(கோவிட்-19 கோரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காலத்தின்போது தலைநகர் தில்லி தங்களை நடத்தும் விதம் ஏமாற்றக்கூடிய விதத்தில் இருப்பதாக, புலம்பெயர் தொழிலாளர்கள் உணர்கிறார்கள். எனவே, இனி திரும்பக்கூடாது என்ற நினைப்புடன் தங்கள் ஊர்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்வது தொடர்கிறது.)

சமூக முடக்கத்தின் மூன்றாவது கட்டம் மே 17 அன்று முடிவடைந்தபோது, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தில்லியின் வீதிகளில் நிராதரவாக, வேலை எதுவும் இல்லாமல், காசு இல்லாமல், பசி-பட்டினியுடன் தவித்துக்கொண்டிருப்பது, தொடர்கிறது. பிரதமரும், முதலமைச்சரும் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசியபோதிலும், அவர்களின் நிலைமை மிகவும் நிலையற்றதாகவே இருக்கிறது. 

மே மாதத்தின் உச்சி வெயிலில், பழைய கிராண்ட் டிரங்க் ரோடில் உச்சி வெயிலைப் பொருட்படுத்தாமல் அல்லது தங்களின் நிலைமையின் நம்பிக்கையற்ற தன்மையில் நடந்து சென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குழு ஒன்றை ப்ரண்ட்லைன் பின்தொடர்ந்தது. மேம்பாலத்தின் அருகில் குண்டாந்தடிகளுடன் போலீசார் எவரும் அவர்களைப் பின்தொடராமல் இருந்ததால், அங்கே அவர்கள் ஒருசில கணங்கள் ஓய்வுக்காக நின்றார்கள். தங்கள் தலைகளிலிருந்த சுமைகளைக் களைப்புடன் இறக்கி வைத்துவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்த தண்ணீரைக் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள். சிறிது ஆரம்ப தயக்கத்திற்குப்பின், அந்தக் குழுவில் இருந்த பெண்கள் எங்களிடம் வாயைத் திறந்தார்கள்.

அவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி நகரைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு தில்லியிலிருந்து கால்நடையாகவே நடந்து செல்வது அவர்களுக்கு இது இரண்டாவது தடவையாகும். இரண்டு தடவைகள், அவர்கள் மாநிலத்தின் எல்லை வரை சென்றுவிட்டு, மாநில எல்லையில் போலீசார் திருப்பி அனுப்பியதால் திரும்ப வந்துள்ளார்கள். வட மேற்கு தில்லியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவந்த அவர்களுக்கு, தொழிற்சாலை நிர்வாகம் உணவு வழங்கி வந்ததை நிறுத்திவிட்டது. கைகளில் இருந்த காசும் காலியாகிவிட்டது. உயிர்வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, எப்படியாவது தங்கள் கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்பதேயாகும். 

எப்படிப் போக வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியுமா? 

தெரியாது. போகிறபோது எதிரில் வருகிறவர்களிடம் கேட்டுக்கொண்டே செல்வோம், என்று ஒரு பெண்மணி தன் கைகளில் வைத்திருந்த மஞ்சள் வண்ண கையுறைகளை இறுகப்பற்றிக்கொண்டே கூறினார்.      

தில்லியிலிருந்து ரயில்கள் விடப்பட்டிருக்கிறது அவர்களுக்குத் தெரியுமா?

அதுபோன்று நாங்களும் கேள்விப்பட்டோம். ஆனால், போலீசார் ரயில் நிலையத்திலிருந்து எங்களை விரட்டி அடித்தார்கள். அவ்வாறு கூறியதுடன், அவர் டிக்கெட் பதிவு செய்வதற்குத் தேவையான திறன்பேசி (ஸ்மார்ட்போன்) தங்களில் எவரிடமும் கிடையாது என்றும் கூறினார்.  

Run over by train, mowed down by tempo: Perilous roads home for ...

அப்போது மேம்பாலத்திற்குக் கீழ் ஒரு ரயில் சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் அதனைப் பார்த்தார்கள். ஒரு சில நிமிடங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாமா என்று யோசித்துவிட்டு, பின்னர் அதனை விரைவாகவே கைவிட்டுவிட்டார்கள். பின்னர் மீண்டும் அவர்கள் தங்கள் சுமைகளை தங்கள் தலைகளில் வைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஓடத்தொடங்கியுள்ள அதே சமயத்தில், அதற்கு டிக்கெட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்றால் காசும் வேண்டும்,  திறன்பேசியும் வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் எவரிடமும் இவை இரண்டும் இல்லை. மேலும், ரயிலில் ஒரு சீட்டு தேவை என்றால் அதற்கு இவர்கள் தங்கியிருந்த மாநில அரசிடமிருந்தும், இவர்கள் செல்லக்கூடிய சொந்த மாநில அரசிடமிருந்தும் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் இதர பல அனுமதிகளையும் இவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் மிகவும் சிக்கலானவைகளாகும். எனவே, நடந்து போவதையே அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்தள்ளார்கள். 

புலம்பெயர் தொழிலாளர்களுடன் வேலை செய்துவரும் ஒரு தொண்டர் கூறியதாவது: அவர்களிடம் டிக்கெட்டுகள் வாங்கக்கூடிய அளவிற்குப் பணம் இருந்திருக்குமானால், அவர்கள் தில்லியிலேயே தங்கியிருப்பார்கள். தங்களிடம் உள்ள பணத்திலிருந்து உணவு வாங்கி இருப்பார்கள். பலர் டிக்கெட்டுகள் வாங்குவதற்காக, தங்கள் கிராமப் பஞ்சாயத்துக்களிடமிருந்தும், உறவினர்களிடமி ருந்தும்தான் பணம் கடன் வாங்கி இருக்கிறார்கள். வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு இந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. எனவே அவர்கள் அரசாங்கங்களால் அறிவிக்கப்படுபவைகளைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இவற்றின் விளைவாகத்தான், லட்சக்கணக்கானவர்கள் தங்கள் ஊர்களுக்கு  நடந்துபோவதைத் தொடர்கிறார்கள். போகக்கூடாது, தங்க வேண்டும் என்று அரசாங்கங்கள் கட்டாயப்படுத்தியபோதிலும் அதனை மீறித்தான் அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, தில்லியில் சுமார் 38 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தார்கள். 

மே 18 அன்று, நான்காவது சமூக முடக்கத்தின் முதல்நாளன்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பால்லியாவிற்குப் போய்க்கொண்டிருந்த ரயிலில் இருக்கைகள் பெற எப்படியோ டிக்கெட் வாங்கிவிட்ட சில புலம்பெயர் தொழிலாளர்களை ப்ரண்ட்லைன் சார்பில் சந்தித்தோம். 

ஜான்பூரைச் சேர்ந்த ரவீந்தர் குமார், துக்ளகாபாத்தில் வெல்டராகப் பணியாற்றியவர், அரசாங்கத்தின்மீதும், அவருடைய முதலாளி மீதும் மிகவும் சீற்றம் கொண்டிருந்தார். அவர் தெற்கு தில்லி அரசினர் பள்ளிக்கூடத்திற்கு  மூன்று வயதுக் குழந்தையுடனும், தன்னுடைய  குடும்பத்துடனும், தங்களை வரச்சொல்லியிருந்த இடத்திற்கு வாடகை ஆட்டோ ரிக்ஷாவில் போய்ச் சேர்ந்திருந்தார். கடந்த இரண்டு மாதமாக எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டபோது, அவர், எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீங்க? என்று திருப்பி எங்களைக் கேட்டுக்கொண்டே, பேருந்துக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோரைப் பார்த்தார். ரயில் நிலையம் செல்வதற்கான பேருந்துகளுக்காக நின்றிருந்த அவர்கள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்கள். அவர்களில் சிலர் பீகார் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஆனாலும் எப்படியாவது தில்லியை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதில் அவர்கள்  குறியாக இருந்தார்கள். பால்லியா சென்றபின் வேறுவிதமான போக்குவரத்தைத் தேட வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள்.  

தங்கும் இடங்கள் (Shelter Homes)

தில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவருடைய அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால், அம்மையங்களில் உள்ள நிலைமைகள் எப்போதும் நல்லவிதமாக இல்லை. யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்திலிருந்த தங்குமிடத்திற்கு ஒரு தொண்டர் சென்று பார்த்துவிட்டு மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டார். தன்னை யார் எனக் காட்டிக்கொள்ளாது அவர் கூறியதாவது: அதை ஒரு தங்கமிடம் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு சிறை என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் கைதிகளைக் கணக்கிடுவதைப்போல் பெயர் கூப்பிட்டு, கணக்கெடுப்பு எடுக்கப்படும். அங்கிருந்து வெளியே வருவதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது. அங்கே இருந்தவர்கள் மிகவும் பயந்துபோயிருந்தார்கள். போலீசார் வரிசையில் நிற்கச் சொல்லி அடிக்கடி குண்டாந்தடிகளால் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று என்னிடம் ஒரு பெண்மணி கூறினார். உணவு என்ற பெயரில் கொடுக்கப்படும் பருப்பு சாதம் ஏதோ கொடுக்கப்படுகிறது. கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கின்றன. ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அங்கே இருந்தார். எங்களைப்பார்த்ததும் அவர்களில் சிலர், எங்களிடம், எப்படியாவது நாங்கள் எங்கள் ஊர்களுக்குச் செல்ல வேண்டும், என்று கதறினார்கள். காவல் துறையினரும், சிவில் பாதுகாப்பு தொண்டர்களும் இந்த தங்கமிடங்களை காவல் அடைப்பு மையங்கள் போன்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். 

Image

தில்லியில் எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி 

இருக்கின்ற தங்குமிடங்களில் ஒன்று

தங்குமிடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு உளவியல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறினார். அரசாங்கம் அவர்களுக்கு இரு வேளை உணவு அளிப்பதோடு மட்டமல்லாமல், ஏதேனும் சில வேலைகளையோ அலலது நிவாரணப் பணிகளையோ அளிப்பதற்கும் முன்வருவது குறித்து, சிந்தித்திட வேண்டும், என்று அவர் கூறினார். சில தங்குமிடங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர்களே கவனிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இடங்களை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. 

இங்கே அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் சிலருக்கு தில்லியிலேயே வீடுகள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தில்லிக் காவல்துறையினர் அவர்களை தவறாக கொண்டுவந்து இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலைமையை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உஷார்ப்படுத்தியுள்ளபோதிலும், அவர்களைத் திரும்பவும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளே இல்லை. 

மே 1 அன்று, சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 24க்குப்பின் ஒரு மாதம் கழித்து, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசாங்கம், தில்லியில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள்கள் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளது.  இவ்வாறு மிகவும் தாமதமாக, மிகவும் குறைவாக மக்களில் பலருக்குக் கொடுப்பது ஏன் என்று அந்தத் தொண்டர் விளக்கினார்: ஒருவர் தனக்கு ரேஷன் பொருள்கள் வேண்டும் என்றால் அவர் தன்னிடம் உள்ள திறன்பேசி (ஸ்மார்ட்போன்) மூலமாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக விண்ணப்பித்த பல புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் விண்ணப்பித்து பல வாரங்கள்வரை எதுவும் பெறவில்லை. ஒருவர் சென்ற மாதம் விண்ணப்பித்ததற்கு இப்போது அவருக்குப் பொருள்கள் வந்திருக்கின்றன.

மாநில அரசாங்கம் பல உணவு நிவாரண மையங்களை அமைத்திருக்கிறது. ஆனாலும் திட்டமிடலில் பிழைகள். தேவை அதிகமாக இருக்கிறது, பொருள்வரத்தோ குறைவாக இருக்கிறது. உணவு மையங்களுக்குப் போவதே பலருக்கு ஒரு சவாலாக இருக்கிறது. போகும் வழியில் போலீசாரின் கெடுபிடி. குறிப்பாக முஸ்லீம்களாக இருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. இது அவர்களின் புனித ரமலான் மாதம். புலம் பெயர்ந்துள்ளவர்களில் பலரும் உள்ளூர் மக்களும் முஸ்லீம்களாவார்கள். அவர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் தேவை., என்று தலைநகரின் பல்வேறு பிரிவினரிடையே அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த ஒரு தொண்டர் இவ்வாறு கூறினார். 

சென்ற பிப்ரவரியின் கடைசியில் வட கிழக்கு தில்லியில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்ததற்குப் பின்னர், அந்த சமயத்தில் போலீசாரின் அத்துமீறல்களை அனுபவித்த முஸ்லீம்கள் ஆடிப்போய் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள் அவர்கள் போலீசாரிடம் செல்வதற்கே பயப்படுகிறார்கள். ஆனால் அவர்களிடம்தான் தில்லியின் நிவாரணப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் பெரும்பாலானவை  ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிவப்பு மண்டலங்களில் அவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே போலீசாரின் மூலமாகத்தான் அத்தியாவசியப் பணிகள் நடைபெற முடியும். முஸ்லீம் குடியிருப்புவாசிகள் போலீசாரைத் தங்கள் வீட்டு வாசல்களுக்கு அழைத்திடத் தயங்குகின்றார்கள்.  

In Photos: Migrant Workers Across India Journey Back Home

கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள தன் அமைப்புகளை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருப்பதால், இதற்குமுன் இவ்வாறான பணிகளில்  ஈடுபடாத அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் பலர், இப்பணிகளைச் செய்திட இப்போது முன்வந்து, தேவைப்படுவோருக்கு ரேஷன் பொருள்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வடகிழக்கு தில்லி வன்முறைக்குப் பின்னர் பல அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் வேறு இடங்களில் நிவாரணப் பணிகளுடன் தொடர்ந்தன. ப்ரண்ட்லைனிடம் தொலைபேசி மூலமாகப் பேசிய ஒரு தொண்டர், பலர் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் எப்படி என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை, என்று கூறினார். 

சமூக முடக்கத்தால் கடந்த 21 நாட்களாக வீட்டிலேயே தங்கியிருந்தவர்கள், தங்களுடைய முதலாளிகள் தங்களுக்கு ஊதியம் எதுவும் தராததாலும், தாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர்கள் வாடகை கேட்டு நச்சரிப்பதாலும், தங்கள் கிராமங்களுக்கே சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். 

ஒன்று, அரசாங்கம் அவர்களைத் திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது தொழிற்சாலைகளைத் திறந்திட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் அவர்களால் வருமானம் ஈட்டி, வாடகையை செலுத்த முடியும். அதன்பின்னர்தான் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும், என்று அவர் சொன்னார். இவ்வாறு உதவி செய்துகொண்டிருப்பவர்கள் தங்களிடம் உள்ள நிவாரணப் பொருள்கள் முழுமையாகத் தீர்ந்தபின், மக்கள் அரசாங்கத்தைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

தில்லி, சமூக முடக்கத்தின் நான்காவது கட்டத்திற்குள் நுழைந்திருப்பதால், கேஜரிவால் அனைத்து அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது தொழிலாளர்களுக்கு ஏதோ கொஞ்சம் தீர்வினை அளிக்கக்கூடும் என்றபோதிலும், புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கே சென்றுவிடத்தான் இப்போதும் விரும்புகிறார்கள் என்பதே உண்மையாகும். ப்ரண்ட்லைனுடன் பேசிய தொண்டர்கள் பலர், நிலைமைகள் முற்றிலுமாகச் சரியானபின்பு மீண்டும் தாங்கள் திரும்ப வரவேண்டியிருக்கும் என்று உணர்ந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இப்போதுள்ள நிலையில், தில்லி மாநகரம் தங்களை கைவிட்டுவிட்டதான உணர்வுடன் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு தொண்டர், கிராமங்களில் நிலைமைகள் மோசமாக இருந்ததால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். இப்போது தங்கள் வீடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு கிராமங்களில் அப்படி ஒன்றும் சிறப்பான வாழ்க்கை எதுவும் காத்துக்கொண்டிருக்கவில்லை, என்று கூறினார்.

Coronavirus Lockdown: Over 5 Lakh Suggestions On Delhi Lockdown ...

சில அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் மீண்டும் இயங்கத் தொடங்குவதால், தொற்று வேகமாகப் பரவுமோ என்கிற பயமும் இருக்கிறது. தில்லியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. (மே 17 தேதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,054 ஆகும்.) கோவிட்-19ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கையை தில்லி அரசாங்கம் அடக்கி வாசிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இறந்தோர் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 160ஆக இருக்கக்கூடிய அதே சமயத்தில், கோவிட்-19 நோயாளிகளாக இருந்து இறந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டும் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்ற முறையிலும் அடக்கம் செய்யவும், எரிக்கவும் கல்லறைகளுக்கும், மயானங்களுக்கும் வந்துள்ள சடலங்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களுக்கு, கோவிட்-19 தொற்று இருந்ததா என்று பரிசோதனை செய்திட தில்லி அரசாங்கம் முன்வரவில்லை. இதில் எவ்விதமான அறிவியல் உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இப்போது,  கொரானா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்கான ஒரே வழி, அனைவரையும் சோதனைகளுக்கு உள்ளாக்கி, கொரானா வைரஸ் தொற்று இருக்கிறதா எனக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதேயாகும்.           

  (நன்றி: Frontline, June 5, 2020)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *