நாட்டைச் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுதும் மார்ச் 15, 16 தேதிகளில் சுமார் பத்து லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அடுத்து மார்ச் 17 அன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அடுத்து மார்ச் 18 அன்று ஆயுள் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவ்வாறு ஊழியர்கள் அலை அலையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம், மத்திய அரசாங்கம், பிப்ரவரி 1 அன்று அறிவித்த பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், அதில் நிதித்துறையையும் சேர்த்திருப்பதுமேயாகும். இந்த நிதியாண்டிலேயே பொதுத்துறை வங்கிகளில் இரண்டு வங்கிகள் தனியாரிடம் விற்கப்படும் என்று நிதியமைச்சர் (தன்னுடைய பட்ஜெட் உரையில் முதன்முதலாக நேரடியாகவே) அறிவித்திருந்தார். மேலும், நான்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று, தனியாரிடம் விற்கப்படும் என்றும் மேலும் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் அரசின் பங்குகளாக இருப்பதில் ஒரு பகுதி விற்கப்படும் என்றும் அறிவித்தார். இத்துடன், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்படும் என்றும் இதற்கான சட்டமுன்வடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. (18ஆம் தேதியன்ற மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது).

இந்நடவடிக்கைகள் மூலம், நிதித்துறையில் தாராளமயம் ஒரு மோசமான எல்லைவரை சென்றிருக்கிறது. 1991இல் தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் துவங்கியபின்னர், நிதித்துறையையும் அதற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதே அதன் முக்கியமான குறிக்கோளாக இருந்து வந்தது. நவீன தாராளமயக் கொள்கையைப் பின்பற்றும் ஆட்சிக்கு, வங்கிகள் பொதுத்துறையின் கீழ் இயங்குவது ஏற்க முடியாத ஒன்றாகும். இந்தியாவில், 1969இல் 14 பெரிய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இது வங்கிகளின் வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது, அது கிராமப் பகுதிகளுக்கும் பரவியது. வங்கி தேசியமயம் என்பது உண்மையில் கடன் வழங்குவதை ஜனநாயகப்படுத்தியதாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில், அது விவசாயத் துறையிலும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளிலும் கடன்கள் அளித்து முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை விரிவு படுத்தியது. 1991இலிருந்தே, சர்வதேச நிதி மூலதனம் தங்களுக்கு வங்கித்துறையைத் திறந்துவிட வேண்டும் என்று தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது.

அவர்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்கத் துவங்கினார்கள். தனியார் வங்கிகள் திறக்கப்பட அனுமதித்தார்கள். அந்நிய வங்கிகள் செயல்படவும் அனுமதித்தார்கள். ஐமுகூ-1 மற்றும் 2 அரசாங்கங்களின் ஆட்சிக் காலம் முழுவதும், இந்தத் திசைவழியில் ஆட்சியாளர்கள் எடுத்து வைத்த ஒவ்வோராடியும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள், தொழிலாளர் வர்க்க இயக்கம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

இத்தகைய எதிர்ப்பின் காரணமாகத்தான், 2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்திலும்கூட இந்திய நிதி அமைப்புமுறையைப் பாதுகாக்க முடிந்தது. இதேபோன்று ஐமுகூ-2 ஆட்சிக் காலத்தின்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் அனுமதித்திடுவதற்கான நடைமுறை துவங்கப்பட்டது. அப்போது இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இதையும் ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட முடியவில்லை. எனினும், 1999இல் வாஜ்பாயி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதம் திணிக்கப்பட்டத. இது 2015இல் மோடி அரசாங்கத்தால் 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கும் கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்தாததன் காரணமாக, “செயல்படா சொத்துக்கள் (“non-performing assets) என்ற பெயரில் வராக்கடன்களின் தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 2021இல் வங்கிகளின் மொத்த சொத்துக்கள் மதிப்பில் இவ்வாறான செயல்படா சொத்துக்கள் மதிப்பு 13.5 சதவீதத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வங்கிகளில் வராக்கடன்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? அரசின் கொள்கைகள்தான் காரணமாகும். ஐமுகூ காலத்திலேயே இது துவங்கிவிட்டது. இப்போது மோடி அரசாங்கத்தின் காலத்தில் அது பல்கிப் பெருகி இருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், உள்கட்டமைப்புத் துறைக்கான முதலீடு என்ற பெயரில், கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு கடன்கள் அளிக்கப்பட வற்புறுத்தப்படுகின்றன. இவ்வாறு வங்கிகள் அளித்த வராக்கடன்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு, கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டவைகளாகும்.

மோடி அரசாங்கம் 2014க்குப் பின் இதுவரையிலும் சுமார் 6.6 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கிகளைத் தேசியமயமாக்குவது என்பது, இதேபோன்று வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தராத இதே கார்ப்பரேட்டுகள் இவ்வாறு தனியார்மயத்தின் மூலமாக வங்கிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மிகவும் வசதியான முறையில் அவற்றைச் சூறையாடுவதற்கு வசதி செய்து தரப்படுகிறது.

மோடி அரசாங்கம் வங்கிகளையும், இன்சூரன்ஸ் துறைகளையும் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட மிகவும் பேராவலுடன் இருப்பது பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய ஆட்சியாளர்கள் வங்கிகளையும் நிதித்துறையையும் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கைகழுவி விட வேண்டும் என்றும் சர்வதேச நிதி மூலதனமும், அமெரிக்காவும் தொடர்ந்து கூறிவந்த கட்டளைகளுக்கு, மிகவும் அவமானகரமான முறையில் சரண் அடைந்து, நரேந்திர மோடி அரசாங்கம், இவ்வாறு தனியார்மய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இதுநாள் வரையிலும் சமூக மற்றும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்த மக்களின் சேமிப்புகளும், நாட்டின் பொதுச் சொத்துக்களும் நாட்டிலுள்ள ஒருசில தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. ஒருசில மாதங்களுக்கு முன்புதான் இந்திய ரிசர்வ் வங்கியின் குழு ஒன்று, கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

வங்கிகளிலும் இன்சூரன்ஸ் துறைகளிலும் செயல்பட்டு வரும் சங்கங்கள் இவை தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகக் கடந்த முப்பதாண்டுகளாக வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தி இருக்கின்றன, இப்போதும் நடத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய எதிர்ப்பின் காரணமாகத்தான் ஆட்சியாளர்கள் இவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருப்பதை அடுத்து இந்நடவடிக்கைகளை விரைவு படுத்துவதன் காரணமாக இவ்வாறு போராடி வந்த சங்கங்கள், இப்போது மாபெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன.எனவேதான், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இப்போராட்டங்களை தனியார்மயத்திற்கு எதிராகப் போராடிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுடனும் இணைக்கப்பட்டு விரிவானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். மார்ச் 15 அன்று, மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியவற்றின் கீழ் நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் தனியார்மயத்திற்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்துள்ளன. தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம், மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட வேண்டும். இதனை அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக எதிர்க்கட்சிகளும் அரசியல்ரீதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

லட்சக்கணக்கான வங்கி ஊழியர்களும், இன்சூரன்ஸ் ஊழியர்களும், தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், இவ்வாறு தங்களுக்குத் துரோகம் செய்துவரும் பாஜக-விற்கு அரசியல்ரீதியாக மரண அடி கொடுப்பதற்கான போராட்டத்தையும் உத்தரவாதப்படுத்திட வேண்டும். இவ்வாறு போராடிவரும் வங்கி ஊழியர்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களில் ஒருசிலரும் மற்றும் அவர்தம் குடும்பத்தினரும் மோடி குறித்து ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்ட ஆரவாரப் பிரச்சாரங்களில் மயங்கி, 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக-விற்கு வாக்களித்தார்கள். அவர்கள் தங்கள் மாயையிலிருந்து வெளிவர வேண்டும். இப்போது பல மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் எதிர்வருங் காலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் பாஜக-விற்கு எதிராக வாக்களித்திட முன்வர வேண்டும். மற்றவர்களையும் இதற்காக அணிதிரட்டிட வேண்டும்.

பாஜக பின்பற்றிடும் இந்துத்துவா கொள்கை மற்றும் தேசப்பற்று என்பவை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த அளவிற்குப் போலியானவை என்பதையும் பொய்யானவை என்பதையும் தோலுரித்துக்காட்டும் விதத்தில் வலுவானமுறையில் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் மதிப்பிடற்கரிய சொத்துக்களை விற்பதற்கு அனுமதிப்பது நாட்டின் இறையாண்மையை ஆபத்திற்குள்ளாக்கும், நம் பெற்றுள்ள சுதந்திரத்தை சமரசத்திற்குள்ளாக்கும், நாட்டு மக்கள் மீது மேலும் கொடூரமான முறையில் பொருளாதாரச் சுரண்டல் ஏவப்பட இட்டுச் செல்லும். இப்போதுள்ள அரசாங்கமானது ‘சுயசார்பு பாரதம்’ என்று வாய்ச்சவடால் அடித்திடும் அதே சமயத்தில், நாட்டை பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் அந்நிய நிதி முதலீட்டாளர்களுக்குக் கீழ்ப்படிய வைத்திடும் இழிவான நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது.

(மார்ச் 17, 2021)