பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியாகிப் பரவலான நேர்மறை மற்றும் எதிர்மறை பின்னூட்டங்களைச் சந்தித்த 31 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு முழுப்புத்தகமாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

’நான் ஒரு எழுத்தாளர் அல்ல’ என்ற அறிமுகத்தோடு தொடங்கும் இந்நூல், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகப் பள்ளிக்கூடக் குழந்தைகள் எதிர்கொண்ட சவால்கள், கருவிகளின் வழியே பாடம் நடத்தப் பழக்கப்படாத ஆசிரியர்களின் அசட்டுத்தனங்கள், குறிவைத்துத் தாக்கப்படும் அரசுப்பள்ளி மற்றும் ஆசிரியர்களின் தன்மானங்கள், பலனற்றுப்போகும் பயிற்சி வகுப்புகள், பத்தோடு ஒன்று பதினொன்றாய் பராமரிக்கப்படும் பதிவேடுகள், தேர்தல்கால நெரிசலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகள், இவற்றிற்கு நடுவில் தட்டுத்தடுமாறிக்கூட அரசுப்பள்ளிகள் தலைநிமிர்ந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம்காட்டும் தனியார்பள்ளிகள் அதற்குத் துணைசேர்க்கும் ஊடகங்கள், கல்வியின் தரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று தெரியாமல் தனியார் பள்ளிகளுக்ப் படையெடுக்கும் மெத்தப் படித்த பொதுமக்கள் எனத் தன்னளவிலிருந்து ஆழமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் அலசத் துணிந்திருக்கிறார் உமா மகேஸ்வரி.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தவிப்போடு தமிழகத்தில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனக்குமுறல்களை மட்டுமே பதிவுசெய்யாமல் எதார்த்தத்தில் அரசுப்பள்ளிகளின் நிலையையும் சேர்த்தே தன் பார்வையிலிருந்து அணுகியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். இதுவரை அரசுப் பள்ளிகளின் மீதிருந்த பிம்பம் தகர்க்கப்பட்டு புதியதொரு கோணத்தில் தகவல்களை அலசி ஆவணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தேர்வு என்ன செய்யும்? வடிகட்டும். மேலோட்டமாய்ப் பார்த்தால் எல்லாம் சரிதான். தேர்வே இல்லாத பள்ளிக்கூடத்தைக் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? ஆண்டாண்டுகாலமாய் மாணவர்களும் ஆசிரியர்களும் அதற்குத்தானே பழக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வுதானே ஒரு மாணவனுக்கான முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியும் என்ற கேள்விக்கு அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதேசமயம், திடீறென்று மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்று தொடர்ந்து மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் தேர்வு முறை ஏற்படுத்தும் விளைவுகளையும் அவரது பாணியிலேயே சொல்லியிருப்பது சிறப்பு.
அதுமட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் இருந்துவரும் ”தொடர் மற்றும் முழுமதிப்பீடு” என்ற பெயரில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதால் என்ன நிகழும் என்ற கேள்வி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

தேர்வுஇல்லாத கல்விமுறைக்கு மாற்று என்ன என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களை வாசித்து எளிதாகப் புரிந்துகொள்ளமுடிந்தாலும், ஏராளமான பதிவேடுகளை பராமரித்தே சலித்துப் போகும் தருவாயில் அசஸ்மெண்ட் என்பது அட்ஜெஸ்ட்மெண்ட்டாக மாறிவிடுமல்லவா? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை.

ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர்கள் மட்டுமே பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் அதைத்தாண்டி இன்றைய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை இதைவிட எளிமையாக யாரும் படம்பிடித்துக் காட்டமுடியாது. இரண்டு ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை கற்பிக்க சாத்தியம் உண்டா என்ற கேள்வி கடைசிவரை உறுத்திக்கொண்டே இருக்கிறது எனலாம்.

தூங்குபவரை எழுப்பிவிடலாம். தூங்குபவரைப் போல் நடிப்பவரை ஒருபோதும் எழுப்பிவிடமுடியாது என்ற பலமொழியை நினைவுகூர்வது போலவே இருக்கிறது இன்றைய அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையும் மற்றும் அணுகுமுறையும்.

ஏதோ தீவிரவாதியின் நடவடிக்கையை கண்காணிப்பதுபோல் எல்லா கோணங்களிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மற்றவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மேதாவிகளுக்கு இந்நூல் சொல்லிச்செல்லும் ஆதங்கங்களின் ஒருதுளியேனும் சென்றடையும் என்றே நம்புவோம்.

ஏனென்றால், எத்தனை பேரிடர்கள் வந்தபோதிலும், துவளாத மனோதிடத்துடன், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எப்படியாவது தன்னை நம்பிவரும் குழந்தைகளுக்கு வகுப்பெடுத்துவிட வேண்டும் என்ற கொள்கைப்பிடிபோடு பணியாற்றும் ஆசிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுவதற்காகவே பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

அங்கொன்றும் இங்கொன்றும் தவறிழைக்கும் ஆசிரியர்கள் எப்போதும் விதிவிலக்கு. அவர்ளை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்று சப்பைக்கட்டு கட்டாமல் அவர்களையும் பாரபட்சமில்லாமல் சுட்டிக்காட்டியிருப்பது நன்று.

ஈவு இரக்கமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் குற்றம்குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடிவைத்துத் தேடும் கண்ணோட்டம் எப்போது தீருமோ அப்போதுதான் கல்வித்துறை உருப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதற்காவே இந்நூலின் ஆசிரியரைப் பாராட்டலாம்.

பழைய தீர்வுகாணும் அணுகுமுறை இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தாமல் போகலாம். சிலவேளைகளில் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். அதே சமயம் புதிய தீர்வுகளை முன்வைக்கும்போது அதன் சாதக பாதகங்களையும் உரையாடல்மூலம் அலசி ஆராயவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் உணர்ந்துகொள்ளவேண்டிய தருணத்தில் உள்ளார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது இந்நூல்.

கல்வியில் பின் தங்கியிருக்கும் மற்ற மாநிலங்களைவிட 20 ஆண்டுகள் முன்னேறியிருக்கும் தமிழகத்தின் கல்வி இனிவரும் காலங்களில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். அதற்கான திட்டமிடல் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்து பிறக்கவேண்டும் என்று சொல்வதோடு கடந்துசெல்லாமல். இன்றைய அரசுப்பள்ளிகளின் நிலைப்பாட்டையும், ஆசிரியர்களின் கையறு நிலையையும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரைத் தொகுப்பில் கல்விச்சிக்களை சொல்லும்போதும் தீர்வுகளை முன்வைக்கும்போதும் அறச்சீற்றத்தோடு காத்திரமான சொற்களைப் பிரயோக்கித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர் என்றே தோன்றுகிறது.

இந்நூலை, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்ப்பதைவிட அடுக்கடுக்கான படிநிலையில் உள்ள கல்வி அதிகாரிகளின் கரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டவேண்டும். அப்போதுதான் இதில் குறிப்பிட்டுள்ள எதார்த்தமான கல்விச்சிக்கல்கள் தீர்வை நோக்கி நகரும் என்பது என் கருத்து..

ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்விசார்ந்த பின்புலத்துடன் கூடிய பதிவுகள் தேவைதான் என்றபோதிலும், இன்னும் கொஞ்சம் பதிவுகளை விஸ்தீரணம் செய்திருக்கலாம். ஏனென்றால் கல்விச்சிக்கல்களின் ஆரம்பம் தெரிந்துகொண்டால்மட்டுமே அதற்கான தீர்வுகளை நோக்கி நகரமுடியும். மேலும், புதிதுபுதிதாகத் தோன்றும் சிக்கல்கள் சுவாரஸ்யமானவை. அதற்கு ஒவ்வொருவரும் கையாளும் தீர்வுகள் அதைவிட சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்நூலை வாசிக்கும் மற்ற ஆசிரியர்களும் தங்கள் பங்குக்கு அனுபவப்பதிவுகளை முன்வைக்க இந்நூல் தூண்டுகோளாய் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தொடர்ந்து அதிகரிக்கும் கல்விச்சிக்கல்களுக்குத் தீர்வு எட்டப்படுகிறதோ இல்லையோ இந்நூலின் வழியே வலியுறுத்தப்படும் ஆசிரியர்களின் ஆதங்க வார்த்தைகள் அரசாங்கத்தின் காதுகளுக்கு மிகச்சரியாக எட்டும் என்று நம்புவோமாக.

நூலின் பெயர் : கல்விச்சிக்கல்கள் தீர்வை நோக்கி
ஆசிரியர் : சு.உமா மகேஸ்வரி
வெளியீடு : பன்மை வெளி
பக்கங்கள் : 208
விலை : ரூ.165

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *