“விதிகள் மிக எளிமையானவை. அவர்கள் பொய் சொல்கிறர்கள். நமக்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் பொய் சொல்வது நமக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் அவர்களை நம்புவது போல காட்டிக் கொண்டு இருக்கிறோம்”
– எலினா கொரோகோவா

பாவம் திலிப்சிங் மாளவியா. தன்னைப் பற்றி நாட்டின் பிரதமர் பேசுவார் என்றோ, தங்கள் கிராமம் ஒரே நாளில் அவ்வளவு பிரபலம் ஆகுமென்றோ, தன்னைச்சுற்றி அவ்வளவு விவகாரங்கள் நடக்கும் என்றோ கனவிலும் கண்டிருக்க மாட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய கொத்தனார் அவர். ஃபேன், டிவி இல்லாத மிகச் சிறிய வீட்டில் வசித்து வரும் 71 வயது திலிப்சிங்கிற்கு 8 குழந்தைகள். ஐந்து பெண் குழந்தைகளுக்கு எப்படியோ திருமணமாகி விட்டிருந்தது. இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.

‘சுத்த இந்தியா’ (Clean India – Swachh Bharat) திட்டத்தில், கிராமப்புறங்களில் கழிப்பிட வசதி இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்பித்தால், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.12000/- செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேவையான பொருட்களை வாங்கித் தந்தால் போஜ்புரா கிராமத்தில் கழிப்பிடம் கட்டித்தருவதாகச் சொன்னார். அரசாங்கத்திடமிருந்து பணம் வந்த பிறகு அதற்குரிய கூலியை தந்தால் போதும் என்று ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
திலிப் சிங் மாளவியா

இந்திய வரைபடத்தில் புள்ளியிலும் புள்ளியாய் இருக்கக் கூடிய மிக மிகச் சிறிய அந்த கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. நாட்டின் பிரதமர் மோடிக்கு அது பற்றிய தகவல் சத்தமில்லாமல் போய்ச் சேர்ந்தது. மாதந்தோறும் மக்களிடையே பேசும் ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் 2015 டிசம்பர் 27ம் தேதியன்று மோடி திலிப்சிங் பற்றி குறிப்பிட்டார்.
“மத்தியப் பிரதேசத்தில் போஜ்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த திலிப் சிங் மாளவியா ஒரு கொத்தனார். அவருக்கு உயர்ந்த நோக்கம் இருந்தது. தனது கிராமத்தில் கட்டுமானப் பொருட்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு இலவசமாக நான் கழிப்பிடம் கட்டித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 90 நாட்களில் 100 கழிப்பிடங்களை அந்தக் கிராமத்தில் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு சில நேரங்களில் தேசம் குறித்து எதிர்மறையான பார்வைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான திலிப்சிங்குகள் இப்படி தங்கள் சொந்த வழியில் தேசத்துக்கு நல்லது செய்துகொண்டு இருக்கிறார்கள். தேசத்தின் பலமும், நம்பிக்கையும் அவர்களே. அது போன்ற முயற்சிகளே வளர்ச்சிப்பாதையில் தேசத்தை இயல்பாக செலுத்தி விடுகின்றன. எனவே இந்த ‘மான் கீ பாத்’தில் திலிப் சிங்கை நாம் பெருமையோடு நினைவுகூர்வோம்”

போஜ்புரா கிராமம் உடனடியாக தேசத்திற்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஒருமுறை மான் ஒன்றை நாயொன்று கடித்துக் குதறிய போதும் அந்த கிராமம் பத்திரிகைகளில் செய்தியாகி இருந்தது.

இந்தியாவின் பிரதமரே தன் பெயரைக் குறிப்பிட்டது திலிப்சிங்கிற்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த எளிய மனிதர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார். உயர்ந்த இடத்தில் இருக்கும் பிரதமர் என்ன பேசி இருக்க வேண்டும்? ‘தன் கூலியைக் கூட பின்னர் பெற்றுக்கொள்கிறேன் என திலிப்சிங் கழிப்பிடங்கள் கட்டித் தந்திருக்கிறார். கிளீன் இந்தியா திட்டத்தின் படி, புதிதாக கட்டப்பட்ட அந்த கழிப்பிடங்களுக்குரிய பணம், உரியவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும். திலிப்சிங் தனது நியாயமான கூலியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்பதுதானே நேர்மறையான சிந்தனையாக இருக்க முடியும்?

நாளைய தினம் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் இருண்டிருக்கும் தங்கள் காலத்திற்குள் இந்த தேசத்தின் கோடானு கோடி எளிய மனிதர்கள் ஒரு சிறு வெளிச்சத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திலிப்சிங் மாளவியா. தேசம், தியாகம், வளர்ச்சி, போன்ற பெரிய பெரிய வார்த்தைகளால் அவரது நம்பிக்கையைப் பிடுங்கிப் போட்டிருந்தார் மோடி.

அந்த கிராமம் பற்றி ஊடகங்களில் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. ‘போஜ்புராவில் மொத்தமே 53 வீடுகளே இருக்கின்றன. எப்படி 100 கழிப்பிடங்கள் கட்டியிருக்க முடியும்? என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.கே.மிஸ்ரா கேட்டார். “திலிப்சிங் இலவசமாக கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்தார் என்றால் கிளீன் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று?’ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஊடகங்களும் பேச ஆரம்பித்தன.

மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான், “மான் கீ பாத்’ நிகழ்ச்சியை அரசியலாக்குவது காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது என்று கிண்டலடித்து ஒரு ட்வீட் செய்தார். “மக்களோடு அரசை இணைத்துக் கொள்ளும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நம் மக்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் பிரதமர் பேசி இருக்கிறார். அது குறித்தெல்லாம் கேள்விகள் எழுப்புவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என அங்கலாய்த்து இன்னொரு ட்வீட் செய்தார்.

மத்தியப்பிரதேசத்தின் கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராயிருந்த கோபால் பார்கவா, போஜ்புராவிவில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டார். திலிப்சிங்கின் உழைப்புக்கான கூலி குறித்து யாரும் பேசவில்லை. ஆய்வு நடத்தவில்லை. இன்றுவரை கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.

தன்னிடம் கேள்விகள் கேட்ட நிருபர்களிடம், அந்த ஊரில் 23 கழிப்பிடங்களை கட்டியதாகவும், பக்கத்து கிராமங்களில் 20லிருந்து 25 கழிப்பிடங்கள் போலக் கட்டியதாகவும் திலிப்சிங் கூறினார்.

மாளவியாவின் கதை ‘சுத்த இந்தியா’வின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களின் இயக்கம் என்பது மக்களின் தலையில் கை வைப்பது அல்ல. மக்களையே முழுப் பொறுப்பாக்கி விட்டு அரசு வேடிக்கை பார்ப்பதும் அல்ல.

தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததில் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட நாலரை லட்சம் கழிப்பிடங்கள் காணாமல் போயிருந்தன. தேசம் முழுவதும் எத்தனை கோடி கழிப்பிடங்களுக்கு இந்த கதி நேர்ந்திருக்கும் என்று கணக்கிட்டால் ‘சுத்த இந்தியா’வின் லட்சணம் தெரியும். மோடி பிரதமரானதும் உதிர்த்த ‘சுத்த’ பொய் அது. கங்கைக்கரையிலிருந்து அந்தக் கதை ஆரம்பித்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
நமாமி கங்கா திட்டம்

2014 மே 16 அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடி தலைமையில் பிஜேபி வெற்றி பெற்றது. அடுத்த நாள் மே 17 அன்று வக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார். இந்துக்களின் புனித இடத்திலிருந்து தனது ஆட்சி தொடங்குகிறது என்பதற்கான குறியீடு அது. “கங்கைத்தாய் தன்னிடம் படிந்திருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு ஒருவரை எதிர்பார்த்து இருந்தது. அந்தப் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறது” என இந்துக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கங்கையை சுத்தம் செய்யப் போகிறேன் என இருபதாயிரம் கோடி செலவில் ‘நமாமி கங்கா’ என்னும் திட்டத்தை 2014 ஜூனில் அறிவித்தார். அத்தோடு நிற்கவில்லை. 2014 அக்டோபர் 2ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளில், கையில் விளக்குமாறோடு டெல்லியில் காட்சி கொடுத்து ‘நாட்டையே சுத்தம் செய்யப் போகிறேன்’ என ‘சுத்த இந்தியா’ திட்டத்தை மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். முக்கிய பிரபலங்களையெல்லாம் ‘சுத்தமான இந்தியாவின்’தூதர்களாய் நியமித்து தன்னை மேலும் பிரபலமாக்கிக் கொண்டார். ‘இப்படி ஒருவரைத்தான் நாடு இத்தனை காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது’ என ஊடகங்கள் வானுக்கும் பூமிக்கும் குதித்தன.

என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் அரசிடம் இல்லை. ஆலைகளின் கழிவு, நதிகளின் அசுத்தம், மாசுக்கட்டுப்பாடு, சாலை வசதிகள், எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் என ஏராளமான மிக முக்கிய பிரச்சினைகளோடு பின்னிப் பிணைந்ததுதான் ‘சுத்த இந்தியா’. அப்படி எந்த பார்வையும் அரசிடம் இருந்ததாகத் தெரியவில்லை. குடித்து முடித்த வெற்று கோக் பாட்டில்களை என்ன செய்யப் போகிறோம்?’ என்னும் சிறிய யோசனை கூட இல்லை. ஆனால் அதுவே பெரிய பிரச்சினை என்பதுதான் கள நிலவரம். மோடி அறிவித்த‘கிளின் இந்தியா’வின் தலை எழுத்தே சரியில்லாமல் இருந்தது.

பிறகு கொஞ்சம் யோசித்து ‘சுத்த இந்தியா’ என்பது தொடர்ச்சியான கடைப்பிடிக்க வேண்டிய இயக்கம் என்பதையும், அதன் முதற்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ‘திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைமையை’ அடியோடு ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

அதுகுறித்தும் தெளிவு இல்லவே இல்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பிடங்கள் கட்ட வேண்டுமென்றால், முதலில் எல்லோருக்கும் வீடுகள் இருக்கின்றனவா? இருக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி இருக்கிறதா? கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற என்ன வசதி? என்னும் அடிப்படை விஷயங்கள் குறித்து யோசனையும் அக்கறையும் இல்லை. வெற்றுச் சவடால்களாகவும் கூப்பாடுகளாகவுமே இருந்தன.

திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. அதிலும் கணிசமானத் தொகை விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்பட்டது. மிஞ்சியது கிராமப்புறப் பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
அசுத்தமாகவே இருக்கும் கங்கை

ஒருபுறம் தேசத்தின் சொத்துக்களையும், வளங்களையும் தங்கள் இஷ்டத்திற்கு அம்பானிகளும் அதானிகளும் கபளிகரம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இன்னொரு புறம் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் திலிப் சிங் மாளவியாவை புலம்ப வைத்தார்கள். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் அங்கே ‘சுத்த இந்தியா’ மட்டுமல்ல, ‘மோடியின் இந்தியா’வும் தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மோடி வாய் கிழிய அறிவித்த திட்டங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டன.
கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 20,000 கோடியில் 2017 வரை மூன்று ஆண்டுகளில் 8.52 சதவீதமான தொகையே அரசு வழங்கி இருந்தது. ஆனால் கங்கையின் ஒரு சொட்டு நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்று பத்திரிகையாளர் கவிஷ் கோலியும் நீரஜ் மஜும்தாரும் எழுதினார்கள். ஏன் கங்கையை சுத்தம் செய்ய முடியவில்லை என கவலையோடு சமூக ஆர்வலர்கள் பலரும் ஆய்வுகள் நடத்தி எழுதி வருகின்றனர். தன்னை சுத்தம் செய்ய வந்த மகனின் பொய்யையும் ஒரு குப்பையாக சுமந்தவாறு அந்த கங்கைத் தாய் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
அவினாஷின் வீடு

திலிப்சிங் மாளவியாவின் துயரத்தையும் உள்ளடக்கியவாறு வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டித் தந்து ‘திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும்’ நாடு முழுவதும் பெரும் தோல்விடைந்து போனது. உலக சுகாதார அமைப்பு இன்னும் கிராமப்புற இந்தியாவில் 70 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக 2018 இறுதியில் தெரிவித்தது.2019 செப்டம்பர் 30ம் தேதி விடிகாலையில் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் ரோஷினி, அவினாஷ் என்னும் இரண்டு தலித் குழந்தைகள் இரக்கமில்லாமல் அடித்து கொல்லப்பட்டார்கள் யாதவர்கள் குடியிருப்புகளின் அருகே அவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்பதுதான் இரண்டு கொலைகளுக்கும் காரணமாயிருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 12) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
சிவபுரி கிராமத்தில் உள்ள கழிப்பறை

“எங்களுக்கு எப்போதுமே கழிப்பிடம் என ஒன்று இருந்ததில்லை” என்று அழுகிறார் அவினாஷின் தந்தை மனோஜ்.
“கட்டப்பட்டு இருக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியே கிடையாது. தண்ணீருக்கு நாங்கள் வெகுதூரம் போக வேண்டும். எனவே நாங்கள் வெளியேதான் மலம் கழிக்கிறோம்” என்கிறார் இன்னொருவர். தேசமே அந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தது.

அதற்கு இரண்டுநாள் கழித்து மோடியோ, “உலகமே இந்தியாவைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது. 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு 11 கோடி கழிப்பிடங்கள் கட்டியிருக்கிறோம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்திற்கு நாம் முடிவு கட்டி விட்டோம்.” என 2019 அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளில் அவரது ஆசிரமத்தில் நின்று கம்பீரமாக முழங்கிக் கொண்டு இருந்தார். உலகமே அவரது பொய்யைக் கண்டு வாயடைத்துப் போனது.

அடிப்படை வசதிகள் இல்லாத வறுமை, ஜாதீயக் கொடுமைகள் நிறைந்த தேசத்தில் மோடி உண்மைகளைப் பார்க்க வேண்டாம் என கண்களை மூடச் சொல்கிறார். ஆனால் கண்களை மூடினால் மட்டும் அல்ல, திறந்திருந்தாலும் இருட்டாகிக் கொண்டு இருக்கிறதே!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *