The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History



“மக்களில் சிலரை எல்லா நேரமும் ஏமாற்றலாம்.
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.”
       – ஆப்ரஹாம் லிங்கன்

“இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சக்தி. நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மதிப்பளிப்பேன், அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்“ என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில், ’வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்’ என்பதாய் மோடி கைகளை விரித்து அரவணைத்துக் கொள்ள முற்பட்டார். ‘பத்து ஆண்டுகளில் இருபத்தைந்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக’ தொலை நோக்குப் பார்வையை அச்சடித்து வெளியிட்டது பிஜேபி. நாடு முழுக்க அதைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇந்திய வாக்காளர்கள் 80 கோடி மக்களில், குறிப்பாக 11 கோடி இளைஞர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் அது. அவர்களை குறி வைத்துத்தான் மோடியும், இந்துத்துவ அமைப்புகளும் மிக முக்கியமாக செயல்பட்டனர். பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் , ‘Neo Middle Class’ என புதிதாக அழைத்தனர். ஏழ்மையிலிருந்து விடுபட்டு இன்னும் மத்தியதர வர்க்கமாக நிலை பெறாதவர்கள் என்று வகைப்படுத்தினர். முன்னேறத் துடிப்பவர்கள். படித்திருந்தும் உரிய வேலை கிடைக்காதவர்கள். திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காதவர்கள். விரக்தியடைந்தவர்கள். இவர்களைத்தான் lower middle class என தன் தீவீர ஆதரவாளர்களாக ஹிட்லர் ஜெர்மனியில் தக்க வைத்திருந்தான்.

நவீன தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளே அந்த இளைஞர்கள். இருபது ஓவர் மேட்ச் காலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். மாற்றங்களை உடனடியாக காணத் துடிப்பவர்கள். நுகர்வுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள். வேகமும் துடிப்பும் மிக்கவர்கள். காத்திருக்கும் பொறுமையற்றவர்கள். விரல்நுனியில் உலகை காண்பவர்கள். கறுப்பு வெள்ளை டிவியை பார்க்காதவர்கள். சோவியத் ரஷ்யா குறித்து அறியாதவர்கள். முந்தைய தலைமுறையை ஏமாந்து போனவர்களாகவும், தாங்கள் விழித்துக் கொண்டவர்களாகவும் காட்ட முற்பட்டவர்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவரலாற்றில் தவறவிடக் கூடாத வாய்ப்பாக 2014 பாராளுமன்ற தேர்தலை மோடி வகையறாக்கள் கருதினர். சகல தந்திரங்களையும் செய்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு வெறி கொண்டு செயல்பட்டனர்.

தங்களின் பாதையில் முக்கியத் தடையாக அப்போது ராகுல் காந்தி அவர்களுக்குத் தெரிந்தார். 40 வயதான அவர் தன்னியல்பாக இளைஞர்களைக் கவர முடியும், 63 வயதான மோடிக்கு அது கடும் சவாலாக இருக்கும் என்று கணித்தனர். கொள்கைகள், சித்தாந்தங்கள், செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து தனிநபர்களை முன்னிறுத்தி பேசுவதே அரசியல் எனக் கொண்டவர்கள் வேறென்ன செய்வார்கள்?

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ராகுலையும், காங்கிரஸையும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது என்பது அவர்களின் வியூகமாக இருந்தது. 2004ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியை தங்களின் ஆபத்தாக கருதி, போகுமிடமெல்லாம் ‘வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்திப் பார்த்தவர்கள் அவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கம் பெரிதாக பேசப்பட்டது. நிர்பயா மீதான கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் கொலையை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டங்கள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின. ’தலை நகரம் அல்ல. கொலை நகரம்.” என மோடி ஆக்ரோஷமாக தாக்கினார். எல்லாவற்றுக்கும் காங்கிரஸை காரணமாக்கிய காலம் அது. களத்திலிருந்து விலக்கப்பட்டு ராகுல் காந்தி இளைஞர்களின் கவனம் பெற முடியாதவராய் போனார்.

“60 ஆண்டுகள் காங்கிரஸுக்கு கொடுத்தீர்கள். நாட்டையே நாசமக்கி விட்டது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றிக் கண்பிப்பேன். தேசத்தின் வளர்ச்சிதான் முக்கியம். நான் பிரதம மந்திரியாக இருக்கப் போவதில்லை. இந்த தேசத்தைக் காக்கும் காவல்காரனாகவே இருக்க விரும்புகிறேன். வாய்ப்பு கொடுங்கள்.”

நம்பிக்கையான மனிதராகவும், திடமான அரசியல் தலைவராகவும் தன்னை மோடி முன்னிறுத்திக் கொண்டார். விவேகானந்தரைப் பற்றி எப்போதும் பேசினார். விவேகானந்தர் இளைஞர்களை பெரிதும் ஆகர்ஷிக்கிறவராக இருந்தார்.விவேகனந்தரின் உரைகளும் அறைகூவல்களும், இளஞர்களை நோக்கியே இருந்தன. அவரைப் போலவே மோடி தானும் பிரம்மச்சாரி, அவரைப் போலவே தானும் இளைஞர்களை நேசிக்கிறவன் என காட்டிக் கொண்டார்.

மோடியும் இந்துத்துவ சக்திகளும், கார்ப்பரேட்களும் நினைத்தது நடந்தது. மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். மக்களும், இளைஞர்களும் நினைத்ததுதான் நடக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிக்கு வாக்களித்த இளைஞர்கள் மீண்டும் விரக்தியடைந்து போயிருந்தார்கள். தாங்கள் ஏமாந்து போனது குறித்து பேசினார்கள்.

இராஜஸ்தானில் கஸ்பாபோன்லி என்னும் சிறிய ஊரில் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்திருந்தார் ராகேஷ்குமார். முப்பத்தொரு வயதாகிறது. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து கொண்டு இருந்தார். பேண்ட்டில் கலர்ச் சிதறல்களோடு காணப்படும் அவர், “சென்ற முறை மோடிக்கு வாக்களித்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி தந்தார். நம்பினேன். இனி அவருக்கு வாக்களிக்க மாட்டேன்” என்றார்.

அதே ஊரில், “எனது நண்பர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்காமல் நகரத்திலிருந்து திரும்பி வந்து விட்டார்கள்” என்றார் டீக்கடை வைத்திருக்கும் பப்லு ஷைனி என்னும் இளைஞர்.

‘பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை’ லாப நோக்கற்ற ஒரு குழுவிற்காக மகாராஷ்டிராவில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தவர் ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா. முப்பது வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மாதம் ரூ.10000/- வரை கிடைக்கிறது. அவரது அண்ணன் ஆட்டோ ரிக்‌ஷா ஒட்டுகிறார். அவருக்கு மாதம் 8000 கிடைக்கிறது. இரண்டு பேரின் வருமானத்தில்தான் தத்தாத்ரேயா, அவரது பெற்றோர்கள், அண்ணன், அண்ணி,. அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பம் வாழ வேண்டும்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇரண்டு வருடங்களுக்கு முன்பு ரெயில்வேத் தூறையில் அறிவிக்கப்பட்ட 90,000 பணிகளுக்கு 2.8 கோடி பேர் விண்ணபித்து இருந்தார்கள். இந்த ஒரு வரிச் செய்தியில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் அவல நிலையும் அப்பட்டமாய் தெரியும்.

ஒவ்வொரு வருடமும் படித்து முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பத்து லட்சம். படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். அவர்களின் எதிர்காலத்திற்கும் நிரந்தர வருமானத்திற்கும் வழி எதுவும் ஏற்படுத்தவில்லை.

130 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 46.7 கோடி பேர் வேலை பார்ப்பதாகவும், அதில் 50 சதவீதம் சுயதொழில் செய்கிறவர்கள். 33 சதவீதம் அன்றாடம் காய்ச்சிகள். எஞ்சிய 17 சதவீதம் பேரே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள். ப்ளும்பெர்க் ஆய்வு முடிவுகள் இப்படித்தான் சொல்கின்றன.

கொடுமை என்னவென்றால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமல்ல, இருந்த வேலைகளும் ஒழிக்கப்பட்டு இருந்தன. இருக்கும் காலியிடங்களுக்கும் ஆட்கள் எடுப்பதில்லை. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதுவும் சரியான தரவு இல்லை, உண்மை இன்னும் மோசமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வேலை தேடித் தேடியே ஒரு பாதுகாப்பான நிலைக்கு வருவதற்குள் எங்கள் இளமையான காலம் கழிந்து விடும் போலிருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் இந்திய இளைஞர்கள்.

2013 நவம்பரில், “ப.சிதம்பரம் அவர்களே! பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இளைஞர்கள் வேலை வேண்டும் என்கிறார்கள். சில்லறை அரசியல்களில் நேரத்தை செலவழிக்காமல் கையிலிருக்கும் வேலையைக் கவனியுங்கள்” என அப்போதைய நிதியமைச்சரைப் பார்த்து கிண்டலாய் பேசிய மோடி இப்போது கார்ப்பரேட்களுக்கு இந்தியாவையே விலை பேசும் ‘பெரிய அரசியலில்’ ஈடுபட்டிருந்தார்.

வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்பதாக மோடி சொல்லவே இல்லை என்று பிஜேபி சொல்ல ஆரம்பித்து விட்டது. லக்னோவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் வருடத்திற்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாகத்தான் பேசினார். இரண்டு கோடி என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது என்றார்கள். அதற்கும் காங்கிரஸை பொறுப்பாக்கினார்கள். மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்புவதற்கு மோடி அல்லும் பகலும் அயராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyவருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சென்ற வருடம் 55 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டு இருப்பதை மோடி காண்பித்தார். அவையெல்லாம் புதிய வேலை வாய்ப்புகள் என்று கணக்கு சொன்னார். புதிய பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்கும் புதிய கணக்குகளையும் வேலை வாய்ப்புகள் உருவக்கப்பட்டதன் எதிரொலியே என்றார். இப்படியே கூட்டிக் கூட்டி வருடத்திற்கு இரண்டரை கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாய் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதையே தனது இணையதளத்திலும் சாதனையாக வெளியிட்டுக் கொண்டார்.

உண்மை என்னவென்றால், அணி திரட்டப்படாத தொழிலாளர்களாய் சில வருடங்கள் வேலை பார்த்து வருபவர்களுக்கு பி.எஃ பிடித்தம் செய்யப்பட்டு இருந்தன. அவைகளை புதிய வேலைவாய்ப்புகள் என்று ஜோடிப்பது எப்பேர்ப்பட்ட மோசடி.

அரசு சார்பில் தேவையான புள்ளி விபரங்கள் இல்லையென்பதும், இருக்கும் புள்ளி விபரங்களை மறைப்பதும் மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு தொடர்கதையாகி விட்டது. தங்களுக்குச் சாதகமான, ஆதாரமற்ற தனியாரின் புள்ளி விபரங்களை வெளியிட்டு அதன் மூலம் ’எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்’ என்று பொய்யான தோற்றத்தை காட்டுவதுதான் மோடியின் ஆட்சி. பொய்களின் ஆட்சி.

நிதியமைச்சராயிருந்த அருண் ஜெட்லியோ தனது வாதத் திறமையால் இன்னொரு தர்க்கத்தை முன்வைத்தார். “வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் இந்நேரம் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். கடந்த ஐந்து வருடங்களில் அப்படி எந்த போராட்டமும் நடைபெறவில்லை” என்றார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லையாம்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“வேலை வாய்ப்புகள் இருக்கவேச் செய்கின்றன. பக்கோடா விற்று ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் சம்பாதிக்க முடியும்” என்றார் மோடி ஒருநாள் வாயைத் திறந்து. அவரது skill India என்னவென்று அப்போதுதான் இளைஞர்களுக்கு புரிந்தது. அன்றைக்கு மோடி விவேகானந்தர் முகமூடியை கழற்றி வைத்திருக்க வேண்டும்.

Tourism, Physical infrastructure, Manufacturing, Global manufacturing hub, Agriculture, Foreign Direct investment, Skill Focusing, Massive open online courses, Education and Research, Sports, IT sector, Entrepreneurship என்று எவ்வளவு வேலைகளுக்கான வாய்ப்புகளை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடைசியில் பக்கோடாவில் போய் நின்றது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 2019 பிப்ரவர் 7ம் தேதி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியாவின் இளைஞர்கள் கூடி மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ’வாருங்கள் அருண் ஜெட்லி, இப்போது பேசுங்கள்’ என அவரையும் அழைத்தார்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 11) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Indian students march as they take part in the ‘Young India Adhikar March’ protest rally, in New Delhi on February 7, 2019.

“வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதாக மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் அரசுத்துறையில் இருக்கும் 25 லட்சம் வேலைவாய்ப்புகளையும் கூட நிரப்பவில்லை” என்றார் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டெல்லிக்குப் போராட வந்திருந்த ஸ்ரீகாந்த் தத்தாத்ரேயா.

“பக்கோடா விற்பதும் வேலைதான் என பிரமர் சொல்வது வேதனையாய் இருக்கிறது. அது வேலையில்லை என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதற்கு உயர் படிப்பு? என்றார் பிரியா தாக்கூர்.

“பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை சிறு வியாபாரிகளின் தொழில்களை எல்லாம் முடக்கி விட்டன. அங்கு வேலை பார்த்தவர்களின் வேலைகளும் பறி போய் விட்டன“ என்றார் 29 வயதான பங்க கலியா.

அதிகாரத்துக்கு வருவதற்கு தேவைப்பட்ட புதிய இந்திய வாக்காளர்களாகிய இளைஞர்கள், அதிகாரத்துக்கு வந்த பிறகு மோடிக்குத் தேவைப்படவில்லை. மோடியின் இந்தியாவுக்கு சக்தியாய் இருப்பவர்கள் கார்ப்பரேட்களே என்பதையும், மோடி அவர்களின் காவல்காரன் என்பதையும் டெல்லி போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் புரிந்திருந்தார்கள்.

சமீபத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. 2019ல் 66 சதவீதம் ஆதரவு பெற்று யாரும் அருகில் இல்லாதவாறு காட்சியளித்தவர் 2020ல் 38 சதவீதமாக உயரம் குறைந்து 2021ல் 24 சதவீதமாக குள்ளமாகிப் போயிருந்தார்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் தங்கள் அன்றாட வாழ்க்கை குறித்தே கவலைப்பட்டு இருந்தார்கள். மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியின் மீது கரு நிழல் மெல்ல படர ஆரம்பித்து இருக்கிறது. அவரது பொய்கள் உருவாக்கியது அது.

இந்திய இளைஞர்கள் வேலை இழந்தது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர்.  அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதில்தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால் இந்த அவநம்பிக்கைகளையும் கூட பசிச சக்திகளே வேறு உத்திகளில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும். அதற்கென்று சில பொய்களை மோடி வைத்திருக்கவே செய்வார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “பொய் மனிதனின் கதை அத்தியாயம் 11 – ஜா. மாதவராஜ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *