உ.வே.சாவும் ஆங்கிலமும் – கோ. கணேஷ்தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்டவர். தமிழ்ப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். பதிப்புத்துறையில் அரைநூற்றாண்டுக்கு மேலாகக் கோலோச்சியவர். எப்போதும் தமிழ்ச்சமூகத்தால் கொண்டாடப்பட்டு வரும் ஆளுமைகளில் ஒருவர். பழந்தமிழ் நூல்கள் பலவற்றை இன்று நாம் அடைவதற்கு அரும்பாடுபட்டவர்களில் தவிர்க்க முடியாதவர் என்றெல்லாம் புகழப்படுபவர் “மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் (1855 – 1942) அவர்கள் ஆவார்.

இத்தகையப் புகழுக்குரிய உ.வே.சா அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர,  பிறமொழிகளைப் பயில்வதற்கு கிஞ்சித்தும் முயற்சி செய்யவில்லை. குறிப்பாக ஆங்கிலக் கல்வியைப் பயிலுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. (ஆங்கிலம் கற்காதது குறையுமில்லை, குற்றமுமில்லை). இதனை அக்காலக்கட்ட சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும். (அழுத்தம் எமது)

இந்தியா மற்றும் இலங்கையில் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் கல்விநிறுவனங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அவற்றின் ஊடாகப் பலரும் மரபார்ந்த கல்விமுறையிலிருந்து (குருகுல மற்றும் திண்ணை கல்விமுறை) ஐரோப்பிய கல்விமுறையைப் பயிலத்தொடங்கினர். அதனால் பலருக்கும் அரசு(சர்க்கார் உத்தியோகம்) வேலை கிடைக்கப்பெற்றது. நிரந்தர வருவாயும் பல பட்டங்களும் இன்னப்பிற சலுகைகளும் உயர்ந்த நிலையையும் அடைந்தனர். உ.வே.சா அவர்களும் இதனை நினைத்து பின்னாளில் பல இடங்களில் எண்ணி வருத்தமுறுகிறார். அவையாவற்றையும் தொகுத்துப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அதுபோன்று இன்று உ.வே.சாவியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமான ஒன்று :-

 “மரபார்ந்த குருகுல கல்விமுறையில் பயின்றவர்; ஒருமுறையான கல்விமுறையியலில் பயிலாதவர் என்றும்; பதிப்புத்துறையில் முறையான பயிற்சி இல்லை என்றும்; பதிப்புநுட்பங்களை உள்வாங்காதவர் என்றும்;  அந்நாளில் அவரோடு பதிப்புத்துறையில் இருந்த சி.வை.தாவோடு ஒப்பிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சி.வை.தா அவர்களுக்கு முறையான ஆங்கிலக்கல்வியும் அதனூடாக அவர்பெற்ற பதிப்பியல் சார்ந்த நுட்பங்களைக்கொண்டே, தமிழ்ப்பதிப்புச் சூழலுக்குப் புத்தொளிப் பாய்ச்சினார் என்றும்: இதனை சி.வை.தாவின் பதிப்புரைகளை வாசிப்போர்க்கும் அதற்கு எழுந்த கண்டனங்களை உள்வாங்குவோர்க்கு விளங்கும் என்றும்; உ.வே.சாவைவிட, சி.வை.தாவின் பதிப்புகளே பதிப்புநுட்பங்களை உள்ளடக்கியன” என்பன போன்ற விமர்சனங்கள் முன்வைப்படுகின்றன.

மேலும் உ.வே.சா அவர்கள் போப், ஜூலியன் வின்ஸோன் போன்ற ஐரோப்பிய அறிஞர்களுடன் எவ்வாறு தொடர்பில் இருந்தார் என்ற கேள்வியும் முக்கியமானது. இந்த பின்புலத்தில் உ.வே.சாவின் வரலாற்றில் ஆங்கிலம் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது அல்லது அவர் அதனை எவ்வாறு கையாண்டார் என்பதை அவரின் வாழ்க்கை வரலாற்றின் ஊடாகத் தொகுத்துக் காணலாம்.உ.வே.சாவின் தொடக்கக்கல்வியும் ஆங்கிலம் செல்வாக்கும்

உ.வே.சா அவர்கள் மரபார்ந்த குருகுலக்கல்விமுறையில் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். தன்னுடைய தொடக்கக்கல்வியை நாராயண ஐயர் என்பவரிடம் அரிச்சுவடி, எண்சுவடி போன்றவற்றையும், சாமிநாதையர் என்பவரிடம் சங்கீதமும் சமஸ்கிருத்தையும்  பயின்று வந்துள்ளார். அதனை, 

“எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்ற போது வித்தியாப்பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில்  இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐயரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதைய ரென்பவரிடம் சில வருஷங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம், நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்.” (என் சரித்திரம், பக்.51) 

அவ்வாறு திண்ணைப் பள்ளிகளில் படித்து வந்தகாலத்தில் ஆங்கிலம் தமிழ்நாட்டில் எத்தகைய செல்வாக்கைப் பெற்றிருந்தது என்பதை உ.வே.சா தன் “என் சரித்திரத்தில்” தனியே “இங்கிலீஷ் எழுத்துக்கள்” (பக்.61) தலைப்பிட்டு எழுதியதன் ஊடாக அவதானிக்கலாம். அவை,

என் இளமைக் காலத்தில் கிராமங்களுக்கு  இங்கிலீஷ் படிப்பு வரவில்லை. நகரங்களில் சில பள்ளிக்கூடங்களில் இங்கிலீஷ் கற்றுத் தந்தார்கள். இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரை குறையாகத் தெரிந்து கொண்டவர்களுக்குக்கூட எளிதில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும். (அழுத்தம் எமது)

கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கத்தில் இருந்தன. நான் இளமையில் அவற்றையே கற்றுக் கொண்டேன்.

உத்தமதானபுரத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு உபாத்தியாயராக இருந்த சாமிநாதையர் வீட்டிற்கு அவருடைய பந்து ஒருவர் அடிக்கடி வருவார், அவருக்குச் சிவஸ்வாமி ஐயரென்று பெயர். அவர் இங்கிலீஷ் படித்தவர். அவர் வந்த காலத்தில் என் உபாத்தியாயர் அவரிடம் சொல்லி எனக்கு இங்கிலீஷ் எழுத்துக்களை கற்பிற்கும்படி கூறினார். அப்படியே அவர் கற்பிக்க நான் அவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிலீஷ் எண்களையும்(1, 2 முதலியவற்றையும்) அவரிடமே தெரிந்து கொண்டேன்.

இங்கிலீஷ் எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட போது எனக்குள் இருந்த பெருமிதம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்த எழுத்துக்கு அவ்வளவு பிரபாவம் இருந்தது. வெறும் எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட மாத்திரத்தில் பெருமை பாராட்டுவதும், கையெழுத்து மாத்திரம் இங்கிலீஷில் போடத் தெரிந்து திருப்தியடைவதும் அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன. (அழுத்தம் எமது)

எனக்கு இங்கிலீஷ் எழுத்துக்களைச் சொல்லித் தந்த சிவஸ்வாமி ஐயர் பிற்காலத்தில் திருவனந்தபுரம் ஸமஸ்தானத்தில் தக்க உத்தியோகத்தைப் பெற்று வாழ்ந்தனர்” (என் சரித்திரம், பக். 61 – 62).

மேற்கூறிய உ.வே. சாவின் கூற்றினை நாம் மூன்றுநிலைகளில் புரிந்து கொள்ளலாம். 1. அன்று ஆங்கிலத்திற்கு இருந்த செல்வாக்கு, 2. அதன் மூலம் ஈர்க்கபெற்ற உ.வே.சாவின் ஆர்வம், 3. அன்றைய கிராமங்களின் சூழலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காமையின் வெளிப்பாட்டையும் உ.வே.சாவின் கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன. குறிப்பாக ஆங்கிலம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர்கள் அமையாததே என்ற ஏக்கத்தொனியும் அதில் அமைந்துள்ளது.

Pon Radhakrishnan on Twitter: "My tributes to the great Tamil scholar and  researcher Tamil Thatha Dr.U.VeSwaminatha Aiyer, on his 163 birthday,who  was… https://t.co/hNYGdpeNoU"

பிறமொழிகளைத் தவிர்த்தல்

உ.வே.சாவிற்கு ஆங்கிலத்தின் மீதிருந்த ஈர்ப்பு பிறமொழிகளின் மீதில்லை எனலாம். பின்னாளில் (1861) உ.வே.சாவிற்கு ஆறுவயதிருக்கும் அவருடைய தந்தை, சங்கீதப்பயிற்சிக்காக தெலுங்கு உதவியாக இருக்கம் என்றெண்ணி அவரை, முத்து வேலாயுத பண்டாரென்னும் வீர சைவரிடம் தெலுங்கு கற்க அனுப்பி வைக்கிறார். ஆனால் உ.வே.சாவோ “சங்கீதத்திலும், தமிழிலும் என் புத்தி சென்றது போலத் தெலுங்கிற் செல்லவில்லை” (மேலது, பக்.69) என்று பாதிலேயே நிறுத்திவிடுகிறார்.

மேலும் “என் தகப்பனார் சொற்படி பள்ளிக்கூடத்திற் படிப்பதை விட்டு வீட்டிலேயே படித்து வந்தேன். தெலுங்கு ஸமஸ்கிருதம் இரண்டும் என்னை விட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுவிட்டன” (மேலது, பக்.69) எனத் தமிழைத் தவிர பிறமொழிகள் கற்பதை நிறுத்திவிடுகிறார்.

‘இங்கிலீஷ் வேண்டாம்’

பிற்காலத்தில் (1868பிறகு) பாபநாசம் இராகவையர் என்பவரிடத்தில் உ.வே.சா பாடங்கேட்டு வருகிறார். அவ்வூரில் தன் தந்தையின் நண்பர் வேங்கடராவ் என்பவரை இருவரும் சந்திக்கின்றனர்.  அப்போது உ.வே.சாவின் தந்தை இவர் இயற்றியச் செய்யுட்களைச் சொல்லச் சொல்கிறார். அதனைக் கேட்ட வேங்கடராவ் இதனால் என்ன பயன், இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள், வாழ்க்கையில் முன்னேற  முடியும். நான் அதற்கு உதவிசெய்வதாகக் கூறுகிறார்.

அதனைக் கேட்ட உ.வே.சா அவர்கள் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத்தெளிவாக உணர்த்துகிறார். 

“எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை; அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை. அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று . “தியாகராச செட்டியாரிடம் படிக்க வழிகேட்டால் இவர் இங்கிலீஷ் படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீஷூம் வேண்டாம்; அதனால் வரும் உத்தியோகமும் வேண்டாம்” என்று நான் சிந்தனை செய்தேன்” (மேலது, பக்133)

  உ.வே.சா அவர்கள் தன்னுடைய சிறுவயதில் ஆங்கிலத்தின் மீதிருந்த ஈர்ப்பு மெல்ல மெல்ல குறைந்து பதிமூன்று (அல்லது பதிநான்கு) வயதில் தமிழின் மீது தீராக்காதலாக மாறிவிட்டதாகப் பதிவுசெய்கிறார். பதிப்புப்பணியும் ஆங்கிலத் தேவையும்

உ.வே.சா அவர்கள் சீவகசிந்தாமணி(1887), பத்துப்பாட்டு(1889), சிலப்பதிகாரம்(1892) ஆகிய நூல்களைப் பதிப்பித்திருந்தார். மேலும் புறநானூற்றை பதிப்பிக்க எண்ணி அதன் ஆராய்ச்சியில் ஈடுபடலானார். அதனை,

“புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வர வரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க  வேண்டுமென்ற விருப்பம் எனக்கிருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்த பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ, அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை” (மேலது, பக்.723) (அழுத்தம் எமது)

உ.வே.சாவின் இக்கூற்று, அவரின் உள்ளக்கிடக்கையை நன்குப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சி.வை.தா முதலானோர் ஆங்கிலப் பதிப்புமுறையியலை உள்வாங்கி தமிழிலும் அத்தகைய முறையியலைக் கொண்டு நூல்களைப் பதிப்பித்தனர் என்பதை உ.வே.சாவின் இத்தொனியோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

சி.வை. தாமோதரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூல் 1934ஆம் ஆண்டு T. A. Rajarathnam Pillai எழுதிய The life of Rao Bahadur C. W. Thamotharam Pillai என்ற நூல் வெளிவந்தது. இந்த நூலுக்குச் சாமிநாதையர் முன்னுரை எழுதி தாமோதரம் பிள்ளையின் ஆங்கிலப் புலமையையும் தமிழ்ப் பணியையும் பெரிதும் பாராட்டியிருக்கிறார். அவை பின்வருமாறு,

“தாமோதரம் பிள்ளையைப்போல் ஆங்கில பாஷையில் விசேஷமான பாண்டித்தியமடைந்து தமிழிலும் நல்ல பயிற்சியைப் பெற்றிருப்போர் இக்காலத்தில் மிகச் சிலரேயாவர். இவருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்”. (முன்னுரையில்)

இவ்வாறு பலஇடங்களில் உ.வே.சா தனக்கு ஆங்கிலப் பயிற்சி இல்லாததை நினைத்து வருத்தமுறுகிறார்.

மணிமேகலை பதிப்பும் ஆங்கில நூல்களின் உதவியும்

1895இல் மணிமேகலையைப் பதிப்பிக்கத் தொடங்கும் காலத்தில் பௌத்தமதம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் ஐயர் அவர்களுக்கு தோன்றுகின்றன. அதற்காக கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியாரே உ.வே.சாவிற்கு ஆங்கில நூல்களைத் தமிழில் வாசித்து பேரூதவி செய்தாகக் குறிப்பிடுகிறார்.

“பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம்? என்று என் சிந்தனை சுழன்றது…………. அப்போது ரங்காசாரியா் அபயமளித்தார். ”நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக்கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை ‘நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

நான் அவரை மணிமேகலை ஆராய்ச்சிக்கு பெருந்துணையாகப் பற்றிக் கொண்டேன்.” (மேலது, பக்.746)

மேலும், “ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியார் படித்துக்காட்டினார்” (மேலது, பக்.747)

கிட்டதட்ட ஒன்றரை வருடகாலம் மளூர் ரங்காசாரியாரே கும்பகோணத்தில் இருந்தவரை ஆங்கில நூல்களை வாசித்தும், அவ்வப்போது ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதியும் உதவியுள்ளார்.

Dr. U Ve. Swaminatha Iyer |

ஜி.யு.போப் தொடர்பும் கடிதங்களும்

பூண்டி அரங்கநாத முதலியாரிடம் உ.வே.சா பேசிக்கொண்டிருந்த போது, சீவகசிந்தாமணியின் பதிப்பைப் பாராட்டி, ஜி.யு போப் அவர்கள் தன் நாலடியார் பதிப்பில் எழுதியிருப்பதாக முதலியார் உ.வே.சாவிடம் தெரிவித்தார். அதுமுதற்கொண்டு உ.வே.சாவிற்கும் ஜி.யு போப்பிற்கும் கடிதத் தொடர்பு ஏற்படுகிறது. 

உ.வே.சா தான் பதிப்பித்த புறநானூற்று நூல் ஒன்றை அனுப்பி வைக்கிறார். சில மாதங்கள் கழித்து போப்பிடமிருந்து ஆங்கிலத்தில் கடிதம் வருகிறது. (அக்கடிதத்தின் தமிழாக்கத்தை என் சரித்திரம், பக்.751 பார்க்கலாம்) தொடர்ச்சியாக (முதல் கடிதம் 26.4.1895; 21.10.1895; 1896) போப்பிடமிருந்து கடிதங்கள் வருகின்றன. இதில் கவனத்திற் கொள்ள வேண்டியது, இக்கடிதங்களை எல்லாம் அவருக்கு யார் மொழிபெயர்த்தளித்தார்கள்; போப்பிற்கு ஆங்கிலத்தில் கடிதமெழுதி அனுப்பினாரா? போன்ற விவரங்களை அறிய முடியவில்லை. 

வேலை கிடைக்கவில்லை

1896இல் உ.வே.சாவிற்கு மனோண்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளையிடம் இருந்து கடிதம் ஒன்று வந்ததாகவும், அதில் “திருவனந்தபுரம் காலேஜில் தமிழாசிரியர் பணியிருப்பதாகவும் உ.வே.சாவை ஏற்கும்படி கூறியிருப்பதாகவும்” குறிப்பிடுகிறார். ஆனால் ஏனோ உ.வே.சா அப்பணியை ஏற்கவில்லை. ஆனால் அவர் “பிறகு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அந்த ஸ்தானத்தில் நியமித்து விட்டார்கள்” (மேலது, பக்.754) எனப் பதிவு செய்கிறார்.தொகுப்புரை

மேற்குறிப்பிட்ட தரவுகளின் ஊடாகப் பின்வரும் நிலைகளில் உ.வே.சா ஆங்கிலத்தை எதிர்கொண்ட விதத்தைப் புரிந்து கொள்ளலாம்.

  • அவரின் சிறுவயதில் முறையான கல்விச்சூழல் அமையாதது. குறிப்பாக அவர் தமிழ்க்கற்க பலத் தமிழறிஞர்களைத் தேடித்தேடி பல ஊர்களுக்குச் சென்று பயின்றது, திருவாவடுதுறை மடத்தின் தொடர்பு என மரபார்ந்த கல்விச் சூழலே வாய்க்கப்பெற்றது. ஆகையால் ஆங்கிலத்தின் தேவை தொடக்காலங்களில் அவருக்கு அவசியப்படவில்லை.
  • அவர் பதிப்புலகில் நுழைந்தவுடன் தான் ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்கிறார். தொடக்கக் காலப் பதிப்பில் அவருக்கு ஏற்பட்ட இடர்பாடுகள், பதிப்புச் சார்ந்த புரிதல் இல்லாதிருத்தல், சமகால பதிப்பாசிரியர்களிடம் இருந்து வேறுபடுதல்.  (சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்ற நூல்களின் பதிப்புப் பணியில் பொருத்திப் பார்க்கலாம்).  
  • சிறுவயது முதலே வறுமையும் நிலையில்லா வாழ்க்கை முறையும் கொண்ட உ.வே.சாவிற்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர், தியாகராய செட்டியார், சேலம் ராமசாமி முதலியார் போன்றவர்கள் பற்றுகோடாகத் திகழ்ந்தார்களோ, அதுபோன்று பதிப்புப்பணியும் திகழ்ந்தது.
  • உ.வே.சாவிற்கு ‘ஒருவேளை ஆங்கிலக்கல்வி கிடைத்திருந்தால்  நிரந்தரப் பணியும் பொருளாதார உயர்வையும் (தொடக்கக்காலத்திலே) அடைந்திருக்கலாம் என்ற உள்ளுணர்வே’ மேற்கண்ட கூற்றுக்களில் அடிச்சரடாக இழையோடியிருப்பதை நாம் அவதானிக்கலாம். 
  • எவ்வாறாயினும் ‘தமிழாலே தம் வாழ்வு முற்றுமுழுதாக வளம்பெறும்’ என முழுநம்பிக்கையுடன் செயலாற்றினார் என்பதையே அவரின் வரலாறு நமக்குப் பிரதிபலிக்கிறது. 

துணைநூற் பட்டியல்

  1. சாமிநாதையர், உ.வே. – என் சரித்திரம், 2000, டாக்டர் உ.வே.சாமிநாதையர்   

                                            நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை – 90.

  1. தாமரைக் கண்ணன்.ப. – தாமோதரம், குமரன் பப்பிளிஷர்ஸ் 2004.கோ.கணேஷ்
உதவிப்பேராசிரியர்,
எஸ்.ஆர்.எம்