‘காந்தி கொலையாளி’ நாதுராம் கோட்சேவை தன்னுடைய முஸ்லீம் விரோத நோக்கத்திற்கான ஆதரவாளராக சாவர்க்கர் எவ்வாறு மாற்றிக் கொண்டார் – தீரேந்திர ஜா | தமிழில்: தா.சந்திரகுரு
நாதுராம் கோட்சே சாவர்க்கரைச் சந்திக்கச் சென்றது குறித்தோ அல்லது அவர்களுக்கிடையிலான அந்த அறிமுகச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது குறித்தோ குறிப்பிட்ட பதிவுகள் எதுவுமில்லை. ரத்னகிரிக்கு 1929ஆம் ஆண்டு கோட்சே சென்ற தருணத்தில் அவருக்கும் சாவர்க்கருக்கும் இடையில் தொடர்பு உருவாகி வளர்ந்ததாக கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.
‘முதன்முதலாக ரத்னகிரிக்கு நாங்கள் வந்த போது சாவர்க்கர் தங்கியிருந்த இடமே இப்போது நாங்கள் தங்கியிருக்கும் இடமாக தற்செயலாக மாறியுள்ளது. பிறகு அதே தெருவின் மறுமுனையில் இருந்த மற்றொரு வீட்டில் அவர் தங்கினார்’ என்று கோபால் நினைவுபடுத்திக் கூறியிருந்தார்.
கோட்சேவின் இளமைப் பருவத்தில் சாவர்க்கர் அவ்வளவு நெருக்கமில்லாதவராகவே இருந்து வந்தார். ரத்னகிரிக்கு கோட்சேவின் குடும்பம் குடிபெயர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சாவர்க்கரை முதன்முதலாகச் சென்று சந்தித்த போது கோட்சேவிற்கு உத்வேகம் அளித்தவராகவே சாவர்க்கர் இருந்தார். இருந்த போதிலும் சாவர்க்கரை முழுமையாகப் பின்பற்றுபவராக கோட்சே மாறியதற்கான நம்பகமான ஆதாரங்களில் பெரும்பாலானவை 1930ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே கிடைக்கின்றன.
சாவர்க்கரை முதன்முதலாகச் சந்தித்தபோது கோட்சேவிற்கு வயது பத்தொன்பது. ஒல்லியாக இருந்த போதிலும், தன்னைக் காட்டிலும் உயரமாக இருந்த சாவர்க்கரை விட ஆரோக்கியமானராகவே கோட்சே இருந்தார். கட்டுப்படுத்தப்பட்ட நடத்தையுடனிருந்த கோட்சே அமைதி, பணிவு கொண்டவராக இருந்தார். அந்தமானில் இருந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பிய புரட்சியாளராக சாவர்க்கரால் அவர் முழுமையாக ஈர்க்கப்பட்டிருந்தார்.
கோட்சேவின் அரசியல் நம்பிக்கைகள் – அவ்வாறு எதுவும் இருந்திருக்குமென்றால் – தெளிவற்றே இருந்தன. அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். அந்தக் கூட்டங்கள் சிலவற்றில் உரையாற்றவும் செய்திருந்தார். ஆயினும் அடிப்படையில் தனது எதிர்காலத்தைப் பற்றி இன்னும் தீர்மானித்துக் கொண்டிராத ஒருவராகவே அவர் இருந்து வந்தார். அரசியல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட அவர் தன்னை சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார்.
சாவர்க்கரைப் பின்பற்றுபவராக, ஹிந்துத்துவாவை ஆதரிப்பவராக கோட்சேவை மாற்றியது ஒன்றும் சுமுகமாக நடைபெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் அவரது அவதானிப்புகள் ஹிந்து வகுப்புவாத தத்துவத்தின் விசித்திரமான விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாத வகையிலேயே இருந்துள்ளன.
‘பள்ளிகள், கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற காந்தியின் அழைப்பின் பேரில் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு ஆஜராகப் போவதில்லை என்ற என்னுடைய முடிவை அவரிடம் [சாவர்க்கரிடம்] தெரிவித்தபோது அவர் மிகவும் எரிச்சலடைந்ததாகவே எனக்குத் தோன்றியது. இரண்டு அல்லது மூன்று முறை அவர் அந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு என்னிடம் வற்புறுத்த முயன்றார். என்னிடம் அவர் படிப்பைத் தொடர்வது எந்த அளவிற்கு முக்கியம் என்று விளக்கினார்’ என்று பின்னர் ஒருமுறை கோட்சே கூறியிருந்தார்.
சாவர்க்கரின் ஆலோசனை பெரியவர் ஒருவரின் நல்ல அர்த்தமுள்ள அறிவுரையாகத் தோன்றக்கூடும். ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை இந்தியாவில் இருந்த பெரும் எழுச்சியிலிருந்து விலக்கி வைத்துக் கொள்ள அவரிடமிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது அவ்வாறான அறிவுரையாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்க கோட்சே மறுத்து விட்டார். அவர் அதன் மூலமாக பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் முகாமில் இருந்து கோட்சேவை வெளியேற்றுவதற்கான சாவர்க்கரின் முதல் வெளிப்படையான முயற்சியை முறியடித்திருந்தார்.
சாவர்க்கர் மேற்கொண்ட மனமாற்ற முயற்சி குறித்து தொடக்கத்தில் கோட்சே சுயநினைவுடன் இருந்ததையே அவருடைய அந்த ஆரம்பகட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அது விரைவிலேயே முறிந்து போனது. மகாராஷ்டிராவின் முன்னாள் பிராமண ஆட்சியாளர்களான பேஷ்வாக்களின் உண்மையான தொடர்ச்சி என்று பலராலும் – குறிப்பாக சித்பவான் பிராமணர்களால் – காணப்பட்டு வந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதில் அவர் ஒருவேளை மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
சாவர்க்கரைப் போலவே, பேஷ்வாக்களின் வாரிசுகள் என்று தங்களைக் கருதிக் கொண்ட மேல்தட்டு பிராமணர்களின் துணைக்குழுவிலிருந்து வந்தவராகவே கோட்சேவும் இருந்தார். கோட்சேவின் பார்வையில் அந்த பிராமணர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சாதியரீதியான பிணைப்பு, மற்ற ஹிந்துக்களைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவிலான மேன்மை உணர்வை அவருக்கு கொடுத்திருக்கும் என்றே தோன்றுகிறது.
பிராமணர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வருகின்ற வழக்கமான புரோகித சலுகைகளைத் தவிர, போர்க்களத்தில் வீரத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்ற இந்தியாவின் அரிய பிராமண சமூகங்களில் ஒன்றாக சித்பவன் பிராமணர்கள் இருந்தனர். இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த அவர்கள், இந்தியாவில் முகலாயர், பதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தனர். அந்த உண்மையே ஹிந்து தேசியவாதத்தின் தேவைகளின் அடிப்படையில் தங்களுடைய வரலாற்றை மறுவிளக்கம் செய்ய அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது; அவர்கள் முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஹிந்து எதிர் பாரம்பரியத்தை நிலைநிறுத்துபவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர்.
எவ்வாறாயினும், ஹிந்து மறுமலர்ச்சி குறித்த ஆர்வமுள்ளவர்களிடம் சாவர்க்கர் தூண்டிய பெருமையொன்றும் கோட்சேவைப் பொறுத்தவரை புதியதாக இருக்கவில்லை. பூனாவுடன் பரம்பரைத் தொடர்பு இருந்ததால், அந்த உணர்வை – தெளிவற்றதாக இருந்தாலும் – கோட்சே நன்கு அறிந்தே இருந்திருப்பார். பூனாவை ஹிந்து தேசிய மறுமலர்ச்சியாளர்களுக்கான மேடையாகவே பாரம்பரிய சித்பவன் பிராமணர்கள் கருதி வந்தனர். பூனாவிற்கு அப்பால் இருக்கின்ற மலைகளில் பிறந்து வளர்ந்த சிவாஜி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக தனது கொரில்லா பிரச்சாரத்தை நடத்தினார்.
சிவாஜி போர்வீரர் சாதியில் பிறந்த மராத்தியர் என்றாலும் முதல்வர்கள் அல்லது பேஷ்வாக்களாக வந்த அவரது வாரிசுகள் சித்பவன் பிராமணர்களாகவே இருந்தனர். சிவாஜிக்குப் பிறகு இறுதியில் 1818ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் அடிபணியும் வரை முகலாயர்கள், பதான்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி வந்த பேஷ்வாக்களுடைய கட்டுப்பாட்டு மையமாக பூனாவே செயல்பட்டு வந்தது.
பூனாவின் சித்பவன் பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தலைவர் திலக், 1897ஆம் ஆண்டில் பூனாவின் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனராக இருந்த டபிள்யூ.சி. ராண்டின் படுகொலையில் ஈடுபட்ட சபேகர் சகோதரர்கள் – தாமோதர் ஹரி சபேகர், பாலகிருஷ்ண ஹரி சபேகர், வாசுதேவ் ஹரி சபேகர் – போன்ற இந்தியப் புரட்சியாளர்களை உருவாக்கியிருந்தனர்.
கோட்சேவின் மூதாதையர்கள் சித்பவன் பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் பூனாவுக்கு அருகிலுள்ள உக்சன் கிராமத்தில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனாலும் கோட்சே கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருந்து வந்தார். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அரபிக் கடலின் கரையில் சாவித்திரி நதியால் உருவான கழிமுகப் பகுதியில் உள்ள பாறைக் கடற்கரை நிலமான ஹரிஹரேஷ்வரில் இருந்து அந்தக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர் என்று குடும்பத்தின் பரம்பரை குறித்த வரலாறு குறிப்பிடுகிறது.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ராமச்சந்திர கோட்சேவிலிருந்து தொடங்கிய கோட்சே குலத்தைச் சேர்ந்த அனைத்து சித்பவன் பிராமணர்களின் வம்சாவளிகளின் தொகுப்பான கோட்சே குல்வ்ரிதாண்ட் பரம்பரைப் படியில் நன்கு அறியப்பட்டுள்ள முன்னோர்களின் எட்டாவது ஏணியில் கோட்சேவின் தந்தையான விநாயகராவ் இருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்களின் ஆட்சியின் போது உக்சன் கிராமத்தில் இருந்த மற்ற சித்பவன் குடும்பங்களைப் போலவே ராமச்சந்திர கோட்சேவின் வழித்தோன்றல்களும் முக்கியத்துவம் பெற்று நிலமானியங்களைப் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர, இடைப்பட்ட தலைமுறைகளைப் பற்றி அதிகமாக வேறொன்றும் அறியப்படவில்லை. பரம்பரை பரம்பரையாக அவர்களிடமிருந்த விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால், விநாயகராவின் தந்தை வாமன்ராவ் மிகச் சொற்ப அளவிலான நிலத்தையே பெற்றார்.
தனது முன்னோர்களைப் போலவே விவசாயத்துடன் அர்ச்சகர் தொழிலையும் கலந்து வாமன்ராவ் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவரிடம் நவீன கல்வியை அவரது மகன் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. எனவே தனது மகன் ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் பூனாவில் இணையான நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். அவர்கள் குடும்பத்தில் மெட்ரிகுலேஷன் படித்து முடித்த முதல் ஆளாக விநாயகராவ் இருந்தார். அதற்குப் பின்னர் அவருக்கு தபால் துறையில் அரசு வேலை கிடைத்தது. மாற்றத்திற்கு உட்பட்டதாக அவரது பணி இருந்ததால், விநாயகராவ் தனது மூதாதையர் கிராமத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இருப்பினும் அவருக்கு சிறிய அளவிலே விவசாய நிலம், விசாலமான வீடு இன்னும் அங்கே இருந்து வந்தது.
சாவர்க்கரின் குழுவிற்கு கோட்சே அந்த வயதில் மாறியதை அல்லது சேர்ந்து கொண்டதை உண்மையான சித்பவனின் இயல்பான பாதை என்று விளக்குவதற்கு அவரது பின்னணி போதுமானதாகவே இருந்தது. தனது கடந்த காலம், சாதி பற்றி அவருடைய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் கோட்சே என்ற அந்த இளைஞர் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகள், உள்ளூர் எதிரிகள் என்று அழைக்கப்பட்ட முஸ்லீம்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஹிந்துக்களைத் தயார்படுத்துவது என்ற பெயரில் சாவர்க்கரால் மேற்கொள்ளப்பட்ட காலனித்துவ ஆட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் அணுகுமுறை ஆகியவற்றிற்கு இடையே என்று இரண்டு உலகங்களிலும் சுதந்திரமாகப் பயணித்து ஊசலாடிக் கொண்டிருந்ததாகவே தெரிய வருகிறது.
ஆனால் கோட்சேவிடம் இறுதியில் சாவர்க்கரின் வழியே வெற்றி பெற்றது. தனது சொந்த வழியில் தன்னுடைய சாதி சகோதரர்களிடையே அதிகமான ஆறுதலை கோட்சே கண்டடையத் தொடங்கினார். அவர்களுடைய மறுமலர்ச்சித் திட்டத்துடன் அவர் ஒருங்கிணைக்கப்பட்டார். அந்தக் குழு சிலர் மதம் சார்ந்து இயங்குபவர்களாக, சிலர் மதச்சார்பற்றவர்களாக என்று ஒரு கலப்பான குழுவாக இருந்தது. சாதி விசுவாசத்தால் சாவர்க்கரின் தலைமையைச் சார்ந்திருப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனர்.
சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து தான் விலகியதற்கான காரணம் தன்னுடைய மகன் அதிகாரிகளைத் தொந்தரவு செய்வதை விரும்பாத, அரசாங்க ஊழியராக இருந்த தந்தையின் அச்சத்தில் வேரூன்றியதாகவே இருந்தது என்று கோட்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறியிருந்தார். ‘எனது செயல்பாடுகள் அவரது வேலையைப் பாதிக்கக்கூடும் என்று என்னுடைய தந்தை அஞ்சினார், எனவே என்னிடம் சட்டங்களை மீறுகின்ற வகையில் இருக்கின்ற எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்’ என்று கோட்சே விவரித்திருந்தார்.
சாவர்க்கரின் வற்புறுத்தல் அல்லது கோட்சே குடும்பத்தினரின் அழுத்தம் என்று இரண்டு காரணங்களில் எது, தேசியவாத கிளர்ச்சியாளர்களுடனான தொடர்பைக் கைவிடுவதற்கான கோட்சேவின் முடிவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த அறியப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. அவரது தந்தை காங்கிரசின் தலைமையிலான போராட்டக் கூட்டங்களில் கோட்சே பங்கேற்கத் தொடங்கியதிலிருந்தே தனது அச்சங்களை அவரிடம் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் கோட்சே தன்னை சாவர்க்கர் வேறு வழியில் அழைத்துச் செல்லும் வரை தன்னுடைய தந்தையின் அச்சத்தை எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.
சாவர்க்கரின் வழி மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. மிகவும் உறுதியுடன் வலிமையாக அவர் பேசி வந்தார் என்றாலும், தனது மனதில் உள்ளவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதில் இருந்து அவர் எப்போதும் பின்வாங்கிக் கொண்டவராகவே இருந்தார். ஆங்கிலேயர்கள் குறித்து தன்னிடமிருந்த சமரச உணர்வை மறைப்பதற்காக மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பேச்சுகளில் அவர் ஈடுபட்டார். ‘சிறைவாசத்தின் போது அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்ததால் பாரிஸ்டர் சாவர்க்கர் அரசியலை மிகவும் அரிதாகவே விவாதித்து வந்தார்’ என்று கோட்சே அதுகுறித்து விவரித்தார். அதுபோன்ற வாய்ச்சவடால்கள் குறிப்பிட்ட வகையிலான அரசியலை கணிசமாக, வலுவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அப்போது அவரால் அறிந்து வைத்திருக்க முடியாது.
காந்தியால் உருவான கவலைகளே அந்த அரசியலுக்கான அடையாளமாக இருந்தன. ஒரு பழமைவாதியாகவும் இல்லாமல், முற்போக்குவாதியாகவும் இல்லாமல் இரண்டின் பொதுவான சாராம்சம் கொண்டவனாக தான் இருப்பது போல காந்தி தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட சமூக மாற்றங்களும், மக்களிடமிருந்து அவர் கோரிய அரசியல் செயல்பாடுகளும் ஆச்சாரமான ஹிந்துத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலேயே இருந்தன.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை இந்தியக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, கீழ்நிலையில் இருந்த பிராமணர் அல்லாத விவசாயக் கலாச்சாரங்களை உண்மையான ஹிந்து மதம் என்று வடிவமைத்ததன் மூலம், தங்களுடைய கடந்த கால மேலாதிக்கத்தை புதுப்பிக்க கனவு கண்டு வந்த ஹிந்து மேல்தட்டினரிடம் காந்தி அச்சத்தை உருவாக்கியிருந்தார். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி ஆண்களுக்குச் சமமான நிலைக்கு பெண்களைக் கொண்டுவர முயல்வதன் மூலம் அத்தகைய ஹிந்துக்கள் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான காந்தியின் முயற்சியைக் கூட ஆழ்ந்த கவலையுடனே பார்த்தனர்.
பிராமண மேலாதிக்கத்தைத் தகர்க்க முயன்ற காந்தி தன்னை சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும் அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்வை அதிகரித்திருக்க வேண்டும். தன்னை ஒரு சனாதானி, ஆச்சாரமான ஹிந்து என்றே காந்தி உறுதியாக நம்பி வந்தார்.
காந்தி மீதிருந்த அந்தப் பார்வையை நீக்குவதே சாவர்க்கர் அரசியலின் முக்கிய பகுதியாக இருந்தது. அப்போதுதான் தனது அரசியலில் வெற்றியடைய முடியும் என்று சாவர்க்கர் நினைத்திருக்கக் கூடும். சாவர்க்கருக்கென்று சில அனுகூலங்களும் இருந்தன. பாரம்பரியமாக இருந்து வருகின்ற மேல்தட்டு சமூகத்தினரின் மேலாதிக்கத்தை மாற்றியமைக்காமலேயே, பல்வேறு சாதி ஹிந்துக்களை ஒன்றிணைப்பதற்காக தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையிலான தேசியவாதத்தின் எதிரிகளாக முஸ்லீம்களை முன்னிறுத்தி அரசியலில் பிராமணர்களின் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் வகையில் அவரிடமிருந்த உத்வேகத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டிருந்தவர்களிடம் அவர் முன்வைத்த பார்வை எளிதில் சென்றடைந்தது.
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவது, சமூகத்தின் மையத்தில் இருந்து பிராமணர்களை வெளியேற்றுவதன் மூலம் ஹிந்து மதத்தை அரசியல் ரீதியாக மறுவரையறை செய்வது என்று மேற்கொண்ட முயற்சிகள் மூலமாக அவர்களை அச்சுறுத்திய காந்தி அவர்களிடம் அதற்கான சாத்தியங்களை உருவாக்கியிருந்தார். சித்பவன் பிராமணர் பிரிவினரைப் பொறுத்தவரை – குறிப்பாக சமகால சமூக அரசியல் அமைப்பில் தங்களுடைய பாரம்பரிய சிறப்புரிமை நிலைக்கும், தங்களுடைய தற்போதைய உண்மையான நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தவர்களுக்கு – அவ்வாறு உருவாகியிருந்த கவலை அந்தக் காலத்தில் அவர்களிடமிருந்த நிரந்தர உணர்வாகவே இருந்தது. இழந்த பெருமையை மீட்டெடுக்க அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது காந்தியின் கவர்ச்சி அவர்களை ஈர்க்கவில்லை.
காந்தியின் மீதான அந்த வெறுப்புக்கு மிகவும் குறுகிய, சாதிய நோக்கும் ஒரு காரணமாக இருந்தது. பனியாவாக அதாவது வணிகர்கள் மற்றும் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதியைச் சார்ந்தவராக, பம்பாய் மாகாணத்தில் இருந்த சமூக கலாச்சார மண்டலமான குஜராத் பகுதியைச் சார்ந்தவராக காந்தி இருந்தார். அப்போது மகாராஷ்டிராவில் இருந்த அந்தப் பகுதி பாரம்பரியமாக பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பகுதியாகவே இருந்து வந்தது. மகாராஷ்டிரர்களில் ஒரு பிரிவினரிடம் குஜராத்திகள் குறித்து எப்போதும் மோசமான பார்வையே இருந்து வந்தது. அதுமட்டுமல்லாது பனியாக்களை சூழ்ச்சி நிறைந்தவர்கள் என்றே பிராமணர்கள் பலரும் கருதி வந்தனர்.
https://scroll.in/article/1014167/gandhis-assassin-how-vd-savarkar-converted-nathuram-godse-to-his-anti-muslim-cause
நன்றி: ஸ்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு