புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் த.பரசுராமன் அவர்கள் எழுதிய நூல் பாடநூல் அரசியல். புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாழ்ந்திருந்தாலும் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் எழுதுவதில் நீண்ட கால அனுபவ மிக்கவர். மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கிட்டதட்ட தனது நாற்பதாண்டு அனுபவங்களிலிருந்து சில நேரடி அனுபவங்களைக் கொண்டு இந்நூலை வழங்கியுள்ளார்.
அவர், தனது முன்னுரையில், இந்த நூலுக்குப் பாடநூல் அரசியல் என்ற தலைப்பைச் சிறிது தயக்கத்துடன் தான் கொடுத்துள்ளேன். பெயரைப் பார்த்ததும் பாடநூலில் இடம்பெறும் கருத்துகள் வெளிப்படுத்தும் அரசியல் குறித்த நூல் எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். அவ்வாறு பார்க்கவும் இயலும். ஆனால் இந்த நூலில் பாடநூல் எழுதிய மனிதர்கள் தனியாகவோ குழுவாகவோ புரிந்த அரசியல் மட்டுமே பேசப்பட்டுள்ளது என்கிறார். ஆக மிக முக்கியமானதொரு பணியில் எந்த அளவிற்குச் சிறுபிள்ளைத்தனமாகவும் குறுகிய புத்தியுடனும் சிலர் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை இவரது அனுபவங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அவருடைய அனுபவத்தில் பாடநூல் உருவாக்கத்தில் பெரும்பாலும் ஆளுங்கட்சி தலையீடுகள் குறைவாகவே இருக்கிறது. பாடநூல் குழுவினர், கல்வித்துறை அலுவலர்கள் தங்கள் விசுவாசத்தின் வெளிப்பாடாகத்தான் ஆட்சியாளர்களை மகிழ்விக்கவும் குளிர்விக்கவுமான வாய்ப்பாகப் பயன்படுத்தி சில பாடங்களை நுழைப்பதும் நீக்குவதுமான வேலைகளைச் செய்கிறார்கள்….
அமைச்சருக்குத் தொடர்புடையவர்கள், உயர் அலுவலர்களுக்குத் தொடர்புடையவர்கள் மற்றும் பாடநூல் உருவாக்கப்பணி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் இருப்பவர்கள். இவர்கள் தான் மிக நீண்ட காலமாக ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேறு யாரையும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே அனுமதிப்பதில்லை. அப்படியே வந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது. அப்படியே மீறினால் மரபு என்ற பெயரில் அமுக்கி வைப்பது….
ஒரே நபருடைய பல்வேறு படைப்புகள் ஒன்றிரண்டு வகுப்புகளைத் தவிர எல்லா வகுப்புகளிலும் இடம்பெறச் செய்வது, வெவ்வேறு வகுப்பு பாடநூல் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்குள் பேசி வைத்து தங்கள் படைப்புகளையே கைமாற்றிக் கொண்டு பாடநூலில் நுழைப்பது..
எது நல்ல பள்ளி – த. பரசுராமன் – Manimaran's Blog
ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பினைப் பயன்படுத்தி தன் மனைவி பெயரில், மருமகன் (கணித ஆசிரியர்) பெயரில் தமிழ்ப்பாடலில் கதை, பாட்டுகளை எழுதி பாடநூலில் வைப்பது..
உயர் பதவிகளில் இருப்பவர்களின் படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியிடுவது.. சாதிய அமைப்புகளின் நெருக்குதலுக்கு ஆளாகிப் படைப்புகளைச் சேர்ப்பது, நீக்குவது.. எனப் பலவிதமான பிரச்சனைகளை முன்வைக்கிறார்.
சிலர் கடைசி வரை சரி சரி என்று கூறிவிட்டு, அச்சுக்குச் செல்லும் முன் குழுவினருக்கே தெரியாமல் பாடங்களையும் கதைகளையும் நீக்கி, சேர்த்து, இறுதிப்படுத்தி குழுவினருடன் கலந்து பேசாமலே அச்சுக்கு அனுப்புவது. தலைநகருக்கு அருகில் இருப்பவர்கள் இப்படித்தான் அச்சுக்குச் செல்லும்வரை உடனிருந்து தங்கள் கைவரிசைகளைக் காட்டுகின்றனர்.
அதேபோல ஒருங்கிணைப்பாளர், மேலாய்வாளர், பாடநூல் ஆசிரியர்கள் யார் பெயரை மேலே போடுவது, யார் பெயரைக் கீழே போடுவது என்கிற சர்ச்சையில் பல பணிகள் தொய்வான, கிடப்பில் போடப்பட்ட சம்பவங்களையும் கூறுகிறார். கேரளாவில் யாருடைய பெயர்களும் வெளியிடுவதில்லையாம்.
ஒரு முறை, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப்பாடநூல் தயாரிப்பிற்கு வந்திருந்த சில ஆசிரியர்களுக்குத் தமிழில் பிழையின்றி எழுதவும் தெரியவில்லை. சொல்லக் கேட்டு எழுதவும் தெரியவில்லை. பாவம் அந்த ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் என்று வருந்துகிறார்.
இதில் நான் முனைவர், நான் பேராசிரியர், நான் பட்டதாரி, நான் நிரந்தரம், நீ தற்காலிகம் என்கிற பஞ்சாயத்துகள் ஒருபுறம். சிலருக்குப் பள்ளிக்கல்வியில் அனுபவமில்லை என்றாலும் மற்றவர்களுடன் இணைந்து செழுமைப்படுத்துவதற்கு உதவியுள்ளனர். சிலர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக,  உள்ளதையும் கெடுத்து நாசமாக்குவதையும் செய்திருக்கிறார்கள்..
கர்நாடகத்தில் தமிழ்ப் பாடநூல் எழுதும்போது முதல் வகுப்பு குழந்தைகளுக்குத் தெரிந்த வார்த்தைகளிலிருந்து தொடங்க வேண்டும். படம் வரைய வாய்ப்புள்ள வார்த்தைகளில் முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று குழு முடிவு செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவரைப் பாப்பா என்றுதான் கர்நாடகத்தில் அழைப்போம். எனவே அந்த வார்த்தை வேண்டாம் என்கிறார்கள். பொம்மை – எஸ்.ஆர்.பொம்மை முதலமைச்சர், எனவே அந்த வார்த்தையையும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்..
தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் ...
கோலார் தங்கவயல் அருகிலிருந்து வந்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர், கரும்பலகையில் எழுதிப்போட்டு விளக்கும் விதமான பயிற்சிகளை வைக்க வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறார். திரும்பி கரும்பலகையில் எழுதினால் ஆசிரியர் பார்க்காத தருணத்தில் குழந்தைகள் பேசுவார்கள், சேட்டை செய்வார்கள், அதனால் என் வேலையே போய்விடும் என்கிறார். விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர் இதுவரை கரும்பலகையைப் பயன்படுத்தியதே இல்லை.
கேரளாவில் தமிழ்ப்பாடநூல் உருவாக்கத்தின் போது நடந்த சுவையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.. சரியான விகிதத்தில் பாடநூல் குழு அமைக்கப்பட்டுள்ளது.. கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து தமிழாசிரியர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர்.. குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும் வார்த்தைகள் பட்டியலிடப்பட்டு குழுவில் விவாதிக்கப்படுகிறது.. பாலக்காடு கோவைத் தமிழாகவும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தமிழாகவும் இடுக்கி மதுரைத் தமிழாகவும் இருக்கிறது..  ஒவ்வொரு பகுதியிலும் சில வார்த்தைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்கள்… சாடு, தடி உள்ளிட்ட சொற்கள் விவாதப் பொருளாகியதைக் குறிப்பிட்டுள்ளார்..
இந்த நூலின் ஆசிரியரே அந்தமானிலிருந்து டெல்லிக்குச் சுற்றுலா போவதாக ஒரு பாடம் எழுதியதையும் அவரே பார்க்காத குதுப்மினார், டெல்லி விமான நிலையத்தைப்பற்றியெல்லாம் பாடத்தில் எழுதியதையும் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் பணியாற்றிய மூன்று, நான்கு மாநிலங்களில் கேரளம் மிகச்சிறப்பாகச் செயல்படுவதாகப் பகிர்ந்துள்ளார். பாடநூல் உருவாக்கப் பணிமனைகள் தொடர்ந்து நடைபெறுவது, பங்கேற்பாளர்களுக்கு உரியத் தங்கும் வசதிகள், மதிப்பூதியம் வழங்குவது, பாடநூல் உருவாக்கக் குழு ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியே எழுதினாலும் குழுவில் வைத்து விவாதிப்பது, அந்தந்த வகுப்பு, வயதுக் குழந்தைகளுக்கு ஏற்றவரையில் மாற்றியமைக்கும் வரையில் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவது எனச் சிறப்பாகச் செயல்படுவதாகக் கேரளத்தைப் பாராட்டியுள்ளார்.
குழுவில் இயங்குவது, குழுவில் மற்றவர்களின் கருத்தை உள்வாங்குவது, சரியான காரணங்கள் இருப்பின் தாங்கள் எழுதிய பாடத்தைத் தயங்காமல் திருத்தி எழுதுவது, குழந்தைகள் மனதில் கொண்டு, அவர்களுக்கு ஏற்ற, பொருத்தமான பாடத்தை, நூலை உருவாக்கும் வரை குன்றாத ஆர்வத்துடன் உழைப்பது மிக அவசியம். இந்த உணர்வும் நிதானமும் பொறுமையும் இல்லாத ஆசிரியர்கள் அத்தகைய பணியில் ஈடுபடுவது அவர்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அதே போல அந்தப் பணியில் முன் அனுபவம் மிக்கவர்கள் புதியவர்களின் ஆர்வத்தையும் புதுமையான சிந்தனைகளையும் மனமுவந்து ஆதரிப்பவர்களாக, அவர்களை வளர்த்தெடுப்பவர்களாக இருக்க வேண்டும்…
கல்வியில் அனைவராலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது பாடநூல் தான். ஆனால் அது பாடம் கற்பிப்பதற்கான பல்வேறு கருவிகளில் ஒன்று மட்டுமே. ஆனால் அதுவே பிரதானமாக இருக்கிறது. பாடநூல் மட்டுமின்றி அதற்கு அடிப்படையாக இருக்கிற கலைத்திட்டம், பாடத்திட்டம் குறித்தும் கூடப் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் யாருமே கவனத்தில் கொள்வதில்லை. இது மாற வேண்டும்..
யாரையும் இழிவுபடுத்த வேண்டும் எனும் நோக்கில் சொல்லப்படவில்லை. பாடநூல் எழுதுவோரும் பாடநூல் எழுதுவிப்போரும் இவற்றைப் பாடமாகக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டுள்ளன. அதே சமயம் பொது வாசகர்களும், தாங்கள் கடந்து வந்த, தங்கள் குழந்தைகளும் தம்பி தங்கைகளும் கற்கின்ற கல்வியின் முக்கியக் கூறான பாடநூல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை அறியவும் இயன்றால் அவை குறித்து விமர்சிக்கவும் பயன்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
1,6,9-ம் வகுப்பு புதிய பாடப் ...
இந்நூல் கடந்த 2009ல் வெளியாகியுள்ளது.. 2015 அக்டோபர் மாதம் இந்நூலாசிரியர் இறந்து விட்டார்.. முன்பு அப்படி இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் ஏராளமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அல்லது அதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன அனைவரும் நம்புகிறோம்.. கொஞ்சம் நடந்தும் இருக்கிறது. என்றாலும் இன்னும் மாற்றுவதற்கு நிறைய இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு நான் சில உதாரணங்களை உங்களுக்குச் சொல்கிறேன்..
4ஆம் வகுப்பில் உப்பு மூட்டை சுமந்துவரும் கழுதை, ஆற்றின் குறுக்கே இறங்கி வரும்போது எடை தாங்காமல் உப்பு மூட்டையைத் தண்ணீரில் நனைத்துவிடும். எஜமானன் கழுதை ஏமாற்றியதாய் நினைத்து அடுத்த முறை பஞ்சு மூட்டையை வைத்துவிடுவார். நான் கேள்வி எழுப்பினேன். இந்த பாடம் வைக்க வேண்டாம். விலங்குகளைத் துன்புறுத்துவதாக உள்ளது. எஜமானன் கழுதையின் நிலை அறிந்து எடையை வைத்திருக்க வேண்டும். கூடுதல் எடையால் தான் கழுதை அப்படிச் செய்தது. இதில் கொடுமையானவன் எஜமானன்தான் என்றேன். அதற்கு எங்களது ஒருங்கிணைப்பாளர் சொன்னார் : இயக்குநர்க்குப் பிடித்திருக்கிறது… வேண்டுமானால் நீ அவரிடம் பேசிக்கொள்..
மனுநீதிச் சோழன் கதையை உரையாடலாக வைத்தார்கள். அதில் பசுவினால் அந்த அரசர் மகன் இறப்பது பலிக்குப் பலியாக எனக்குப் பட்டது. அதுவும் மனு என்ற பேரை நாம் இன்னும் எடுத்துச் செல்ல வேண்டுமா.. பலருக்கு இது பிடிக்காது. எல்லாருக்கும் இந்த கதை தெரியும். தவிர்த்திடலாம் என்றேன், வெறுப்பாய்ப் பார்த்தார் ஒருங்கிணைப்பாளர்.
தமிழில் பெரியார் குறித்து எங்கேயும் இல்லை… சரி மற்ற தலைவர்கள் குறித்து அவர்களது உயர்வான சமூக உணர்வு, சமூகப்பணி குறித்து ஒரு பாடம் வைக்கலாம் என்றேன்.. தேவையில்லை என்று சாதியின் பெயரால் ஒதுக்கிவிட்டனர். 5 ஆம் வகுப்பில் அறிவியல் தமிழ் கருப்பொருளைக் கொண்டு பாடல், உரையாடல், துணைப்பாடம் வைக்க எண்ணினோம். அதில் ஜி.டி.நாயுடு குறித்து இளமைக்காலம், அவரின் முயற்சிகள் குறித்து கொஞ்சம் எழுதித் தந்தேன். நாயுடு என்ற பெயருக்காக அவரைத் தூக்கி விட்டார்கள்.. சாதி, மத பேதங்கள், மூடநம்பிக்கைகளுக்கு மாற்றாக மதநல்லிணக்கம், அறிவியல் விழிப்புணர்வைத் துவக்க நிலையில் எங்காவது துவங்க வேண்டும் என்றேன். முடியவில்லை..
நாங்கள் ஒரு 10 பேர் மட்டுமே கோடைவிடுமுறையில் 3 முதல் 5 வகுப்புகளுக்கும் இரண்டு, மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்களை இறுதிப்படுத்தினோம். இருப்பதிலே உச்சக்கட்ட அதிர்ச்சி அது.
பயிற்சி கட்டகம் தயாரிப்பு குழுவில் இடம்பெறும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள்.. நிறையவே பார்த்திருக்கிறேன். முன்னரே பெரும்பாலான குறிப்புகள் முடிக்கப்பட்டு விடும். சடங்கு போலத் தயாரிப்பு கூட்டம் நடைபெறும். “சார் எல்லாம் தயாராகியிருக்கும்.. பேருக்கு நம்மல கூப்பிட்ருக்காய்ங்க” என்று கடுப்பானார் அங்கு வந்திருந்த இன்னொரு நண்பர்.. அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. சென்னை மற்றும் அதற்கு அருகில் உள்ள மாவட்டங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். குறிப்பாக விரிவுரையாளர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செல்வாக்கு செலுத்தும் ஆசிரியர்கள்…
இவையெல்லாம் தற்போதும் இதுபோன்ற பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் இளம் ஆசிரியர்கள் பலரின் குமுறல்கள்.. இனி பாடநூல்களிலிருந்து சில உதாரணங்களைப் பார்க்கலாம்..
கதை-திரைக்கதை-உரையாடல்: இலவச ...
பதினோராம் வகுப்பு, வரலாறு, தொகுதி 1-ஐ எடுத்துப் பாருங்கள். அந்த நூல் உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள், பாடக்குழுத் தலைவர், பாடக்குழு இணைத்தலைவர், மேலாய்வாளர் குழு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர், பாடநூல் ஆசிரியர்கள், உள்ளடக்கத்திற்கு உதவியவர்கள் என இருபது முதல் இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். இதில் பாடம் எழுதியவர்களில் ஒருவர் கூட முதுகலை ஆசிரியர் கிடையாது. ஆசிரியரே கிடையாது. எல்லாரும் கல்லூரிப் பேராசிரியர்கள். ஒரே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் இருக்கிறார். அவரும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர். மற்றவர்கள் மெட்ரிக், தனியார்ப் பள்ளி. மேல்நிலை முதலாம் ஆண்டு பாடநூல் எழுதுவதற்கான  குழுவில் முதுகலை வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூட இல்லை..
ஆறாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாடநூல் ஆசிரியர்கள் மூவரில் இருவர் இடைநிலை ஆசிரியர்கள். ஒருவர் மெட்ரிக் பள்ளி, ஒருவர் கேந்திரிய வித்தியாலயா. ஒருவர் மட்டும் அரசுப்பள்ளி..
ஐந்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடநூலாசிரியர்கள் 22 பேரில் 3 பேர் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள்.
முதல் வகுப்பு சூழ்நிலையியல் பாடநூல் ஆசிரியர்கள் பதினைந்து பேரில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள்…
மேல் நிலை வகுப்புகளில் பேராசிரியர்களும் தொடக்கநிலை வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்களும் பாடநூல் எழுதி என்ன நட்டமாகி விட்டது என்று கேட்கலாம். அந்தந்த வகுப்பு, அந்தந்த வயதுக் குழந்தைகளைக் கையாளக் கூடிய ஆசிரியர்கள் பாடநூலை உருவாக்கும் போது இன்னும் சிறப்பாகக் குழந்தைகளின் உளவியல் அறிந்து, கற்றல் கற்பித்தலில் அவர்களது சிரமங்களை உணர்ந்து குழந்தைகளுக்கு இனிமையான பாடநூல்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்குமே என்பது தான் விசயம்.
நீண்ட காலம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரை முதலாம் வகுப்பு எடுக்கச் சொல்லிப் பாருங்கள்.. இரண்டுமே தொடக்கநிலை வகுப்புகள் தான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல், அவரால் அவ்வளவு எளிதாக, அந்தக் குழந்தைகளைக் கையாள முடியாது. அதே போல, சிறிய வகுப்புகளைக் கையாண்ட ஒரு ஆசிரியரை, அதற்கு மேல் உள்ள வகுப்புக் குழந்தைகளைக் கையாளும் வாய்ப்புக் கொடுக்கும்போது அவர் ஓரளவிற்குச் சமாளித்து விடக்கூடும். அவர் தெரிந்ததிலிருந்து தெரியாதது, புரிந்ததிலிருந்து புரியாதது, எளிமையிலிருந்து கடினம் எனக் குழந்தைகளின் மனநிலையிலிருந்து பாடத்தைக் கையாள்வார். ஏனெனில், இங்குப் பாடம், வகுப்பு, கற்றல் கற்பித்தல் எல்லாம் மனநிலை சார்ந்தது. குழந்தைகள், ஆசிரியர்களின் உளவியல் சார்ந்தது. வகுப்பு மாறுவது என்பது வெறுமனே கட்டிடம் மட்டும் மாறுவது அல்ல.. மனநிலை மாற வேண்டும்.. ஆசிரியரின் வயது, அனுபவம், அறிவாளிப் பிம்பம் எல்லாம் குழந்தைகளின் மனநிலை மற்றும் வகுப்பறைச் சூழலுக்கேற்ப இறங்க வேண்டும். ஏற வேண்டும்.
எனவே, இன்னும் சிறப்பான பாடநூல்களை உருவாக்கும் இந்த பயணத்தில் படிப்பினைகளை மறக்காமல் முன்னேற வேண்டியது அவசியம்…
 
-தேனி சுந்தர்
One thought on “ நூல் அறிமுகம்: பாடநூல் அரசியல் – தேனி சுந்தர்”
  1. மிகவும் நன்றி..

    ஒவ்வொரு பத்திக்கும் இடைவெளி இருந்தால் வாசிக்க எளிதாக இருக்கும் தோழர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *