நூல் அறிமுகம்: ஜோசப் ராஜாவின் ’பெருந்தொற்றும் யுத்தமும்’ – பெரணமல்லூர் சேகரன்
“ஓங்கி மண்டையில் அறைந்தாற் போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை எதற்கு வாசிப்பானேன்?”..காஃப்கா.
இந்த மேற்கோளே ஓங்கி மண்டையில் அறைவதைப் போல்தான் உள்ளது. ஜோசப் ராஜாவின் ‘பெருந்தொற்றும் யுத்தமும்’ என்னும் கவிதைத் தொகுப்பினை வாசித்து முடித்தபின் காஃப்காவின் மேற்கோள்தான் நினைவுக்கு வந்தது. ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்கும் நூலாக உள்ளதால் இந்நூலை வாசிக்க வேண்டும் என பரிந்துரைப்பது சாலப் பொருத்தமானதே.
பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பான்மையான நாடுகளை உலுக்கி எடுத்துவிட்டது. டார்வின் கூற்றுப்படி ‘தகுதியுள்ளது பிழைக்கும்’ என்று எடுத்துக் கொள்வதா? வலுத்தவன் கையே ஓங்கும் என்று எடுத்துக்கொள்வதா?
எப்படிப் பார்த்தாலும் சோஷலிச நாடுகளில் மட்டுமே இறப்புக்களும் பாதிப்புக்களும் குறைவு என்பது அனுபவ உண்மை. சின்னஞ்சிறு கியூபா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கியூப மருத்துவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சைகளை மேற்கொண்டு சேவையாற்றியது வெள்ளிடைமலை. காரணம் சோஷலிச நாடுகளுக்கு மக்கள் நலனே முதன்மையானது. லாப வெறி கொண்ட முதலாளித்துவ நாடுகளில் மரண ஓலங்களும் பொருளாதார பாதிப்புக்களும் அதிகம். அதற்குச் சான்று அமெரிக்கா. தனது சொந்த நகரமான நியூயார்க் நகரில் நாற்சந்தியில் அப்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கு நிர்வாண சிலையெழுப்பி அதைச்சுற்றி மக்கள் போராட்டம் நடத்தியது சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்தியாவில் கொரோனா உச்சக்கட்ட நிலையில் இருந்தபோதும் கூட மக்களுக்கு நிவாரணம் வழங்காமலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த ஊர் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாமலும் ஊரடங்கு மகாராசாவாய் மாளிகையை விட்டு வெளிவராமல் தாடி வளர்த்து நாடகமாடினார் பிரதமர். வலுவான போராட்டங்களுக்குப் பிறகே தடுப்பூசி இலவசமாக்கப்பட்டது.
இத்தகைய கசப்பான அனுபவங்களை வெறுமனே கண்டும் கேட்டும் செல்பவர்கள் மனிதர்களாகக் கருதப்பட மாட்டார்கள். குறிப்பாக படைப்பாளிகள் மௌனம் காத்தலும், கொரோனா கொடூரங்களைப் பற்றி எழுதாமல் இன்ன பிறவற்றை எழுதலும் ஏற்க இயலாதவை. அத்தகைய வரிசையில் வராத எந்நேரமும் மக்கள் நலனையே எண்ணக் கூடிய கவிஞர்களுள் ஒருவராக ஜோசப் ராஜா இருப்பதனால் அவரது தூரிகையிலிருந்து வரும் கவிதைகள் காத்திரமானவையாக, ஆளும் வர்க்கத்தால் மழுங்கடிக்கப்பட்டு மயக்க நிலையில் உள்ள மக்களைத் தட்டி எழுப்பும் கவிதைகளாக பரிணமிக்கின்றன. அத்தகைய கவிதைகளை அவ்வப்போது தொகுப்பாக வெளியிட்டு வருவது அவரது சிறப்பு.
இந்திய மக்களைப் பற்றி எழுதும் கவிஞர்,
“ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி
தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு
மாலையில் தொலைக்காட்சியில் தோன்றி
சமூக இடைவெளி பழகுங்கள்
என்று சொல்லும் தலைவர்களை
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இந்த தேசத்தின் மக்கள்”
என்கிறார்.
“பெருந்தொற்றின் தடுப்பு மருந்துகளிலும்
பெருந்தொற்றின் தடுப்பு ஊசிகளிலும்
அவர்களால் இலக்கு வைக்கப்பட்ட
இலாபமானது
தன்னுடைய நிர்வாணத்தைத் திறந்து காட்டி
உண்மையை உரக்கச் சொல்லத்தான் செய்கிறது”
என பெருநிறுவன ஆளும் வர்க்கத்தைப்பற்றி நெத்தியடியாய் வந்து விழுகிறது கவிதை.
உச்சக்கட்ட கொரோனா கொடூரக் காட்சியை,
“கண்களை மூடினால்
ஆக்சிஜன் உருளைகளோடு
அலைந்து திரியும் மனிதர்கள்
அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும்
உயிர்பிடித்துக் காத்துக் கொண்டிருக்கும்
உயிரச்சங்கள் நிறைந்த ஒவ்வொரு முகங்களும்
என்னை நோக்கி எழுந்து வருகின்றன
அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்
அந்தச் சுடுகாட்டு நெருப்பு
என்னைச் சுற்றி எரிந்து கொண்டிருப்பதாக
உணர்கிறேன் நான்”
என தன்னிலையிலிருந்தே படக்காட்சியாக்கியுள்ளார் ஜோசப் ராஜா.
விரக்தியின் விளிம்பில் அழுது புலம்புவதல்ல இவரது கவிதை. நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது என்பதற்கு,
“பேரிடரிலும் பெருந்தொற்றிலும்
எப்படி அழிந்துபோனோம் என்பதல்ல
எப்படி எழுந்து நின்றோம் என்பதில்தான்
மானுட வலிமையும்
மானுட ஒற்றுமையும் பிரகாசிக்கப் போகிறது”
எனும் கவிதையே சான்று.
ஊடக அதர்மத்தையும் அதை வெறுமனே கடந்து செல்லாமல் நாமாற்ற வேண்டிய கடமையையும் இவ்வாறு எழுதுகிறார் கவிஞர்.
“எதைக் காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
என்பதை அறிந்தே செய்கிறார்கள்
எல்லாவற்றையும் ஊடுருவி
எதைப் பார்க்க வேண்டும் என்பது
உங்களுக்கும் எனக்கும் கடமையாகிறது”
“சுற்றிலும் பிணங்கள்
எரிந்து கொண்டிருக்கும் போது
தாடி வளர்த்துக் கொண்டு
வாளாவிருப்பது
என்னைப் போன்ற
சாதாரணக் கவிஞனுக்குச் சாத்தியமா என்ன?”
என் மறைமுகமாக பிரதமரைச் சாடும் அதே நேரத்தில் தம்மைச் சாதாரணக் கவிஞனாக அவையடக்கத்துடன் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
“ஒரு தேர்தலுக்குத் தேசபக்தியென்றால்
அடுத்த தேர்தலுக்கு மதவெறி
உங்களால் கற்பனை செய்ய முடியாத
எந்தக் கொடூரமான காட்சிகளையும்
திட்டமிடுவதே இல்லை அவர்கள்
அவர்கள் விஷத்தை வைத்திருக்கிறார்கள்
அவர்களும் விஷமாகவே மாறியிருக்கிறார்கள்
அவர்களுக்கு எல்லாமும் இயல்பாகவே இருக்கிறது
மதவெறியைத் தூண்டிவிடுவதும்
கலவரத்தை நிகழ்த்திக் காட்டுவதும்
கணப்பொழுதில் அவர்களால் முடியக்கூடியதுதான்
இப்படியாகத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்
மக்களின் வெற்றியென்று சொல்லிக் கொள்வார்கள்”
என ஆளும் வர்க்கத்தை எளிமையாகப் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
கொரோனா மரணங்கள் குறித்த வழக்கில் பொறுமையிழந்த நீதிபதியொருவர்,
“இந்த மரணங்கள்
இனப்படுகொலைக்குச் சமமானது”
என்று
உணர்ச்சிவசப்பட்டு உண்மையைச் சொன்னார்
அப்படியென்றால்
இந்தப் படுகொலைகளுக்கு
யார் பொறுப்பேற்பது?”
எனக் கேள்வியெழுப்புவதோடு,
“உங்களுடைய செயலுக்காகத்தான்
காத்திருக்கிறேன்
உங்களை மட்டும் நம்புகிறேன்
அந்த இடி முழக்கத்தை
இந்தக் காதுகள் கேட்குமென்றும்
அந்தச் சூறாவளியை
இந்தக் கண்கள் பார்க்குமென்றும்
அந்தப் பரவசத்தை
இந்தக் கைகள் எழுதுமென்றும்
உறுதியாக நம்புகிறேன்
நெடுங்காலம்
என்னைக்
காத்திருக்கச் செய்யாதீர்கள்”
என்னும் கவிஞரின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்ற வாசகர்கள்தானே தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
இடையிடையே தத்துவ வகுப்பெடுக்கவும் தவறவில்லை கவிஞர்.
“சிந்தனைக்கும் செயலுக்கும் பின்னால்
வர்க்கச் சார்பு அடங்கியிருப்பதைப் போல
துயரங்களுக்குப் பின்னாலும்
வர்க்கச் சார்புதான் அடங்கியிருக்கிறது
துயரங்கள் பொதுவானதல்ல
வர்க்க பேதம் ஒழிக்கப்படும்போது
துயரங்களும் ஒழிந்துவிடும்”
என்பது உண்மைதானே!
கொரோனா கவிதைகளுக்கிடையில் ‘சாதியம்’ இறந்த உடலைப் புதைக்கக்கூட அனுமதிக்காத கொடுமையை நிகழ்ந்த நிஜ சம்பவத்தைக் கூறி நம்மைத் தட்டி எழுப்புகிறார் ஜோசப் ராஜா. அக்கவிதையின் சில வரிகள் இதோ:-
“வீரளூர் கிராமத்தில்
இறந்துபோன அந்த
எளிய மனுஷியின் உடலை
மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு
எல்லோரும் நடந்து செல்லும்
அந்தப் பாதை மறுக்கப்பட்டது
உங்களை வருத்தவில்லையா?”
நாடு சுதந்திரம் பெற்று பவள விழா கொண்டாடியாகிவிட்டது. ஆனாலும் வீடற்றவர்களுக்கு வீடு கனவாகவே நீடிக்கிறது. பட்டா இல்லை எனக்கூறி ஏழை மக்களின் வீடுகளை இடிக்கிறது அதிகார வர்க்கம்.
“ஒரு வீட்டை இடிப்பது
அதுவும் இடித்துத் தரைமட்டமாக்குவது
ஒரு குடும்பத்தின்
கனவுகளையும் ஆசைகளையும் லட்சியங்களையும் கூட்டுழைப்பையும்
இடிததுத் தரைமட்டமாக்குவதல்லவா
இடிக்கப்படும் வீடுகளில்
துடித்துக் கொண்டிருக்கிறது இதயம்”
என கவிதை வடிக்கிறார் கவிஞர்.
ரஷ்யா உக்ரைன் யுத்தம் கவிஞரை வெகுவாக பாதித்து அதன் விளைவாக நெடுங்கவிதைகள் வந்துள்ளன.
“பெருந்தொற்றின் பழைய காட்சிகள்
பின்னுக்குத் தள்ளப்பட்டு
யுத்தத்தின் புதிய காட்சிகள்
முன்னுக்கு வருகின்றன
பெருந்தொற்றின் காட்சிகளை
உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் தான்
யுத்தத்தின் காட்சிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்”
என மறைமுகமாக ஏகாதிபத்தியத்தைச் சாடும் கவிஞர்,
“யுத்தமென்னும் பெருமடியில்
சுரந்து கொண்டே இருக்கும் லாபம்தான்
விலக்கமுடியாத விடையாக இருக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
ஆயுத வியாபாரிகளின் பேராசை களையும்
முதலாளிகளின் முட்டாள்தனமான
விருப்பங்களையும்
ஒவ்வொரு கொடூரங்களுக்கும் பின்னால்
ஒவ்வொரு காட்சிகளுக்கும் பின்னால்
மறைந்திருக்கும் அவர்களின் கொடூரங்களையும்
புரிந்து கொள்ள மாட்டீர்களா தோழர்களே!”
என ஆதங்கத்துடன் வினா எழுப்புகிறார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்குச் காரணமான நேட்டோவை,
“நேட்டோ என்பது
இந்த நூற்றாண்டின்
மானுடத் திரளின் முதன்மையான எதிரி
நேட்டோ என்பது
இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த வளங்களையும்
வாரிச்சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும்
பெருமுதலாளிகளின் பெரும்பிணைப்பு
நேட்டோ என்பது
உலகத்தின் ஒற்றுமையைச்
சீர்குலைக்கத் தயாராக இருக்கும்
உலகத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கும்
அற்பர்களின் அதிகாரக் கூட்டமைப்பு”
எனப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
இறுதியாக,
“ஆயுதச் சங்கிலியின் ஆணிவேராக
முதலாளித்துவத்தை ஒழிக்காமல்
போரை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்
நம்புங்கள்
நோயைக் கண்டறிந்து கொண்டால்
குணப்படுத்துவது சுலபம்தான்!”
எனும் கவிதை மூலம்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளை நினைவூட்டுகிறார் ஜோசப் ராஜா.
“என்னுடைய வார்த்தைகளுக்கான வேர்கள் இந்த மண்ணிலும், இந்த மக்களின் முகங்களிலும் மட்டுமே ஆழப்பதிந்திருக்கிறது. அந்த வேர்கள் தான் வார்த்தைகளின் இயக்குவிசையாய் இருந்து வழிநடத்துகிறது” என்று தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை. இந்நூலை அழகுடன் அச்சிட்ட தமிழ் அலை பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.
– பெரணமல்லூர் சேகரன்
நூல் : பெருந்தொற்றும் யுத்தமும்
ஆசிரியர் : ஜோசப் ராஜா
விலை : ரூ.₹150/-
பக்கங்கள் 120
வெளியீடு : தமிழ் அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]