ பாவிமகன் குடிக்காம பைக்கில் போயி ஆக்சிடன்ட் ஆகியிருந்தாக் கூட நஷ்டஈடாக எதாவது இன்ஸ்யூரன்ஸ்னு கிடைக்கும்னு சொல்றாங்க. பிள்ளைக்காவது ஆகும் ! பாவி பரப்பான் அதுக்கும் வழியில்லாம குடிச்சிட்டு வண்டி ஓட்டி குடியைக் கெடுத்துட்டானே….. நான் என்ன பண்ணுவேன்….” என்று புலம்பிய மாமியார் கண்ணைத் துடைத்து தொண்டையைச்  செருமிக் கொண்டாள்.



“ஏம்மா , நான் பேரனைப்   பாத்துக்கிறேன். சாராதாடீச்சர் சொன்ன மாதிரி பள்ளிக்கூடத்துக்கு  போய் வா!  கொஞ்சம் துயரத்தை மறக்கலாம் !  நான் சாகவேண்டிய வயசில்  உனக்கும் பேரனுக்கும் காவலாக இருக்க வச்சிட்டு அற்பாயிசில போயிட்டானே ! நான் உங்களுக்காகவாவது கொஞ்ச காலம்  உசுரைப் பிடுச்சு வச்சுகிட்டு இருக்கணுமே கடவுளே…..” என்று அழுத மாமியார் தோளை விமலா தொட்டாள்..! பேச நா எழவில்லை. அந்த தொடுகையின் அர்த்தம் உணர்ந்து மாமியார் அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள். அதில் கண்ணீர்துளி விழுந்து கனத்து சுட்டது.

மறுநாள் சாரதாடீச்சருடன் பள்ளிக்குப்  போனாள். பள்ளித்தாளாளரைப் பார்த்ததும் கண்ணீர் பொங்க வணங்கினாள்.  பிஎஸ்சி கணிதம் படித்த சான்றிதழைக் காண்பித்தாள் . கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டதால் பிஎட் முதலாமாண்டோடு நிறுத்த வேண்டியதாயிற்று என்பதையும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத வாழ்க்கைத்  துயரத்தையும் சொன்னாள். பள்ளித்தாளாளரம்மா , சாரதா சொன்ன விவரங்களைச் சொல்லி, “எதாவது உதவலாமே என்றுதான் வரச்சொன்னேன். அலுவலகப் பணியிலும் ,ஆசிரியர் வேலையும் காலி இல்லாத நிலை. நீ பிஎஸ்சி படித்திருக்கிறாய் .உன் படிப்புக்கு ஏத்த வேலை இல்லை. ஆனால் நீ ஒத்துக்கொண்டால் எல்கேஜி செக்ஷனில் ஆயாவேலை பார்க்கலாம். உனது கைக்குழந்தையையும் நீ அழைத்து வரலாம்.  மாதம் மூவாயிரம் தருவோம்.  அலுவலகத்திலோ , வகுப்பிலோ  தேவை ஏற்படும்போது உனக்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறோம்“ என்றார்.

விமலா சொல்வதறியாது உறைந்திருந்தாள். தாளாளரே மவுனத்தை சாதகமாக்கி.  “பார்க்க நல்ல புத்திசாலிப் பெண்ணாக இருக்கிறே…கிடைச்ச வேலையைப் பாரு. இனி வர்ற வாய்ப்பை பயன்படுத்திக்க. கவலைப்படாம இரு. உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.! “ என்று சொல்லியபடி அவளை எல்கேஜி பிரிவு பிள்ளைகளிடம். அழைத்துப் போய்க்  காட்டினார்.                                     “அழுத பிள்ளைகளை அமர்த்தணும். பசி என்றால் ஊட்டிவிட்டு சாப்பிட வைக்கணும். தூக்கம் வர்ற பிள்ளைகளைத் தூங்க வைக்கணும். பாத்ரூம் போகும் பிள்ளைகளை பாத்ரூமுக்கு அழைத்துச் செல்லணும்!. புதுசா பூத்த பூப்போல இருக்கிற இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலே கவலைகள் எல்லாம் கரைஞ்சு போகும்!“ என்று அன்றே அப்போதே  ஆயாவேலையில் அமர்த்தினார். தாளாளரம்மாவின் அன்பான ஆதூர வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. மௌனம் சுமையை ஏற்றிவிட்டதே .!

ஒரு பிள்ளையை வளர்க்க முப்பது பிள்ளைகளுக்கு செவிலித்தாயாக ஆனாள்.  ஆரம்பத்தில் அருவருப்பும் அய்யரவுமாக இருந்தது. ஆனால் இந்த மழலை களைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் என்னென்ன இடர்ப்பாடுகளில் இருந்து  கொண்டு இந்தப் பிள்ளைகளை இந்தவயதில் இங்கு அனுப்பி இருக்கிறார் களோ அவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது கவலையை மறக்கலாமே என்று ஈடுபாட்டோடு பிள்ளைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். காலையில் ஒன்பதுமணிக்கு வந்தால் மாலை நான்குமணி வரை கடைசி பிள்ளை அழைத்துச் செல்லப்படும் வரை இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். சிறுபிள்ளைகளுடன் ஊடாடும்போது பொறுமையும் , புதியது கண்டு வியக்கும் வெள்ளைமனமும் பற்றிக் கொண்டது.

பிள்ளைகள் தூங்கும் நேரம் ,சற்று ஓய்வு கிடைக்கும்போது சுற்றிலும் உள்ள மரம் செடிகளைப் பார்த்தாள். ஒரு பன்னீர்ப்பூ, மரக்கிளையில் சிலந்தி பின்னிய வலையில்  சிக்கி. காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தாள். தன்பாடும் அதுதானோ…?  தனக்குள்  மனச்சிலந்தி கவலை வலைகளைப் பின்னி இதயத்தை இறுக்கி பிழிவதை உணர்ந்தாள். இல்லை , அது பூத்தும் காய்க்காது  உதிர்ந்தது. நான்  பூத்து, காய்த்து  கனிந்து , விதைத்து ,  ஒரு தளிரை  முளைக்கச்செய்து விட்டேன். அந்தத் தளிர் தழைத்து விருட்சமாகும் வரை  இந்தமாதிரி கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது .  மனதைக் கட்டுப்படுத்தி சிந்தனையை மாற்ற ஆசிரியர்கள் எப்படி பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள் என்று ஜன்னல்வழி நின்று பார்த்தாள். தான்  முதலாமாண்டு பிஎட் படிக்கும்போது படித்த பாடங்களையும் செய்முறை பயிற்சிகளையும் நினைவு கூர்ந்து தன் துயரம் மறந்தாள். மணிச்சத்தத்தால் நிகழ்காலத்துக்கு வந்தாள். சில நேரங்களில்  அவளது கட்டுப்பாட்டை மீறி  பெற்றோர் பிடிவாதமாக செய்வித்த கல்யாணத்தால் ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு பாழான வாழ்க்கை நிகழ்வுகள் தோன்றும். நினைவுமுள்ளாய் குத்தி ஆறிவரும் புண்ணை ரணமாக்கும். அவளே சமாதானமும் செய்து கொள்வாள்.  இதுதான் வாழ்க்கை என்று ஆனபின் துயர நிகழ்வுகளை நினைத்து வருந்துவது , தன் காலை தானே கட்டிக் கொள்வது போலாகும். முன்னேறிச் செல்ல விடாமல் வீழ்த்திவிடும் என்று மனம் தேற்றிக் கொள்வாள்.  இப்படியாக ஆறுமாதங்கள் ஊர்ந்தன.



காலை பத்துமணி வாக்கில் தாளாளர் அழைப்பதாக அலுவலக உதவியாளர்  சொன்னார்.  தாளாளரம்மா திடீர்ன்னு அழைக்கிறாரே , என்ன விவரம் என்று அலுவலக உதவியாளரிடம் கேட்டாள். அவர் , நீயே வந்து தெரிஞ்சுக்க  என்று சொல்லி விருட்டென்று விரைந்து விட்டார்.  இவளுக்கு பயம் பற்றிக் கொண்டது. இப்போது தான் வேர்பற்றி தள்ளாடமல் நிற்கிறோம். அதற்குள் இன்னொரு தானே புயலா…? நமக்கு விடிவே இல்லையா என்று பதறினாள். அப்புறம், அவளாகவே ஆறுதலாகச் சொல்லிக் கொண்டாள். சுனாமியே. வந்து புரட்டிப்போட்ட பின் நிமிர்ந்து நிற்கிறோம். இதற்குமேல் என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது…? எதுவாக இருந்தாலும் துணிவோடு எதிர்கொள்வோம் என்று மனதைத் தேற்றி முகத்தில் புன்னகை பூசிக்கொண்டாள்.

பதற்றத்தை அடக்கிக் கொண்டு தாளாளரை வணங்கினாள். பக்கத்தில் வேறு எவருமில்லை. தாளாளர் ; “ விமலா, நம்ம ருக்மிணி டீச்சர் வயிற்றில் எதோ பிரச்சினைன்னு பதினைந்து நாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். மூன்றாம் வகுப்பு எடுக்க ஆளில்லை. நீ தான் பிஎஸ்சி படித்தவள் தானே தற்காலிகமாக ருக்மணிடீச்சர் வரும் வரை மூன்றாம் வகுப்புக்கு பாடம் எடு. யுகேஜி பார்க்கிற ஆயாவை வைத்து நான் சமாளித்துக் கொள்கிறேன்.”

விமலா வியர்வை பொங்க மௌனமாக நின்றாள். “ என்ன தயக்கம்? தைரியமா வகுப்பெடு.  நான் தானே ஹெச்எம்,  நானிருக்கிறேன். பயப்படாம வகுப்பெடு!“

விமலா உடன்பட்டாள். தாளாளரே , விமலாவை மூன்றாம் வகுப்பறைக்கு அழைத்துச் சென்று மாணவர்களுக்கு புது டீச்சர்  என்று அறிமுகம் செய்து விட்டுச் சென்றார். விமலா தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை மனக்கண்முன் நிறுத்தி மானசீகமாக வணங்கி வகுப்பெடுத்தாள். கதையும் பாட்டுக்களுமாய் வகுப்பு குதூகலப் பட்டது. அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அவ்வழி கடந்து செல்லும் பிற ஆசிரியைகள் விமலாவின் வகுப்பெடுக்கும் திறன் கண்டு வியந்தனர் . சில ஆசிரியைகள் தங்களுக்குள் முனங்கினர். “ஆள் இல்லாத வகுப்பை ஒப்பேத்த வந்த ஆயாக்காரி கிளாஸ் எடுக்கிறதைப் பார்த்தா நம்மலை ஒப்பேத்திருவா போலிருக்கு!. நாம உஷாரா இருந்துக்கணும். ! இல்லாட்டி கரஸை கைக்குள்ளே போட்டுகிட்டு நம்மலை லோயர்கிளாஸ் எடுக்க விட்டுருவா…!”

ருக்மணிடீச்சருக்கு நோய்  குணமாகவில்லை. பெண்களுக்கு நாற்பத்தைந்து வயதுக்கு மேல் தாக்கும் மோனொபஸ்.  பாதுகாப்பு கவசமாக இருந்த மாதவிடாயை இயற்கை  திரும்பப் பெற்றுக் கொண்டது. அது பல பக்கவியாதிகளை இழுத்து வந்து முற்றுகை இடுகிறது. அவர் தொடர் விடுப்பு எடுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கருதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார். விமலாவுக்கு ஆசிரியர்பணி நீடித்தது.  ஊதியமும் கூடியது. கல்விஅலுவலரின் யோசனைப்படி அஞ்சல்வழியில் இரண்டாம்ஆண்டு பிஎட் படிப்பைத் தொடர்ந்தாள். சகஆசிரியைகளுடன் இணக்கமாக பழகியதாலும் , இவளது குடும்பப் பிரச்சினைகள் தெரியவந்ததாலும் இவள்மீது இரக்கம் மிகுந்து பொறாமைப் படுவோர் இல்லாமல் ஆயினர்.

விமலா தனியாக இருக்கும் போது தனக்குத்தானே வியந்து கொள்வாள்.        ‘ இந்த பத்து வருடங்களில் வாழ்க்கை தான் கற்பனை பண்ணாத பல மாற்றங்களை நிகழ்த்தி விட்டது.  மனம் தளராது இருந்ததால் தப்பித்து நிமிர்ந்து நிற்கிறோம். மனது சோர்ந்து கோழைத்தனமாக முடிவு எடுத்து இருந்திருந்தால் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகி இருப்போம்!‘ 

இந்தத் தருணத்தில் இன்னொரு பிரச்சினை வந்தது.  மாமியாரின் உறவுக்காரர் ஒருவர் முப்பதுவயதில் மனைவியை சாகக் கொடுத்தவர்;  தனது ஒரு வயது கைக்குழந்தையோடு அடிக்கடி வந்து இவளது மாமியாரிடம் மருமகள் மூலம் தனக்கு வாழ்வளிக்குமாறு வந்து கெஞ்சினார். மாமியாருக்கு நெருக்கமான உறவினர்களையும் அழைத்து வந்து வற்புறுத்தச் செய்தார்.



மாமியாருக்கும் விமலாவின் வயதினை மனதில் கொண்டு  தனக்குப் பின் தனது மருமகளுக்கும் பேரனுக்கும் ஆதரவு வேண்டுமென்று யோசனை தோன்றியது.  ஒரு நாள் விமலாவை அழைத்து பக்கத்தில் அமர்த்தி மனைவியை இழந்தவனைப் பற்றிய முன்கதையை சொன்னார்.                           “புருஷன்  , பொண்டாட்டி ரெண்டு பேரும் கவர்மெண்ட் ஆபிஸில் வேலை பார்த்து வந்தனர். பொருளாதாரச் சிக்கல் இல்லாத வாழ்க்கை தான். ஆபிஸ் வேலை அதிகமானதால் அடிக்கடி மனைவி தாமதமாக வீட்டுக்கு வருவது சிறுசிறு சண்டையாக ஆரம்பித்து வாய்ப்பேச்சு முற்றி புருஷன்காரன் சந்தேகமா சில வார்த்தைகளை வீசி இருக்கிறான்.  இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பொண்டாட்டிக்காரி தூக்கமாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்ச்சுக்கிட்டாள். ஒருவயசு பெண்குழந்தையை வைத்துக் கொண்டு திண்டாடுறான். வாய்க் கொழுப்பால் சிந்துன  வார்த்தை வாழ்க்கையை பாழாக்கிருச்சு. தனக்காக இல்லாட்டியும் ஒரு பாவமும் அறியாத ஒருவயசு குழந்தைக்கு அம்மாவாக இருந்தால் போதும். எனக்கு பொண்டாட்டின்னுகூட வேணாமுன்னு புலம்பித் தவிக்கிறான். உன்கிட்ட கேட்கச் சொல்றான். நானும் ரெண்டுமாசமா பிடி கொடுக்காமல் தான் இருந்தேன். அப்புறம் யோசித்துப் பார்த்ததில் எனக்குப் பின் உனக்கும் பேரனுக்கும் ஆதரவு. வேணுமுன்னு தான் கேட்கிறேன்.  நீ நல்லமுடிவா எடுக்கணும்”

“அம்மா , நான் உங்களை அத்தேன்னு கூப்பிடறதில்லை.  அம்மான்னு தான் கூப்பிட்றேன். ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்ட நான் மட்டுமல்ல நீங்களும் சேர்ந்தே துயரத்தில கருமாயப் படுறோம்.  இனி ஒரு சந்தேகப்பிராணி கிட்டேயும் அகப்பட்டு அல்லல் படுணுமா…?  வேண்டாம்மா இப்போ நாமப் படுற துன்பம் போதும்…! இதிலிருந்து மீண்டு தலைநிமிர்ற நேரத்தில் புதுசா ஒரு தொல்லையைத் தூக்கி சுமக்க வேண்டாம்மா…! இந்த உலகத்தில்  யாரும் யாரையும் நம்பிப்  பிறக்கவில்லை . இந்தக்காலத்தில் பிள்ளைகளை வளர்க்க  எத்தனையோ  அமைப்புகள்  இருக்கு.  இவர்  குழந்தையை  வைத்து  தூண்டில்  போடப் பார்க்கிறார் .எனக்கு  ஆண் துணையும் தேவையில்லை. எனது மகனை நல்லபடியாக வளர்த்து  ஆளாக்கினால் போதும் “ என்று தேங்காய் உடைத்தது போல் சொல்லி நகர்ந்தாள். மாமியார் வார்த்தை அற்றுப் போனாள்.

அவன் அடிக்கடி கைக்குழந்தையோடு வந்து யாசகச்சிரிப்பை வெளிப் படுத்துகிறான். எரிச்சலை ஏற்படுத்துகிறது. வேறிடத்தில் நடுவதற்காகப் பிடுங்கப்பட்ட ரோஜாச் செடியைப் போல குழந்தை வாடிப் போயிருக்கிறாள் .   அந்தக் குழந்தையின் முகத்தில் ஓர் ஈர்ப்பு தென்படுத்தான் செய்கிறது. மனக்கசிவை  வெளிப்படுத்தாமல் அவள்  கடந்து  போகிறாள்.



One thought on “ சிறுகதை: கடந்து போதல் – ஜனநேசன் ”
  1. A story revolving around how women can uplift each other’s life both emotionally and Financially .. Excellent write-up 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *